ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்ஆயுர்வேதம்

புளிப்புக்குப் பின் இனிப்பு !

நீங்கள் இவ்வாறு சாப்பிடும் எலுமிச்சம் பழச்சாறு இரைப்பையில் தனது புளிப்பால் பித்தத்தை அதிகமாக்கி பசித்தீயைத் தூண்டி ஜீரணத்திற்கு உதவுகிறது. எலுமிச்சம் பழத்தின் புளிச்சாறு தானும் ஜீரணமானதும் இனிப்பாக நிற்கும். அதனால் ஏற்படும் நன்மை கல்லீரல் முதலியவற்றில் தேங்கி நிற்கும் பித்தத்தை வெளிக்கொணரப் பயன்படுகிறது. சிறுநீரைஅதிகமாகப் பெருக்கி எரிவை அகற்றுகிறது. வியர்வையை உண்டாக்கிச் சூட்டைக் குறைக்கிறது. சுவையாலும் உடனடி உணர்ச்சியாலும் சூடு தரக்கூடியதாகவும் பித்தத்தை அதிகப்படுத்துவதாகவுமுள்ள எலுமிச்சம்பழம் முழுவதும் ஜீரணமான பின்னுள்ள இனிப்பு நிலையில் பித்தத்தையும் உடல் உஷ்ணத்தையும் குறைக்க உதவுகிறது. அதனால்தான் புளிப்பு நீக்கவேண்டிய சில பத்திய நிலைகளில் புளியை நீக்கிய பின்னரும் புளிக்குப் பதிலாக எலுமிச்சம் பழத்தை உபயோகிக்கச் சொல்வர்.
எலுமிச்சம் பழச்சாறு நாவறட்சியைக் குறைக்கின்றது. ருசி, பசி, ஜீரண சக்தி அளிக்கின்றது. குடலில் எதையும் வெகுநேரம் தங்கவிடாமல் குடலின் விரிந்து சுருங்கும் பணியைச் சீராக்கி மலத்தையும் ரத்தத்தையும் பிரிக்க உதவி வெளியேற்ற வேண்டியதை சுறுசுறுப்பாக வெளியேற்றுகிறது. வாயு குடலில் தேங்காமல் வெளியேறுவதால் வயிற்று உப்புசம், குடல் காற்றின் கடும் மணம் இவற்றைப் போக்குகிறது. ஆங்காங்கு அடைத்துள்ள கபம் வாயு பித்தம் இவைகளை நீர்க்கச் செய்வதன் மூலம் தடையின்றி வெளியேற்றுகிறது.
சிலருக்கு இரைப்பையில் உள்ள புளிப்புக் குறைவால் சாப்பிட்டதும் செரியாமல் பேதியாகும். இதற்கு சாப்பிட உட்காரும்போது எலுமிச்சம்பழச் சாற்றை தண்ணீர் விட்டுச் சாப்பிட்ட பின் உணவருந்த இந்த பேதி சில நாட்களில் குறைந்து விடும்.
இந்தப் பழச்சாற்றின் முழுமையான குணத்தைப் பெற சீரகம் 50 கிராம் எடுத்து சுத்தமாக்கிப் பீங்கான் கோப்பையிலிட்டு, 1-2 அவுன்ஸ் (30-60 மிலி.) எலுமிச்சம் பழச்சாறு விட்டு வெயிலில் உலர்த்தவும். நன்கு உலர்ந்ததும் மறுபடியும் முன்னளவில் சாறு சேர்க்கவும். இப்படி சிறிது சிறிதாக 10 அவுன்ஸ் (சுமார்300 மிலி.) வரை சாறு சேர்த்து உலர்ததும், கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். ஜீரணக்கோளாறு, அஜீர்ண பேதி, உமட்டல், வாயில் உமிழ்நீர் சுரத்தல், வாந்தி இவை போன்ற தருணங்களில் வாயில் சிறிது அடக்கிக் கொள்ள நல்ல குணம் தரும். ஜீரண இறுதியில் இனிப்பாக மாறுவதால் நீங்கள் இதைத் தொடர்ந்து சாப்பிடுவதை விட வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் காலைச் சிற்றுண்டிக்கு முன்பாகச் சாப்பிடுவது நல்லது.

Home Page ஆயுர்வேதம்