திருஇடைச்சுரம் - திருவடிசூலம்

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

திருஇடைச்சுரம் - திருவடிசூலம்

மக்கள் வழக்கில் 'திருவடி சூலம்' என்று வழங்குகிறது. செங்கற்பட்டு - திருப்போரூர் பேருந்துப்பாதையில் இத்தலம் உள்ளது. செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்து திருப்போரூர் செல்லும் பேருந்தில் ஏறி, 'திருவடிசூலம்' சாலை நிறுத்தத்தில் இறங்கி 1 A.e. உள்ளே சென்றால் ஊரை அடையலாம். (செங்கற்பட்டு - திருக்கழுக்குன்றம் பாதையில் சென்றால் இடப்புறமாகத் திருப்போரூர் நோக்கி 3 A.e. சென்றால் 'திருவடி சூலம்' நிறுத்தம் வரும். சாலையோரத்தில் கோயில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. கார், தனிப் பேருந்து முதலியன கோயில்வரை செல்லும். ஊர்க்கோடியில் கோயில் உள்ளது.

பழமையான கோயில். மலைகள் சூழ்ந்த இயற்கைச் சூழலில், வயல்களை ஓட்டினாற்போல் கோயில் அமைந்துள்ளது.

இறைவன் - ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்.

இறைவி - கோபரத்னாம்பிகை, இமயமடக்கொடி.

சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.

கௌதமரிஷியும், சனற்குமாரரும் வழிபட்ட தலம். அம்பாள், பசு வடிவில் வந்து பால்சொரிந்து வழிபட்ட தலம். ஊர், சிறிய கிராமம். பழைமையான, கருங்கல் கட்டமைப்புடைய திருக்கோயில். இராஜ கோபுரமில்லை. கட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதற்காகத் திருப்பணி உண்டியல் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. முகப்பு வாயிலுக்கு முன்னால் இடப்பால் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. வலப்பால் குளம் உள்ளது - படித்துறைகள் செம்மையாக இல்லை. (தாமரைக் குளம்) . முகப்பு வாயில் தெற்கு நோக்கியது.

வாயிலில் நுழைந்து விநாயகரைத் தொழுது, வலமாகப் பிராகாரம் சுற்றி வந்தால் பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதியும் அதையடுத்து பிரம்மாண்டேஸ்வரி சந்நிதியும் தனித்தனியே உள்ளன.

கொடிமரம் இல்லை. பலிபீடம், நந்தி மட்டுமே உள்ளன. பக்கத்தில் வில்வமரம் உளது. உள் (முகப்பு) வாயிலில் நுழைந்து, மண்டபம் தாண்டி, வலமாகச் சுற்றி வந்தால் நால்வர் பிரதிஷ்டை உள்ளது. விநாயகர், சந்நிதியும், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதியும் அடுத்து உள்ளன. அடுத்த தரிசனம் பைரவர்.

கருவறை அகழி அமைப்புடையது. நல்ல கற்றளி. மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும் முருகப்பெருமானும் காட்சியளிக்கின்றனர்.

உள்ளே நுழைந்ததும் கருவறையுள் நேரே அம்பாள் (தெற்கு நோக்கி) காட்சி தருகின்றாள். நின்ற திருக்கோலம். சுவாமி கிழக்கு நோக்கிய தரிசனம்.

மூலவர் - சுயம்பு - மரகதலிங்கம் (பச்சைக்கல்) . சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது அவ்வொளி பிரகாசமாகத் தெரிகின்றது. அற்புதமான அருமையான மரகதலிங்கத் தரிசனம். சதுரபீட ஆவுடையார்.

இத்தலத்தில் சிவராத்திரி மிகவும விசேஷமாகச் சொல்லப்படுகிறது. அந்நாளில் நான்கு சாம வழிபாடுகளும் முறையாக நடைபெறுகின்றன. திரளானோர் வந்து தரிசிக்கின்றனர். இதுதவிர பிரதோஷம் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. பெருவிழா இல்லை.

சுவாமி அம்பாள் விமானங்கள், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன் விழாப் பணிகளுள் சேர்க்கப்பட்டுத் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. திருக்கழுக்குன்றம் அ.மி. வேதகிரீஸ்வரர் தேவஸ்தானத்துடன் இக்கோயில் சேர்க்கப்ட்டுள்ளது.

"கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்

காதலர் தீதிலர் கனன் மழுவாளர்

வானமு நிலமையுமிருமையு மானார்

வணங்கவுமிணங்கவும் வாழ்த்தவும் படுவார்

நானமும் புகையளி விரையடு கமழ

நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர்

ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல்

இடைச்சுர (ம்) மேவிய இவர் வணமென்னே"

(சம்பந்தர்)

(இப்பதிகம் முழுவதிலும் சுவாமியின் (மரகதலிங்கத்தின்) வண்ணம் (அழகு) புகழ்ந்து பாடப்பட்டுள்ளது) .

"-ஈடில்லை

என்னுந் திருத்தொண்டர் ஏத்தும் இடைச்சுரத்தின்

மன்னும் சிவானந்த வண்ணமே"

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்

திருவடிசூலம்

(வழி) செம்பாக்கம் s.o.603 108

காஞ்சிபுரம் மாவட்டம்.

 



 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்கச்சூர் - கச்சூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கழுக்குன்றம்
Next