ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
 மலர் -23 துந்துபி வருஷம்: செப்டம்பர், அக்டோபர் 1982 இதழ் 1&2
அன்னதானம்

தானங்களில் மிகச் சிறந்தது அன்னதானம் என்று நம் வேதம், சாஸ்திரங்களும், புராணங்களும், ஸ்ம்ருதிகளும் கூறுகின்றன. மனிதனின் அன்றாட செயல் திட்டங்களில் அதிதிகளுக்கும், தன்னைச் சார்ந்தவர்க்ளுக்கும், தன்னிடம் பணிபுரிபவர்களுக்கும் உணவு அளித்து விட்டே தான் உண்ண வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மனிதாபிமானம் கொண்டு உருவான முறை ஆகும். அம்மாதிரி தனிப்பட்ட முறையில் அன்றாடம் உணவு அளிப்பதில் சில இடைஞ்சல்கள் நேரிடலாம் என்பதனாலேயே முன்பெல்லாம் குறிப்பாக தமிழ்நாட்டில் பல க்ஷேத்திரங்களில் அன்னசத்திரம் ஏற்படுத்தி ஏழை எளியவர்களுக்கு தினமும் அன்னம் அளித்து வந்துள்ளனர். குறிப்பாக ஆலயங்களில் ப்ரம்மோத்ஸவம் நடைபெறும் நாட்களில் பல இடங்களில் அன்னதானம் செய்வது வழக்கம். ஆங்காங்கே ஜனங்களின் தாக சாந்திக்காக தண்ணீர்ப் பந்தலும் நடைபெற்றன. அத்தகைய தர்மங்கள் நடக்க பல ஆஸ்திக மக்கள் குறிப்பாக நாட்டுக்கோட்டை நகரத்து செட்டிமார்கள் ஏராளமாக மூலதனம் ஏற்படுத்தினர். கோசாலை (பசுமடம்), நந்தவனம் போன்ற தர்ம கைங்கர்யங்களுக்கும் மூலதனம் வைத்து நன்றாக செயல்படச் செய்து வந்தனர். திருவண்ணாமலையில் காலை முதல் இரவு வரை ஓயாமல் அன்னதானம் நடைபெற்ற கட்டிடம் “ஓயாமடம்’ என்ற பெயருடன் இன்றும் வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் நாஸ்திக பிரசாரம் தலைதூக்கி ஏழைகளுக்கு நடந்த அன்னதானம் போன்ற கைங்கர்யங்களை சோம்பேரிகளை வளர்க்கும் திட்டம் என்றெல்லாம் பரிகாஸம் செய்யப்பட்டதின் விளைவாக நாளடைவில் இத்தகைய தர்ம கைங்கர்யங்கள் மறைந்தது மட்டிலுமல்லாமல் அவைகளுக்காக ஏற்படுத்திய நிதிகளையும், சொத்துக்களையும் பலர் கையாடல் செய்து அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்றே தெரிகிறது. இத்தகைய தர்மங்கள் யார் யாரால் எந்தெந்த இடங்களில் நிறுவப்பட்டு இப்பொழுது எவரெவர்கள் அவைகளை அனுபவித்து வருகின்றனர் என்பதை கண்டுபிடித்து அத்தகைய அன்னதானத் திருப்பணிக்காக விடப்பட்டிருந்த நிலங்களின் வருவாய்களையும், ரொக்க நிதிகளின் வருவாய்களையும் கண்டெடுத்து அந்த வருவாய்களையெல்லாம் இந்த சத்துணவுத் திட்டத்திற்கு திருப்பப்படின் கணிசமான வருவாய் இதற்கு கிட்டும்.              
“ஆரம்ப சூரா: கலு தாக்ஷிணாத்யா:” தென்னாட்டினர் எந்த ஒரு காரியத்தையும் பெரியதாக துவக்குவதில் கெட்டிக்காரர்கள் என்று ஒரு பழமொழி. அது மெய்யாகி விடாமல் இத்திட்டம் நீடித்து  நடைபெற சமூகம் ஒத்துழைக்க வேண்டும். இது செயல்படுவதில் பல இடையூறுகள் நேர வாய்ப்பு உண்டு. உண்ணும் உணவு இதை தயாரிப்பதில் ஆங்காங்கு பங்கு கொள்பவர்களுக்கு உணவை ருசி பார்க்க இயல்பாகவே மனம் நாடும். சமையல் செய்யப்பட்டத்தை சாப்பிட்டாலும் பரவாயில்லை. கச்சாப் பொருள்களான அரிசி, பருப்பு, எண்ணை முதலியவை கையாடல் செய்ய ஆரம்பித்துவிட்டால் பல கஷ்டங்கள் நேரிடும். ஆகவே இந்த திட்டம் நன்றாக செயல்பட ஆங்காங்கே மக்கள் கண்காணிப்பதுடன் பொருளுதவியும் தாரளமாகச் செய்ய முன்வர வேண்டும். இம்மாதிரி சமூகநன்மை திட்டங்கள் பல இன்னமும் செய்யவேண்டியவைகளாக உள்ளன.
உதாரணமாக தொழுநோயால் அவதிப்படுபவர்கள் சென்னை நகரத்தின் தெருக்களிலும், மார்க்கெட், ஆலயங்களின் சமீபத்திலும் சாரசாரியாக நடை வண்டியில் உட்கார்ந்துகொண்டும் மற்றொரு நோயாளியால் அந்த வண்டி தள்ளப்பட்டு பிச்சை எடுக்கின்றனர். ஒன்றும் செய்ய சக்தி இழந்த இவர்கள் பால் உதவிபுரிய சமூகம் கடைமைப்பட்டிருக்கிறது. அரசு இவர்களுக்கு தங்க இடம், உண்ண உணவு, உடுக்க துணி, மருத்துவம் முதலியவைகளைச் செய்து இவர்களை பராமரிக்க வேண்டும். இம்மாதிரி திட்டங்களை அரசு ஏற்கும் போது நிதி பற்றாக்குறை ஏற்படுவது இயற்கை. இதற்க்காக வரிகளைப் போட வேண்டும். வரிகள் நாளடைவில் சுமையாக மாறி மக்கள் அரசை வெறுக்கவும் தயங்கார். ஆகவே மக்களே முன் வந்து இயன்ற அளவு சிரமமின்றி இம்மாதிரியான திட்டங்களுக்கு உதவ வேண்டும்.

           
மக்கள் எல்லோருமே குறிப்பாக ஏழைகள் வருந்தாமல் வாழ வேண்டும் என்ற பெரும் நோக்குடன் கருணை உள்ளம் கொண்டு அல்லும் பகலும் உலக க்ஷேமத்தையே மனதில் நினைத்து வரும் ஜகதகுரு காஞ்சீ ஸ்ரீ பரமாசார்யாள் 25 ஆண்டுகளுக்கு முன்பே ’பிடி அரிசி திட்டம்’ என்பதை அநுக்ரஹித்தார்கள். இதன் படி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் அன்றாடம் சமையல் செய்ய துவங்கும் போது ஒரு பிடி அரிசியையும் ஒரு நயா பைசாவையும் ஒரு பானையில் போட வேண்டும். வாரத்தில் ஒரு நாள் சமூக சேவகர்கள் இவைகளை சேகரித்து எடுத்துச் சென்று சமையல் செய்து அருகில் உள்ள ஒரு ஆலயத்தில் பகவானுக்கு அர்ப்பணித்துவிட்டு பட்டைபோட்டு பத்துபைசா பெற்றுக் கொண்டு ஏழைகளுக்கு அந்த அன்னத்தை விநியோகிக்கவேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம். இப்பவும் வெளிஊர்களிலும், சென்னையில் சில பேட்டைகளிலும் இந்த திட்டம் நன்றாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மக்கள் எல்லா ஊர்களிலும் கடைபிடித்து இதில் கிடைக்கும் அரிசியை அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு வழங்கலாம். இதனால் கணிசமான அரிசி அரசுக்கு ஆதாயமாக கிடைக்கும். இதை பெரிய சுமையாக மக்கள் கருத மாட்டார்கள். தன்னலம் கருதாது மக்களின் துயர் துடைக்க அனைவரும் ஒன்றுபடுவோம்.   

 


Home Page