திருஏடகம்

திருமுறைத்தலங்கள்

பாண்டிய நாட்டுத் தலம்

திருஏடகம்

வைகையின் கரையிலுள்ளது. திருஞானசம்பந்தர் ஆற்றிலிட்ட ஏடு எதிரேறி கரையடைந்த இடம் இதுவே. "வாழ்க அத்தணர்" என்னும் பதிக ஏட்டை ஞானசம்பந்தர் வைகையில் இட, அது நீரை எதிர்த்துச் செல்ல, பின்பு "வன்னியும்மத்தமும்" என்னும் திருப்பதிகம் பாடியவுடன் அந்த ஏடு ஒதுங்கி நின்ற தலம். (ஏடு -அகம் = ஏடகம்) மதுரையிலிருந்து சோழவந்தான் சாலையில் சென்று இத்தலத்தையடையலாம்.

பிரமன், திருமால், ஆதிசேஷன், கருடன், வியாசர், பராசரர், ஆகியோர் வழிபட்டது.

இறைவன் - ஏடகநாதேஸ்வரர்.


இறைவி - ஏலவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை.


தலமரம் - வில்வம்.


தீர்த்தம் - பிரம தீர்த்தக்குளம்.


சம்பந்தர் பாடல் பெற்றது.

கிழக்கு நோக்கிய கோயில், வண்ண வளைவுள்ளது. அம்மையப்பருக்கு ஐந்து நிலைக் கோபுரங்கள் தனித்தனியே காட்சி தருகின்றன. உள்செல்கிறோம் - காட்சி தருவது, கம்பத்தடி மண்டபம் நடுவிலுள்ள பலிபீடம், ஓங்கிய துவஜஸ்தம்பம், நுழைவு வாயிலில் இடப்பால் விநாயகரையும், முருகப் பெருமானையும் கண்டு தொழுகின்றோம். துவாரபாலகர் தரிசனம், மூலவர் ஏடகநாதர், சிவலிங்கத் திருமேனி. வேலைப்பாடுகள் மிக்க கருவறை. பிராகாரத்தில் அறுபத்து மூவர் சந்நிதிகள். பாலகணபதி, தட்சிணாமூர்த்தியைத் தொழுது வணங்க உள்ளம் சாந்தியுறும். ஏடகநாதர், ஏலவார்குழலி ஆறுமுக சுவாமி, கணபதி, சோமாஸ்கந்தர், ஞானசம்பந்தர் உற்சவத் திருமேனிகள் உள்ளன.

இலிங்கோற்பவர், பஞ்சலிங்கங்கள் தரிசனம். ஆறுமுகப் பெருமானைத் தரிசித்துக் கிழக்கில் திரும்பினால் சப்தமாதர்கள், இரட்டை விநாயகர் சுப்பிரமணியர், நாகலட்சுமி, துர்க்கை, சக்தி விநாயகர், சண்டேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.

ஆடல் வல்ல பெருமானாகிய நடராஜர் சந்நிதியில் திருவேடகத் திருப்பதிகம் சலவைக் கற்களில் எழுதப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளது. நவக்கிரகங்கள், வல்லப கணபதி, சாஸ்தா, சந்திரன், கார்த்திகை ஆகியோர் சந்நிதிகள் உள.

அம்பாள் கோயில் தனியே உள்ளது. தலைவாயிலில் உள்ள 'மணி' மலாயாவிலிருந்து வரவழைக்கப்பட்டதாகும். சண்டிகேஸ்வரி சந்நிதியும், பள்ளியறை தரிசனமும் முடித்துத் திரும்பும்போது ஒருவித மனநிறைவு. பள்ளியறையில் கண்ணாடி வாசலில் அம்மையப்பரைக் காண்பதே தனியழகு. இத்தலத்து உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் நீராடி, இறைவனை வழிபடின் 'சித்தப்பிரமை' நீங்குவது இத்தலத்தின் தனிப் பெருமையாகும். அம்பாள் கோயிலில் கற்றூணில் ஞான சம்பந்தரின் அழகான சிற்பம் சின்முத்திரையுடன், தலைமாலையுடன் (கைத்தாளமின்றி) காட்சி தருகின்றது. நாடொறும் பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன.

ஏடு எதிரேறிய விழா ஆவணி முதல் நாளில் நடைபெறுகிறது. கந்த சஷ்டி, நவராத்திரி, ஆடிப்பூரம், மாசிமகக் கடலாட்டு, சிவராத்திரி, பங்குனி உத்திரம் முதலிய உற்சவங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகைச் சோமவார 108 சங்காபிஷேகம் சிறப்பானது. தலபுராணம் உள்ளது. கல்வெட்டில் இத்தலம் "பாகனூர்க் கொற்றத்து திருவேடகம்" என்று, இறைவன் பெயர் திருவேடகம் உடைய நாயனார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.


"ஏலமார் தருகுழல் ஏழையோ டெழில் பெறும்

கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடம்

சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகம்

சீலமார் ஏடகஞ் சேர் தலாஞ் செல்வமே." (சம்பந்தர்)


-"வானவர்கோன்

தேமேடகத்த னொடுசீதரனும் வாழ்த்துஞ்சீர்

ஆமே டகத்தறி வானந்தமே." (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. எடகநாதேஸ்வரர் திருக்கோயில்

திருவேடகம் - அஞ்சல் - 624 234.

மதுரை மாவட்டம்.


 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருப்பரங்குன்றம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  கொடுங்குன்றம்
Next