ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்ஆயுர்வேதம்

அடக்க அடக்க ஆபத்து!
- டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை

மூல நோய்க்கு எவையெல்லாம் காரணமாகின்றதோ அவையனைத்தும் பெளத்திரம் நோய்க்கும் காரணமாகின்றன. பசி எனும் தீயை கெடுக்கும் உணவும் பானகங்களும் பெளத்திர நோயை ஏற்படுத்துகின்றன. இவை நேரடியான காரணங்கள். நேரடியில்லாத வேறு சில காரணங்காளாலும் பசி மந்தமாகி, பெளத்திரம் வரலாம். ஒரே இருக்கையில் அதிக நேரம் அமர்ந்திருத்தல், மலம், சிறுநீர், குடல்வாயு ஆகியவற்றை அடக்குதல், அதிகமான உடலுறவு, எண்ணெய்ப் பண்டங்களை அதிகமாய் சாப்பிடுதல், காரம், புளி மிகுந்த உணவு, புலால் உணவில் அதிக விருப்பம், மனதில் அடிக்கடி ஏற்படும் தாபம், சோகம் போன்ற காரணங்களால் குடலில் வெளியேற வேண்டிய மலாம்சம் தடையுற்று ஜீரணம் கெட்டு விடுகிறது. அஜீரண நிலையில் பதனழிந்த உணவின் சாரம் இரத்தத்துடன் கலந்து தாதுக்களில் பரவும்போது அதன் சத்து உறிஞ்சப்படாமல் ஆஸன வாயின் வெளிப்பகுதியில் ஒன்று இரண்டு அங்குல தூர இடைவெளியில் கட்டியை உண்டாக்குகிறது. முதலில் உளுந்து, கடலை, மொச்சை போன்று சிறிதாகவே வெளியில் தோன்றும். வாய் இல்லாமல் சிறுமுண்டாகவே இருக்கும். ஆனால் நாளடைவில் ஆஸனவாயின் உட்புறம் நோக்கி குறுக்காகவோ நெடுக்காகவோ உள் குழாய் உண்டு பண்ணிக்கொண்டு புரை ஓடத் தொடங்கும். இந்தப் புரைப்புண் குழாய், ஆஸனவாயைத் துளைத்துக்கொண்டு அதனுள்ளேயும் பரவும். வெளியே முதலில் தோன்றிய கட்டியின் வாய் திறந்து சிறிய பிளவு ஏற்படும். இந்தப் பிளவுக்கும் ஆஸனவாய்க்கும் சுரங்கம் போல் தொடர்பு ஏற்படும். இதை பெளத்திர நாடீ வ்ரணம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இந்தப் பிளவையிலிருந்துதான் தங்களுக்கு சீழ்போல் வந்து கொண்டிருக்கிறது.

மேற்குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்க்கவும். ஆயுர்வேத மருந்துகளில் சிரிவில்வாதி கஷாயம் 200 மிலி கிடைக்கும். 3 ஸ்பூன் (15மிலி) கஷாயம்+2 ஸ்பூன் (60 மிலி) சூடான தண்ணீர்+சிட்டிகை இந்துப்பு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். மாலையில் துஸ்பர்ஸகாதி கஷாயம் காலை மருந்தின் அதே அளவில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். குக்குலுபஞ்ச பல சூர்ணம் 1\2 ஸ்பூன் (2.5). 1ஸ்பூன் (5மிலி) தேனுடன் குழைத்து காலை இரவு உணவிற்கு 1 மணிநேரம் முன்பாக நக்கிச் சாப்பிடவும். திரிபலா சூர்ணம் 10 கிராம் அளவில் கருங்காலிக் கட்டை 5 கிராமுடன் சிறுதுண்டுகளாக வெட்டிச் சேர்த்து ½ லிட்டர் தண்ணீரில் நன்கு கொடிக்கவிட்டு வடிக்கட்டி, வெதுவெதுப்பாக இரவில் படுக்கும்முன் புண்ணைக் கழுவப் பயன்படுத்தவும். மருந்துகள் அனைத்தும் கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலையில் கிடைக்கும். இந்துப்பும் கருங்காலிக்கட்டையும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். குறைந்தது 48 நாட்களாவது சாப்பிடவும்.

புரை ஓடிய புண் இரு பக்கங்களில் பிளவையை ஏற்படுத்தியிருந்தால் க்ஷார சூத்திரம் எனும் நூலில் மருந்தைத் தடவி கட்டும் முறை பிரசித்தமானது. அதை ரணவைத்தியர்கள் மட்டுமே செய்வார்கள்.
உணவில் ஆரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, வாழைப்பூ, கருணைக்கிழங்கு, பெரிய வெங்காயம் , புளிக்காத மோர் ஆகியவற்றை அதிகம் சேர்க்கவும்.

Home Page ஆயுர்வேதம்