நன்னிலம்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

நன்னிலம்

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்துகள் நன்னிலம் வழியாகவும் செல்கின்றன. நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் போகும் பாதையில் அரசு மருத்துவமனை எதிரில் செல்லும் வழியில் சென்றால் கோயிலை அடையலாம்.

நன்னிலம் - ஊர். பெருங்கோயில் - கோயில். இத்தலத்திற்கு வேறு பெயர்கள் (1) மதுவனம் (2) தேவாரண்யம் (3) சுந்தரவனம் (4) பிருகத்புரம் என்பன.

சூரியன், அகத்தியர் வழிபட்ட சிறப்புடையது. கோச்செங்கட் சோழனின் மாடக்கோயில். தேவாரத்தில் 'நன்னிலத்துப் பெருங்கோயில்' என்று குறிக்கப் படுகின்றது. விருத்திராசுரனின் துன்பம் தாளாமல் தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து வழிபட்டதலம் ஆதலின் மதுவனம் என்று பெயர் பெற்றது.

இறைவன் - மதுவனேஸ்வரர், பிரகாசநாதர், தேவாரண்யேசுவரர்.

இறைவி - மதுவனேஸ்வரி, தேவகாந்தார நாயகி.

தலமரம் - வில்வம், கோங்கு, வேங்கை, மாதவி, சண்பம், தற்போது வில்வம் மட்டுமே உள்ளது.

தீர்த்தம் - பிரமதீர்த்தம், சூலதீர்த்தம்.

சுந்தரர் பாடல் பெற்றது.

முகப்பு வாயிலுள் புகுந்தால் வலப்பால் அமபாள் சந்நிதியுள்ளது. நேர் எதிரில் பிரமன் வழிபட்ட மகாதேவலிங்கம் உள்ளது. பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் உள்ளார். வலமாக வந்தால் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சந்நிதிகளைக் தரிசிக்கலாம்.

வலமுடித்துப் படிகளேறி மேலே செல்லவேண்டும். சுவாமி மலை மேல் உள்ளார். மேலேயுள்ள பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி அழகாகவுள்ளது. மூலவர் மதுவனேஸ்வரர் - சதுரபீடம். சற்றுயர்ந்த பாணம். விசேஷகாலங்களில் குவளை, நாகாபரணம் சார்த்தப்படுகின்றது. கோஷ்மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர்.

நாடொறும் நான்கு காலவழிபாடுகள். வைகாசி விசாகத்தில் பெருவிழா முன்பு நடந்துவந்தது. தற்போது ஒருநாள் உற்சவமே நடைபெறுகிறது. சஷ்டி உற்சவம் முடிந்து கார்த்திகையில் ஒரு நாளில் வள்ளி கல்யாண உற்சவம் இத்தலத்தில் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. கோயிலின் வெளிமதிற்சுவர் கிலமாகிவுள்ளது - சில விடங்களில் சரிந்துமுள்ளது. உற்சவமூர்த்தங்கள் பாதுகாப்பாக வேறு கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. 15.9.1996ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.


"கருவரை போலரக்கன் கயிலைம் மலைக் கீர்க்கதற

ஒருவிரலால் அடர்த்தி இன்னருள் செய்த உமாபதிதான்

திரைபொரு பொன்னி நன்னீர்த் துறைவன் திகழ் செம்பியர் கோன்

நரபதி நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே."

(சுந்தரர்)

-"ஆஞ்சியிலா (து)

இந்நலித்தும் வானாதி எந்நிலத்தும் ஒங்குபெரு

நன்னிலத்து வாழ் ஞானநாடகனே." (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. மதுவனேஸ்வரர் திருக்கோயில்

நன்னிலம் - அஞ்சல்

நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம் - 610 105

 





Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is ஸ்ரீவாஞ்சியம் - திருவாஞ்சியம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருப்பனையூர்
Next