பாரத குட்டுகளில் ஒன்று : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

வியாஸாசார்யாளில் ஆரம்பிக்கிறேன். பிள்ளை யாரில்தானே ஆரம்பிக்க வேண்டும்? அதனால், “மஹா பாரதம்” பண்ணும்போது பிள்ளையாரையே கொஞ்சம் பிரமித்து யோசிக்குமாறு பண்ணுவதற்காக வ்யாஸர் செய்த ‘பாரத குட்டு’ ஸ்லோகமொன்றில் ஆரம்பிக்கிறேன்*.

பாரத ஸ்லோகங்களைப் பண்ணி வ்யாஸர் சொல்லிக் கொண்டே போகப் பிள்ளையார் மேருமலைச் சிகரத்தில் அதைத் தம் தந்தத்தால் எழுதிக்கொண்டே போனார். ‘டிக்டேட்’ பண்ணின வியாஸருக்குத்தான் அலுப்பும் சலுப்புமாகிவிட்டது – பிள்ளையார் எழுதுகிற ஸ்பீடுக்கு ஈடு கொடுக்க முடியாமல்! ஸாதாரணமாக ஒருத்தர் வாயால் சொல்லிக்கொண்டு போகிற அதே வேகத்தில் அதை எழுத முடியாது. அதற்காகத்தான் இப்போது பேசினது பேசினபடி verbatim report கொடுப்பதற்காக ‘ஷார்ட் ஹான்ட்’ கண்டுபிடித்திருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக விக்னேஸ்வருடைய பிரபாவம் இருக்கிறது! அவர் எழுதுகிற ஸ்பீடுக்குச் சரியாக ஸாக்ஷாத் வியாஸ மஹரிஷியாலேயே ஸ்லோகங்களைக் கவனம் பண்ண முடியவில்லை. முதலில் அவர் பிள்ளையாரிடம் பெரிசாகக் ‘கண்டிஷன்’ போட்டார். “நான் பாட்டுக்கு கிறு கிறு என்று ஸ்லோகங்களைப் பண்ணிக்கொண்டே போவேன். நீ மெதுவாக எழுதினால் நான் நிறுத்தி நிதானமாகச் சொல்லும்படி ஆகிவிடும். அப்படிச் சொன்னால் என் inspiration flow (பிரதிபா சக்தியின் பொழிவு) கெட்டுப் போய்விடும். ஆகையால் நான் சொல்கிற வேகத்துக்கு ஸமமான வேகத்தில் உன்னால் எழுத முடிந்தாலே சொல்லுவேன்” என்றார். இப்படி அவர் சொன்னவுடன் பிள்ளையாரும் பதிலுக்குச் ‘சாலஞ்ஜ்’ பண்ணுகிற மாதிரி, “நான் எழுத ஆரம்பித்தேனானால் என் கை நிற்காமல் அது பாட்டுக்கு விரு விரு என்று ஓடிக்கொண்டே இருக்கும். நான் இப்படி எழுதுவது க்ஷணங்கூட நிற்காதபடி நீர் ஸ்லோகத்தை மடமட என்று பண்ணிக்கொண்டே போவீரா?” என்றார். “முடியும்” என்று வியாஸர் சொன்னார்.

இப்படி இவர்கள் பரஸ்பரம் ‘சாலஞ்ஜ்’ பண்ணிக் கொண்டு, வியாஸர் மடை திறந்த மாதிரி மஹாபாரத ஸ்லோகங்களைப் பண்ணிச் சொல்லிக்கொண்டே போக, மஹா கணபதி அதே வேகத்தில் அவற்றை எழுதிக்கொண்டு போனார். ஒரு ஆயிரம் ஸ்லோகம் ஆனவுடன் வியாஸருக்குத்தான் மூச்சு முட்டியது. ஓட்டப் பந்தயத்தில் மெதுவாகப் பார்வதி பரமேச்வராளைப் பிரதக்ஷிணம் பண்ணியே ஸுப்ரம்மண்ய ஸ்வாமியை ஜயித்த பிள்ளையார், இந்தப் பந்தயத்திலே எழுத்தை வேக வேகமாய் ஓட்டி வியாஸரை ஜயித்துவிடுகிற கட்டத்துக்கு வந்துவிட்டார். பிள்ளையார் ஜயித்து விட்டால் அப்புறம் எழுதமாட்டார். அவரைத் தவிர யார் வியாஸருக்கு ஈடு கொடுத்து எழுத முடியும்?அதனால் அவரையே தமக்கு ‘ரைட்டர்’ ஆக இருத்திக் கொள்ள வியாஸர் ஒரு யுக்தி பண்ணினார். “நீ வெறுமே மெகானிகலாக எழுதிக் கொண்டு போனால் போதாது. ஸ்லோகங்களின் அர்த்தத்தை நன்றாக மனஸில் வாங்கிக் கொண்டு, நான் கேட்கிறபோது ‘எக்ஸ்ப்ளெயின்’ பண்ண வேண்டும்” என்றார். ஞான ஸ்வரூபமான பிள்ளையாரும், “ஆஹா, அப்படியே” என்றார். இதைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டு வியாஸர் என்ன பண்ணினாரென்றால் ஒவ்வொரு ஆயிரம் ஸ்லோகம் ஆகி அவருக்கு ஆயாஸமாகிக் கொஞ்சம் ஆச்வாஸம் பண்ணிக்கொள்ள வேண்டி வரும்போதெல்லாம், ரொம்பவும் சிக்கலாகப் பதங்களைப் போட்டு பின்னி ஒரு ஸ்லோகத்தைப் பண்ணிவிடுவார். அந்த ஸ்லோகத்தை மேலெழுந்தவாரியாகப் பார்க்கிறபோது, பதம் பதமாக அர்த்தம் புரிந்தாலும், சேர்த்துப் பார்த்தால் ஒன்றும் அர்த்தமே ஆகாமல் ஒரே குழப்பமாயிருக்கும். வியாஸர் அந்தப் பதங்களை எப்படி ஸந்தி பிரித்துச் சொல்லுகிறாரோ, அப்படியே வைத்துக் கொள்ளாமல் எழுத்துக்களை முன் பின்னாக மாற்றி வேறு விதத்தில் பதங்களை அமைத்துக் கொண்டால்தான் அர்த்தம் புரியும். இந்த மாதிரி ஆயிரம் ஸ்லோகத்துக்கு ஒன்றை அவர் கடினமாக, ‘காம்ப்ளிகேடட்’-ஆக ரொம்பவும் வார்த்தை விளையாட்டுடன் சொன்னவுடன் கணபதி அரை க்ஷணம் யோசித்துப் பார்த்து புரிந்து கொள்வார். அந்த அரை க்ஷணத்தில் வேத வியாஸ பகவானும் ஆச்வாஸமடைந்து மேற்கொண்டு கவனம் பண்ணச் சக்தி பெற்றுவிடுவார்.

இதனால் மஹாபாரதத்தில் ஆயிரத்துக்கு ஒரு ஸ்லோகம் நமக்கெல்லாம் லேசில் அர்த்தம் புரியாமல் மண்டையை உடைக்கும். இவற்றுக்கு ‘பாரத குட்டு’ என்றே பேர்! லக்ஷம் கிரந்தம் (ஸ்லோகம்) கொண்ட பாரதத்தில் இப்படி நூறு ‘குட்டுக்கள்’ இருக்கின்றன. அதில் ஒன்றே ஒன்று – ஸாம்பிளுக்கு சொல்கிறேன்.

பஞ்ச பாண்டவர்கள் விராட தேசத்தில் மாறு வேஷம் போட்டுக்கொண்டு அஜ்ஞாதவாஸம் செய்கிற ஸமயம். ஒரு வருஷம் இப்படித் தங்கள் அடையாளம் தெரியாதபடி அவர்கள் பூர்த்தி செய்துவிட்டால், கௌரவர்கள் அவர்களுடைய ராஜ்யத்தை (முன்பு சூதாட்டத்தின் போது பாண்டவர்கள் இழந்த ராஜ்யத்தை) திருப்பிக் கொடுத்து விடவேண்டும் என்பது ஒப்பந்தம். இப்போது பன்னிரண்டு வருஷ வனவாஸம் முடிந்து, அப்புறம் ஒரு வருஷ அஜ்ஞாத வாஸமும் பூர்த்தியாகிற கட்டம் வந்துவிட்டது. எப்படியாவது அவர்களை அதற்குள் அடையாள கண்டு பிடித்து மீண்டும் அவர்கள் ராஜ்யம் பெறமுடியாதபடிப் பண்ணி விடவேண்டும் என்று துர்யோதனன் நினைத்தான். நாலா திசைகளிலும் அவன் வேவுகாரர்களை அனுப்பி ‘ஸ்பை’ பண்ணினதில், விராட நகரத்தில்தான் பஞ்ச பாண்டவர்கள் இருக்கக் கூடும் என்று தடயம் கிடைத்தது. ஒளிந்து கொண்டிருப்பவர்களை எப்படி அம்பலப்படுத்துவது என்று யோசித்து ஒரு சூழ்ச்சி பண்ணினான். பஞ்ச பாண்டவர்களுடைய விச்வாஸ குணம் துரியோதனனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் விராட ராஜாவுக்குத் தாங்கள் ஏதாவது ஹிம்ஸை கொடுத்தால், அங்கே அஜ்ஞாதவாஸம் செய்யும் பாண்டவர்கள் ராஜாவை ரக்ஷிக்க வருவார்கள்;அப்போது அம்பலப்படுத்தி, மறுபடி அவர்களுக்கு ராஜ்யமில்லாமல் செய்து விடலாம் என்று நினைத்தான். இதன் மேல் கௌரவ ஸேனை விராட ராஜ்ய எல்லைக்குள் வந்து அங்கே இருந்த பசு மந்தைகளையெல்லாம் பிடித்து ஓட்டிக்கொண்டு போக ஆரம்பித்தது. பாரதத்தில் இந்த கட்டத்துக்கு ‘கோஷ யாத்ரா’ என்று பெயர். ‘கோஷம்’ என்றால் இடைச்சேரி. இது விராட பர்வத்தில் வருகிறது.

இப்படி துர்யோதனாதியர் மாடு பிடித்தபோது அவர்களோடு யுத்தம் செய்வதற்காக விராட ராஜ குமாரனான உத்தர குமாரனை பிருஹந்நளை என்ற ஸ்திரீ வேஷத்திலிருந்த அர்ஜுனன் தேரோட்டி அழைத்துக் கொண்டு வருகிறான். யுத்த பூமிக்கு வருவதற்கு முன் பெரிசாக வீரப் பிரதாபம் பேசிய உத்தரகுமாரன் பீஷ்ம-த்ரோணாதியரை பார்த்தவுடனேயே தொடை நடுங்கிக் கொண்டு, “யுத்தமே வேண்டாம்; திரும்பிப் போய் விடலாம்” என்று ஆரம்பித்துவிட்டான். அப்போது அர்ஜுனன் அவனுக்குத் தைரியம் சொல்லிவிட்டுத் தானே  பிருஹந்நளை வேஷத்திலேயே, பாணங்களைப் போட ஆரம்பித்தான்.

“இத்தனை ஆச்சர்யமாக சர வர்ஷம் பொழிகிற இந்தப் பெண் யார்?”என்று பீஷ்மர் அதிசயப்படுகிறார். அப்போது அவரிடம் அந்தப் பெண் யார் என்பதைப் பற்றி த்ரோணர் பதில் சொல்கிறார். இந்த பதில் ‘பாரத குட்டு’க்களில் ஒன்றாகும்.

அர்ஜுனன் எப்படி வெளிப்படத் தெரியாமல் அஜ்ஞாதமாக இருந்தானோ, அப்படியே அவனைப் பற்றிச் சொல்லும் த்ரோண வசனமான ஸ்லோகத்துக்கும் அர்த்தம் வெளிப்படத்தெரியாமல் புதிர் மாதிரி இருக்கிறது அந்த ஸ்லோகம்:

நதீஜலம் கேசவநாரி கேது: நகாஹ்வயோ நாம நகாரிஷூநு: |

ஏஷாங்கநா வேஷதர: கிரீடி ஜித்வா வயம் நேஷ்யதி சாத்ய காவ: ||

‘நதீ ஜலம்’ என்றால் ‘ஆற்றுத்தண்ணீர்’. ‘கேசவநாரி கேது’ என்றால் ‘கேசவனுடைய ஸ்த்ரீயின் அடையாளம்’. ‘நகம்’ என்றால் ‘மலை’ அல்லது ‘மரம்’. ‘நகாஹ்வயோ நாம’ என்பதற்கு ‘நகம் என்று பேர் உள்ளவன்’என்று அர்த்தம். ‘நகாரிஷூநு:’ என்றால் ‘நகத்தின் விரோதிக்குப் பிள்ளை’. ‘ஏஷாங்கனா வேஷதர: கிரீடி’என்பதில் ‘ஏஷ அங்கனா’ என்பது ‘ஏஷாங்கனா’ ஆகியிருக்கிறது. ‘ஏஷ அங்கனா வேஷதர: கிரீடி’ என்றால் ‘கிரீடம் வைத்துக் கொண்டிருக்கிற இந்தப் பெண் வேஷக்காரன்’ என்று அர்த்தம். ‘ஜித்வா என்றால் ஜயித்து. ‘வயம்’ என்றால் ‘நாங்கள்’. ‘நேஷ்யதி’ என்றால் ‘கொண்டு போகிறான்’. ‘ச அத்ய’ என்பது ‘சாத்ய’ என்றாயிருக்கிறது. ‘ச’ என்றால் ‘மேலும்’. ‘அத்ய’ என்றால் ‘இப்போது’. ‘காவ:’ என்றால் ‘பசுக்கள்’.

இப்படித் தனித்தனியாக வார்த்தைகளுக்கு அர்த்தம் இருந்தாலும், எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் ஒரு அர்த்தமும் ஏற்படமாட்டேன் என்கிறதே! எல்லா வார்த்தைகளையும் சேர்த்தால் என்ன ஆகிறது?” கிரீடம் வைத்துக் கொண்டிருக்கிற இந்தப் பெண் வேஷக்காரன் ஆற்றுத் தண்ணீர்; கேசவனுடைய ஸ்திரீயின் அடையாளம்; மலை அல்லது மரம் என்று பேர் உள்ளவன்; மலை அல்லது மரத்துக்கு சத்ருவின் பிள்ளை; நாங்கள் ஜயித்து, மேலும் பசுக்கள் கொண்டு போகிறான்” என்று ஒரே அபத்தமாக இருக்கிறது. நாட்டியம் சொல்லிக் கொடுக்கும் பெண்ணான பிருஹந்நளை கிரீடமே வைத்துக் கொள்ளததால் ‘கிரீடி’ என்பது தப்பு. அதுவுமில்லாமல் ‘கிரீடி’ என்பது ஆண்பால். ‘கிரீடினி’ என்றிருந்தால்தான் பெண்ணைக் குறிக்கும். அர்த்த ரீதியிலும் தப்பாக, வியாகரண ரீதியிலும் தப்பாகக் கன்னா பின்னா என்று ஸ்லோகம் இருக்கிறது.

இப்படிச் சன்ன பின்னலாக இருக்கிற ஸ்லோகத்தை நன்றாக யோசித்து அக்கு வேறு ஆணிவேறாக அக்ஷரங்களைப் பிரித்து, வேறு தினுஸில் பதச் சேர்க்கை செய்தால் அர்த்தம் ஏற்பட்டுவிடும். மஹாபுத்திமான்கள் மட்டுமே ரொம்பப் பிரயாஸைப்பட்டு கண்டுபிடிக்க முடியும். பிள்ளையாருக்கு அரை நொடியில் அர்த்தமாகி விட்டது.

அந்த அர்த்தம் என்ன?

அதை அறிந்துகொள்வதற்கு ஸ்லோகத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் உள்ள பதங்களை வேறு விதமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும்.

முதலில் வருகிற ‘நதீ-ஜலம் கேசவ-நாரி-கேது’ என்பதை, ‘நதீஜ-லங்கேச (‘லம்கே’ என்பது ஸம்ஸ்கிருதத்தில் ‘லங்கே’ என்று ஆகும்) -வநாரி-கேது’ என்று பிரித்துக் கொள்ள வேண்டும். ‘சுக்கு, மிளகு, திப்பிலி’ என்பதை ‘சுக்குமி, ளகுதி, பிலி’ என்று பிரித்து எவனோ மருந்துக் கடையில் கேட்டு அடிவாங்கிக் கொண்ட கதையாக நாம் தப்பாக ஸந்தி பிரித்ததில்தான் ஒரு அர்த்தமும் ஏற்படாமல் போயிற்று. வேண்டுமென்றே வியாஸர் பதங்களைத் தப்பாகப் பிரித்துச் சொன்னாலும் விக்னேஸ்வரர் ஸரி செய்து கொண்டார்.

இதற்கு என்ன அர்த்தம்?

‘நதீஜ’என்றால் ‘நதிக்குப் பிறந்தவரே!’என்று அர்த்தம். கங்காதேவியின் புத்ரரான பீஷ்மரை, ‘நதீஜ’என்று த்ரோணர் கூப்பிடுகிறார்.

‘நதீஜ’என்று பீஷ்மரை த்ரோணர் கூப்பிட்டு மேலே என்ன சொல்கிறார்?’ லங்கேச வநாரி கேது:’- ‘லங்கேச’ என்றால் ‘லங்கேச்வரனான ராவணனுடைய’; ‘வந அரி’- வநாரி’. ‘வநாரி என்றால் வனத்தின் சத்ரு, அல்லது வனத்தை அழித்தவர். லங்கேச்வரனுடைய அசோகவனத்தை அழித்த ஆஞ்ஜநேய ஸ்வாமியைக் குறிப்பிடுகிறார். “கேது:” என்றால் இங்கே ‘கொடி’ என்று அர்த்தம். ஆஞ்ஜநேயரைத் தன் கொடியாகக் கொண்டவன் என்பதே ‘லங்கேச வநாரி கேது:’ என்பதன் அர்த்தம். அர்ஜுனனுடைய கொடியில் ஆஞ்ஜநேய ஸ்வாமியின் ரூபம் போட்டிருக்கும். ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியிடம் ஞானோபதேசம் பெற்ற ஹநுமார், பிற்பாடு பாரத யுத்தத்தில் கிருஷ்ண பரமாத்மா பண்ணப்போகிற கீதோபதேசத்தைக் கேட்பதற்காக முன்கூட்டியே அர்ஜுனனின் த்வஜத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு விட்டார்!

“நகாஹ்வயோ நாம” என்றால் மரம் அல்லது மலை என்ற பெயருள்ளவன் என்றேனல்லவா? யோசித்துப் பார்த்தால் ‘லங்கேச வநாரி கேது’ என்பது அர்ஜுனனைக் குறிப்பிடுவதுபோல் இதுவும் அவனை அடையாளம் காட்டுவதுதான் என்று தெரியும். இங்கே ‘நகம்’ என்றால் மரம் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளவேண்டும். ‘அர்ஜுனன்’ என்றால் வெள்ளை வெளேர் என்று இருக்கிறவன் என்பது பொது அர்த்தம். ‘அர்ஜுனம்’ என்று மருத மரத்துக்கும் பேர். மருத மரத்தை ஸ்தல விருக்ஷமாகக் கொண்ட ஸ்ரீசைலம், திருவிடைமருதூர், திருப்புடைமருதூர் ஆகிய க்ஷேத்ரங்களுக்கு மல்லிகார்ஜுனம், மத்யார்ஜுனம், புடார்ஜுனம் என்றே ஸம்ஸ்கிருதத்தில் பேர். “நகாஹ்வயோ நாம” என்றதால் ‘அர்ஜுன என்ற மரத்தின் பெயருள்ளவன்’என்று ஸூசனை பண்ணினதாகிறது.

அப்புறம் ‘நகாரிஸூநு என்றால் மரம் அல்லது மலையின் விரோதியுடைய பிள்ளை என்று சொன்னேனல்லவா? இங்கே ‘நகம்’ என்றால் மரம் என்று இல்லாமல், மலை என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். மலைக்கு சத்ரு யார் என்றால் இந்திரன். ஆதி காலத்தில் மலைகள் இறக்கைகளோடு பறந்து கொண்டிருந்தனவாம். இந்திரன்தான் வஜ்ராயுதத்தால் அந்த இறக்கைகளை வெட்டி மலைகளை இருந்த இடத்தோடு கிடக்கும்படிச் செய்தானாம். இப்படி நகரமுடியாமல் ஆனபிறகுதான் மலைக்கு அசலம், அகம், நகம் என்றெல்லாம் பேர் ஏற்பட்டது. ‘சலம்’ அல்லது ‘கம்’ என்றால் அசைவது, போவது. ஒரு வார்த்தைக்கு முன் ‘அ’அல்லது ‘ந’போட்டால் opposite meaning தரும் எதிர்சொல்லாகி விடும். அதனால் அசலம், அகம், நகம் என்றால் அசையாதது என்று பொருள் பட்டு மலையைக் குறிப்பதாகிறது. மலைகளின் இறக்கையை வெட்டின சத்ருவான இந்திரனுடைய குமாரன்தான் ‘நகாரிஸூநு:’. குந்திக்கு இந்திரப் பிரஸாதத்தால் பிறந்தவனே அர்ஜுனன்.

“ஏஷ அங்கனா வேஷதர: கிரீடி” என்பதற்கு மேலெழுந்தவாரியாகப் பார்த்து, ‘கிரீடம் வைத்துக் கொண்டிருக்கிற இந்தப் பெண் வேஷதாரி’என்று அர்த்தம் சொன்னது சரியில்லை. ‘கிரீடி’ என்றால் பொதுப் படையாகக் கிரீடம் வைத்துக்கொண்டிருக்கும் எவரையும் குறிக்கும் common noun -ஆகக் கொள்ளக்கூடாது. அப்படிக் கொண்டால்தான் ‘பிருஹந்நளை கிரீடமே வைத்துக் கொள்ளவில்லையே. எப்படி கிரீடி என்று சொல்லலாம்?’ என்ற கேள்வி வருகிறது. அதனால் இங்கே ‘கிரீடி’என்பதை ஒரு ஆசாமியை மட்டும் குறிப்பிடும் proper noun -ஆகக் கொள்ளவேண்டும். அர்ஜுனனுக்குத்தான் ‘கிரீடி’ என்றே ஒரு சிறப்புப் பெயர் உண்டு. அவனுடைய வீரத்தை மெச்சி இந்திரனே முடிசூட்டிக் ‘கிரீடி’ என்ற டைட்டிலையும் கொடுத்தான்.

‘கிரீடி’ என்பதை அர்ஜுனன் என்று புரிந்து கொண்டுவிட்டால், அவன்தான் பெண்வேஷம் போட்டுக் கொண்டு விராட ராஜ குமாரனுக்கு ஸாரத்யம் செய்கிறவன், ஹநுமாரைக் கொடியாகக் கொண்டவன், அர்ஜுன விருக்ஷத்தின் பேர் படைத்தவன் பேர் படைத்தவன், மலைகளின் சிறகை வெட்டின இந்திரனுடைய புத்திரன் என்றெல்லாம் தெளிவாகி விடுகிறது.

கடைசியில் மட்டும் இன்னம் தெளிவாகவில்லை. ‘ஜித்வா வயம் நேஷ்யதி சாத்ய காவ:’ என்றுதானே கடைசியில் ஸ்லோகம் முடிகிறது? இதற்கு ‘நாம் ஜயித்து, மேலும் இப்போது பசுக்கள் கொண்டு போகிறான்’ என்று தாறுமாறாக அர்த்தம் ஏற்படுகிறது. இதையும் நன்றாக ஆலோசனை பண்ணி, ஸ்லோகத்தின் ஆரம்பத்தில் செய்தது போலவே வேறு தினுஸில் பத விபாகம் பண்ண வேண்டும். அதாவது ‘ஜித்வா-வயம்-நேஷ்யதி-சாத்ய-காவ:’ என்று வியாஸ்ர் சொன்னதை, “ஜித்வா- (அ) -வ-யம்-நேஷ்யதி சாத்யகா-வ:” என்று வேறு வேறு தினுஸாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். இப்படிப் பண்ணிக்கொண்டால் ஏற்படுகிற அர்த்தம்: (கிரீடியான இந்த அர்ஜுனன்) ‘ச அத்ய’- மேலும், இப்போது ‘யம்’-எவனை, அதாவது துர்யோதனனை; ‘ஜித்வா’- ஜயித்து;’வ:’- உங்களுடைய;”கா:”- பசுக்களை;’நேஷ்யதி’- ஒட்டிப் போகப் போகிறானோ;’ தம்’- அவனை, அதாவது அந்த துர்யோதனனை (‘யம்’- ‘எவனை’என்று முதலில் வந்தால், பிற்பாடு ‘தம்’- ‘அவனை’ என்று நாமாக வருவித்துக் கொள்ள இலக்கணம் இடம் கொடுக்கிறது.) ‘அவ’- காப்பாற்றுங்கள்.

அதாவது ஸ்லோகத்தின் முழு ரூபத்துக்கும் ஏற்படுகிற அர்த்தம் என்னவென்றால் – த்ரோணாசாரியார் பீஷ்மாசார்யாரிடம் சொல்கிறார்: “கங்கா நதியின் புத்திரரே!ராவணனின் அசோகவனத்தை அழித்த ஆஞ்ஜநேய ஸ்வாமியைக் கொடியில் கொண்டவனும், அர்ஜுனமரப் பெயருள்ளவனும், மலையின் சத்ருவான இந்திரனுக்குப் புத்திரனும், ஸ்திரீ வேஷதாரியுமான இந்தக் கிரீடியாகிய அர்ஜுனன் இப்போது எந்த துர்யோதனனை மேலும் ஜயித்து நீங்கள் பிடித்துள்ள பசுக்களை மீட்டு ஓட்டிக் கொண்டு போக வந்திருக்கிறானோ, அந்த துரியோதனனை ரக்ஷியுங்கள்”- என்பதாகும்.

நாம் இத்தனை நாழி மண்டையை உடைத்துக் கொண்டாலே புரிகிற அர்த்தம் பீஷ்மருக்கு உடனே புரிந்து விட்டது. ஏனென்றால் அவர் புத்திமான். நைஷ்டிக பிரம்ம சர்யத்தால் அவருக்கு அபார புத்தி தீக்ஷண்யம் இருந்தது. (பிள்ளையார், ஆஞ்ஜநேயர், பீஷ்மாசாரியார் என்று மூன்று சுத்த பிரம்மசாரிகளை நினைக்கிற புண்யம் இப்போது நமக்குக் கிடைத்திருக்கிறது.)

இந்த மாதிரி அநேக ‘குட்டு’க்களை அநாயாஸமாக உடைத்துக்கொண்டே பாரதத்தை எழுதி பாரத தேசத்துக்கு உபகரித்தவர் விநாயகர். குட்டை உடைத்தவருக்கு நெற்றியில் குட்டிக்கொள்கிறோம்!


*‘குட்டு’ என்ற பதத்தின் விளக்கம் இப்பகுதி முதல் உரையான “பிள்ளையார் சுழி”யில் “எழுத்துப்பணியில் விநாயகர் தொடர்பு” என்ற உட்பிரிவில் காண்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is கன்னா பின்னா
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  சிவசக்தியோ சிவ-விஷ்ணுக்களாக
Next