கலி அதமர்த்திற்கே ஸங்கற்பிக்கப்பட்டதா? : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இங்கே ஒரு விஷயம் சொல்லவேண்டும். ‘பிரபஞ்ச நாடகத்திலே ஒவ்வொரு சதுர்யுகத்திலும் க்ருதயுகத்தில் ரொம்பவும் தர்மமாக ஆரம்பித்து, த்ரேதா யுகத்திலும் த்வாபர யுகத்திலும் கொஞ்சம் கொஞ்சமாகச் சீர் கெட்டுக் கொண்டு வந்து, கலியிலே ஒரே அதர்மமாகப் போகவேண்டுமென்பதும் பகவத் ஸங்கல்பம்தானே? அதைக் குற்றம் சொல்வானேன்? கலி அதர்மத்துக்கான யுகம் என்று ஏற்பட்டுவிட்டபின் அதைச் சீர் திருத்துவது என்று புறப்படுவானேன்?’ என்ற கேள்வி வரலாம்.

பகவத் ஸங்கல்பம் நமக்கு புரியாது. என்றாலும், அவன் சாஸ்த்ர வாயிலாகக் கலி அதர்ம யுகம் என்று நமக்குக் தெரிவிக்கும்போது, அப்படியே அதர்மத்தில் லோகம் நசித்துப் போவதற்காகத்தான் இந்த யுகம் அவனால் தீர்மானமாக ஸங்கல்பிக்கப்பட்டிருக்கிறதென்று அர்த்தம் செய்து கொண்டுவிடக் கூடாதென்றே தோன்றுகிறது. ‘லோகம் அவனுக்கு நாடகம். அவன் கதை எழுதி, டைரக்ட் பண்ணுகிற நாடகம். ரஸ வைசித்ர்ய ருசிக்காக (காவிய ரஸங்களில் மாறுபாடு செய்து சுவை கூட்டுவதற்காக) நாடாகாசிரியர் ரௌத்ரம், பீபத்ஸம், பயம் ஆகியவையுள்ள ஸீன்களையும் கல்பிப்பதுபோல அவனும் கலியில் செய்வதாயிருக்கலாம்’ என்று சொன்னாலுங்கூட, இதிலே ஒரு அளவுக்கு மேலே போக அவனுடைய கருணையுள்ளம் இடம் கொடுக்காது. ஒரே ரௌத்ரம், பீபத்ஸம், பயானகம் என்று ஆகிவிட்டால் அதில் ‘ரஸம்’ என்று சொல்லும்படி என்ன இருக்கும்? விரஸம்தான் இருக்கும். ஆகையினால் அவன் பூர்வ யுகத்து மநுஷ்யர்களைப் போல இந்த யுகத்தில் அவ்வளவு தார்மிகர்களாகவும், தெய்வ சக்தியுள்ளவர்களாகவும் ஜனங்களை ஸ்ருஷ்டிக்காவிட்டாலும், அதர்மத்தில் அவர்களுக்கு உள்ளூற ஒரு ருசியைக் கொடுத்தே ஸ்ருஷ்டித்திருந்தாலும், அதிலேயே அவர்கள் முழுகி அழிந்து விடும் கொலைக் கூத்தாக முடித்துவிடமாட்டான். சறுக்கா மாலை விளையாட்டுப் போலச் சறுக்கும் வரை சறுக்கட்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தாலும், விழுந்து எலும்பை முறித்துக் கொள்ள விடாமல் தாங்கிக் கொள்வதற்கு வருவான், மஹான்களையும் அனுப்பிவைப்பான். ஒரு பக்கம் யுகத்தின் ‘நேச்ச’ரை முன்னிட்டு அதர்மங்கள் ஜாஸ்தியாய் போய்க்கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் தர்மத்தை ஞாபகமூட்டிக் கொண்டிருப்பதாகவும் அநேகத்தைக் கொடுத்து, தார்மிகர்களாகவும் ஜனஸமூஹத்தில் கொஞ்சம் பேராவது இருந்து கொண்டேயிருக்கும்படிப் பார்த்துக் கொள்வான். லஞ்சம், மோசடி, கொலை, இன்னும் அநேக தகாத கார்யங்களுக்கான க்ளப்புகள், சூதாட்டங்கள் என்று இப்போது ஒரு பக்கத்தில் பார்க்கிறோமென்றால் இன்னொரு பக்கம் ப்ரவசனம், பஜனை, கும்பாபிஷேகம் என்றும் நிறையப் பார்க்கிறோமல்லவா? கலி முடிகிறபோது கூட நல்ல வைதிகமான தர்ம வாழ்வு நடத்துபவர்கள் அடியோடு அஸ்தமித்து விடப்போவதில்லை. கல்யந்தத்தில் (கலியின் முடிவில்) தாம்ரபர்ணி தீரத்தில், அதாவது நம்முடைய திருநெல்வேலி ஜில்லாவில், விஷ்ணுயசஸ் என்ற ஸத் பிராம்மணருக்குப் புத்ரனாக கல்கி என்ற பெயரில் பகவான் அவதரிப்பானென்று சொல்லியிருக்கிறது. அப்படியானால் அப்போதும் வைதிகாசாரங்களைப் பின்பற்றும் ஸத்பிராம்மணர்கள் கொஞ்சமாவது இருந்து கொண்டிருப்பார்களென்று தானே அர்த்தம்?

கலியின் கொடுமையைப் புராணம் முதலானவற்றில் ஜாஸ்திப் படுத்தித்தான் சொல்லியிருக்கிறது. எல்லாம் போயேபோய் விட்ட மாதிரிதான் வர்ணித்திருக்கும். நம் ஆசார்யாள் அவதாரத்திற்கு முந்திக்கூட வேத தர்மம் அடியோடு போய்விட்டது என்றே தேவர்கள் கைலாஸத்துக்குப் போய் பரமேச்வரனிடம் முறையிட்டுக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் அப்புறம் பார்த்தால் தலைமுறை தலைமுறையாக உயர்ந்த வைதிகாநுஷ்டானமுள்ள ஒரு மலையாள ப்ராம்மண குடும்பத்தில் ஆசார்யாள் அவதாரம் பண்ணினார். யதோக்தமாக எல்லா வைதிக வித்யைகளையும் குருகுலத்தில் அப்யாஸம் செய்தார் என்றெல்லாம் தெரிந்து கொள்கிறோம். நல்ல வைதிகாநுஷ்டானங்களால் ஸம்ஸ்காரம் பெற்றவர்கள்-பத்மபாதர் போன்றவர்கள்-அவரிடம் சிஷ்யர்களாக வந்து சேர்ந்ததாகப் பார்க்கிறோம். ஆனபடியால் வேத தர்மம்-‘வேத’ தர்மம் என்று சொல்வானேன்? நம்மைப் பொறுத்தமட்டில் தர்மம் என்றால் வேத தர்மம்தான். அப்படிப்பட்ட தர்மம்-எப்போதுமே முற்றிலும் அழிந்துபோய் விடவில்லை என்று தெரிகிறது.

“இது கலியாச்சே! ஜனங்களுக்கு ஆத்மபலம் ரொம்பக் குறைச்சலாச்சே! இதிலே ஜனங்கள் அக்னிஹோத்ர கர்மாநுஷ்டானத்தை நன்றாக நடத்திக் காட்ட முடியுமா? ஸந்நியாஸ ஆச்ரமத்தை நியமத்துக்கு பங்கம் வராமல் அநுஷ்டிக்கத்தான் முடியுமா?” என்று இந்த யுக ஆரம்பத்தில் தர்ம சாஸ்த்ரங்களை வகுத்துக் கொடுக்கும்போதே ஒரு கேள்வி வந்தது. அக்னி ஹோத்ரம் என்பது கர்ம காண்டத்தில், ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் வருவது. ஸந்நியாஸம் என்பது ஞான காண்டத்தில் நிவ்ருத்தி மார்க்கமாக வருவது. எனவே இந்த இரண்டும் போய்விட்டால் ஜனங்கள் உருப்பட வழியேயில்லை. அல்ப சக்தர்களான கலிகால மநுஷ்யர்களுக்கு இந்த அதோகதிதானா என்று கேள்வி வந்தது.

அதற்கு தர்ம சாஸ்த்ரக்காரர்கள் என்ன பதில் சொன்னார்கள். அதாவது, தீர்ப்புக் கொடுத்தார்கள்?

“கலியுகம், க்ருதயுகம் என்று போட்டுக் குழப்பிக் கொள்ளவேண்டாம். எதுவரை வர்ண விபாகம் கொஞ்சமாவது இருக்கிறதோ, எதுவரை வேத அத்யயனம் கொஞ்சமாவது இருக்கிறதோ, அதுவரை அக்னிஹோத்ரமும் ஸந்நியாஸமும் இருக்கலாம்” என்று தீர்ப்புக் கொடுத்தார்கள். அதனால் கலியிலும் இவையெல்லாம் மங்கிப் போனாலும் முழுக்க அணைந்து விடாமல் முணுக்கு முணுக்கு என்று எரிந்து கொண்டுதானிருக்கும் என்று தெரிகிறதல்லவா? அணைந்துபோகிற நிலைக்கு வரும்போது ஒரு மஹா புருஷர் வந்து எண்ணெய்போட்டு, திரியைத் தூண்டிவிட்டு நன்றாகவே ஜ்வலிக்கச் செய்வார். க்ருதயுகமே வந்துவிட்டதோ என்று நினைக்கிறமாதிரிகூடக் கொஞ்சகாலம் ரொம்ப நன்றாகப் போகும். அப்புறம் மறுபடி மங்கல், மறுபடித் தூண்டிவிடுவது என்று போய்க் கொண்டிருக்கும்.

ஆசார்யாளின் அவதார காலம் உள்பட எப்போதும், இந்தக் கலியிலுங்கூட, நல்ல கர்மாநுஷ்டாதாக்கள் (வறட்டு மீமாம்ஸையாக இல்லாமல் கர்ம யோகமாகச் செய்கிறவர்கள்) , நல்ல பக்தியுள்ளவர்கள், ஞானம் நிரம்பிய ஞானிகள் எல்லோரும் கொஞ்சமாவது இருந்து வந்திருக்கிறார்கள்; இனிமேலும் இருப்பார்கள். குருபரம்பரை என்று ஒன்று எல்லா மார்க்கத்திலும் அவிச்சின்னமாக (முறிவுபடாமல்) இருந்தே வந்திருக்கிறது. குரு இல்லாமல் அத்யயனமுமில்லை, ஸந்நியாஸ தீக்ஷையுமில்லையாதலால், இவை எப்போதும் இருந்திருக்கின்றனவென்றால் பரம்பரா க்ரமத்தில் இவற்றை அப்யஸித்து உபதேசித்து வந்த குருக்களும் அவிச்சின்னமாக இருந்திருப்பதாகவே ஆகிறது. குரு சிஷ்யப் பரம்பரை க்ரமத்தில் வருவதான “ஸம்ப்ரதாயவித்யை”க்குத்தான் ‘வால்யூ’ உண்டு என்று ஆசார்யாள் பாஷ்யங்களில் பல இடங்களில் சொல்லியிருப்பதால் அவர் நாள் வரைக்கும் அப்படித் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததாக ஏற்படுகிறது. அத்வைத வித்யையை அவர் இப்படிப் பரம்பரை க்ரமத்தில் கோவிந்த பகவத் பாதாளிடமிருந்து உபதேசம் பெற்றது மட்டுமின்றி, அவர் காலம் வரை வேறு பல அத்வைத ஆசார்யர்களும் இருந்திருக்கிறார்கள்.காசக்ருத்ஸ்னர், த்ரவிடாசார்யார், ப்ரஹ்மநந்தி, பர்த்ருப்ரபஞ்சர், பர்த்ருஹரி, ப்ரஹ்மதத்தர், ஸெளந்தர பாண்ட்யர் என்பவர்கள் இப்படி ஆசார்யாளுக்கு முன்பே அத்வைதம் சொல்லியிருக்கிறார்கள். அதே மாதிரி அவர் நாளில் நல்ல வைதிக – ஆகம முறைகளின்படி பூஜைகள் நடந்த ஆலயங்களும் இல்லாமல் போய்விடவில்லை. அவர் மூன்று தடவை இந்த முழுவதிலும் க்ஷேத்ராடனம் செய்ததில் பல ஆலயங்களில் உக்ரமான பத்ததியை ஸெளம்யமாக்கினாரென்றும், அவைதிக தாந்த்ரிக பூஜையை முறைப்படி மாற்றினாரென்றும் சொல்லியிருந்தாலும் எல்லா ஆலயங்களிலுமே அப்படிச் செய்தாரென்று சொல்லவில்லை ஸரியான முறையில் வழிபாடு நடந்த ஆலயங்களும் இருந்திருக்கின்றன. அவருடைய பெற்றோர்களே திருச்சூர் ஆலயத்தில் பஜனம் இருந்துதான் அவர் அவரிதரிக்கும்படியாக வரம் பெற்றிருக்கிறார்கள்.

பின்னே ஏன், “போச்சு போச்சு! கலியில் எல்லாம் போச்சு! ஏதாவது கொஞ்சம் மிச்சமிருந்தாலும் அதுவும் கால க்ரமத்தில் போயே போயிடும். எல்லாம் மிருகப் பிராயமாயிடும்” என்று புராணங்கள் பயமுறுத்துகின்றனவென்றால், நாம் ஆலஸ்யமாக (மெத்தனமாக) இருந்துவிடக் கூடாது என்று எச்சரித்து உசுப்பிவிட்டு உஷார்ப்படுத்துவதற்குத்தான். ரொம்பவும் ஆபத்தாக வர்ணித்தால்தான் நாம் அசைந்து கொடுப்போம் என்பதால்தான்.

‘கலிதான் அதர்ம யுகமென்றால் நாம் அதர்மமாகத் தான் இருந்துவிட்டுப் போவோமே!’ என்று சொல்வது தப்பு. “திருடர்கள் ஆபத்து ஜாஸ்தி இருக்கிறது” என்று போலீஸ் தண்டோராப் போட்டால் என்ன செய்வோம்? திருடர்கள் வந்து எடுத்துக்கொண்டு போகட்டும் என்று நாமே உடைமைகளைத் தெருவில் போட்டுவிட்டா உட்கார்ந்து கொண்டிருப்போம்? ‘காப்பாற்ற முடிகிறவரையில் காப்பாற்றிக் கொள்வோம்’ என்று தானே ஜாக்ரதை செய்து கொள்வோம்? போலீஸ் தண்டோரா போட்டதன் நோக்கமும் இப்படி ஜாக்ரதை செய்து, முடிந்தமட்டும் ரக்ஷித்துக் கொடுப்பதற்குத்தானே? “கலி அதர்ம ஆட்சியை ஆரம்பித்துவிட்டான்” என்று சாஸ்த்ரங்கள் தண்டோராப் போடுவதற்கும் தாத்பர்யம், கூடிய மட்டும் தர்மத்தை ஜாஸ்க்ரதையாக ரக்ஷித்துக் கொள்வதற்குத்தானே ஒழிய, ‘ஒன்றும் பண்ணிக்கொள்வதற்கில்லை’ என்று, இருப்பதையும் விட்டுவிட்டு வீணாகப் போவதற்கல்ல.

இந்த யுகத்தில் வரும் அதர்ம ப்ரவாஹத்தை ஒருவன் எதிர்த்து நின்றால்தான் மற்ற யுகங்களில் செய்யும் தர்மாநுஷ்டான பலனைவிடக் கோடி மடங்கு பலன் பெறலாம். எதிர்ப்பு உண்டான ஸமயத்தில் தடுத்து நின்றால் தான் பெருமை அதிகம்.

(லேசாகச் சிரித்தபடி) மற்ற யுகங்களில் ரொம்பப் பேர் ஈச்வரனிடம் போய்ச் சூழ்ந்து கொண்டிருப்பார்கள். அவருக்கு ஸாவகாசமாக ஒவ்வொருவரையும் விசாரித்து அநுக்ரஹம் செய்ய முடியாமலிருக்கும். கலியில், ‘யார் வருவா? யார் வருவா?’ என்று பார்த்துக் கொண்டிருப்பார். அதனால் நாம் கொஞ்சம் யத்னம் பண்ணினால்கூடக் கோடியாக நினைத்துக் கூப்பிட்டு வைத்துக்கொண்டு நன்றாக அநுக்ரஹம் பண்ணிவிடுவார்.

ஒரேயடியாக பயமுறுத்திப் “போச்சு, போச்சு” என்று சொல்வதாலேயே சிலர், ‘நம்முடைய தடுப்பு முயற்சி நிஷ்பிரயோஜனமாகத்தான் போகும்’ என்று சோர்ந்து விழுந்துவிடப் போகிறார்களே என்று, இந்த யுகத்திற்கே உள்ள சில ப்ரத்யேக அநுகூலங்களையும் சாஸ்த்ரங்களில் சொல்லித் தெம்பூட்டியிருக்கிறார்கள். க்ருத யுகத்தில் மனோ நிக்ரஹம் என்ற சிரம ஸாத்யமான கார்யத்துடன் கூடியதான த்யானம் செய்தும், த்ரேதாயுகத்தில் சரீரத்தைக் கஷ்டப்படுத்திக்கொண்டு யாகங்கள் செய்தும், த்வாபர யுகத்தில் விஸ்தாரமாக அர்ச்சனை பூஜை என்று செய்துமே பெறக்கூடிய அநுக்ரஹ பலனை இந்தக் கலியில்தான் ஸுலபமாக பகவந்நாமத்தைச் சொல்லியே பெற்றுவிடலாமென்றும் சொல்லியிருக்கிறார்கள்-பயமுறுத்திய அதே சாஸ்திரங்களிலேயே ரொம்பவும் ஆறுதலாகச் சொல்லியிருக்கிறார்கள். “கலியா அஸத்தான யுகம்? அதுதான் ஸத்தான யுகம். கலி: ஸாது:, கலி: ஸாது:” என்று வ்யாஸாசார்யாள் இரண்டு தரம் உறுதிப்படுத்திச் சொல்லியிருக்கிறார்!

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பிற மத கண்டனத்திற்காக அல்ல;ஸ்வயமத கண்டனம் கூடாது என்றே!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  சங்கர 'விஜயம்'
Next