திருஆலவாய்

திருமுறைத்தலங்கள்

பாண்டிய நாட்டுத் தலம்

திருஆலவாய்

மதுரை

புகைவண்டி நிலையம். தமிழகத்தின் தலைசிறந்த பெரிய நகரங்களுள் ஒன்று.

தென்பாண்டி நாட்டின் தலைநகர். தமிழ் வளர்த்த தலம். வைகைக் கரையில் அமைந்த வளமிக்க பதி. மாவட்டத் தலைநகரம். சென்னையிலிருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் புகை வண்டிகள் மூலமாகவும் பேருந்துகள் மூலவமாகவும் வருவதற்கு நிரம்ப வசதிகள் உள்ளன.

புலவர்களுடன் இறைவனும் ஒருவராயிருந்து தமிழ்ச் சங்கத்தில் தமிழாராய்ந்த தனிச்சிறப்புடைய தலம். இறைவன் அறுபத்துநான்கு திருவிளையாடல்களை - அற்புதச் செயல்களை நிகழ்த்திய அரிய தலம். மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் சைவம் காத்து மன்னனான கூன் பாண்டியனின் வெப்பு நோயை ஞானசம்பந்தர் மூலம் தீர்த்து வைத்த அவனை நின்றசீர் நெடுமாறனாக மாற்றிய அற்புதத் தலம். கபிலர் பரணர் நக்கீரர் முதலிய தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்த பதி. தமிழ்ச் சங்கம் அமைந்த தலம். மூர்த்தி நாயனார் வாழ்ந்த ஊர். இவ்விறைவனே பாண பத்திரர் மூலம் சேரமான் பெருமாளுக்குத் திருமுகப்பாசுரம் தந்தருளியவர். திருஞானசம்பந்தர், அனல், புனல் வாதங்களை நிகழ்த்தி, சைவத்தைத் தழைக்கச் செய்த தண்பதி. பல்வேறு இலக்கியங்களிலும் பாராட்டுகின்ற பதி. யோகநிலையில் இத்தலம் 'துவாத சாந்தத் தலம்' எனப்படும். பஞ்ச சபைகளுள் இத்தலம் வெள்ளிச்சபை எனப் போற்றப்படுகிறது. வரகுண பாண்டியனக்காக இறைவன் கால் மாறி ஆடிய அற்புதம் இத்தலத்தில்தான் நிகழ்ந்தது. சங்ககாலப் புகழ்பெற்ற தங்கப்பதி. இறைவியே தடாதகையாக அரசாண்ட தலம். முக்பெருஞ் சக்தி பீடங்களுள் ஒன்று. திருஞானசம்பந்தர் இத்தலத்தில் வந்து தங்கியிருந்து சைவம் பெருக்கிய திருமடாலயம் - மிகப் பழமையான ஆதீனம் (மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம்) தெற்காவணி மூலவீதியில் உள்ளது.

குமரகுருபர சுவாமிகள் இத்தலத்துப் பெருமாட்டியின் (மீனாட்சியம்மை) மீது பிள்ளைத் தமிழ், குறம், கலம்பகம் முதலிய பலவகைப் பிரபந்தங்களைப் பாடியுள்ளார். மாநகராட்சி தகுதியில் உள்ள மக்கட் செறிவு கொண்ட மிகப் பெரிய நகரம் - இங்குக் காமராசர் பல்கலைக் கழகம் உள்ளது. ஊரின் பெயர் - மதுரை. கோயிலின் பெயர் - ஆலவாய். சிவராசதானி, பூலோக கயிலாயம், கடம்பவனம், கூடல், நான்மாடக் கூடல் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.

நாகம் உமிழ்ந்த விஷத்தை இறைவன் அமுதத்தால் மாற்றி மதுரமாக்கினமையால் இத்தலம் மதுரை என்று பெயர் பெற்றதென்பர்.


இறைவன் - சோமசுந்தரக்கடவுள், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர்.


இறைவி - மீனாட்சி, அங்கயற்கண்ணி.


தலமரம் -கடம்பு.


தீர்த்தம் - பொற்றாமரைக்குளம். கோயிலுள் உள்ளது.


ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற பழம்பதி. இத்தலத்தின் சிறப்புக்கள் திருவாசகத்துள் புகழந்தோதப்பட்டுள்ளன.

இக்கோயில் மிகவும் பரப்புடையது - பெரியது, விண்ணிழி விமானம். சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அழகிய கோபுரங்களை நாற்புறமும் பெற்றுள்ள நகரம் தெற்குக் கோபுரமே பிறவற்றினும் உயர்ந்தது. கோயில் நகரின் நடுவே அமைந்துள்ளது. கோயிலை மையமாகக் கொண்டே இத்தலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோயிலுள் அன்னை மீனாட்சிக்கே முதலில் வழிபாடு நடைபெறுகிறதாதலின் அன்பர்கள் பலரும் கீழ விதியிலுள்ள அம்பாள் சந்நிதி வாயில் வழியாகவே ஆலயத்துள் செல்வர்.

மிகப் பெரிய கோபுரம். ஏராளமான சிற்பங்கள். சிற்பக்கலை அழகுடையவை. இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் முதலில் உள்ளது அஷ்டசக்தி மண்டபம். வாயிலில் மீனாட்சி கல்யாணச்சிற்பம் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பெயருக்கேற்ப எட்டு பெருந்தூண்கள் எட்டு சக்திகளின் வடிவங்களை அழகுறப் பெற்றுள்ளன. திருவிளையாடற் புராணக் காட்சிகள் பல இதில் இடம் பெற்றுள்ளன. அடுத்துள்ள நாய்க்கர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள எண்ணற்ற விளக்குகளைக் கொண்ட பித்தளையாலான திருவாசி கண்களைக் கவருகின்றது. அடுத்துள்ள வழியே சென்றால் பொற்றாமரைக் குளத்தை அடையலாம். மிகப்பெரிய குளம் இந்திரன் தன் வழிபாட்டிற்காகப் பொன்மலர் பறித்த குளம் இதுவென்பர். திருக்குறள் நூலை இக்குளத்தில் சங்கப் பலகையில் வைத்துத்தான் சங்கப் புலவர் ஏற்றுக் கொண்டதாக ஒரு வரலாறும் உண்டு. அழகிய படிக்கட்டுக்கள் உள்ள இக்குளத்தின் வடக்குக் கரையில் உள்ள தூண்களில் சங்கப்புலவர்களின் உருவங்கள் உள்ளன. தென்கரை மண்டபத்தில் திருக்குறட்பாக்கள் முழுவதும் சலவைக் கற்களில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன.

பொற்றாமரைக் குளத்தின் மேற்கே ஊஞ்சல் மண்டபம் உள்ளது. அழகான கண்ணாடி அறை. வெள்ளிதோறும் மாலையில் சுவாமி அம்பாள் பொன்னூசல் நடைபெறுகிறது. அடுத்துள்ள கிளிக்கூட்டு மண்டபம் அழகான சிற்பக்கலையழகுடையவை. பாண்டவர்கள், வாலி, சுக்ரீவன், திரௌபதி, புரஷாமிருகம் முதலிய சிற்பங்கள் இங்குள்ளன. மண்டபத்தின் மேற்பகுதியில் தெய்வங்களின் பல்வேறு தோற்றங்களும், மீனாட்சி கல்யாணமும் வண்ணச் சித்திரங்களாக எழுதப்பட்டுள்ளன. அம்பாள் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் திருமலை நாய்க்கர், இருதுணைவியாருடன் உள்ள சுதையாலான சிற்பங்கள் உள்ளன. அரணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்கள் குமரன் சந்நிதியில் செதுக்கப்பட்டுள்ளன. இப்பிரகாரத்தில் உள்ள ஆறுகால பீடத்தில்தான் குமரகுருபர சுவாமிகள் பாடியருளிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் செய்யப்பட்டதென்பர்.

மகாமண்டபத்தில் ஐராவதவிநாயகர் சந்நிதியும் முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. அம்பாள் - மீனாட்சி கையில் கிளியுடன் செண்டு ஏந்தி நின்ற திருக்கோலத்தில் நமக்கு அருட்காட்சி வழங்கும் அற்புதம் அநுபவித்தோர்க்கே அருமை தெரியும். திங்கள்தோறும் அம்பிகைக்குத் தங்கக்கவசம், வைரக்கிரீடம் சார்த்தப்படுகிற, அம்பாளை வணங்கிய பின், கிளிக்கூட்டு மண்டபம் வழியாக வந்து கோபுரவாயிலை கடந்து சுவாமி சந்நிதிக்குப் போகும் நமக்கு எதிரில் முக்குறுணி விநாயகர் தரிசனம் கிடைக்கின்றது. எட்டு அடி உயரமுள்ள மிகப்பெரிய திருமேனி. பிராகாரத்தில் சங்கப்புலவர், சம்பந்தர் சந்நிதிகள் உள்ளன.

சுவாமி சந்நதிக்கு எதிரில் உள்ள கம்பத்தடி மண்டபம் சிற்பக்கலையின் கருவூலம் எனலாம். மண்டபத்தின் நடுவில் தங்கக் கொடி மரமும் நந்தியும் பலிபீடமும் உள்ளன. சுற்றிலும் உள்ள எட்டுத் தூண்களிலும் அற்புதமான சிலைகள் உள்ளன. சங்கரநாராயணர், சோமாஸ்கந்தர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற தோற்றங்களும் திருமாலின் தசாவதாரக் காட்சிகளும் அற்புதமானவை. இவற்றுக்கு முத்தாய்ப்பு அமைந்துள்ளது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணச் சிற்பமாகும். இச்சிற்ப அழகை எங்ஙனம் வருணிப்பது? அவ்வளவு தத்ரூபமான அமைப்பு. கம்பத்தடி மண்டபத்திற்குப் பக்கத்தில் இரு பெரிய தூண்களில் வடிக்கப்பட்டுள்ள 1) அக்கினி வீரபத்திரர் 2) அகோர வீரபத்திரர் சிலாரூபங்களும், அடுத்துள்ள தூண்களிலுள்ள 1) ஊர்த்துவதாண்டவர் 2) காளியின் சிலாரூபங்களும் கொள்ளையழகுடையன.

சுவாமி சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் இரு பெரிய துவார பாலகர்கள் கம்பீரமாகக் காட்சி தருகின்றனர். உள் நுழைந்ததும் பிராகாரத்தில் திருவிளையாடற்புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட ஆறுகால் பீடம் உள்ளது. அறுபத்துமூவர் தரிசனம், கலைமகள் சந்நிதி உள்ளது. காசிவிசுவநாதர், பிட்சாடனர், சித்தர், துர்க்கைச் சந்நிதிகளும் உள்ளன. கடம்பமரம் - தலமரம், வெள்ளிக் கவசமிட்டுப் பாதுகாக்கப்பட்டு கனகசபையும், யாகசாலையும், சாட்சி சொல்லிய வன்னி கிணறும் அடுத்தடுத்து உள்ளன.

வெள்ளியம்பலம், கால்மாறி ஆடிய அம்பலக் கூத்தனின் அற்புத நடன அழகு. தரிசித்து உள்ளே சென்று சோமசுந்தரப் பெருமானைக் காண்கின்றோம். தரிசித்து உள்ளே சென்று சோமசுந்தரப் பெருமானைக் காண்கின்றோம். சுவாமியின் கருவறை - இந்திர விமானம், விண்ணிழி விமானம் என்றழைக்கப்படுகிறது. அஷ்டதிக்கு யானைகளும் முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கும் அமைப்பில் இவ்விமானம் அமைக்கப்பட்டுள்ளது.

மூலவர் - சிவலிங்கத் திருமேனி. ஆலவாய் அழகன் - அழகு மிளிரக் காட்சி தருகிறார். சிறிய திருமேனி. இம்மூர்த்தி தொடர்பான ஒரு செய்தி -

A.H. 1330ல் முகமதிய படையெடுப்பு நடைபெற்றபோது மன்னனாக இருந்த பராக்கிரமபாண்டியன் காளையார் கோயில் சென்று விட்டார். கோயில் ஸ்தானிகர் சிவலிங்கத்தை மூடி, கிளிக்கூடு வைத்து மணலைப்பரப்பி, கருவறைவாயிலையும் கல்லினால் அடைத்து, முன்புள்ள அர்த்தமண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை வைத்து விட்டனர். படையெடுத்து வந்த முகமதிய மன்னன் முன்னால் இருந்த சிவலிங்கத்தை நிஜமானதென்றெண்ணித் தாக்கிச் சிதைத்தான். படையெடுப்பு முடிந்து 48 ஆண்டுகள் கழித்து கம்பண்ணர் படையெடுத்து வந்த முகமதியரை வென்று, கோயில் வந்து ஸ்தானிகருடன் தோண்டிப் பார்க்க, சுவாமி மேற்பூசிய சந்தனம் மணம் மாறாமல், பக்கத்தில் ஏற்றிவைத்த 2 வெள்ளி விளக்குகளும் சுடர் சரிந்து கொண்டிருந்தனவாம், அன்றிருந்து சுவாமிக்கு இன்றுவரை முறையாகப் பூஜைகள் நடைபெறுகின்றனவாம்.

இக்கோயிலில் உள்ள ஆயிரக்கால் மண்டபம் மிகவும் பெரியது. மண்டப வாயிலின் மேற்புறத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் வரையப்பட்டுள்ளது. இங்குள்ள பிட்சாடனர் குறவன் குறத்தி முதலிய 'சிற்ப அழகு மிக்க சிலைகள் காணத் தெவிட்டாத கலைச்சுவையுடையன. மண்டபத்தில் எங்கு நின்று நோக்கினாலும் இத்தூண்கள் அனைத்தும் ஓர் ஒழுங்கான வரிசையில் இருப்பதைக் கண்டு வியக்கிறோம். இங்கு நிருத்த கணபதி, சரஸ்வதி, அர்ச்சுனன், ரதி, மோகினி, மன்மதன், கலிபுருடன் முதலிய பல சிற்பங்களும் உள்ளன. இங்குள்ள நடராஜரின் சிலை அற்புதமானது. இம்மண்டபத்தில் "கலைக் காட்சியகம்" நடத்தப்பட்டு வருகிறது. தெய்வீகத் திருமேனிகளையும், தொல்பொருள்களையும் இங்குக் கண்டு மகிழலாம்.

ஆயிரக்கால் மண்டபத்திற்குப் பக்கத்தில் மங்கையர்க்கரசி பெயரால் புதிய மண்டபமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூன் பாண்டியன், மங்கையர்க்கரசி, ஞானசம்பந்தர், குலச்சிறையார் ஆகியோருடைய உருவங்கள் உள்ளன. சிவலிங்கத் திருமேனி ஒன்றும் நடுவிலுள்ளது. இதனையட்டி மருதுபாண்டியர் கட்டிய சேர்வைக்காரர் மண்டபமும், அழகிய மரவிதானங் கொண்ட கல்யாண மண்டபமும் உள்ளன.

சுவாமி அம்பாள் புறப்பாடும் நிகழும் iF 'ஆடிவீதி' எனப்படுகிறது. வடக்கு ஆடிவீதியில் பெரிய கோபுரத்தையடுத்து ஐந்து இசைத்தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் 22 சிறு தூண்கள். இவைகளைத் தட்டினால் விதவிதமான இனிய ஓசை எழுகின்றது. இசைத்தூண்களின் அமைப்பும் அழகும் மிகவும் அதிசயமானவை.

கிழக்குக் கோபுரத்திற்கு எதிரில் வசந்த மண்டபம் உள்ளது. இதைப் புதுமண்டபம் என்கின்றனர். திருமலை நாய்க்கர் கட்டியது. இதில் தடாதகைப் பிராட்டி, மீனாட்சி திருமணம், திருமல நாய்க்கர், கல்யானை கரும்பு தின்னுவது, இராவணன் கயிலையைத் தூக்குவது, முதலிய பல சிற்பங்கள் உள்ளன. புதுமண்டபத்தின் எதிரே ராயகோபுரம் முடிவு பெறாத நிலையில் உள்ளது.

மதுரை செல்வோர் அனைவரும் திருமலை நாய்க்கர மகாலைக் கண்டு மகிழவேண்டும். திருமலை நாய்க்கர் தம் தலைநகரை திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றியபோது இதைக் கட்டியதாகத் தெரிகிறது. செங்கல், வெண்சுதைசாந்து ஆகியவற்றைக் கொண்டே (மரம் முதலியவற்றின் தொடர்பின்றிக்) கட்டப்பட்டுள்ள இம்மகால் அழகு வேலைப்பாடுடையது.

மதுரையில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளம் - (வண்டியூர் தெப்பக்குளம்) மிகவும் பெரிய அழகான குளமாகும். இங்குத் தைப்பூசத்தன்று நடைபெறும் தெப்பத் திருவிழா மிகச்சிறப்புடையதாகும். திருமாலிருஞ்சோலை (அழகர் கோயில்) , பழமுதிர்சோலை, திருப்பரங்கூனறம் முதலியவை அண்மையிலுள்ள தரிசிக்கத் தக்க தலங்களாகும் சித்திரைப் பௌர்ணமியன்று அழகர் வைகையாற்றில் வந்து இறங்கும் திருவிழா இத்தலத்துச் சிறப்பானதொரு திருவிழாவாகும். 3600 ஆண்டுகளுக்கு

மேற்பட்ட பழைமையுடைய பதி, இம் மதுரையாகும். ஞானசம்பந்தர் காலத்தில் சுவாமி கோயில் மட்டுமே இருந்ததாகத் தெரிகின்றது.

மதுரையை ஆண்ட சடையவர்மன் குலசேகரபாண்டியன் 12 ஆம் நூற்றாண்டில் மீனாட்சியம்மைக்குத் தனிக்கோயில் எடுப்பித்தான் என்று தெரிகிறது. 13 ஆம் நூள்ளாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கீழ்க்கோபுரத்தைக் கட்டிச் சுற்று மதில்களை அமைத்தான். 14 ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியனால் மேற்குக் கோபுரம் கட்டப் பட்டது. 16ஆம் நூற்றாண்டில் செவ்வந்திச் செட்டியார் தெற்குக் கோபுரத்தைக் கட்டினார். ஆயிரக்கால் மண்டபத்தை அரியநாத முதலியார் அமைத்தார் 17 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலைநாய்க்கர் காலத்தில் புதுமண்டபம், அஷ்டசக்தி மண்டபம் கிளிக்கூட்டு மண்டபம் முதலியன கட்டப்பட்டன. ஆடிவீதிகளில் உள்ள சுற்று மண்டபங்கள் இராணி மங்கம்மாள் அவர்களால் கட்டப்பட்டன.

இவ்வாறு நூற்றாண்டுகள்தோறும் வளர்ச்சி பெற்று 'ஆலவாய்' இன்று முழுமை பெற்றுப் பெருஞ்சிறப்புடன் திகழ்கின்றது. மன்னர்களும் செல்வந்தர்களும் இத்திருக்கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டுச் செய்து வந்துள்ள தொடரில், தமிழவேள் திரு. பி.டி. ராஜன் அவர்கள் தலைமையில் 1960 - 63ல் மேலும் திருப்பணிகள் செய்யப்பட்டு, அனைத்துக் கோபுரங்களும் புதுப்பிக்கப்பட்டன. மங்கையர்க்கரசியார் மண்டபம் புதிதாகக் கட்டப்பட்டது. ஒவ்வொரு தமிழ் மாதம் முதல்நாளில் தங்கரதம் புறப்பாடு நடைபெறுகின்றது. பெருவிழாக்களும் மற்ற மாதாந்திர விழாக்களும் முறையாக நடைபெறுகின்றன.


"மங்கயைர்க்கரசி வளவர்கோன் பாவைவரி வளைக்கைம்மடமானி

பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாடொறும் பரவப்

பொங்கழலுருவன் பூத நாயகன் நால்வேதமும் பொருள்கறும் அருளி

அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாயாவதும்இதுவே".

(சம்பந்தர்)


"நலந்திகழ் வாயின் நூலாற் சருகிலைப் பந்தர் செய்த

சிலந்தியை அரசதாள அருளினாய் என்று திண்ணம்

கலந்துடன் வந்து நின்தாள் கருதி நான் காண்பதாக

அலந்தனன் ஆலவாயில் அப்பனே அருள் செயாயே". (அப்பர்)


"பாலவாய் நிற்கும் பரையோடு வாழ்மதுரை

ஆலவாய்ச் சொக்கழ கானந்தமே"- (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. மீனாடசியம்மை சமேத சோமசுந்தரப் பெருமான் திருக்கோயில்

மதுரை - 625 001.

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்கோடி
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருப்பரங்குன்றம்
Next