ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்ஆயுர்வேதம்


சிக்கன்குனியா,மூட்டுவலிக்கு மருந்து
- டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை

சிக்குன்குனியாவால் ஏற்பட்டுள்ள காய்ச்சல், உடல் மற்றும் மூட்டு வலி, பசியின்மை, உடல் சோர்வு, ருசியின்மை, மலச்சிக்கல் போன்ற உபாதைகள் காணப்பட்டால் அச்சமயம் சாப்பிட ஏற்ற உணவு கஞ்சியேயாகும். காய்ச்சலின் வேகம் எவ்வளவுக் கெவ்வளவு கடுமையாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு கஞ்சியையும், லேசானதாகத் தயாரிக்க வேண்டும். கஞ்சிக்கேற்ற பொருள்களில் புழுங்கலரிசியும் பார்லியும் நல்லது. புழுங்கலரிசியில் சத்து அதிகம். அதனால் அது உடலுக்கு வலிமை தரக்கூடியது. பார்லி உடலிலுள்ள அடைப்புகளைப் போக்கும். அதனால் வயிற்றில் வாயு, அஜீரணம் போன்ற தொல்லைகள் ஏற்படாது.

புழுங்கலரிசியைச் சிறிது சிவப்பு காணும் வரை லேசாக வறுத்து, அதனுடன் பார்லியையும் வறுத்துச் சேர்க்கக் கஞ்சி எளிதில் ஜீரணமாகி விடும். வறுத்த முழு அரிசி, பார்லி ஒரு பங்கு, தண்ணீர் 20 பங்கு சேர்த்துக் கொதிக்க வைத்து, கால் பங்கு சுண்டும் வரை காய்ச்சி இறக்கிக் கொள்ளவும். வடிகட்டிய கஞ்சியை இளஞ்சூடாகச் சிறிது இந்துப்பு கலந்து காலை, மதியம், இரவு குடிக்கவும். கஞ்சியைக் குடித்த பிறகு இந்துகாந்தம் எனும் கஷாயத்தை 15 மிலி. எடுத்து 60 மிலி. சூடான தண்ணீர் சேர்த்துப் பருகக் காய்ச்சல், உடல்வலி, மூட்டு வலி, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், அஜீரணம், உமட்டல் முதலியவை விரைவில் குறைந்து விடும். உடலுக்கு நல்ல பலத்தையும் இந்தக் கஷாயம் ஏற்படுத்தித் தரும். நல்ல ருசியும் பசியும் ஏற்பட்டு விட்டால், அடுத்த இரண்டு நாட்களுக்கு நெல்பொரி ஒரு பங்கு, 20 பங்கு தண்ணீர் விட்டு கால் பங்கு சுண்டக் காய்ச்சி, அந்தக் கஞ்சியில் கால் பங்கு பால் கலந்து சாப்பிட களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படும். உடம்பில் கடுப்பு வலி, கனம், உடலை முறித்துக் கொள்ளும் வேதனை முதலிய வாயு அதிகமாயுள்ள நிலையில் இரண்டு புளியங்கொட்டையளவு சுக்கை எடுத்து அதை நசுக்கி அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிடலாம். உடல் வலி, வேதனை, கனம் முதலியவை நன்கு குறையம்.

சிலருக்குக் காய்ச்சல் விட்ட பிறகும் தொடர்ந்து ஏற்படும் மூட்டு வலி, வீக்கத்திற்கு பிருகத்யாதி கஷாயம் 7.5 மிலி + பலாகுடூச்யாதி கஷாயம் 7.5 மிலி. சூடான தண்ணீர் 60 மிலி. கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட ஏற்பட்டுள்ள உபாதைகள் நன்கு குறைந்து விடும்.

வலி வீக்கம் உள்ள மூட்டுகளில் உத்வர்த்தனம் சூரணம், குலத்தம் சூரணம், ராஸ்னாதி சூரணத்தை 4; 2; 1 என்ற விகிதத்தில் கலந்து புளித்த சூடான மோருடன் குழைத்து பற்று இட்டு அது காய்ந்தவுடன் நீக்கி விடும் சிகிச்சை முறையால் மூட்டுகளின் உட்பகுதியிலுள்ள நீர் வற்றி வலி குறையும். ஜடாமயாதி சூரணமும் இதுபோன்ற வலி நிவாரணியே. இந்த மருந்துகள் நரசத்பேட்டை ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்துவமனையில் விற்கப்படுகின்றன.

வீக்கம், வலி வற்றிய பிறகு மூலிகைத் தைலமாகிய பிண்டதைலம், ஸஹசராதி தைலம், கொட்டஞ்சுக்காதி தைலம் போன்றவற்றில் ஒன்றை இரும்புக் கரண்டியில் லேசாகச் சூடாக்கித் தடவி அந்த மூட்டிற்கு ஓய்வளிக்கும் வகையில் துணியைச் சுற்றி வைத்திருக்க வலியும் வீக்கமும் குறைந்து விடும். தைலத்தைத் தடவி சுமார் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊறிய பிறகு வேப்பிலை, நொச்சி இலை, புளிய இலை, முருங்கை இலை, ஆமணக்கு இலை, எருக்கு இலை அகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டுக் காய்ச்சிய தண்ணீரில் துணியைப் பிழிந்து ஒத்தடம் கொடுக்கப் பூரண நிவாரணத்தை விரைவில் பெறலாம்.

Home Page ஆயுர்வேதம்