ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
 மலர் -23 துந்துபி வருஷம்: செப்டம்பர், அக்டோபர் 1982 இதழ் 1&2

விநாயகப் பெருமான்

Vinayakaவானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்கர மூன்றுவிழி நால்வாய்
யானைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்
- சேக்கிழார் ஸ்வாமிகள்            

நம் நாட்டில் சமயப் பயிற்சி விநாயக வணக்கத்தை அடிநிலையாகக் கொண்டுள்ளது. தெய்வ வழிபாடு கணபதியிலிருந்தே தொடங்கின்றது. எடுத்த காரியம் எளிதில் இன்பமாக நிறைவேண்டும் என்ற விருப்பம் அனைவர்க்கும் உண்டு. அதற்கு ஓங்கார வடிவமான விநாயகரின் அருட்டுணை இன்றியமையாதது.
ஓங்காரம் பரம்பொருளை உணர்த்துவது; பிரணவமே வேதமூலம்; அதுவே எல்லா ஓலிகளுக்கும் மூலகாரணம்; எல்லா தேவர்களுக்கும் பிறப்பிடம், குண்டலினி என்னும் மூலநாடியும் அதன் வடிவே.
பிரணவம் என்பது அகரமாகிய சிவமும், உகரமாகிய சக்தியும், மகரமாகிய மலமும் நாதமாகிய மாயையும், பிந்துவாகிய உயிரும் சேர்ந்த ஐந்தன் கூட்டு என்பர். இவற்றில் அகர உகர வடிவமாக விளங்குவது “உ” – பிள்ளையார் சுழி எனப்படும் – இது சிவ சக்திகளின் சேர்க்கை. அது உயிரும் இறையும், சிவமும் சக்தியும் ஒன்று கலந்த உன்னத நிலையின் நல்லடையாளம்.    

                விநாயகப் பெருமானின் திருமேனி ஞானமே வடிவானது. உயிர் விளக்கம்பெற ஞானம் பொருந்தவேண்டும். தன்னை வழிபடுவோரது வினை நீங்கி இன்பம் பெருக உதவுவது அவரது ஞானத்திருவடி. அது அன்பரது அகத்தாமரையில் பொருந்திப் பேரின்பம் பயக்கும். அவரது பெருவயிறோ - தான் எல்லாவற்றிலும் வியாபகமாய் – எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நிற்கும் சக்தியைக்காட்டி நிற்பது. விநாயகரின் ஐந்து கரங்களும் – உலகை ஆக்கி, அளித்து, நீக்கி, மறைத்து அருளும் ஐம்பெருந் தொழில்களைக் குறிக்கின்றன. ஒடிந்த கொம்பு அபரஞானமாகிய விந்துவையும், மற்ற கொம்பு பரஞானத்தையும் விளக்கும்; ஒடிந்த கொம்பு பாசஞானத்தையும், மற்றது பதி ஞானத்தையும் குறிக்கும் என்பது வேறு சிலர் கருத்தாம். விநாயகர் எல்லாம் அறியும் தன்மை கொண்டவர் என்பதை அவரது தாழ் செவி இனிது விளக்கும். அவரது பிறைமுடி – உடல் தேய்ந்தாலும் களங்கம் அகன்றது பிறை ஆதலால் – அறியாமை நீங்கி உண்மை ஞானம் பெற்ற உயிர்கள் மேனிலை அடைவதைக் காட்டும். முக்கண்ணோ சூரியன், சந்திரன், அக்கினி என்னும் மூன்று சுடர்களைக் குறிப்பது. மும்மதம் – கலைஞானம், மெஞ்ஞானம், சிவஞானம் ஆகிய மூன்றையும் குறிப்பது. சர்ப்பாபரணம் – குண்டலி நிலையையும், தரிசனத்தையும் குறிப்பது. யானைமுகம் – தனக்குத் தலைவன் தானேயாய், வேறு தலைவனின்றி அளவற்ற ஆற்றல் கொண்டு விளங்கும் தன்மையைக் குறிப்பது. யானை நாதத்தில் தோன்றியது என்பர் நச்சினார்க்கினியர். விநாயகர் பரநாத வடிவினராதலால் யானை முகத்தோனாயினர்.             
இனி தனக்கொரு தலைவனில்லாதவர் என்பதை விநாயகர் என்ற சொல் விளக்குகிறது. கணபதி என்ற சொல்லில் க-போதல் (அதாவது ஞானநெறியில் செல்லல்) ந-மோக்ஷம், பதி-பரம்பொருள்; அதாவது ஞானநெறியில் நின்று எய்தப்பெறும் பரம்பொருளே கணபதி என்பதன் பொருள்.
விநாயகப் பெருமானுடைய திருஉருவங்கள் முப்பத்து இரண்டாகப் போற்றப்படுகின்றன. அவை; பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி, ஹேரம்பகணபதி, லக்ஷ்மிகணபதி, மஹாகணபதி, விஜயகணபதி, நிருத்தகணபதி, ஊர்த்துவகணபதி, ஏகாக்ஷ்ரகணபதி, வரகணபதி, திரயாக்ஷ்ரகணபதி, க்ஷிப்ரப்ரசாதகணபதி, ஹரித்திராகணபதி, ஏகதந்தகணபதி, ஸ்ருஷ்டிகணபதி, உத்தண்டகணபதி, ரணமோசனகணபதி, துண்டிகணபதி, துவிமுக கணபதி, மும்முககணபதி, சிங்ககணபதி, யோககணபதி, துர்க்காகணபதி, சங்கடஹரகணபதி என்பன.
இனி, யஜுர் வேதத்துடன் தொடர்புடைய மானுவ கிருஹ்ய சூத்திரத்தில் நான்கு விநாயகர்கள் குறிப்பிடப் பெறுகின்றனர். மனுஸ்மிருதியில் “பிராஹ்கணேஷ்” எனவும். சீனாவில் “க்வானஷிடியிக்” எனவும், ஜப்பானில் “விணாயக்ஷா” எனவும் விநாயகர் அழைக்கப்பெறுகிறார். இந்தோனேஷியாவிலும் விநாயக வழிபாடு உண்டு. பௌத்த புராணம் விநாயகரை “ஞானதேவன்" என்று போற்றுகின்றது.
விநாயகரைப் பற்றிய வரலாறுகள் பல உண்டு; ஸ்தோத்திரங்களும் பல உண்டு. அவரை வழிபடுவோர் எத்தகைய இன்னல்களையும் நீங்கப்பெற்று இன்பப்பேறடைவர் என்பதை அவை இனிது எடுத்துக்காட்டுகின்றன.  

                                                         
-நன்றி : தபோவனம் ஸத் சங்கம் ஆண்டு மலர்

Home Page