தர்ம அபிவிருத்தியே அஸ்திவாரம் வர்ண தர்ம பரிபாலனம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஜெனரலாக ஜனஸமூஹத்தைப் பார்க்கிறபோது ராஜதண்டனையே குற்றவாளிக்குப் பிராயச்சித்த கர்மாவாகி, அவனுடைய பாபத்தைப் போக்கும் உபகாரத்தைச் செய்கிறது. இதோடு இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். குற்றவாளி ஒருவன் தண்டனை பெறாமல் தப்புவதற்கு விட்டுவிட்டால் அது ராஜாவுக்கே பாபமாகும் என்றும் சொல்லியிருக்கிறது; ராஜா ராஷ்ட்ர க்ருதம் பாபம் : குடிகளின் பாவம் மன்னனைச் சேரும். யதா ராஜா ததா ப்ரஜா : ‘அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி’ என்று சொல்லி ஒரு பக்கம் அவனை தர்மிஷ்டனாக இருக்கப் பண்ணுவதோடு இன்னொரு பக்கம் குடிகள் தீய வழிபோனால் அந்தத் தீமை அரசனையே சேரும் என்று சொல்லி, இதனாலும் அவனைத் தேசத்தில் தர்மம் நிலைக்கப் பண்ணவேண்டும் என்பதில் விசாரத்துடன் ஈடுபடுமாறு பண்ணியிருக்கிறது.

ராஜ தண்டனையால் குற்றவாளிக்குப் பாபம் போகிறது என்பது போல இன்னொன்றைச் சொல்லி விடுகிறேன். யுத்த பூமியில் பிராணத் தியாகம் பண்ணுவதால் ராஜாவுக்கும், ஸேனா வீரர்களுக்கும் புண்ணியம் உண்டாகிறது என்று சொல்லியிருக்கிறது. போரில் உயிரிழந்தவர்கள் வீர ஸ்வர்க்கமடைவார்கள் என்று சொல்லியிருக்கிறது. ராஜாவுக்கு அநேக ஸெளக்ய போகங்களைக் கொடுத்திருப்பதற்குக் காரணமே அவன் இப்படித் தன் உயிரைப் பணயமாக வைத்து தேசத்தை ரக்ஷிக்கிறானென்பதுதான். இந்த விஷயம் இருக்கட்டும். தண்ட நீதியையும் தர்மத்தையும் பற்றிப் பார்ப்போம்.

குற்றம் செய்கிற எண்ணமே மநுஷ்யனை விட்டுத் தானாகப் போகும்படிச் செய்ய ஸமயாசாரம், பக்தி, ஞான மார்க்கம், கர்ம மார்க்கம், யோகம் முதலியவை இருக்கின்றன. அவற்றின் கட்டுப்பாடுகளில் ஜனங்கள் வராதபோது பயத்தின் மூலம்தான் குற்றம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றாகிறது. ஸமயாசாரியர்கள், ஞானிகள், பக்திமான்கள், யோகஸித்தர்கள் முதலியவர்கள் முதலில் சொன்ன வழியில் ஸாத்விகமாக மக்களை நல்வழி நடக்கச் செய்கிறவர்கள். அந்த ஸாத்விகம் உறைக்காதவர்கள் குற்றம் பண்ணும்போது ராஜா ராஜஸிகமாகத் தண்டனை தர வேண்டியதாகிறது. தேசத்தில் நல்ல நிலைமை, தர்மம், புண்ணியமிருக்க வேண்டுமானால் குற்றம் போனால்தானே முடியும்? அதோடு ஸாது ஜனங்களுக்குச் சோரபயம், கொலைகாரர்களிடம் பயம் முதலியன இல்லாமல் நிம்மதியாக வாழும்படியான நிலையையும் ராஜாதானே அளிக்க வேண்டும்? அதனால்தான் அவனுக்கு தண்ட அதிகாரத்தைக் கொடுத்திருப்பது.

இதற்குள்ள முக்யத்வத்தால் அர்த்த சாஸ்த்ரத்துக்கே ‘தண்டநீதி’என்று ஒரு பெயர் வழங்குகிறது. அர்த்த சாஸ்திரம் என்பதற்கு நீதி சாஸ்திரம், ராஜநீதி சாஸ்திரம், நயசாஸ்திரம் என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. ‘நயம்’என்றால் ‘பாலிஸி’என்று அர்த்தம். தண்டநீதி என்பதே ஜாஸ்தி வழங்குகிற பெயர்.

ஒரு பக்கம் தர்மஜ்ஞர்களை அரசனானவன் போஷித்து அவர்கள் மூலம் தர்மங்களை உபதேசமாகவும், புராணப் பிரவசனங்களாகவும், அவர்கள் நடத்திய சீலமான வாழ்க்கையுதாரணத்தாலும் ‘பெர்ஸுவேஷன் மெத’டில் பிரசாரம் பண்ணிக்கொண்டுதானிருந்தான். இந்த நாளில் இந்த அம்சங்களை அரசாங்கப் பொறுப்பிலிருந்து அடியோடு துண்டித்து விட்டிருப்பது போல அப்போது இல்லை. இப்படி சாந்தமாகச் சொல்லி தர்மம் பதியாத போது, அதர்ம காரியங்கள் நடந்தபோது தண்டோபாயத்தை ப்ரயோகித்தான். இப்போது தண்டோபாயத்தை லீனியன்டாகப் பண்ண வேண்டும் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் போலீஸும் கோர்ட்டும்தான் நாளுக்கு நாள் விருத்தியாகி வருகின்றன. முற்காலத்தில் தர்மக்ஞர்களைப் போஷித்து ராஜா விருத்திபண்ணினதால் போலீஸும் கோர்ட்டும் மினிமமாகவே இருந்தன; கோயில் கட்டுவதே ராஜாவின் முக்ய காரியமாய் இருந்தது. சாஸ்திர மார்க்கப்படி நடந்து சிஷ்டர்களாக, தர்மிஷ்டர்களாக இருக்கிறவர்கள் அந்த நல்ல வழியில் போய் ஞானம் அடைவதற்கு அநுகூலமாக அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொடுப்பதுதான் அர்த்த சாஸ்திரத்தில் அஸ்திவாரமாகச் சொல்லியிருப்பது. அஸ்திவாரம் பலமாய் இருந்து, மேலே போகும் கட்டிடத்தில் பழுது ஏற்பட்டால் ஸுலபமாய் அதை ஸரி செய்து விடலாம். இந்தக் காரியத்தைத்தான் அன்றைக்கு தண்டோபாயம் செய்து வந்தது. இதனால்தான் காவல் நிலையங்களும், நியாய ஸ்தலங்களும் அப்போது குறைவாக இருந்து கோவில்களும், அன்ன சத்திரங்களும், யஜ்ஞசாலைகளும் நிறைய எழும்பின. இப்போது அஸ்திவாரம் போடாமல் கட்டிடம் எழுப்புவதில், இத்தனை ஆயிரம் போலீஸ் ஸ்டேஷன்கள் இருந்தும் இவற்றுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு ஏராளமானவர்கள் நூதன நூதன ஸாமர்த்தியத் திருட்டுகள், மோசடிகள், கொலைகள், வியபசாரக் குற்றங்கள் முதலியன பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை ஆயிரம் கோர்ட்டுகள் இருந்தும், ஆயிரக் கணக்கில் ‘கேஸ்’கள் ‘பென்டிங்’காக இருக்கின்றன என்று ‘பெஞ்சு’க்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போயும் பைஸலாகாத வழக்குகளின் எண்ணிக்கையும் ஏறிக்கொண்டே போகிறது. பொது ஜனங்களுக்கோ பயம் போகவில்லை;’ஸெக்யூரிடி’ இல்லை. தர்ம பரிபாலனம் என்ற அஸ்திவாரத்துக்கு எதுவும் பண்ணாமலே அதர்மத்துக்கு மட்டும் சிக்ஷை, அதுவும் ரொம்ப தாக்ஷிண்யத்தோடு சிக்ஷை என்றால் வேறே எப்படி இருக்கும்?

ஜாதி நாட்டாண்மை என்பதும் அக்காலங்களில் ராஜாவின் தண்ட ப்ரயோகத்தை ரொம்ப தூரம் குறைத்து உதவிற்று. ஒவ்வோரு ஜாதியாரும் பண்ணும் அநேக தப்புக்கள் அந்தந்த ஸமூஹ நாட்டாண்மைக்காரர்களாலேயே விசாரிக்கப்பட்டு வந்ததால், அந்த அளவுக்குக் கோர்ட்டின் வேலை குறைந்தது. போலீஸ் மாதிரி இல்லாமல் ஜாதி நாட்டண்மையிடம் அந்தந்த ஸமூஹத்தாரும் ‘நம்முடையது’ என்ற அந்நியோந்நிய பாவம் கொண்டிருந்தார்கள். அதனால் அதன் கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் இஷ்டபூர்வமாகவே அடங்கி நடந்ததில், தாங்களாகவே அநேகம் தப்பு தண்டாக்களைப் பண்ணாமல் ஒழுங்காயிருந்தார்கள்.

வர்ணாச்ரம தர்மங்களைப் பரிபாலிப்பது ராஜாவின் கடமையாக இருந்ததற்கு இதுவும் ஒரு துணைக் காரணம். ஒவ்வொரு தனி மநுஷ்யனுக்கும் தன் தொழிலைப் பற்றிய நிம்மதி, தன் வாழ்க்கை முறையைப் பற்றிய நிர்ணயமான அமைப்பு ஆகியன வர்ண விபாகத்திலே இருந்து, அதே ஸமயத்தில் அவன் தெய்வ பக்தியுள்ளவனாகவும் ஸாதுக்களிடம் விச்வாஸமுள்ளவனாகவும் இருந்தபடியால், தனக்குரிய மதாநுஷ்டானங்களைப் பண்ணிக்கொண்டு, ஸெளகிகத்தில் திருப்தியாயிருந்ததோடு (அப்படி இருந்ததாலேயே) ஆத்மாபிவிருத்தியும் அடைந்து வந்தான். இப்படி எல்லாத் தொழில்களும் சீராகப் பங்கீடு பண்ணப்பட்டிருந்ததால் மொத்த ஸமுதாயத்திலும், அதாவது தேசம் பூராவுக்குமாக நடக்க வேண்டிய அநேக கார்யங்களிலும் ஏறுமாறு இல்லாமல், போட்டி பொறாமை இல்லாமல், குழப்பமில்லாமல் எல்லாம் சீராக நடந்து நாடு முழுதும் பொருளாதாரத்தில் நல்ல நிலையிலும்;மனநிலையில் ஸர்வஜன ஸெளஜன்யத்துடனும், இந்த ஸெளஜன்யத்தில் உண்டான நிம்மதியில் கலைகள், பண்பாடு இவற்றில் மேன்மையுள்ளதாகவும், எல்லாவற்றுக்கும் மேலே ஆத்ம லக்ஷ்யத்தில் சிறந்த சிறந்த அபிவிருத்தி கொண்டதாகவும் இருந்து வந்திருக்கிறது. இப்படி எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக, மற்ற உலக நாடுகள் எதையும்விட நம் தேசமானது ஸமூஹ ஸெளஜன்யம், பொருளாதாரம், கலாசாரம், ஆத்மிகம் எல்லாவற்றிலும் ரொம்ப உன்னத ஸ்தானத்திலிருந்ததை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். மற்ற நாடுகளிலில்லாததாக இங்கே என்ன இருந்து இப்படிப்பட்ட உயர்வை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று பார்த்தால், இங்கே நாகரிக ஸமுதாய வாழ்க்கையும் ராஜாங்கமும் ஏற்பட்ட நாளாக ஜனங்களாகவே ப்ரியப்பட்டும், ராஜாங்கத்தின் தலைமையான கடமையாகப் பரிபாலிக்கப்பட்டும் அநுஸரித்த வர்ணாச்ரம தர்மங்களைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.

ஆனாலும் முன்பு வர்ண தர்மத்தைப் போஷிப்பதிலேயே ராஜா பெருமைப்பட்டானென்றால், இப்போது அரசியலிலோ ஸமூஹ வாழ்விலோ ஆனா ஆவன்னாவே casteless society – “ஜாதியில்லாத ஸமூஹம்” என்பதாகத் தானிருக்கிறது! அந்தந்த ஜாதிக்குண்டான தொழிலை அவரவர் செய்யாமலும், அதற்குரிய ஆசார அநுஷ்டானங்களைக் கடைபிடிக்காமலும் ஜாதிகளை மட்டும் விடாமல் வைத்துக் கொண்டிருப்பது மஹா தப்புதான் – ப்ராணன் போனபின் பிணத்தைக் கட்டிக் காக்கப் பார்க்கிறது போலத்தான்! இதில் நாம் சீர்திருத்தக்காரரோடு நூறு பெர்ஸன்ட்டும் ஒத்துப்போவோம். ஆனால் இந்தத் தொழில் பாகுபாடே தப்பு, ஆசார அநுஷ்டானங்களையே இதற்காக வித்யாஸமாய் வைப்பது தப்பு என்று அவர்கள் வாதிப்பதை நாம் கொஞ்சங்கூட ஒப்புக் கொள்வதற்கில்லை. தொழில் பாகுபாடும், ஆசாரங்களை சாஸ்த்ரப்படி அவாளவாள் பின்பற்றுவதும் மாறி இப்போதுள்ள நிலைமை ஏற்படவிட்டதுதான் தப்பு என்று விவேகத்தோடு புரிந்துகொள்ள வேண்டும். ‘இப்போது எல்லாம் அடியோடு குன்றிப் போய்விட்ட ஸ்திதியில் பழையபடி பண்ணுவது ஸாத்யமா? ‘என்றால், எனக்குத் தெரியாது. ஸாத்யமில்லை என்று விடாமல் இப்போதாவது எங்கே எவ்வளவு முடிகிறது என்று பார்த்து அங்கே அந்த அளவுக்குப் பழைய வழிக்குத் திருப்பத்தான் பாடுபடணும்.

ஹிஸ்டரியைப் பார்த்தால் தெரியும் – 2500 வருஷத்துக்கு முன் புத்தர் வந்தபோதும், அப்புறம் 1300 வருஷத்துக்கு முன் சமணமே பல்லவ ராஜ்யம் பாண்டிய ராஜ்யம் எல்லாவற்றிலும் மஹேந்திரவர்மா, நெடுமாற பாண்டியன் ஆகிய ராஜாக்களின் போஷணையில் செல்வாக்குடன் இருந்தபோதும் உதயனாசார்யார், குமாரிலபட்டர், ஆசார்யாள், அப்பர், ஞானஸம்பந்தர் முதாலனவர்கள் தோன்றியதால் மறுபடி வர்ணாச்ரம வேத மதமே வந்துவிட்டது. நான் அடிக்கடி சொல்கிற மாதிரி, பொது ஜனங்கள் பெரிசாக மதக் கொள்கை என்று ஆராய்ந்து கொண்டிருக்காமல் தங்கள் பக்தியைப் பெறத்தக்க மஹான்கள் தோன்றும்போது, ‘இவர் சொல்கிற ஸித்தாந்தம்தான் ஸரியாயிருக்கும்’ என்று அவர் வழிக்குப் போயிருக்கிறார்கள் என்பதும் வாஸ்தவந்தான். ஆனாலும், ஏற்கெனவே தாங்கள் இருந்த வழியில் ஏதோ அதிருப்தி இருந்தாலொழிய, புதிதாகப் போவதில் அது நிவ்ருத்தி ஆகிறதாகத் தெரிந்தாலொழிய இப்படி மாறியிருக்கமாட்டார்கள் என்பதும் வாஸ்தவம். நுணுக்கமாக மதக் கொள்கைகள் தெரியாவிட்டாலும் அதன் விளைவாகப் பரவலாக ஏற்படுகிற பலனைத் தெரிந்து கொண்டே மாறியிருக்கிறார்கள். அதனால் புத்தரும் ஜினரும் (மஹாவீரரும்) ஜாதிகளை எடுத்துப் போட்டுவிட்டு எல்லாரையும் ஒன்றாகப் பண்ணினதில் பொது ஜனங்கள் ‘ஆஹா’ என்று அப்போதைக்கு திருப்திப்பட்டு அந்த வழிகளில் கொஞ்சம் போனாலும், நாளாவட்டத்தில் இந்த ஏற்பாட்டில் தங்களுக்கு ‘ஸ்டேட்டஸ்’ இருப்பதாகத் தெரிந்திருந்துங்கூட, அதிலே தனி வாழ்க்கை, ஸமூஹ வாழ்க்கை இரண்டுமே சீராக அபிவிருத்தியாவதற்கு இடமில்லையென்று கண்டு கொண்டுதான் மனப்பூர்வமாக, எந்த கம்பல்ஷனும் இல்லாமலே வைதிக வழிக்குத் திரும்பி வந்திருக்கிறார்கள். இப்படி இரண்டு மூன்று முறை ‘பட்டு’க் கொண்டதை நினைத்துப் பார்த்தாவது இப்போதுள்ள அறிவாளிகள் அந்தப் பூர்வ வழியை எப்படி மறுபடி அதன் உண்மை ஸ்பிரிட்டுடன் ஏற்படுத்தலாம் என்பதற்கு ஆலோசனை செய்ய வேண்டும். அதம பக்ஷமாக, எல்லா தர்மத்துக்கும் வாழ்க்கை ஐடியல்களுக்கும் பிராம்மண ஜாதியைப் பொறுப்பாக்கியிருப்பதால் அதொன்றையாவது சாஸ்த்ர ப்ரகாரம் இருக்கப் பண்ணப் பிரயத்தனம் ஆரம்பிக்க வேண்டும்*.

இந்த ஏற்பாடு பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் நாம் ‘இண்டியன் கல்ச்சர்’ என்று பெருமைப்படும் நாகரிகத்தைக் கொடுத்துள்ள ரிஷிகள், ஞானிகள், பக்தர்கள், மதத் தலைவர்கள், கவிகள், சில்பிகள், நம்முடைய விஞ்ஞான சாஸ்திரங்களைக் கொடுத்தவர்கள் ஆகிய எல்லாருமே வர்ணாச்ரமத்தைப் போற்றியவர்கள் தான் என்பதிலிருந்து அது தப்பான வழியாயிருக்க முடியாது என்று அறிவு பெறவேண்டும். இவர்களில் பிராம்மணர்கள் மாத்திரமில்லாமல் மற்றவர்களும் இருக்கிறார்கள். இவர்களும் வர்ணாச்ரம ஏற்பாட்டைக் கொண்டாடித்தானிருக்கிறார்கள். அப்பிராமணராயிருந்து, சோழ ராஜாவுக்கு மந்திரியுமாக இருந்த சேக்கிழார் ஒருத்தர் போதும் – அவர் சொல்ல வந்தது பக்தர்கள் கதையைத்தான். அதிலே எத்தனையோ பேர் அப்பிராம்மணர்கள். இவர்களைப் பிராம்மணர்களும் போற்றுகிறார்கள். ஆனாலும் சேக்கிழாரோ எப்படியாவது இடம் ஏற்படுத்திக் கொண்டு வைதிக மரபுகளைச் சொல்லிச் சொல்லி எந்த ராஜாவானாலும் அவன் வர்ணாச்ரம பரிபாலனம் செய்ததைச் சொல்லாமலிருப்பதில்லை.

ராஜாவுக்கு இதிலே நிரம்ப முக்யமுண்டு – நாடு முழுவதற்கும் பொறுப்பு அவன்தானே?

ராஜா வர்ணதர்ம பரிபாலனப் பொறுப்பை எடுத்துக் கொண்டான். அதே ஸமயத்தில் வர்ணதர்மம் தேசத்தில் குற்றங்களைப் பெருமளவுக்குக் குறைத்து, அதனால் அவனுடைய நீதி தண்டப் பொறுப்பையும் வேலையையும் ரொம்ப தூரம் குறைத்து உதவியது. நிச்சயமாகத் தனக்கு ஒரு தொழில் உண்டு, நிர்ணயமான ஒரு வாழ்க்கை முறை உண்டு என்று வர்ண விபாகத்தில் ஏற்பட்டிருந்தால் இப்போது உண்டாயிருக்கிற போட்டிகளுக்கு அப்போது இடமில்லை. போட்டி இருக்கிற போதுதான் பொறாமை உண்டாகிறது. பகை ஏற்படுகிறது. மோதல், அடிதடி, கிளர்ச்சி ஏமாற்றுவது, லஞ்சம், திருட்டு, கொலையே பண்ணுவது என்றெல்லாம் குற்றங்கள் பெருகவும் இடம் ஏற்படுகிறது. இதெல்லாமில்லாததால் பழைய நாள் ராஜாவுக்குக் காவல் செய்கிற போலீஸ் பொறுப்பும், நியாயம் வழங்கி தண்டனை விதிக்கிற ஜுடிஷியல் பொறுப்பும் நிரம்பக் குறைந்தன.

வர்ணாச்ரம பரிபாலனம் என்பது அவனுடைய முக்யமான பொறுப்பாயிருந்த போதிலும் அது அவனுக்குப் பெரிய ப்ரயாஸையோ வேலையோ தருகிற பொறுப்பாயில்லை. ஏனென்றால் ஜனங்கள் தாங்களாகவே இந்த நியதிக்குக் கட்டுப்பட்டுத்தானிருந்தார்கள். அபூர்வமாக எங்கேயாவது யாராவதுதான் மீறிப் பண்ணுவதாயிருந்தது. நேரே பொது ஜனங்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு, ரொம்பவும் வசீகரணமுள்ளவராயிருந்த புத்தர் மாதிரியான ஒருவர் வர்ணாச்ரம அதிகார பேதங்கள் கூடாது என்றபோதுகூட, இதற்காக popular uprsing (வெகுஜனக் கிளர்ச்சி) எதுவும் நடந்ததாக (நம் சரித்ரத்தை எவ்வளவோ திரித்து எழுதியிருக்கும்) வெள்ளைக்காரர்கள் கூடச் சொல்லக் காணோம்!நம்முடைய பொதுஜனங்கள் நல்ல புத்திசாலிகளாக இருந்தும் இத்தனை ஆயிரம் வருஷத்தில் இந்த ஏற்பாட்டை எதிர்த்ததாகவோ, அப்புறம் ராஜா அவர்களை அடக்கினதாகவோ ஒரு திருஷ்டாந்தங்கூட இல்லை. தங்களுக்கு எத்தனையோ ஸாதகமாயிருந்த புத்தமதத்தை மூட்டை கட்டி அனுப்பி விட்டு, இப்போது கொடுமையானவர்களாக வர்ணிக்கப்படுகிற ஸநாதனிகளின் மதத்துக்குத்தான் ஜனங்கள் திரும்பியிருக்கிறார்கள். வர்ண விபாகத்தில் தங்களுக்குப் பெர்ஸனலாக ஒரு நிம்மதியும், ஸமூஹ வாழ்வுக்கு ஒரு ஸ்டெபிலிடியும் இருப்பதாக அவர்கள் கண்டிருந்தாலன்றி இப்படிப் பண்ணியிருப்பார்களா?

வர்ணாச்சரம ஏற்பாட்டினால் அக்கால ராஜாக்களுக்கு, இப்போதுள்ள ராஜாக்களுக்கு முக்கியாமாயிருக்கிற போலீஸ், ஜுடீஷியரி வேலைகள் பெருமளவுக்கு இல்லாமலிருந்ததால், இப்போது இதற்காக ஆகிற செலவும் கால விரயமும் அவர்களுக்கு இல்லை. அதனால் ராஜாக்கள் தங்கள் பொழுதையும் பொருளையும் வேறே நல்ல இனங்களில் ஈடுபடுத்த முடிந்தது. கோர்ட்டுக்குப் பதில் கோவில் கட்டினார்கள்; கோரக்ஷணம் செய்தார்கள்; அன்ன சத்திரம் கட்டினார்கள்; தான தர்மம் செய்தார்கள்; கனபாடிகளுக்கு ச்ரோத்ரியம் கொடுத்து, வேதத்தில் அதிகாரமுள்ளவர்கள் இவர்களிடமிருந்து தர்மங்களைத் தெரிந்துகொள்ளப் பண்ணினார்கள்; உடுக்கு அடித்து பாரதம் சொல்கிற பூசாரிக்கு மானியம் விட்டு அதே தர்மத்தை இவனிடமிருந்து பாமர ஜனங்களும் தெரிந்து கொள்ளப் பண்ணினார்கள். ப்ரஜைகளின் வயிற்றுக் குறையைப் போக்குவதும், தர்ம அபிவ்ருத்தியுமே அரசனுடைய கார்யங்களாயிருந்தன.

ஜனங்கள் கோவிலுக்கும் தர்மோபதேசம் நடக்குமிடங்களுக்கும் போய்ப் போய் சாந்தர்களானார்கள். சட்டத்தை மீறாமல், ஸாத்விகர்களாக, எல்லோருடனும் ஸமாதானமாக வாழ்ந்தார்கள். இந்த ஸமாதானத்தை ஜாதி தர்மம் காப்பாற்றி வந்தது.

இக்காலத்தில் கோவிலுக்கும், தர்மம் தெரிந்து கொள்வதற்கும் போவது குறைந்து ஜனங்கள் கோர்ட்டுக்குப் போவது அதிகமாயிருக்கிறது. எங்கும் இடிந்த கோயில்களும் இடியாத கோர்ட்டுகளும் காணப்படுகின்றன.

இப்போது ‘வெல்ஃபேர் ஸ்டேட்’வைக்கிற கோர்ட்களுக்கும் ஆஸ்பத்திரிகளுக்கும் போவதற்கு முதல்படியாக, தினந்தோறும் வளர்ந்து வருகிற ஸினிமாக் கொட்டாய் (கொட்டகை) க்குப் போய் அநேக தினுஸான தப்புகளைத் தெரிந்துகொண்டும், இந்திரிய சபலத்தால் உடல் கெட்டும் வருகிறார்கள். அக்ரமத்துக்கு ஏற்பட்ட ரேஸ் கோர்ஸ் மாதிரியானவற்றிலும் கூட்டம் வழிகிறது. அபக்ஷ்ய பக்ஷணம் செய்வதற்காக க்ளப்களும் (ஹோட்டல்களும்) ஜனங்களை இழுக்கின்றன. எல்லாம் போதாது என்று உரிமை, ஸமத்வம் என்று சொல்லிக்கொண்டு ஜனங்களை த்வேஷத்திலும், போட்டியிலும், சோம்பேறித் தனத்திலும் தூண்டிவிடுவதற்கு அரசியல் கூட்டங்களின் ஆகர்ஷணமும் சேர்ந்திருக்கிறது. மொத்தத்தில் உடம்பும், மனஸும் கெட்டு, சித்த சாந்தி போய். ஸமூஹ ஸமாதானம் போய் – இவற்றின் total effect ஆக – குற்றங்கள் பெருக எத்தனை வாய்ப்பு உண்டோ அத்தனையும் விருத்தியாகி வருகின்றன.

தர்ம அஸ்திவாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ‘வெல்ஃபேர்’ மாளிகை எழுப்பினால் இப்படித்தான் ஆகும்!தர்மசாரமில்லாதபோது எங்கே பார்த்தாலும் கிளப் என்றால் நியமமில்லாமல் சாப்பிட்டு தேஹம், புத்தி இரண்டையும் கெடுத்துக் கொள்வார்களே தவிர, நிஜமான வெல்ஃபேரை அடையமாட்டார்கள். தார்மிகக் கட்டுப்பாடு இல்லாதபோது எழுத்து ஸ்வதந்திரம், கருத்து ஸ்வதந்திரம் என்கிறவற்றால் பத்திரிகைகளும், ஸினிமாக்களும் கெட்டதில்தான் சேர்க்கும். ஆஸ்பத்திரிகள் தினந்தினம் வைத்து, புதுப்புது ட்ரீட்மென்ட் தருகிறார்களென்றால், துன்மார்க்கத்தில் போனாலும் கெட்ட வியாதி வராமல் தடுத்துக்கொண்டு விடலாம் என்றுதான், தர்மத்துக்குப் பயப்படுவதற்குப் பழக்கப்படாத ஸமூஹம் நினைக்கும். ‘கிராமம் விடாமல் பாங்கு வைத்து கடன் தருகிறோம்’ என்றால் எத்தனை லஞ்சமும், பித்தலாட்டமும் உண்டோ அத்தனையும் செய்து கடன் வாங்கி, இப்போது தர்ம விரோதமாக வந்திருக்கிற பலவற்றுக்காகச் செலவு செய்வதற்கு ஊக்கம் தந்ததாகவே ஆகும். பெரிய வெல்ஃபேர் எதுவென்றால் தர்மந்தான். அந்த தர்மம் தெய்வ பக்தியாலும், மதப் பற்றாலுந்தான் ஜனங்களிடையே நன்றாய் வேர் பிடித்து வளரும். இந்த ஆதாரக் கொள்கையின் மேலே வகுத்த அர்த்த, தர்ம சாஸ்திரங்கள் நம் நாட்டுக்குச் செய்து வந்த நிஜமான நன்மையை அந்த ஆதாரத்தை வெட்டிவிட்ட எந்தப் புது அரசியல் முறையும் ஐடியாலஜியும் உண்டாக்கித் தர முடியாது. ஆனாலும் இப்போது தினந்தினம் லோகத்தில் ஏற்பட்டு வருகிற சீரழிவையும் ஒழுக்கக் குறைவையும் பிரத்யக்ஷமாகப் பார்த்துக் கொண்டிருந்தும், ‘பழைய ஏற்பாட்டில் தாக்ஷிண்யமில்லை, மநுஷ்யாபிமானமில்லை’ என்று குறை சொல்கிறார்கள்!

திருக்குறள், திருவள்ளுவர் என்று ஓயாமல் சொல்வதாயிருக்கிறது. திருவள்ளுவர் பொருட்பாலில் ராஜ தர்மத்தைச் சொல்கிற இடத்தில் ‘பெரியாரைப் பிழையாமை’என்றே ஒரு அதிகாரம் பண்ணியிருக்கிறார். ராஜாக்கள் மஹான்களை ஆச்ரயித்து அவர்களுடைய மனம் குளிரும்படியாகப் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் அகஸ்தியரிடம் அபசாரப்பட்டுக் கொண்ட இந்த்ரனே பதவி போய்த் திண்டாடியது போல ஆகிவிடும் என்று எச்சரித்திருக்கிறார்:

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்.

தர்ம சாஸ்திரங்களைக் கேட்காவிட்டால் ராஜா கேடுதான் அடைவான் என்பதை நேராக அப்படிச் சொல்லாமல் ஸ்வாரஸ்யமாக மாற்றி, அரசனைப் பார்த்து, “கேடுதான் அடையவேண்டுமென்று ஆசையாயிருந்தால் சாஸ்திரப்படி கேட்காமல் பண்ணு’ என்கிறார்.

கெடல் வேண்டின் கேளாது செய்க.

ஆக, தர்ம அஸ்திவாரத்தின் மேலே மஹான்கள் காட்டுகிற வழியிலேயே அரசாட்சியை நடத்த வேண்டுமென்பதுதான் திருவள்ளுவர் காட்டும் நெறி.

எது நிஜமான தாக்ஷிண்யம், எது நிஜமான மநுஷ்யாபிமானம் என்று யோசித்துப் பார்ப்போமானால், எது தேசத்தில் தர்மத்தை நிலைக்கப் பண்ணி, நல்ல ஜனங்களுக்கு துஷ்டர்களிடம் பயமில்லாமல் ஸெக்யூரிடியைக் கொடுக்கிறதோ, அதோடு எதுதான் குற்றம் பண்ணினவனையும் இனிமேல் அப்படிப் பண்ணாமல் கட்டுப்படுத்துகிறதோ அதுதான் நிஜமான தாக்ஷிண்யமும் மனிதாபிமானமுமாகும்.

ஒருத்தன் ஏதோ ஹிம்ஸை பண்ணினானென்றால் ஜனங்களிலேயே இன்னொருத்தன் அப்போது அவனை பதிலுக்கு ஹிம்ஸை பண்ணி ஹிம்ஸையை இரண்டாக்குகிறானென்றால் அதுதான் தப்பு. இங்கே பெர்ஸனலாக த்வேஷம், கோபதாபம் உண்டாகின்றன. ஆனால் ராஜாங்கம் என்ற ஸ்தாபனம் ஹிம்ஸை செய்த ஒருவனை பெர்ஸனல் காரணமில்லாமல், தர்மத்தின் பொருட்டு சிக்ஷித்து அவனுக்கு ஹிம்ஸை தருவது இப்படியல்ல. அவனால் இனிமேல் ஜனங்களுக்கு ஏற்படக்கூடிய ஹிம்ஸையைப் போக்கவே இந்த சிக்ஷை. சிக்ஷை என்பது முன்பு அவன் குற்றம் பண்ணினான் என்பற்காக மாத்திரமின்றி, இனிமேல் அவனைக் குற்றம் பண்ணாமலிருக்கச் செய்வதற்குமாகும். ஒரு பைத்தியம் கல்லை எறிந்தால், அது நம் குழந்தையாகவே இருந்தாலும் ரூமில் தள்ளிப் பூட்டவில்லையா? அப்படியே திருட வேண்டும் என்ற பைத்தியம் பிடித்திருப்பவனை, ஃபோர்ஜரி பண்ணுகிற பைத்தியமுள்ளவனை, இப்படி அநேகப் பைத்தியம் உள்ளவர்களை ராஜாங்கம் ஜெயிலில் போட வேண்டியதாகிறது. ஹிம்ஸையைக் குறைக்கவே ஹிம்ஸிக்க வேண்டியதாகிறது.


*இவ்விஷயமாக “தெய்வத்தின் குரல்” முதற்பகுதியில் “ வர்ண தர்மம்” என்ற உரையும் தொடர்ந்து வரும் சில உரைகளும், இரண்டாம் பகுதியில் “ ” என்ற உரையும், குறிப்பாக அதில் “ நான் சொல்வதன் நோக்கம் ” என்ற உட்பிரிவும் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பிராம்மணனுக்குப் பக்ஷபாதமா
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  வெளிநாட்டு விஷயத்தில் தண்டநீதி
Next