சங்கர ‘விஜயம்’ : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அதை ரொம்பவும் அஸாதுவாக இழுத்துவிட்டுக் கொண்டிருந்த காலத்தைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். 72 துர்மதங்கள் அப்போது ஜனங்களைக் கலக்கிக் கொண்டிருந்ததாகப் புஸ்தகங்களில் சொல்லியிருப்பதைச் சொன்னேன். எந்தப் புஸ்தகங்கள் என்றால் ஆசார்யாளின் சரித்ரத்தைச் சொல்வதான புஸ்தகங்கள். அவற்றுக்கு ‘சங்கர விஜயம்’ என்று பேர். ‘விஜயம் செய்தார்’ என்று ஒரு பெரிய மநுஷ்யர் ஒரு இடத்துக்கு ‘விஸிட்’ செய்தால் சொல்கிறோம். ‘விஜயம்’ என்றால் ‘விசேஷம் வாய்ந்த ஜயம்’. அதாவது, சிறப்பான வெற்றி. ராஜாக்கள் திசைதோறும் சென்று மற்ற ராஜாக்களை ஜயிப்பது ‘திக்விஜயம்’. இப்படியே ஜனங்களுடைய ஹ்ருதயங்களை ஒருவர் ஒரு இடத்துக்குப் போய் அன்பினால் வெற்றி கொள்கிறார் என்ற அர்த்தத்திலேயே ‘விஸிட்’ செய்வதை விஜயம் என்பது. வாழ்நாள் முழுவதும் தங்களுக்குள் தப்பான எண்ணங்கள் என்ற எதிரிகள் தலையெடுக்க முடியாதபடி ‘ஆத்ம ஜயம்’ என்ற பெரிய வெற்றியை ஸாதித்துக் கொண்டு, அதோடு லோக ஜனங்கள்-பண்டித, பாமரர்கள் அனைவர்-மனசுகளையும் அன்பினாலும் அறிவினாலும் வென்ற நம் ஆசார்யாள் போன்ற மஹாத்மாக்களின் சரித்ரம் ‘விஜயம்’ என்று பேர் பெறுகிறது. இப்படிப் பலபேர் பல சங்கர விஜயங்கள் செய்திருக்கிறார்கள்.* அவற்றில் சிலவற்றில் இந்த 72 மதப் பிரஸ்தாவம் வந்திருக்கிறது. ஆசார்யாளின் ‘அஷ்டோத்தர (சத)த்திலும் (அர்ச்சனைக்கான 108 நாமங்களிலும்)

த்வி-ஸப்ததி மதோச்சேத்ரே நம:

என்று வருகிறது. ‘எழுபத்திரண்டு மதங்களை நிர்மூலம் செய்தவர்’ என்று அர்த்தம்.


* சங்கர விஜய நூல்கள் குறித்துச்சில மேல் விவரங்கள் இவ்வுரையில் பின்னால் வரும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is கலி அதர்மத்திற்கே ஸங்கற்பிக்கப்பட்டதா?
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  எழுபத்திரண்டு மதங்கள்
Next