Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருவான்மியூர் - சென்னை

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

திருவான்மியூர் - சென்னை

சென்னைப் பெருநகரின் தென் கடைசிப் பகுதி. சென்னை உயர்நீதி மன்றப் பகுதியிலிருந்து திருவான்மியூருக்கு நகரப்பேருந்து செல்கிறது. திருவான்மியூர்ப் பேருந்து நிலையத்தில் இறங்கிப் பக்கத்தில் உள்ள இக்கோயிலை அடையலாம். சென்னையிலிருந்து கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரம் செல்லும் பேருந்துச் சாலையில் (திருவான்மியூரில்) இக்கோயில் உள்ளது. கிழக்குக் கோபுரமே பிரதான வாயில். கிழக்கு, மேற்குக் கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டுப் பொலிவுடன் விளங்குகின்றன. அழகிய சுற்றுமதில். வான்மீகி முனிவருக்கு இறைவன் நடனக் காட்சியருளிய தலம். காமதேனு பால் சொரிந்து வழிபட்ட சிறப்புடையது. கோயிலில் வான்மீகி முனிவர் திருமேனி உள்ளது. மேலைக்கோபுர வாயிலுள்ள சாலைவழியே சிறிது தூரம் சென்றால் வான்மீகிநாதர் கோயில் உள்ளது.

சிறந்த மேதையாக விளங்கிய அப்பைய தீக்ஷதிர் சென்னைக்கு அருகில் உள்ள வேளச்சேரியில் வாழ்ந்து வந்தபோது நாடொறும் வாம்மியூர் வந்து பெருமானை வழிபட்டு வந்தார். ஒருமுறை இறைவனருளால் இப்பகுதி முழுவதும் நீர்ப்பிரளயமாக மாற அப்பைய் பிரார்த்தித்தார். அவர் பிரார்த்தனையை ஏற்று அவருக்காக இறைவன் மேற்கு நோக்கித் திரும்பிக்காட்சியளித்தார். இச்சிறப்பினால் சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியுள்ளது. அகத்தியருக்கு, (வைத்திய) மூலிகைகளைப் பற்றி இறைவன் உபதேசித்தருளிய சிறப்புத் தலம். இதனால் இறைவனுக்கு ஓளஷதீஸ்வரர் - மருந்தீசர் என்று பெயர். வேதங்கள் வழிபட்ட தலம். இதனால் இறைவனுக்கு உபதேசித்தருளிய சிறப்புத் தலம். இதனால் இறைவனுக்கு ஓளஷதீஸ்வரர் - மருந்தீசர் என்று பெயர். வேதங்கள் வழிபட்ட தலம். தேவர்களும், சூரியனும் பிருங்கி முதலியோரும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்.

இறைவன் - ஒளஷதீஸ்வரர், மருந்தீசர், பால்வண்ணநாதர், வேதபுரீஸ்வரர்.

இறைவி - திரிபுரசுந்தரி, சொக்கநாயகி, சுந்தரநாயகி.

தீர்த்தம் - பஞ்ச தீர்த்தங்கள் - இவையில்லை. கோயிலுக்கு எதிரில் இடப்பால் ஒரு தீர்த்தக்குளம் உள்ளது. அண்மையில் வலப்பால் உள்ள குளம் பயனற்றுள்ளது.

தலமரம் - வன்னி.

சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்றது.

கிழக்குக் கோபுரம் ராஜகோபுரம். ஐந்து நிலைகளையுடையது. வெளியில் பதினாறு கால் மண்டபம் உள்ளது. இக்கோபுரம் புதுப்பிக்கப்பட்டு 12-2-1984-ல் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சம்பந்தரின் சிவிகையை அப்பா தாங்குவது, ஊர்த்துவ தாண்டவம், தில்லைக்காளி, கஜசம்ஹாரமூர்த்தி முதலியவை குறிப்பிடத் தக்கவை.

கோபுரவாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. முகப்பில் கமல விநாயகர் தரிசனம். பக்கத்தில் அழகிய 'விஜயகணபதி' ஆலயம் உள்ளது. இக்கோயிலின் மேற்புற வரிசையில் சோடச கணபதி உருவங்கள் காட்சியளிக்கின்றன. இக்கோயில் கும்பாபிஷேகம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் 17-3-1985-ல் நிகழ்த்தப்பெற்றது.

வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது - தெற்கு நோக்கியது. முன் மண்டபத்தில், வாயிலையட்டி, இக்கோயிலில் (1) பிரதோஷ உற்சவம் (2) முருகனுக்கு விழா (3) துவஜாரோகண விழா (4) வன்மீக நடன உற்சவம் ஆகியவைகளை நடத்துவதற்காக எழுதி வைத்துள்ள நிபந்தக் கல்வெட்டுக்கள் உள்ளன.

அம்பாள் நின்ற திருக்கோலம். உள்ளே வலம் வரலாம். பள்ளியறை உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களில்லை.

சுக்கிரவார அம்மன் திருமேனி தனியே உள்ளது. கருவறையில் வெளிப் பகுதியில் நிரம்பக் கல்வெட்டுக்கள் உள்ளன. பிராகாரக் கல் தூண்களில் நர்த்தன விநாயகர், ரிஷபாரூடர் சிற்பங்கள் உள்ளன.

வெளிப் பிராகாரத்தில் வலமாக வரும்போது, நான்குகால் மண்டபம் உள்ளது. அடுத்து, சற்றுத் தள்ளி இடப்பால் விநாயகர் சந்நிதி மூன்று மூலத் திருமேனிகளுடன் காட்சி தருகிறது. வலப்பால் தியாகராஜா சபா மண்டபம் உள்ளது. மண்டபம் பெரியது. தியாகராஜா சந்நிதி கிழக்கு நோக்கியது. அழகான திருமேனி. தரிசித்துத் தெற்குப்பக்க வாயில் வழியாக உள் சென்றால் நேரே அம்பலவாணர் தரிசனம், மாணிக்கவாசகர் சிவகாமி உருவத் திருமேனிகள் உள்ளன.

அம்பலவாணர் உருவம் அழகானது. வன்மீகநாதர் கோயிலுக்குரிய சிறிய நடராஜ உருவம் பாதுகாப்புக்காக இச்சந்நிதியில் வைக்கப் பட்டுள்ளது. வலமாக வரும்போது அறுபத்து மூவர் சந்நிதிகள், அடுத்து விநாயகர் சந்நிதிகள் உள்ளன. இச்சந்நிதியில் இருபுறங்களிலும் நாகலிங்கப் பிரதிஷ்டையுள்ளது. அடுத்து நால்வர், கஜலட்சுமி, முத்துக்குமாரசாமி சந்நிதிகள் உள. முத்துக்குமாரசுவாமி சந்நிதியில் அருணகிரிநாதரும் உள்ளார்.

மூலவர் - மேற்கு நோக்கிய சந்நிதி, கோமுகம் மாறியுள்ளது. சுயம்பு, பால்போன்று வெண்மையாக உள்ளது. பசு (காமதேனு) பால் சொரிந்து வழிபட்டமை தொடர்பாகச் சிவலிங்கத் திருமேனியில் சிரசிலும், மார்பிலும் பசுவின்குளம்பு வடுதெரிகின்றது. (பால் வண்ணநாதர்) சுவாமிக்கு மேலே விதானம் உள்ளது. முகப்பில் துவார பாலகர்கள் உள்ளனர் - சுவாமிக்கு பால் அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. பஞ்சாமிர்தம் முதலான பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. உள் பிராகாரத்தில் ஏராளமன சிவலிங்கங்கள், வைக்கப்பட்டுள்ளன. காலபைரவர் பஞ்சலிங்கங்கள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக, தட்சிணாமூர்த்தி, விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும், இக்கோயிலுள் வில்வ மரங்கள் அதிகம் உள்ளன. பங்குனி உத்திரத்தில் பெருவிழா நடைபெறுகிறது. சூரியன் இத்தலத்தில் பெருமானை அர்த்தசாமத்தில் வழிபட்டதாக வரலாறு உள்ளதால் பெருவிழாவில் கொடியேற்றம் அர்த்தசாமத்தில்தான் நடைபெறுகிறது.

(கிருத்திகை, பௌர்ணமி முதலிய விசேஷங்களும் இராக்கொண்டு வருவதே இக்கோயிலில் கடைப்பிடிக்கப்படுகின்றது. பங்குனி பௌர்ணமியில்தான் வான்மீகி முனிவர் வழிபட்டு முத்தி பெற்றதாகச் சொல்லப்படுகிறது) . விழாக்காலங்களில் சுவாமி புறப்பாடு காலை மாலைகளில் சந்திரசேகரும் பஞ்சமூர்த்திகளும் மட்டுமே, 'தியாகராஜா' புறப்பாடு பகலில் கிடையாது. இரவில் மட்டுமே நிகழ்கிறது.

ஆடி தை மாதங்களில் திருவிளக்கு வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. பங்குனிப் பெருவிழாவில் மூன்றாம், நான்காம் நாள் உற்சவம் - பவனி உற்சவம் சிறப்பாகச் சொல்ல சொல்லப்படுகிறது.

ஓன்பதாம் நாள் விழாவில் 'வன்னி மர'ச் சேவை விசேஷம். பத்தாம் நாளில்தான் வான்மீகி முனிவருக்குத் தியாகராஜா, திருக்கல்யாண நடனத்தைக் காட்டியருளம் ஐதீகம் விசேஷமாக நடைபெறுகிறது. பதினோராம் நாளில் நடைபெறும் வெள்ளியங்கிரி விமான சேவை காணத்தக்கது. இத்தல புராணம்

பூவை. கல்யாணசுந்தர முதலியார் அவர்களால் வெளியிடப்பட்டள்ளது. கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. திருவான்மியூரில்தான் பாம்பன் சுவாமிகளின் சமாதி உள்ளது.

"கரையுலாங் கடலிற் பொலிசங்கம் வெள்ளிப்பிவன்

திரையுலாங்கழி மீனுகளுந் திருவான்மியூர்

உரையுலாம் பொருளாயுலகாளுடையீர் சொலீர்

வரையுலா மடமாது உடனாகிய மாண்பதே".

(சம்பந்தர்)

"விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்

அண்ட நாயகன் தன்னடி சூழ்மின்கள்

பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்

வண்டு சேர்பொழில் வான்மியூர் ஈசனே."

(அப்பர்)

-'கார்த்திரண்டு

வாவுகின்ற சோலைவளர் வான்மியூர்த் தலத்தின்

மேவுகின்ற ஞான விதரணமே.'

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. மருந்தீஸ்வரர் திருக்கோயில்

திருவான்மியூர் - சென்னை - 600 041.


Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is மயிலாப்பூர் - சென்னை
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கச்சூர் - கச்சூர்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it