Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருவேற்காடு

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

திருவேற்காடு

(1) சென்னையிலிருந்து திருவேற்காட்டிற்கு நகரப்பேருந்துகள் ஏராளமாக உள்ளன. இங்குள்ள அருள்மிகு கருமாரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலிருந்து 1 A.e. தொலைவில் சிவாலயம் உள்ளது. நல்லபாதை உள்ளது. காடுவெட்டியாறு என்று சொல்லப்படும் (பழைய) பாலாற்றங்கரையில் கோயில் உள்ளது.

(2) 'பூந்தண்மலி' எனப்படும் பூந்தமல்லியிலிருந்து ஆவடி செல்லும் சாலையில் பேருந்தில் சென்று, காடுவெட்டி பஞ்சாயத்து என்னும் நிறுத்தத்தில் இறங்கி, ஆற்றைக்கடந்தால் கோயிலை அடையலாம். நிறுத்தத்தில் இருந்து பார்த்தாலே சிவாலயம் நன்கு தெரிகின்றது. இக்கோயில் அருள்மிகு கருமாரியம்மன் கோயிலுடன் இணைந்தது. மூர்க்க நாயனார் அவதரித்த தலம்.

அகத்தியருக்கு இறைவன் திருமணக் கோலக்காட்சி அருளிய தலம். சூரசம்ஹாரத்தின் பின்பு, முருகப்பெருமான் இத்தலத்திற்கு வருகை தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. முருகப்பெருமான் வேலால் உண்டாக்கிய தீர்த்தமே வேலாயுத தீர்ததம் எனப்படுகிறது. வேதம் வழிபட்ட தலமிது. நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று - இறைவனை வழிபட்டதால் இத்தலம் 'வேல்காடு' = வேற்காடு என்று பெயர் பெற்றது. விஷம் தீண்டாப்பதி என்ற சிறப்பும் இத் தலத்திற்குண்டு.

இறைவன் - வேதபுரீஸ்ரர், வேற்காட்டுநாதர்

இறைவி - பாலாம்பிகை, வேற்கண்ணி

தலமரம் - வெள் வேலமரம் (வெளிப்பிராகாரத்தில் உள்ளது)

தீர்த்தம் - வேலாயுத தீர்த்தம்

(இது கிணறுதான். கோயிலுக்கு வெளியில் மதிலைஒட்டி, அரச மரத்தினிடத்தில் உள்ளது. தற்போது நீரில்லை - பயன்படுத்தப்படவில்லை. கோயிலுக்குளூ தனியே வேறொரு கிணறு உள்ளது) .

சம்பந்தர் பாடல் பெற்றது. ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் கிழக்கு நோக்கியது. கோயில் பொலிவுடன் திகழ்கிறது. உள்ளே நுழைந்ததும் செப்புக்கவசமிட்ட கொடிமரம் காட்சியளிக்கின்றது. விசாலமான உள்ளிடம். வலப்புறம் அருணகிரியார் சந்நிதி, பக்கத்தில் கிணறு. மறுபுறத்தில் சனி பகவான் சந்நிதியும், மூர்க்க நாயனார் சந்நிதியும் உள்ளன. இதன் முன்னால் தலமரமும் அதன் முன்பு சிவலிங்கப் பிரதிஷ்டையும் இருக்கின்றன. வெளிப் பிரகாரதத்தில் சந்நிதிகள் எவையுமில்லை. நேரே மூலவர் சந்நிதி உள்ளது. உள்வாயிலைக் கடந்து சென்றால் வலப்புறம் அகத்தியரும் சூரியனும் உள்ளனர். அடுத்து, பத்மபீடத்தில் எண்கோண வடிவில் நவக்கிரக சந்நிதி ¢உள்ளது. நால்வர் பிரதிஷ்டையைத் தொடர்ந்து அறுபத்து மூவர் காட்சியளிக்கின்றனர். நடராச சபைக்கு நேராகப் பக்கவாயில். பிராகாரமூலையில் விநாயகர். அடுத்து காசி விசுவநாதர் விசாலாட்சி சந்நிதி. பாலசுப்பிரமணியருக்கு முன்பு சிவலிங்கப் பிரதிஷ்டை. கருவறைச் சுவரில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை அகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. இதன் நேர்பின்னால் சுவர் ஓரமாக மற்றொரு சண்டேஸ்வரர் திருவுருவம் வைக்கப்பட்டுள்ளது. துவாரபாலகர்களைக் கடந்து உட்சென்றால் நேரே மூலவர் தரிசனம் - கிழக்கு நோக்கியது. வலப்பால் விநாயகர், நால்வர், சோமாஸ்கந்தர், வில்லேந்தி மயிலேறி காட்சிதரும் ஆறுமுகன், அகத்தியர், மூர்க்கநாயனார் முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

நடராசசபை - நேரே வாயில் உள்ளது. மூலவர் - அழகிய ¤சவலிங்கத் திருமேனி. பின்னால் சுவரில் திருமணக்கோலத்தில் சுவாமி, அம்பாள்,

திருவுருவங்களும் நோக்கியது - நின்ற நிலை. பக்கத்தில் பைரவர். பைரவருக்கு முன்னால் உள்ள தூண் ஒன்றில் கருமாரியின் உருவம் கீழே பாம்புடன் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. மகாகும்பாபிஷேகம் 23-6-1999 -ல் நடைபெற்றுள்ளது.

"ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன்

வீழ்சடையினன் வேற்காடு

தாழ்விடை மனத்தாற் பணிந்தேத்திடப்

பாழ்படும் மவர் பாவமே"

(சம்பந்தர்)

-"மல்லல்பெறு

வேற்காட்டர் ஏத்து திரு வேற்காட்டின் மேவியமுன்

னூற்காட்டுயர்வேத நுட்பமே"

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. வேதபுரீஸ்வரர் திருக்கோயில்

திருவேற்காடு - அஞ்சல்

திருவள்ளுர் மாவட்டம் - 600 077.


 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is (வட) திருமுல்லைவாயில் - திருமுல்லைவாயில்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  மயிலாப்பூர் - சென்னை
Next