கன்னா பின்னா : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

‘கன்னா பின்னா’ என்பதையே ஒரு புலவர் நூதன அர்த்தம் கொடுத்து அழகு பண்ணியிருக்கிறார்.

அவர் ராஜஸபையில் இருந்தவராம். கவிவாணர்களுக்கு ராஜா யதேஷ்டமாகக் பொன்னும் பொருளும் கொடுப்பானாம். அதைப் பார்த்து ஒரு பாமரனுக்கு நாமும் ஒரு கவி பண்ணி ராஜாவுக்கு அர்ப்பணம் செய்து ஸம்பாவனை வாங்க மாட்டோமா என்று இருந்ததாம். நான் சொன்ன அந்தப் புலவரிடம் போய், “எனக்காக நீங்கள் ஒரு கவிதை எழுதிக் கொடுங்கள், அதை ராஜாவுக்கு என்னுடையதாக நான் அர்ப்பணம் செய்து பிழைத்துப் போகிறேன்” என்று கேட்டுக்கொண்டானாம்.

போனால் போகிறது என்று பல கவிகள் இம்மாதிரிப் பாமர ஜனங்களுக்காகவும் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். காளிதாஸன்கூட இப்படி உபகரித்ததாகக் கதைகள் உண்டு.

இந்தக் கவியும் அப்படி நல்ல மனஸுள்ளவர். ஆனாலும் இவர் அந்த ஆளுக்குக் கவிதை எழுதித் தராமல், என்ன செய்தாரென்றால், “நீ உன் வாயில் என்ன வந்தாலும் அதை ராஜாவுக்கு முன்னாடி சொல்லு. கன்னா பின்னா என்று உளறிக் கொட்டினாலும் பரவாயில்லை, நான் அதற்கு மிகவும் உயர்ந்த அர்த்தம் இருப்பதாக வியாக்யானம் செய்து, உனக்கு ராஜா நல்ல ஸம்பாவனை கொடுக்கும்படிப் பண்ணுகிறேன்” என்றாராம்.

ராஜஸபைக்கு அந்த ஆள் வந்தான். “கன்னா பின்னா” என்ற இரண்டு வார்த்தைகளையே கிளிப்பிள்ளை போலச் சொன்னான்.

ஸதஸிலே இப்படி ஒருத்தன் பேத்துகிறானே என்று ராஜாவுக்கு மஹாகோபம் வந்துவிட்டது.

அவனைப் புலவர் சட்டென்று ஸமாதானம் பண்ணினார். “இவர் மஹா பெரிய வித்வான். உங்களை எத்தனை உயர்த்தி ஸ்தோத்ரம் செய்திருக்கிறார் தெரியுமா? ‘கன்னா’ என்றால் ‘கர்ணா’ என்று உங்களைக் கூப்பிடுவதாக அர்த்தம். (‘கர்ணன்’ என்பது ‘கன்னன்’ என்றும் ஆகும். கர்நாடகம் என்பதைக் கன்னடம் என்கிறோமல்லவா? அந்த மாதிரி) தான தர்மம் செய்வதில் நீங்கள் கர்ணனுக்கு ஸமமான வள்ளல் என்பதாலேயே ‘கன்னா’ என்று கூப்பிடுகிறார். ‘பின்னா’ என்றால் ‘பின்னால் வந்தவரே’ என்று அர்த்தம். கர்ணனுக்குப் பின்னால் பிறந்தது யார்? தர்மங்களுக்கெல்லாம் உறைவிடமாக, ஸத்வ ஸம்பன்னராக இருந்த தர்மபுத்ரர் அல்லவா? அந்த தர்மபுத்ரனுக்கு நீங்கள் நிகரானவர் என்று சொல்கிறார்” என்று வியாக்யானம் பண்ணினாராம்.

ராஜா ஸந்தோஷப்பட்டு அந்த ஆளுக்கு அக்ஷரலக்ஷம் கொடுத்தானாம்.

உயர்ந்ததான ஒரு ரஸாநுபவத்தின் பேரில் இல்லாமல் வெறும் புத்திசாதுர்யத்தில் பிறப்பதுதான் இது மாதிரியான வார்த்தை விளையாட்டுக்கள் என்றாலும், இவற்றுக்கு உள்ள ஆகர்ஷணத்தால் காளிதாஸன், மாகன், காளமேகம் போன்ற மஹாகவிகள் மட்டுமின்றி, மஹர்ஷிகளாக மஹாஞானிகளாக பக்த சிகாமணிகளாக இருந்து கொண்டே காவ்யங்களை, ஸ்தோத்ரங்களை அநுக்ரஹித்திருக்கும் வியாஸாசார்யாள், நம்முடைய (சங்கர) ஆசார்யாள், அப்பைய தீக்ஷிதர், ஞானஸம்பந்தர் முதலியவர்களும் எப்போதாவது கொஞ்சம் இப்படி விளையாடியிருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is வார்த்தை விளையாட்டு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  பாரத குட்டுகளில் ஒன்று
Next