Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஸ்ரீவாஞ்சியம் - திருவாஞ்சியம்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

ஸ்ரீவாஞ்சியம் - திருவாஞ்சியம்

1. நன்னிலம் - குடவாசல் பேருந்துச் சாலையில் இத்தலம் உள்ளது.

2. நன்னிலம் - கும்பகோணம் பேருந்தில் செல்வோர் அச்சுத மங்கலத்தில் இறங்கித் திருவாரூர் பாதையில் 1 A.e. சென்றால் இத் தலத்தையடையலாம்.

3. தனிப்பேருந்தில் செல்வோர் கும்பகோணம் - மன்னார்குடிப் பாதையில் சென்று, குடவாசல் கைகாட்டி காட்டும்பக்கம் திரும்பி, திருவாரூர்ப் பாதையில் சென்று, நாச்சியார் கோயிலை தாண்டிப் பிரிகின்ற நன்னலிம் பாதையில் சென்று அச்சுதமங்கலத்தையடைந்து, குடவாசல் திரவாரூர்ப் பாதையில் திரும்பிச் சென்றால்

ஸ்ரீ வாஞ்சியத்தை அடையலாம்.

காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு காவிரித் தலங்களுள் இது ஒன்றாகும். மற்றவை - 1. திருவையாறு 2. வேதாரண்யம் 3. மயிலாடுதுறை 4. திருவிடைமருதூர் 5. திருவெண்காடு. திருமால் சிவபெருமானை வழிபட்டு, இலக்குமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்ற தலம். (திருவை வாஞ்சித்த தலம் - திருவாஞ்சியம்) எமன் வழிபட்ட தலம். இங்கு எமனுக்குத் தனிக்கோயிலுள்ளது.

இத்தலத்தில் இறப்பவர்க்கு எமவாதனையில்லை. கோயிலுள் எம வாகனமும் உள்ளது. வாங்சியப்பதி, சந்தனவனம், ஜாந்தாரண்யம், பூகைலாசம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். பிரமன், இந்திரன், பராசரர், அத்ரி முதலியோர் வழிபட்ட தலம். இங்குள்ள குப்தகங்கைத் தீர்த்தம் மிகவும் புனிதமானது. கார்த்திகை ஞாயிறு நீராடல் இங்குச் சிறப்பாகும். பின்வரும் தலபுராணப் பாடல் இக்கருத்தையுணர்த்தும் -

"மெய்தரு கயநோய் குட்டம் விளைத்தமுற் கொடிய சாபம்

பெய்துறல் செய்யும் வன்கண் பிரமராக்கதம் வேதாளம்

எய்திடின் அன்னதீர்த்தம் இழிந்ததில் படியத்தீரும்

செய்திரும்கடத்தின் ஏற்றுத் தெளிக்கினும் தீருமன்றே".

இறைவன் - வாஞ்சிநாதேஸ்வரர், வாஞ்சிலிங்கேஸ்வரர்.

இறைவி - மங்களநாயகி, வாழவந்தநாயகி.

தலமரம் - சந்தனம்.

தீர்த்தம் - குப்தகங்கை, எமதீர்த்தம்.

மூவர் பாடல் பெற்றது.

(1. ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையிலிருந்து புறப்பட்டு இத்தலத்திற்கு வந்து பெருமானை வணங்கினர். 2. சுந்தரர், நன்னலித்துப் பெருங்கோயிலைப் பணிந்து, திருவீழிமிழலை வணங்கி இத்தலத்திற்கு வந்து தொழுதார்) .

திருவாசகத்திலும் அருணகிரிநாதர் வாக்கிலும் இத்தலம் இடம் பெறுகின்றது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும் இடப்பால் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது. எமன் நான்கு கரங்களுடன் (பாசம், கதை, சூலமேந்தி) இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றான். அவன் பக்கத்தில் KS ஒருவருடைய உருவச்சிலை உள்ளது. இன்னாரென்ற தெரியவில்லை ஒருவேளை எமனிடம் உபதேசம் பெற்ற நசிகேதன் போன்றிருக்கலாமோ? அவனோ சிறியவன். இவ்வடிவமோ தாடியுடன் ஒரு கையில்

கதையையூன்றி, ஒரு கையை உயர்த்தி, ஒரு கையைத் தொங்கவிட்டுக் கொண்டு நின்ற நிலையில் காட்சி தருகிறது. தரிசித்துக் கொண்டு முன்மண்டபத்தில் நுழைந்தால் விநாயகர், சுப்பிரிமணியர் சந்நிதிகள். உள்வாயிலைத் தாண்டியதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது.

கவசமிட்ட கொடிமரம் - பலிபீடம் நந்தி உள்ளன. வெளிப்பிராகாரத்தில் ஏதுமில்லை. அடுத்து 'நட்டுவன் பிள்ளையார் சந்நிதி'. தலப்பதிகம் சலவைக்கல்லி பொறிக்கப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளது. இடப்பால் அதிகார நந்தி உள்ளார். மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. மூலவர் - சிவலிங்கத் திருமேனி - சுயம்பு - சற்று தடித்த உயர்ந்த பாணம். தீபஒளியில் வணங்கும்போது மனம் நிறைவு பெறுகிறது. உள் சுற்றில் வெண்ணெய்ப் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியர், பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகிய சந்நிதிகள் உள்ளன. அதையடுத்துக் காசிக்குச் சமமான தலங்களுக்குரிய சிவலிங்கச் சந்நிதிகள் அகோரேஸ்வரர், பஞ்சநாதேஸ்வரர், மயூரநாதேஸ்வரர், மகாலிங்கேசர் - முதலான பெயர்களில் உள்ளன.

இங்குள்ள துர்க்கை சந்நிதி விசேஷமானது. நடராசசபையிலுள்ள நடராஜ மூர்த்தம் மிகச்சிறப்பாக, உரிய லட்சணங்களுடன் அமைந்துள்ளன தரிசிக்கத்தக்கது. அடுத்து யோகபைரவர், சூரியன், சந்திரன், ராகு முதலிய மூலத்திருமேனிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள நந்திதேவர் 'கருவறுத்த தேவர்' என்றழைக்கப்படுகிறார். தலபுராணம் -

ஸ்ரீவாஞ்சிநாத பிரபாவம் - சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் உள்ளது. நாடொறும் ஆறு காலபூஜைகள், காமிக ஆகம அடிப்படையில் நடைபெறுகின்றன. அர்த்த சாம தேசாந்திரி கட்டளை (இருவருக்கு) உள்ளது.

ஆடிப்பூரம், கார்த்திகை ஞாயிறு நாள்கள், மாசிமகப்பெருவிழா முதலிய விழாக்கள் சிறப்பானவை. எமன், உலக உயிர்களைக் கொல்லும் பாவம் தீர, இங்கு இறைவனை வழிபட்டு இறைவனக்கு வாகனமாகும் தன்மையைப் பெற்றான் ஆதலின், எமனுக்குக் காட்சி தரும் ஐதீகவிழா மாசிமகப்பெருவிழாவில் இரண்டாம் நாள் விழாவாக நடைபெறுகிறது. அன்று சுவாமி எமவாகனத்தில் புறப்பாடாகி எம தீர்த்தத்தில் தீர்த்தவாரி.

ஊரில் வழங்கும் செவிவழிச் செய்திகள் வருமாறு-

(1) இவ்வூர் பெரிய ஊராக இருந்தது. கமலமுனி என்னும் சித்தர் இவ்வூருக்கு வந்தபோது அவர் பெருமையறியாது சிறுவர்கள் அவரை இகழ்ந்ததால், அவர் சாபம் தர அதனால் இவ்வூர் சிறிய கிராமமாகி விட்டது.

(2) சிறுவர்கள் வண்ணார், குலாலர், ஆயர் மரபைச் சேர்ந்தவர்களாகயிருந்தமையால் இன்றும் ஷ பிரிவினர் தத்தம் குலத் தொழிலைச் செய்துகொண்டு இங்கு வாழ்வதில்ல. இம் மரபைச் சேர்ந்தவர்கள் பிறதொழில்களைச் செய்வோராய் வாழ்கின்றனர். ஆனால் தங்கள் மரபுத் தொழிலைச் செய்ய முற்படும்போது அதற்குத் தடங்கள் வந்து விடுகிறது.

பிற்காலச் சோழர்கள், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த இத்தலக்கல்வெட்டில் இவ்வூர் "குலோத்துங்க சோழவள நாட்டுப் பனையூர் நாட்டுத் திருவாஞ்சியம்" என்று

குறிக்கப்படகிறது. இவ்வூருக்கு 'ராஜகம்பீர சதுர்வேதி மங்கலம்' என்ற பெயர்

உண்டு என்பதும், கல்வெட்டகள் மூலம் நிலதானம், வரிவிலக்கு முதலிய செய்திகளும் தெரியவருகின்றன.

"வன்னி கொன்றை மதமத்தமெருக் கொடு கூவிளம்

பொன்னயன்ற சடையிற் பொலிவித்த புராணனார்

தென்னவென்று வரி வண்டிசைசெய் திருவாஞ்சியம்

என்னையாளுடை யானிடமாகவுகந்ததே". (சம்பந்தர்)

"நீறுபூசி நிமிர்சடை மேற்பிறை

ஆறுசூடும் அடிகள் உறைபதி

மாறுதானொருங்கும் வயல் வாஞ்சியம்

தேறிவாழ்பவர்க்குச் செல்வமாகுமே" (அப்பர்)

"பொருவானார் புரிநூலர் புணர்முலையுமையவளோடு"

மருவனார் மருவார்பால் வருவதுமில்லை நம்மடிகள்

நிருவனார் பணிந்தேத்துந் திகழ்திரு வாங்சியத் துறையும்

ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலியவொட்டாரே" (சுந்தரர்)

"திருவாஞ்யித்தில் சீர்பெறஇருந்து

மருவார் குழலியடு மகிழ்ந்த வண்ணமும்". (திருவாசகம்)

"-ஆங்கனந்

தாஞ்சியத்தை வேங்கைத் தலையாற் றடுக்கின்ற

வாஞ்சியத்தின் மேவு மறையோனே". (அருட்பா)

அஞ்சல் முகவரி-

அருள்மிகு. வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில்

ஸ்ரீ வாஞ்சியம் - அஞ்சல் - 610 110

நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.
Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்கலயநல்லூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  நன்னிலம்
Next