திருப்பரங்குன்றம்

திருமுறைத்தலங்கள்

பாண்டிய நாட்டுத் தலம்

திருப்பரங்குன்றம்

மதுரைக்குப் பக்கத்தில் உள்ளது. மதுரையிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது. புகைவண்டி நிலையம், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் முதலாவதாக விளங்கிய தலம். கோயில்வரை வாகனங்கள் செல்லும், முருகப்பெருமான் தெய்வயானைனை மணம் புரிந்த தெயவப் பதி.

நக்கீரர் வாழ்ந்த தலம். பராசரமுனிவரின் புதல்வர், நக்கீரர், சிபிமன்னன், பிரம்மா ஆகியோர் இறைவனை வழிபட்டுப் பேறுபெற்ற பதி. இத்தலம் சிவத்தலமாயினும், இன்றைய நடைமுறையில் முருகனுக்குரிய சிறப்புதலமாகவே வழிபடப்படுகின்றது.


இறைவன் - பரங்கிரி நாதர்.


இறைவி - ஆவுடை நாயகி.


தீர்த்தம் - சரவணப்பொய்கை, இலட்சுமி தீர்த்தம், பிரமகூபம்.


சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடல் பெற்றது.

ஆறுமுகர் சந்நிதி மிகவும் விசேஷமானது. மூலவர் தெய்வயானை திருமணக்கோலத்துடன் முருகன் காட்சியளிக்கின்றார். பரங்கிரிநாதர் -

மூலத்திருமேனி - சிவலிங்கம் குடவரைக் கோயிலில் தரிசனம் தருகினர்றர். பின்னால் கல்யாண சுந்தரேஸ்வரர் வடிவம் புடைப்புச் சிற்பமாகவுள்ளது.

இத்தலத்தில் முருகப் பெருமானின் (ஞான) வேலுக்குப் பாலபிஷேகம் செய்வது தனிச் சிறப்பானது. கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபறுகின்றன.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் அருள் முன்னிலையில் 11.6.2000 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

தலபுராணம் உள்ளது. - நிரம்ப அழகிய தேசிகர் பாடியது.

இத்தலத்தில் 11 கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. முகமதியர் ஆட்சியில் திவானாக இருந்த ராஜகோபாலராயர் என்பவர் - ஐரோப்பியர் படைகள் மதுரையில் புகுந்து கோயிலை அழித்துக் கொண்டு வந்தபோது அவர்களை எதிர்த்து வயிராவி

முத்துக் கருப்பன் குமரன் செட்டி என்பவன் தடுத்து அப்பணியில் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட, அவன் குடும்பத்தாருக்கு இறையிலியாக நிலங்கள் அளித்த செய்தி இத்தலத்தின் கல்வெட்டு ஒன்றின் மூலம் தெரியவருகிறது.


"பொன்னியல் கொன்றை பொறிகிளர் நாகம் புரிசடைத்

துன்னிய சோதியாகிய ஈசன் தொன்மறை

பன்னிய பாடல் ஆடலன்மேய பரங்குன்றை

உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே". (சம்பந்தர்)


"பாரொடு விண்ணும் பகலுமாகிப்

பனிமால் வரையாகிப் பரவையாகி

நீரோடு தீயு (ம்) நெடுங்காற்றுமாகி

தேரோட வரையெடுத்த அரக்கன்

சிரம்பத்து இறுத்தீர் உம செய்கையெல்லாம்

ஆரோடும் கூடா அடிகேள் இது என்

அடியோமுக்கு ஆட்செய அஞ்சுதுமே" (சுந்தரர்)


-"மாப்புலவர்

ஞானபரங்குன்றமென நண்ணி மகிழ்கூர்ந்தேந்த

வான பரங்குன்றலின்பானந்தமே". (அருட்பா)


அஞ்சல் முகவரி-

அருள்மிகு. பரங்கிரிநாதர் திருக்கோயில்

திருப்பரங்குன்றம் - அஞ்சல்

மதுரை - 625 005.

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருஆலவாய்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருஏடகம்
Next