ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
 மலர் -23 துந்துபி வருஷம்: செப்டம்பர், அக்டோபர் 1982 இதழ் 1&2
ஸ்ரீ ஜகத்குரு அருள்வாக்கு
 ஸமிதாதானம், ஔபாஸனம், அக்னிஹோத்ரம்

பார்சி மதத்தினர் அக்னியை வணங்குகிறார்கள். நம் ஸநாதன மதத்திலும் அக்னி உபாஸனை முக்ய அம்சமாகும். ப்ரம்மசாரிகள் தினசரி அக்னியில் ஸமிதானம் செய்ய வேண்டும். அதாவது, தினசரி அக்னி உண்டாக்கி விதிப்படி அதை வணங்குவதாகும்.  
க்ருஹஸ்தாச்ரமத்தில், அக்னி உபாஸனை விவாஹத்திலிருந்தே ஆரம்பமாகிறது. விவாஹத்தின் போது வளர்க்கும் அக்னியைக் காப்பாற்றி, அதை வரன் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போய், அன்று ஸாயங்காலம், ஸந்தியாவந்தனம் செய்துவிட்டு, பிரவேச ஹோமமும் ஸ்தாலீபாகமும் செய்து ஔபாஸனம் ஆரம்பம் செய்ய வேண்டும். அதிலிருந்து அந்த அக்னியைக் காப்பாற்றி ஒரு வருஷம் ஔபாஸனம் செய்து, பிறகு சேஷ ஹோமம் செய்யவேண்டும். குறைந்த பக்ஷம் மூன்று நாட்களாவது (த்ரிராத்ரம்) ஔபாஸனம் செய்து சேஷஹோமம் செய்ய வேண்டும் என்று ஆச்வலாயன ஸூத்ரம் கூறுகிறது. மற்றவர்கள் மூன்று நாள் செய்ய வேண்டும். அது தான் நான்கு நாள் விவாஹம் செய்வதின் நோக்கம். அப்படி விவாஹத்தன்று ஸாயந்திற்குள் போக முடியாத தூரத்தில் வரன் வீடு இருந்தாலும், போவதற்கு பல நாட்களானாலும் அங்கு போய்ச் சேர்ந்தே ப்ரவேச ஹோமம் செய்ய வேண்டும். அப்படி வரன் வீட்டிற்கு அக்னி குண்டத்தை எடுத்துச் செல்லும் போது, வண்டியில் ஏற்றுவதற்கும், நதி முதலிய நீர் நிலைகளைத் தாண்டுவதற்கும் வழியில் ஏற்படக் கூடிய கெட்ட சகுணம், முதலிய இடையூறுகளினின்றும் ரக்ஷிப்பதற்கும் ஏற்பட்ட அனேக மந்திரங்கள் விவாஹ காலத்தில் சொல்லப்படுகின்றன. அவற்றின் பொருள் தெரியாமல் நாம் ஏதோ சொல்லிக் கொண்டு வருகிறோம்.                          

 

அப்படி கொண்டுவரப்பட்ட அக்னியை, தம்பதிகளால் தினமும் காலையிலும் மாலையிலும் ஔபாஸனம் செய்து அக்ஷதையிட்டுக் காப்பாற்ற வேண்டும். அந்த அக்னியில் பாகம் செய்து வைச்வ தேவம் செய்ய வேண்டும். பிரதி பிரதமையன்றும், அந்த அக்னியில் பாகம் செய்த அன்னத்தைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். அதற்கு ஸ்தாலீபாகம் என்று பெயர். புருஷன் உரிய காலங்களில் வீட்டில் இல்லாமல் வெளியே போயிருந்தால், மனைவி ஒவ்வொரு வேளையும் ஒருபிடி அரிசி அந்த ஔபாஸனாக்யில் போட்டு அதைக் காப்பாற்றி வரவேண்டும். சில நாட்களுக்கு அப்படியும் செய்வதற்கில்லாமல் ஏற்பட்டு விட்டால், அத்தனை நாட்களுக்கு அக்னியில் இடவேண்டிய அரிசியை தானம் செய்து விட்டு மறுபடி ஆரம்பிக்க வேண்டும். இதற்கு புனஸ்ஸந்தானம் என்று பெயர். ஔபாஸன அக்னியை கையில் எடுத்துப் போக முடியாமல், வேறு ஊருக்குப் போக நேர்ந்தால், அந்த அக்னி சக்தியை ஒரு ஸமித்தில் மாற்றி எடுத்துப் போய், அங்கு அந்த ஸமித்திலுள்ள அக்னி சக்தியை லௌகிக அக்னியில் இறக்கி ஔபாஸனம் ஆரம்பிக்க வேண்டும். இப்படி ஸமித்தில் மாற்றுவதற்கு ஸமித்ஸமாரோபணம் என்று பெயர்.        
ஆதானம் செய்த க்ருஹஸ்தர்கள், மூன்று அக்னி வளர்த்து அக்னி ஹோத்ரம் என்கிற அக்னி உபாஸனையும் செய்யலாம். இதுவும் தினம் காலையிலும் மாலையிலும் தவறாமல், விதிப்படி செய்ய வேண்டியதாகும். ஆனால் புருஷன் உரிய காலங்களில் வீட்டில் இல்லாவிட்டால், ஔபாஸனம் போல் அல்லாமல் ஸ்திரீகள் ஒரு ரித்விக்கைக் கொண்டு இதற்கு ஹோமம் செய்யச் சொல்ல வேண்டும். இந்த அக்னியிலிருந்து மூட்டிய அடுப்பில் சமையல் செய்ய வேண்டும். இதனால் தான் இன்றும் ஆந்திர தேசத்தில் அடுப்புக்கு நெருப்பு கேட்பதானால், “அக்னி ஹோத்ரம் காவல” என்று கேட்கிறார்கள். இந்த த்ரேதாக்னியை எடுத்துப் போக முடியாதபடி வெளியூருக்குப் போக நேர்ந்தால், இந்த அக்னி சக்தியை அரணிக்கட்டையில் மாற்றிக்கொண்டு போய், பிறகு அரணிக் கட்டையைக் கடைந்து அக்னி உண்டாக்கி அக்னி ஹோத்ரம் ஆரம்பிக்க வேண்டும். இதற்கு அரணி ஸமாரோபணம் என்று பெயர். அரணிக்கட்டையானது வன்னி மரத்தில் உண்டான அரசங்கட்டையால், செய்யப்பட்டதாகும். இவற்றைக் கடைந்தால் நெருப்புப் பொறி உண்டாகும். அதிலிருந்து அக்னி எடுத்துக்கொள்வது வழக்கம்.
இப்படி ஆயுட்காலம் முழுவதும் காக்கப்பட்ட அக்னியிலேயே, மரணத்திற்குப்பின், ஒருவருடைய சரீரம் ஆகுதி செய்யப்படவேண்டும். பிரேதத்துடன் நெருப்புச் சட்டி எடுத்துப் போவது என்பது இந்த அக்னியைத்தான்.

ஒருவருடைய பத்னி அவருக்கு முன்னால் வியோகமானால் அந்த அக்னி அவளுக்கு உபயோகப் படுத்தப்பட வேண்டும். அபத்னீகனுக்கு அக்னி காரியம் செய்ய உரிமை இல்லை. இவன் “அனாச்ரமி” ஆகிறான். இவன் இறந்தால் சாதாரண அக்னி உண்டாக்கியே தகனம் செய்ய வேண்டும். ஆனால் பத்னி இறக்குந்தருவாயில் அக்னியை பாகம் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்து கொண்டால் அந்த அபத்னீகனுக்கு அக்னிஹோத்ரம் முதலியவைகளுக்கு அதிகாரம் உள்ள அக்னி ஸித்திக்கும்.
இதிலிருந்து அக்னியின் உரிமையில் ஸ்திரீகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் தெரிகிறது.
அனாச்ரமியாக யாரும் இருக்கக்கூடாது. அபத்னீகன் ஸன்யாஸ ஆச்ரமத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
இதே மாதிரி ப்ரம்மசரிய ஆச்ரமத்திற்கும் அநேக நியமங்கள் இருக்கின்றன. உபநயனம் ஆனதிலிருந்து ப்ரம்மசரியம் ஆரம்பமாகிறது. உபநயனம் என்றால் (ஆசிரியர்) சமீபத்தில் அழைத்துச் செல்லுதல், ஆசிரியரிடம் வேதாப்யாசம் செய்ய அழைத்துச் செல்லுதல். ப்ரம்மசரியத்திற்கு அனுஷ்டிக்க வேண்டிய பொது நியமங்கள்: அரையில் கௌபீனமும் மேல் கிருஷ்ணாஜினமும் (மான்தோல்) அணிவது; தண்டம் வைத்துகொள்வது; பிக்ஷாசரணம் செய்வது; அந்த கிருஷ்ணாஜினத்திலேயே படுக்க வேண்டும். விசேஷ நியமங்களாவன: வேதங்கற்கும் பொழுது, ஒவ்வொரு வேதப் பகுதிக்கும் தனித்தனி நியமங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றைத் தவறாமல் அநுஷ்டிக்க வேண்டும். இப்படி சிறு வயதிலேயே காமாதி விகாரங்கள் மனதில் ஏற்படும் முன்னமேயே வித்தியாப்பியாசம் பூர்த்தியாக வேண்டும். வித்யாப்யாசம் முடிவடைந்த ப்ரம்மசாரியை மறுபடி வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். அதற்கு ஸமாவர்த்தனம் என்று பெயர். அப்படி அழைத்து வந்த்தும் அவனுக்கு விவாஹம் செய்விக்க வேண்டும். வித்யாப்யாசம் முடிந்ததும் ப்ரம்மசரியம் முடிவடையுமாதலால், விவாஹம் செய்விக்காவிட்டால் அனாச்ரமி ஆவான். அனாச்ரமியாக யாரும் ஒரு க்ஷணமேனும் இருக்கக் கூடாது. ஆதலால், ஸமாவர்த்தனத்திற்கு சிறிது முன்னமேயே விவாஹம் நிச்சயம் செய்து, ஸமாவர்த்தனம் ஆனதும் விவாஹம் செய்விக்க வேண்டும். இதனால் தான், விவாஹ காலத்தில் இப்பொழுதும் ஸமாவர்த்தனம் என்று செய்யப்படுகிறது. இதுவும் நாம் விஷயம் தெரிந்துகொள்ளாமல் செய்யும் காரியங்களில் ஒன்றாக இருக்கிறது.   
நைஷ்டிக ப்ரம்மசரியமாவது, வித்யாப்யாசம் முடிந்த பிறகும், குரு சிச்ரூஷை செய்து கொண்டு ஆயுட்காலம் பூராவும் ப்ரம்மசாரியாகவே இருப்பது இது கலியுகத்திற்கு ஏற்றதாகக் கூறப்படவில்லை. ஸமாவர்த்தனத்திற்குப் பிறகு, நைஷ்டிக ப்ரம்மசாரியாக இருப்பதாகத் தீர்மானித்து, ப்ரம்மசாரி தீர்த்த யாத்திரைக்கு கிளம்புவதாகவும், அவனை பெண்ணின் தகப்பனார், தன் கன்னிகையை விவாஹம் செய்து கொடுப்பதாகவும், காசி யாத்திரை போக வேண்டாமென்று தடுத்து, கன்னிகாதானம் செய்து கொடுக்கும் பாவனையில் இக்காலத்தில் விவாஹத்தில் பரதேச கோலம் பார்க்கிறோம்.
கேரள தேசத்தில் நம்பூதிரிகள் இன்றும் விசேஷமாக வேதாப்யாஸத்தை செய்து வருகின்றனர். நம்பூதிரி பிள்ளைகள் 7 லிருந்து 14 வயது வரை வேதாப்யாஸம் செய்து வருகிறார்கள். அவர்களில் மூத்த பிள்ளைக்குத்தான் கல்யாணம் செய்துகொண்டு சொத்தை பரிபாலிக்கும் உரிமை உண்டு. (இதை சமீபத்தில் சட்டபூர்வமாக மாற்றியிருக்கிறார்கள்)

க்ருஹஸ்தாச்ரமத்திலிருந்து அக்னி உபாஸனை முதலிய கர்மாக்களையும் அனுஷ்டித்து, குமாரர்கள் குடும்ப பாரத்தை ஏற்கும் நிலை வந்ததும், வானப்ரஸ்தாச்ரமத்தை ஏற்க வேண்டும். கலியில் வானப்ரஸ்தாச்ரமம் வேண்டாமென்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.   

 


Home Page