Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

மயிலாப்பூர் - சென்னை

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

மயிலாப்பூர் - சென்னை

தருமமிகு சென்னை மாநகரின் நடுவண் அமைந்துள்ள மயிலாப்பூரில் கம்பீரமாகக் காட்சி தருவது அ.மி. கபாலீஸ்வரர் திருக்கோயிலாகும். 'திருமயிலைக் கபாலீச்சரம்' எனச் சிறப்பிக்கப் பெறும் இத்தலம் அம்பாள் மயில்வடிவிலிருந்து வழிபட்டமையால் 'மயிலாப்பூர்' எனப்பெயர் பெற்றது. மயிலை என்றவுடன் நினைவுக்கு வருவதே இத்திருக்கோயில்தான்.

இறைவன் - கபாலீஸ்வரர்

இறைவி - கற்பகாம்பாள்

தலமரம் - புன்னை.

திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. வாயிலார் நாயனார் அவதரித்த தலம். தெய்வப்புலவர் திருவள்ளுவர் மயிலையில்

பிறந்ததாக வரலாறு. திருஞானசம்பந்தர், எலும்பைப் பெண்ணாக்கிய (பூம்பாவை) அற்புதத்தை நிகழ்த்திய அருமையுடைய தலம்.

கோயிலுக்கு முன்பு அழகான, பரந்த திருக்குளம் - தெப்பக்குளம் சுற்றிலும் நாற்புறமும், நன்கமைக்கப்பட்டுள்ள படிகளுடனும், நடுவில் நீராழி மண்டபத்துடனும் காட்சி தருகின்றது.

கோயிலை நோக்கிச் செல்லும் நம்மை வரவேற்கும் ராஜகோபுரம் மிக்க அழகுடையது, மேற்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்தால் நேர் எதிரே சுவாமி - அ.மி. கபாலீஸ்வரர் சந்நிதி - மேற்கு நோக்கியுள்ளது. எடுப்பான சிவலிங்கத் திருமேனி.

சுவரில் தலப்பதிகமான 'மட்டிட்ட புன்னை' என்னும் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி சந்நிதியுள் நுழைந்து வலமாக வரும்போது நடராசப் பெருமான் திருமேனி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. உருத்திராக்கப் பந்தலில் பெருமான் காட்சி தருகின்றார். உலகெலாம் மலர்சிலம்படியைத் தொழுது நகர்ந்து வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் முருகப் பெருமானைத் தரிசித்து வலம் வரும்போது, சோமாஸ்கந்தர், பிட்சாடனர், முதலான உற்சவத் திருமேனிகளைத் தொழுது வணங்கலாம்.

கோஷ்ட மூர்த்தங்களாகத் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, விநாயகர் காட்சி தருகின்றனர். அறுபத்துமூவருடைய உற்சவ மேனிகளும் அடுத்துள்ள மூலத்திருமேனிகளும் கண்ணுக்குப் பெரு விருந்தாகும். கால நிலைக்கேற்ப பல்வேறு சுவாமிகளின் வண்ணப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. வலமாக வந்து கபாலீச்சரக் கண்மணியைக் கண்ணாரத் தொழுது வெளியே வந்து வலப்பால் சென்றால் அம்பாள் சந்நிதியைக் காணலாம். அ.மி. கற்பகாம்பாளின் அருள்வெளி - உள்ளே நுழையும்போதே தெய்வீக மணம். நேரே நின்று, நின்ற கோலத்தில் காட்சி தரும் கற்பகவல்லியைத் தரிசிக்கலாம். உள்ளே வலம் வரும் போது சுவரில் மாட்டப்பட்டிருக்கும் பல தலங்களில் வீற்றிருக்கும் அம்பாளின் வண்ணப் படங்களையும் கண்டு கை தொழலாம். வெளியே வந்து வலப்புறம் திரும்பி வெளிப் பிராகாரத்தில் வரும் நமக்கு கிழக்கு நோக்கி அமைந்துள்ள பூம்பாவை சந்நிதி முதல் தரிசனம் தருகின்றது. விமானத்தின் மேலே எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதம் சுதையில் செய்யப்பட்டுள்ளது. கண்டு தொழுது வலம் வரும் போது அலுவலக அறையையட்டி புன்னை மரம் - தலமரம் காட்சி தருகிறது. மயிலாய் அம்பிகை பூசித்த வரலாறு உள்ளது. புன்னைவனநாதர் சந்நிதி - சிவலலிங்கத் திருமேனி உள்ளது. அம்பாள் மயில் வடிவில் பூசித்ததால் மயில் உருவமும் சிலா ரூபத்திலுள்ளது. பக்கத்தில் உள்ள கூண்டில் இரு மயில்கள் தேவஸ்தானப் பராமரிப்பில் வளர்கின்றன. அழகான விமானத்துடன் அமைந்துள்ள சனிபகவான் சந்நிதியை வலமாக வந்து நவக்கிரகங்களைத் தொழுது சுந்தரேஸ்வரர் ஜகதீஸ்வரர் சிவலிங்கத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். அடுத்து நர்த்தன விநாயகர், அண்ணாமலையார் சந்நிதிகள்.

சிங்காரவேலர் சந்நிதி சிறப்பானது. சிறிய நந்தவனம் உள்ளது. தண்டாயுதபாணி சந்நிதியும், வாயிலார் நாயனார் சந்நிதியும் எதிர்ப்புறத்தில் அமைந்துள்ளன. தேவஸ்தானத்தில் நூலகம் உள்ளது. பதினாறுகால் (அலங்கார) மண்டபமும், நான்கு கால் (சுவாமி எழுந்தருளும்) மண்டபமும் உள்ளன. அருணகிரிநாதரைத் தொழுது, அடுத்து அமைந்துள்ள மயிலைத் திருப்புகழ்க் கல்வெட்டை ஒரு முறை ஊன்றிப் படித்துப் பின்னர் கொடிக் கம்பத்தின் முன்பு வீழ்ந்து வணங்கி, அமரும்போது நெஞ்சில் எழும் நிறைவுக்கு ஈடேது.

கற்பகவல்லியின் பொற்பதமே நமக்கே நற்கதி தரவல்லது. ஆமூ அவளே நமக்கு விழுத்துணை.

இத்திருக்கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழா மிக்க சிறப்புடையது. இவ்விழாவில் அறுபத்துமூவர் திருவிழா கண்கொள்ளாக் காட்சியாகும். பிரதோஷம், கிருத்திகை, ஆடிப்பூரம், ஆவணிமூலம், நவராத்திரி, சஷ்டி, திருமுறை விழா முதலியனவும் மார்கழி (தனுர்) மாத வழிபாடுகளும் இக்கோயிலில் சிறப்புடையவை. இத்திருக்கோயில் 300 ஆண்டுகள் பழமையானது. இதற்கு முன்னிருந்த பழைய கோயில் கடற்கரையில் இருந்தது. அது வெள்ளையர்களால் இடிக்கப்பட்டது. 'எச்.டி. லோவ்' என்பவர் எழுதியுள்ள சென்னை சரித்திர நூலில் கி.பி.1672ல் துருக்கியரோடு நடந்த போரின்போது பிரெஞ்சு சேனைகள் தற்போதுள்ள இக்கோயில் பிராகாரத்தில் ஒளிந்துகொண்டிருந்ததாகக் குறித்துள்ளார். A.H. 1798ல் வெளியிடப் பட்டுள்ள நகரப்படத்தில் இக்கோயில் திருக்குளம் காட்டப்பட்டுள்ளது. கடற்கரையில் கோயில் இருந்த இடத்தில் அதை இடித்து வெள்ளையர்கள் கட்டிய வழிபாட்டு இடமே இப்போதுள்ள "சாந்தோம் கதீட்ரல் மாதாகோயில்" உள்ள இடமாகும். தேவாரத்தில் இத்தலம் 'மயிலாப்பு' என்று குறிக்கப்படுகிறது. (ஒற்றியூர் - திருத்தாண் - 6) அருணகிரிநாதரும் "கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே" என்று பாடுகிறார்.

"மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை

கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பின் உருத்திரப்பல் கணத்தார்க்கு

அடடிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்."

(சம்பந்தர்)

"மண்ணினிற் பிறந்தார் பெரும்பயன் மதிசூடும்

அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்

கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல்

உண்மையாம் எனின் உலகர்முன் வருகென உரைப்பார்"

(பெ.புரா. திருஞான'புரா)

"குயிலொத்திருள் குஞ்சி கொக்கொத் திருமல்

பயிலப் புகாமுன்னம் நெஞ்சே - மயிலைத்

திருப் புன்னையங்கானல் சிந்தியாயாகில்

இருப் பின்னை அங்காந் திளைத்து."

(ஐயடிகள் காடவர்கோன்)

அயிலொத் தெழுமிரு - விழியாலே

அமுதொத் திடுமரு - மொழியாலே

சயிலத் தெழுதுணை - முலையாலே

தடையுற் றடியனு - மடிவேனோ

கயிலைப் பதியரன் - முருகோனே

கடலக் கரைதிரை - யருகேசூழ்

மயிலைப் பதிதனி - லுறைவோனே

மகிமைக் கடியவர் - பெருமாளே.

-'பாற்காட்டும்

ஆர்த்தி பெற்றமாது மயிலாய்ப் பூசித்தார் மயிலைக்

கீர்த்தி பெற்ற நல்வேத கீதமே.'

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. கபாலீஸ்வரர் திருக்கோயில் மயிலாப்பூர் - சென்னை - 600 004. 25.


Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவேற்காடு
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவான்மியூர் - சென்னை
Next