மதத் தலைவர்கள் அரசியலில் ஈடுபடலாகாது

மதத் தலைவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது

மறு திசையிலும் இதையே கூற விரும்புகிறோம். அதாவது, மதத்தலைவர்களும் அரசாங்க விஷயங்களில் ஒரு நாளும் தலையிடலாகாது. அதற்கான அறிவும், அநுபவமும் பெற்றவர்களின் பொறுப்பில்தான் அரசாங்கம் நடக்க வேண்டும். மனித இயற்கையில் அரசாங்கத்தின் செயற்களமாகிய உலகவியலிலேயே ஈடுபடும்போது அறிவு, அநுபவம் என்பவற்றுக்கு மட்டும் இடம் அளிப்பதாக இன்றி, வேறு சில குறைபாடுகளுக்கும் இடமளிக்க ஏது ஏற்படுகிறது. ஆன்மவியல், உலகியல் என்பவை போல், அரசியல் என்றே உருவாகியிருக்கும் ஒன்றிலோ அதிகாரம், பதவி, புகழ் என்ற வசீகரண அம்சங்களின் கலப்பு அதிகமிருப்பதால், தர்ம நாட்டம் கொண்ட எவரும் மிக்க வருத்தமடையும்படியான பல போக்குகள் ஊடுருவ அதிகமாகவே ஏது இருப்பதாகத் தெரிகிறது. எனவே, மக்களை உள்ளவுயர்வில் முன்னேற்றுவதற்குப் பொறுப்புப் பெற்ற மதத் தலைவர்கள் தாங்களே பின்னேற்றம் அடையும் அபாயத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டுமாயின், அரசாங்க சம்பந்தமும் அறவே கொள்ளாமல் தொலைவில் விலகியே இருக்க வேண்டும்.

மத வளர்ச்சிக்கான போஷணை அளிக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு நினைவூட்டுவது, அது அவ்வாறு செய்யும்போது உரிய பாராட்டை அளித்து மேலும் உற்சாகப்படுத்துவது, மத விஷயங்களில் அரசாங்கம் பிரவேசித்தால் தைரியாமாகக் கண்டிப்பது - ஆகியவற்றுக்கு அதிகமாக மதத்தலைவர்கள் அத்துறையில் சம்பந்தம் கொள்ளவே கூடாது. சுத்தி செய்யும் நீர்நிலையையே துர்நாற்றக் குட்டையாக்குவது போன்ற ஆபத்துக்கும் பாபத்துக்கும் இடம் தருவதான அரசியல் சம்பந்தத்தை மதவியலுக்கு ஒருபோதும் காட்டிக் கொடுக்கலாகாது.

அரசாங்கத்தினர்தான் உலகியல் வளர்ச்சியோடு மத வளர்ச்சியிலும், அதற்கு தாங்கள் அளிக்க வேண்டிய போஷணையை எப்போதும் நினைவு கொண்டிருக்கும் அளவுக்குக் கவனம் கொண்டிருக்க வேண்டுமேயின்றி, மதத்தலைவர்களும் அதே போல் அரசயில் துறையில் கவனம் செலுத்த வேண்டுமென்றில்லை. அவர்களது முழுக்கவனமும் மதம் குறித்ததாகவே இருத்தல் வேண்டும்.

தற்போது சுதந்திரமாகப் புதிய அரசாங்கம் ஏற்படுவதால் அத்துறையினரின் பங்கையே முதற்கண் எடுத்துக் கூறப் புகுந்தோம்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is எல்லா மதங்களின் பிரதிநிதிகளையும் கொண்ட சுதந்திரம் பெற்ற தனியமைப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  அரசு புரிய வேண்டிய மத போஷணை, அதனால் அரசு பெறும் லாபம்
Next