Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருக்கழுக்குன்றம்

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

திருக்கழுக்குன்றம்

செங்கற்பட்டில் இருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. 14 A.e. தொலைவு. செங்கற்பட்டிலிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம் முதலிய ஊர்களுக்கான பேருந்துகளும் இத்தலத்தின் வழியே செல்கின்றன.

வேதமே, மலையாய் இருத்தலின் 'வேதகிரி' எனப் பெயர் பெற்றது. வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோயில் உள்ளது. ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில் தாழக்கோயில் என்றழைக்கப்படுகின்றன. மலை 500' உயரமுள்ளது. மலையில் நாடொறும் உச்சிப்பொதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்குப் 'பட்சி தீர்த்தம்' என்று பெயர். மலைமீது உள்ள கோயிலில் வீற்றிருந்தருளும் இறைவன் - வேதகிரீஸ்வரர் (சுயம்பு மூர்த்தி) , இறைவி - சொக்கநாயகி. சுனை ஒன்றும் உள்ளது.

மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். வடநாட்டிலிருந்து வரும் யாத்ரீகர்களுக்குப் 'பட்சி தீர்த்தம்' என்று சொன்னால்தான் புரியும். மலைமீது ஏறிச்செல்ல நன்கமைக்கப்பட்ட மலைப்பாதை - செம்மையான படிகளுடன் உள்ளது.

இம்மலையை வலம் வருதல் சிறப்புடையது. வலம் வருவதற்கேற்ப நல்ல பாதையுள்ளது. விளக்கு வசதிகள் உள்ளன. இதைச் சேர்ந்த கிராமங்கள் சுற்றிலும் உள்ளன. அன்னக்காவடி விநாயகர், சனிபகவான் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, இம்மலையை வலம் வரின் உடற்பிணி நீங்குமூ. இதைச்சில மருத்துவர்களே மேற்கொண்டு அநுபவத்தில் உணர்ந்துள்ளனர்.

மூவர் பாடலும் பெற்ற தலம். மணிவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம். அப்பெருமான் வாக்கிலும் - திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது.

இத்தலத்திற்கு அந்கக்கவி வீரராகவ புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது. ஊருக்குள் உள்ள கோயில் 'தாழக்கோயில்' என்றழைக்கப்படுகின்றது. கோயிலின் சந்நிதி வீதியில் திருவாடுதுறை ஆதீனக்கிளை மடம் ஒன்றுள்ளது.

இறைவன் - பக்தவத்சலேஸ்வரர்.

இறைவி - திரிபுரசுந்தரி.

தலமரம் - வாழை.

தீர்த்தம் - சங்கு தீர்த்தம்.

மிகப் பழமையான கோயில். நாற்புறமும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன - கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம். கோயிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சந்நிதிக்கு நேர் எதிரில் வீதியின் கோடியில் மிக்க புகழுடைய 'சங்கு தீர்த்தம்' உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இதிற்கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்துதந்ததாகவும், அதுமுதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சங்கு தீர்த்தம் - பெரிய குளம். ஒரு பாதி படித்துறைகள் மட்டுமே செம்மையாக்கப்பட்டுள்ளன. நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன.

இக்குளத்திற்குச் சற்றுத் தொலைவில் 'ருத்ரகோடி' என்னும் பெயர் பெற்ற வைப்புத் தலம் உள்ளது. குளக்கரையிலிருந்து பார்த்தாலே இக்கோயில் விமானம் தெரிகின்றது. மிகப்பழமையானது. இங்குள்ள இறைவன் - ருத்ரகோடீஸ்வரர், இறைவி - அபிராமசுந்தரி, இவ்விடத்தைத் தற்போது மக்கள் 'ருத்ராங்கோயில்' என்றழைக்கின்றனர்.

தாழக்கோயில் கிழக்குக் கோபுரம் ஏழு நிலைகளையுடையது. உச்சியில் நவ கலசங்கள். கோபுரத்தில் சிற்பங்களில்லை. விநாயகரும் சுப்பிரமணியரும் இருபுறமும் உள்ளனர். கருங்கல்லில் அமைந்துள்ள துவாரபாலகர்கள் உருவங்கள் அழகுடையவை. கிழக்குக் கோபுர வாயில் வழியே உட்புகுவோம். வலப்பால் மண்டபத்தில் அலுவலகம் உள்ளது. இடப்பால் பதினாறுகால் மண்டபம் உள்ளது.

இம்மண்டபத்தின் பக்கமாகத் திரும்பி வெளிப் பிராகாரத்தை வலம் வரும் போது, விநாயகர் சந்நிதி, ஆமை மண்டபம் முதலியன உள்ளன. இம்மண்டபத் தூண்கள் கலையழகு மிக்கவை.

வடக்கு வாயிலை அடுத்து வரும்போது 'நந்தி தீர்த்தம்' உள்ளது. கரையில் நந்தி உள்ளது. வலமாக வரும்போது அலுவலக மண்டபக் கற்சுவரில், (நமக்கு இடப்பால்) அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது. இதன் கலையழகு கண்டுணரத்தக்கது.

நான்கு கால் மண்டபம். ஒருபுறம் துவார விநாயகர், மறுபுறம் சுப்பிரமணியர். இருவரையும் வணங்கி, ஐந்து நிலைகளையுடைய உள் கோபுரத்துள் நுழைகிறோம். இக்கோபுரம் வண்ணக்கோபுரமாகச் சிற்பங்களுடன் காட்சி தருகிறது. நுழையும்போது, வாயிலில் இடப்பால் 'அநுக்கிரக நந்திகேஸ்வரர்' தேவியுடன் காட்சி தருகின்றார். உள் நுழைந்து வலமாகப் பிராகாரத்தில் வரும்போது, சோமாஸ்கந்தர் சந்நிதி மிக அழகாகவுள்ளது.

இப்பிராகாரத்தில், ஆத்மநாதர் சந்நிதி (பீடம் மட்டுமே கொண்டது) , இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் முதலிய சந்நிதிகள் தனிக் தனிக் கோயில்களாக அமைந்துள்ளன. ஆறுமுகப்பெருமான் சந்நிதி அழகாகவுள்ளது. கந்தர் அநுபூதிப் பாடல்கள் சலவைக் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் அழகான முன் மண்டபத்துடன் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. உள்ளே வலம் வரலாம். நின்ற திருக்கோலம்.

அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் (1) ஆடிப்புரம் (2) பங்குனி உத்திரம் (3) நவராத்திரியில் வரும் நவமி ஆகிய மூன்று நாள்களில் மட்டுமே இங்கு அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்பெறுகின்றது. நாடொறும் பாத பூஜை மட்டுமே நடைபெறுகின்றது. அம்பாளின் கருவறையை வலம் வரும்போது அபிராமி அந்தாதிப் பாடல்களை சலவைக் கற்களில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளதைப் பாராயணம் செய்தவாறே வலம் வரலாம்.

அம்பாளுக்கு எதிரில் 'பிரத்யட்ச வேதகீரீஸ்வரர்' சந்நிதி உள்ளது. அடுத்துள்ள நடராச சபையில் உள்ள மூர்த்தி சிறியதாயினும் அழகாகவுள்ளது.

வலமாக வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்ற வலப்பால் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி உட்சென்றால், உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர், சுந்தரர் முதலாகவுடைய அறுபத்துமூவர் மூலத்திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து அறுபத்துமூவரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. பைரவர் வாகனமின்றி உள்ளார்.

மூலவர் தரிசனம் - சிவலிங்கத் திருமேனி (பக்தவத்சலேசுவரர்.) சதுரபீட ஆவுடையாரில் அமைந்துள்ள அழகான மூர்த்தம். கருவறை 'கஜப்பிரஷ்ட' அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை, ஆகியோர் உளர். சண்டேஸ்வரர் உள்ளார். மறுபக்கத்தில் தீர்த்தக் கிணறு உள்ளது. நித்திய வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன.

சித்திரையில் பெருவிழா நடைபெறுகின்றது. கொடியேற்றம், யாகசாலை முதலியன மலைமீது நிகழும். திருவிழாக்கள், அனைத்தும் தாழக்கோயிலில்தான். சித்திரைப் பெருவிழாவில், மூன்றாம் நாள் உற்சவத்தில் காலையிலும், பத்தாம் நாள் விழாவில் இரவிலும், சுவாமி அதிகாரநந்தியிலம், பஞ்சமூர்த்திகளுடன் முறையே எழுந்தருளி மலைவலம் வருவதும் வழக்கம். அடிவாரத்தில் மாமல்லபுரம் போகும் பாதையில் நால்வர்கோயில் உள்ளது. இப்பகுதி 'நால்வர் கோயில்பேட்டை' என்று வழங்குகிறது.

கல்வெட்டில் இத்தலம் 'உலகளந்த சோழபுரம்' என்று குறிப்பிடப்படுகிறது. தொண்டை நாட்டுக்குரிய 24 கோட்டங்களுள் இது களத்தூர்க் கோட்டத்தைச் சார்ந்தது. 7 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர். சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

"தோடுடையான் ஒருகாதில் தூயகுழை தாழ

ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்

நாடுடையான் நள்ளிருளேம நடமாடும்

காடுடையான் காதல் செய்கோயில் கழுக்குன்றே"

(சம்பந்தர்)

"மூவிலை வேற்கையானை மூர்த்திதன்னை

முதுபிணக்காடுடையானை முதலானானை

ஆவினில்ஐந்து உகந்தானை அமரர்கோனை

ஆலாலம் உண்டுகந்த அம்மான்தன்னைப்

பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்

புணர்வரிய பெருமானைப் புனிதன்தன்னைக்

காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான்தன்னைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன்நானே."

(அப்பர்)

'நீளநின்று தொழுமின் நித்தலு (ம்) நீதியால்

ஆளுநம் வினைகள் அல்கி அழிந்திடத்

தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்

காளகண்டன் உறையும் தண் கழுக்குன்றமே'.

(சுந்தரர்)

'பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான் உன்நாமங்கள் பேசுவார்க்கு

இணக்கிலாததோர் இன்பமே வரும்துன்பமே துடைத்து எம்பிரான்

உணக்கிலாததோர் வித்துமேல் விளையாமல் என்வினை ஒத்தபின்

கணக்கிலாத் திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.'

(மாணிக்கவாசகர்)

வேதவெற்பிலே புனத்தில் மேவிநிற்கு - மபிராம

வேடுவச்சி பாதபத்ம மீதுசெச்சை - முடிதோய

ஆதரித்து வேளைபுக்க ஆறிரட்டி - புயநேய

ஆதரத் தொடாத ரிக்க ஆனபுத்தி - புகல்வாயே

காதுமுக்ர வீரபத்ர காளி வெட்க - மகுடாமா

காசமுட்ட வீசிவிட்ட காலர்பத்தி - யிமையோரை

ஓதுவித்த நாதர் கற்க வோதுவித்த - முனிநாண

ஓரெழுத்தி லாறெழுத்தை யோதுவித்த - பெருமாளே.

(திருப்புகழ்)

-'நன்னெறியோர்

துன்ன நெறிக்கோர் துணையாந் தூய கழுக்குன்றினிடை

முன்னு மறிவானாந்த மூர்த்தமே.'

அஞ்சல் முகவரி -

அ.மி. வேதகீரீஸ்வரர் திருக்கோயில்

திருக்கழுக்குன்றம் - அஞ்சல்

காஞ்சிபுரம் மாவட்டம். 603 109.

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருஇடைச்சுரம் - திருவடிசூலம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருஅரசிலி - ஓழிந்தியாப்பட்டு
Next