ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்ஆயுர்வேதம்

பற்கள் பளிச்சிட …

காலையில் எழுந்தவுடன் பற்களைத் தேய்க்க நாம் உபயோகப்படுத்தும் பற்பசைகள் பலதும் இனிப்புச் சுவை கொண்டதாக இருக்கின்றன. சுவையல்ல, அதிலுள்ள மூலப்பொருட்கள்தான் பற்களை சுத்தமாக்குகின்றன என்று அவர்கள் வாதிடக் கூடும். ஆனால் வாயிலுள்ள ஊத்தை, நாற்றம், பற்களிலுள்ள மஞ்சள் கறை ஆகியவற்றை கசப்பும் துவர்ப்பும் காரமும் கொண்ட மூலிகைப் பொருட்களால் மட்டுமே முழுவதுமாக நீக்க முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இச்சுவைகளைக் கொண்ட எட்டு மூலிகை மருந்துகளான சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலரிசி, லவங்கப்பட்டை, லவங்கப் பத்திரி, இந்துப்பு, வால் மிளகு ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து நன்கு இடித்துத் துணியால் சலித்து அதில் 120 மில்லி லிட்டர் தேனும் 20 மி.லி. நல்லெண்ணெயும் விட்டுக் குழப்பி வைத்துக் கொள்ளவும். நடு விரலையும் மோதிர விரலையும் இந்த மூலிகைப் பற்பொடியில் தோய்த்து ஒவ்வொரு பல்லையும் தனித்தனியே கீழும் மேலுமாகத் தேய்ப்பது நல்லது. கடைவாய்ப் பற்களில் அதன் மேலேயும், பக்கவாட்டிலும் தேய்க்கவும். அதன்பிறகு குளிர்ந்த தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும்.
இதைத் தயாரிப்பதற்குக் கஷ்டமாக இருந்தால் கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலையில் விற்கப்படும் தசனகாந்தி எனும் சூரணத்தைப் பயன்படுத்தலாம். இதில் தேன், நல்லெண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. மலம், சிறுநீர் கழித்த பின்னரும், நல்ல வெயிலில் அலைந்து வந்த பின்னரும் வாய் கொப்பளிப்பதைப் பழக்கமாக நம் முன்னோர்கள் கையாண்டு வந்ததற்குக் காரணம் பற்களை என்றென்றும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதியதுதான்.
மஞ்சள் கறை படிவதற்கு முக்கியக் காரணம், காபி, டீ பருகிய பின்னரும், டிபன் சாப்பிட்ட பின்னரும் வாயைத் தண்ணீரில் கொப்பளித்து சுத்தம் செய்து கொள்ளாதிருப்பது தான். பான்பராக், புகையிலைப் பழக்கம், உணவில் பெரும் பகுதி இனிப்பாகவும், காரம், துவர்ப்பு சுவை குறைவாக இருப்பதையும் குறிப்பிடலாம். பற்களைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு ஆலம் விழுது, வேலம் விழுது, அத்திக் குச்சி, மாங்குச்சி, நாவல் குச்சி, நாயுருவிக் குச்சி ஏற்றவை. இவற்றில் ஏதேனும் ஒன்றை 9-10 அங்குல நீளமாக வெட்டி எடுத்துக் கொண்டு, நுனியைப் பற்களால் கடித்துப் பஞ்சு போல மெதுவானதாகச் செய்து பற்களில் மேலும் கீழுமாகத் தேய்த்து வர மஞ்சள் கறை நீங்கி விடும்.
இரவில் படுக்கும் முன்னும் ஒருமுறை பல் துலக்கும் பழக்கம் ஏற்படுத்துதல் நல்லது. அதனால் ‘எனாமலை‘ அரிக்கும் தன்மையுள்ள பொருட்கள் பல்லில் பல மணி நேரம்- ஏறத்தாழ 10 மணி நேரம் தங்குவது நேர்வதில்லை.
காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்கப்படும் அரிமேதஸ்தைலம் எனும் மூலிகை எண்ணெய்யை 1-2 ஸ்பூன் அளவு வாயினுள் விட்டுக் கொண்டு நன்கு கொப்பளித்து வாயில் உமிழ்நீர் நிரம்பியதும் துப்பி விடவும். இதன்பின், வெதுவெதுப்பான தண்ணீரால் கொப்பளித்துத் துப்பி வாயைச் சுத்தப்படுத்துவதன் மூலம் வாய் ஊத்தை, பற்களில் கறை, சீழ், ஈறுகளில் வீக்கம், பல் கூச்சம் ஆகியவை நீங்கிவிடும்.நாக்கில் சுவை அறியும் சக்தி வளரும். தொண்டை வாய் உலர்ந்து போகாது. உதடு வெடிக்காது. பற்கள் தேயாது.

உடல் ஆரோக்கியத்தின் திறவுகோலாக பல் பாதுகாப்பு இருப்பதால் அதில் அதிகக் கவனம் செலுத்துவது நல்லது.

Home Page ஆயுர்வேதம்