ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்ஆயுர்வேதம்

பகலில் தூங்கினால் சளி!
- டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை

கபம் அதிக அளவில் சீற்றமடைந்து மூச்சுக் குழாய் மற்றும் நுரையீரல் பகுதியில் சேரும்போது அடைப்பை ஏற்படுத்துகிறது. மூச்சு சீராகச் சென்றுவர முடியாமல் இருப்பதால் நாம் வேக வேகமாக மூச்சை இழுத்து விட வேண்டியுள்ளது. கபத்தைச் சீற்றமடையச் செய்யும் உணவையும் செயல்களையும் நீங்கள் முக்கியமாக தவிர்க்க வேண்டும்.
பகலில் தூங்குதல், உடலுழைப்பு இன்மை அல்லது உடற்பயிற்சி செய்யாமை, சோம்பல், இனிப்பு, புளிப்பு, உவர்ப்புச் சுவைகள் உள்ள பொருள்களை உட்கொள்ளுதல், குளிர்ச்சி, எண்ணெய் பசை எளிதில் செரிக்காத உணவு, சம்பா அரிசி, உளுந்து, கோதுமை, எள்ளு, அரிசி போன்றவை மாவினால் செய்யப்படும் தின்பண்டங்கள், தயிர், பால், கரும்புச் சாறு, நீர்ப்பாங்கான இடங்களில் வசிக்கும் விலங்குகளின் புலால், நீரில் வாழும் உயிரினங்களின் புலால், பனை, தேங்காய், சுரைக்காய், பூசணி போன்ற கொடிகளில் காய்க்கும் காய்கறி வகைகள், உண்ட உணவு செரிமானடையும் முன் மீண்டும் உண்பது ஆகியவை கபத்தைச் சீற்றமடையச் செய்யும். மேலும் குளிர்ந்த பொருள்களை உட்கொள்ளுதல், குளிர்கால நாளின் முதல் ஜாமத்திலும், அந்திமாலை, உணவு உண்பதும், கபம் சீற்றமுறும். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் சளி கட்டாதிருக்க கசப்பு, காரம், துவர்ப்புச் சுவையுள்ள காய்கறிகள் சாப்பிட நல்லது. நெய், வெண்ணெய், ஆடைத் தயிர், வெல்லம், கரும்புச் சாறு போன்றவை கெடுதல், தினமும் உடல் சக்திக்கு தகுந்தவாறு உடற்பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் செய்வது அவசியம். உணவில் கேழ்வரகு, சோளம், கம்பு, கொள்ளு, வரகு தான்யங்கள் சாப்பிட உகந்தது. அரிசியை உணவாக மிதமாகச் சேர்க்கலாம். சுக்கு, மிளகு, திப்பிலி, கண்டந்திப்பிலி சேர்த்துக் காரமாய் உள்ள ரஸம் சாதம் சாப்பிட நெஞ்சுக் கூட்டில் படிந்திருக்கும் சளி இளகி மூச்சு சீராகச் செல்ல வழியை ஏற்படுத்தித் தரும். இதனால் இளகிய சளியை வெளியே கொண்டுவர வசம்பு, கடுகு, இந்துப்பு இவற்றை சம அளவு சூர்ணம் செய்து சிறிதளவு வெந்நீருடன் கலக்கி சாப்பிட்டு, மேலும் வெந்நீர் நிறைய குடிக்கவும். உடனே வாந்தி வரும். கபம் வெளியே வந்துவிடும். பிறகு மஞ்சள், ஓமம் இரண்டையும் தூளாக்கி துணித்திரியில் சுற்றிக் கொளுத்தி வரும் புகையை மூக்கினாலும் வாயினாலும் உறிஞ்சவும். நீலகிரித் தைலத்தை கொதிக்கிற வெந்நீரில் ஊற்றி ஆவி முகத்திலும் தலையிலும் படும்படியாக வேது பிடிக்கவும்.
ஆயுர்வேத மருந்துகளில் தசமூலகடுத்ரியாதி கஷாயம் 3 ஸ்பூன் (15 மி.லி.), 12 ஸ்பூன் (60 மி.லி) கொதித்து ஆறிய தண்ணீர், 1\4 ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 1 மாத்திரை சுவாஸனந்தத்துடன் வெறும் வயிற்றில் சாப்பிடவும். வாஸாரிஷபம் 15 மிலி+ தசமூலாரிஷ்டம் 15 மிலி + 1 வில்வாதி மாத்திரையை அரைத்து அதனுடன் கலந்து காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடவும். இரவில் படுக்கும் முன்பாக 5 கிராம் (1 ஸ்பூன்) அகஸ்திய ரஸாயனம் எனும் லேஹ்யத்தை நக்கிச் சாப்பிடவும். 48 நாட்கள் வரை சாப்பிடலாம். கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலைகளில் இம்மருந்துகள் கிடைக்கும்.

Home Page ஆயுர்வேதம்