ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்ஆயுர்வேதம்

மூளை நரம்பு பாதிப்பைப் போக்க…
- டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை

மூளைப் பகுதியிலிருந்து வெளிப்படும் நரம்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால்  நீண்டகாலமாக அவதிப்படுபவர்களுக்கு அதிலிருந்து விடுபடும் நேரமும் தாமதப்படலாம். நம் உடலில் 107 மர்மஸ்தானங்கள் உள்ளதாக ஆயுர்வேதம் கூறுகிறது. அவற்றில் மூளை, இதயம், சிறுநீர்ப்பை ஆகிய பகுதிகள் முக்கியமான மர்ம ஸ்தானங்களாகும். இப்பகுதிகளில் எளிதாக நோய் ஏற்படுவதில்லை. அவ்வாறு ஏற்பட்டால் அதை மிகுந்த பிரயத்தனத்தின் மூலமே சரி செய்ய இயலும் என்று எடுத்துரைக்கிறது.
‘மனிதனுக்கு வேர் தலையில்’ என்று ஒரு பதிலில் கூறப்பட்டிருந்தது. வாஸ்தவத்தில் மனிதன் தலைகீழாக இருக்கிறான். மரங்கள் நேராக இருக்கின்றன. செடியின் வேரில் விடப்படும் நீரை, உடன் உறிஞ்சி உச்சியிலுள்ள கிளை நுனி வரை செடி எடுத்துச் செல்கிறது. அது போலவே மனிதனின் தலை உச்சியில் வைக்கப்படும் வீர்யமிக்க மூலிகைத் தைலத்தின் வீர்யமானது ஒன்றரை நொடியில் அதிலுள்ள தோலின் மேல்பரப்பில் பரவுகிறது. அதற்கு அடுத 2 நொடிகளில் உள் தோலில் ஊடுருவி விடுகிறது. அடுத்த இரண்டரை நொடிகளில் ரத்தத்தில் பரவி விடும். தசைகளை அடுத்த 3 நொடியிலும், அடுத்த 4 நொடிகளில் பரவி நரம்புப் பகுதிகளுக்குள்ளும் சென்று நெய்ப்பும் மென்மையும் வறட்சி நீக்குதலும் தடை நீக்குதலும் செய்வதால் மூளை நரம்புகள் நெகிழ்ச்சியும் விறைப்பின்மையும் பெறுகின்றன. பல காலம் இருண்டிருக்கும் ஓர் அறையில் ஒரு விளக்கை எடுத்துச் சென்றால் அங்கு ஒளி சிறிது சிறிதாகப் பரவுவதில்லை. உடனடியாக அந்த அறையிலுள்ள பொருட்களை நம்மால் காண முடிகிறது. அது போலவே மூலிகைத் தைலத்தின் பல குணச் சிறப்புகளும் பரவிவிடும். மேல் குறிப்பிட்டது ஒரு பொது நேர அளவு. உடல்நிலை சாதகமாக இருந்தால் இதைவிட விரைவாகவே பரவலாம். எதிரிடையானால் தாமதமும் ஆகலாம்.
தலைமுடியை நன்கு பிரித்துவிட்டு, இரும்புக் கரண்டியில் சூடாக்கிய சுத்தபலாதைலம் அல்லது க்ஷீரபலா தைலத்தை பஞ்சில் நனைத்து உச்சந்தலையில் ஊற விடவும். இதே தைலத்தை தாடைப் பகுதியிலும், கழுத்து, பிடறிப் பகுதியிலும் தேய்த்து விடவும். நான்கைந்து பல் பூண்டு போட்டுக் காய்ச்சிய சூடான பாலிலிருந்து வெளிப்படும் ஆவியை முகத்தில் படும்படி காட்டவும். கண்களை நந்தியாவட்டைப் பூவினாலோ, முருங்கைப் பூவினாலோ மறைத்துக் கொள்ளவும்.
உள் மருந்தாகத் தனதநயனாதி கஷாயமும் க்ஷீரபலா 101 எனும் சொட்டு மருந்தும் சாப்பிட உகந்தது. 15 மிலி கஷாயத்தில் 60 மிலி சூடான தண்ணீர் கலந்து 10 சொட்டு க்ஷீரபலா கலந்து காளை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். தசமூலரஸாயனம் எனும் லேஹ்யத்தை 5 கிராம் (1 ஸ்புன்) இரவில் நக்கிச் சாப்பிடவும்.
உணவில் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையுள்ளவை ஏற்றவை. அரிசி, கோதுமை, உளுந்து, பால், நெய், தயிர், வெண்ணெய், வாழைப்பழம், இனிப்பு மாதுளை, திராட்சை போன்ற உடலுக்கு நெய்ப்புத் தருபவை உங்களுக்குச் சாப்பிட நல்லது. சுண்டைக்காய், பாகற்காய், வாழைக்காய் தவிர்க்கவும். அதிக அசதி தரும் வேலைகளும், இரவில் கண்விழித்தலும் நல்லதல்ல. குளிர்ந்த தண்ணீரில் தலை குளிக்கக் கூடாது தலைக்கு எண்ணெய்க் குளியல் முடிந்ததும் ராஸனாதி சூரணத்தை உச்சந்தலையில் சூடு பறக்கத் தேய்த்துவிடவும்.

Home Page ஆயுர்வேதம்