Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருக்கலயநல்லூர்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருக்கலயநல்லூர்

சாக்கோட்டை

மக்கள் வழக்கில் சாக்கோட்டை என்ற பெயரில் வழங்குகிறது. கும்பகோணம் - மன்னார்குடி பேருந்துச் சாலையில் உள்ள தலம். கும்பகோணத்திலிருந்து 5 A.e. கோயில் அருகிலேயே சாலை செல்கிறது.

மக்கள் இக்கோயிலை "கோட்டைச் சிவன்கோயில்" என்று சொல்கின்றனர். ஒரு காலத்தில் கோயிலைச் சுற்றிக் கோட்டை இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இன்று அதன் இடிபாடுகளே மேடாகக் காணப்படுகின்றன. கோயிலுக்கு வெளியிலும் உள்ளுமாக இரு அகழிகள் உள்ளன. இதனால் பண்டைநாளில் இது சோழ மன்னர்களின் முக்கிய இடமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இன்று இங்குக் கோயிலும் ஒருசில வீடுகளுமே உள்ளன. ஞானசம்பந்தர் தம் பதிகத்தில் இப்பகுதியில் சாக்கியர் (பௌத்தர்) வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளதால் 'சாக்கியர் கோட்டை' என்று பெயர் வழங்கி அதுவே பின்பு சாக்கோட்டையாக மாறி

வழங்குகின்றது என்பர். ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாகத் தலவரலாறு சொல்லப்படுகிறது.

இறைவன் - அமிர்தகலசநாதர், அமிர்தகலேஸ்வரர்.

இறைவி - அமிர்தவல்லி.

தலமரம் - வன்னி, (இன்று இல்லை) .

சுந்தரர் பாடல் பெற்றது.

கிழக்கு நோக்கிய சந்நிதி, முன்புறம் மதிலும் வாயிலும் உள்ளன. அடுத்து மூன்றுநிலை கோபுரம். நாய்க்கர் காலச் செங்கல் மண்டபம் உள்ளது. இதன் வடபால் அம்பாள் சிறிய தண்டபாணியும் தென்பால் நர்த்தன விநாயகரும் உள்ளனர். முன் மண்டபத்தில் நந்தி பலிபீடம் உள்ளது. ஒரே கல்லில் புடைச்சிற்பமாகவுள்ள சப்தமாதர் சிற்பங்கள் தரிசிக்கத்தக்கன.

இங்குள்ள (1) தட்சிணாமூர்த்தி - புதிய திருமேனி அதிசயமான அமைப்புடையது. இத்திருமேனி வலது மேற்கையில் ருத்ராட்ச மாலையும் இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும், தலைமுடி சூரியபிரபை போலவும் அமைப்புடையதாகி விளங்குகிறது.

(2) லிங்கோற்பவர் - பச்சைக்கல்லால் ஆனது. மான் மழுவேந்தி, அபயகரமாகவும் கடிஹஸ்தலமாகவும் உள்ளது. பாதத்தில் திருமால் மகுடமணிந்த வராகமாகவும் மேலே அன்னமும் பக்கத்தில் திருமாலும் பிரமனம் (சுமார் 2' உயரத்தில்) வணங்கி நிற்கின்றனர்.

(3) அர்த்தநாரி வடிவம் (4 அடி உயரம் புடைப்புச்சிற்பம்) இடக்காலூன்றி, வலக்காலை ஒய்வாக நிறுத்தி, விடைமேற் சாய்ந்து வலதுமேற்கையில் மழுவும் இடதுமேற்கையில் தாமரையும் கொண்டு, வலக்கையை காளதைலை மீது வைத்தும், இடக்கையைத் தொடையில் ஊன்றியும் (காளை பின்னால் நிற்க) காட்சி தருகின்றார்.

(4) தபஸ்வியம்மன் (புடைப்புச்சிற்பம்) மிகவும் அழகானது. வலக்கால் தரையில் ஊன்றி, இடக்காலை வலது தொடையில் பொருந்த மடக்கி மேல்நோக்கிய நின்றநிலையில் வைத்து, வலக்கரம் உச்சிமீது உள்ளங்கை கவித்துவைத்து, இடக்கரம் வயிற்றின்கீழ் அங்கைமேல் நோக்கி வைத்துத் தவம் செய்கின்ற கோலத்தில் அமைந்துள்ளது அழகாவுள்ளது.

இக்கோயில் இராஜஇராஜனுக்கு முன்பே கற்கோயிலாகக் கட்டப்பட்டது. எனினும் 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றாங் குலோத்துங்க மன்னனாலும்,

புதுப்பிக்கபட்டுள்ளதாக அறிகின்றோம். கீழ்ப்பால் உள்ள மண்டபத்தில் ஒரு தூணில் உள்ள மனித வடிவம் மூன்றாம் குலோத்துங்கனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

(கோயில் குருக்கள் வீடு சிவுரபத்தில் உள்ளது. எனவே முன்கூட்டியே கடிதம் எழுதித் தெரிவித்துவிட்டுத் தரிசனத்திற்குச் செல்வது நல்லது.)

"தண்புனலும் வெண்மதியும் தாங்கிய செஞ்சடையன்

தாமரையோன் தலை கலனாக் காமரமுன்பாடி

உண்பலி கொண்டுழல் பரமன் உரையும் ஊர் நிறைநீர்

ஒழுகுபுனல் அரிசிலின் கலய நல்லூரதனை

நண்புடைய நன் சடையன் இசைஞானி சிறுவன்

நாவலர் கோன் ஆரூரன் நாவில் நயந்துறை செய்

பண்பயிலும் பத்துமிவை பத்தி செய்து பாட

வல்லவர்கள் அல்லலொடு பாவம் இலர்தாமே". (சுந்தரர்)

-"மாலுங்கொள்

வெப்புங்கலைய நல்லோர் மென்மதுரச் சொன்மாலை

செப்புங்கலைய நல்லூர்ச்சின்மயனே." (அருட்பா)

அஞ்சல் முகவரி-

அருள்மிகு. அமிர்தகலேஸ்வரர் திருக்கோயில்

சாக்கோட்டை - அஞ்சல் - 612 401

கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is சிவபுரம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  ஸ்ரீவாஞ்சியம் - திருவாஞ்சியம்
Next