Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஏழை ஏதலன்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

ஏழை ஏதலன்

திருவரங்கம் -- 5

குகன், அனுமன், கஜேந்திரன், சுமுகன், கோவிந்தசுவாமி, மார்க்கண்டேயன், ஸாந்தீபினி, வைதிகன், தொண்டை மன்னன் ஆகியோர் தேவரீருடைய திருவருளுக்கு இலக்கானது போல் அடியேனும் ஆகவேண்டும் என்று ஆழ்வார் அரங்கனிடம் வேண்டுகிறார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

குகனைத் தோழமை கொண்டவன் அரங்கன்

1418. ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா

திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து,

'மாழை மான்மட நோக்கியுன் தோழி;

உம்பி எம்பி'என் றொழிந்திலை, உகந்து

'தோழ னீயெனக் கிங்கொழி' என்ற

சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட,

ஆழி வண்ண!நின் அடியிணை யடைந்தேன்

அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே! 1

சாதி வேற்றுமை பாராட்டாதவன் அரங்கன்

1419. வாத மாமகன் மர்க்கடம் விலங்கு

மற்றோர் சாதியென் றொழிந்திலை, உகந்து

காதல் ஆதரம் கடலினும் பெருகச்

செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று

'கோதில் வாய்மையி னாயடு முடனே

உண்பன் நான்' என்ற ஒண்பொருள் எனக்கும்

ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன்

அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே! 2

கஜேந்திரனைக் காப்பாற்றியவன் அரங்கன்

1420. கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை

வைகு தாமரை வாங்கிய வேழம்,

முடியும் வண்ணமோர் முழுவலி முதலை

பற்ற மற்றது நின்சரண் நினைப்ப

கொடிய வாய்விலங் கின்னுயிர் மலங்கக்

கொண்ட சீற்றமொன் றுண்டுள தறிந்து,உன்

அடிய னேனும்வந் தடியிணை யடைந்தேன்

அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே! 3

சுமுகன் என்ற நாககுமாரனைக் காத்தவன்

1421. நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம்

வெருவி வந்துநின் சரணெனச் சரணாய்,

நெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறைப் பறவைக்

கடைக்க லம்கொடுத் தருள்செய்த தறிந்து

வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர்

கொடிய செய்வன வுள,அதற் கடியேன்

அஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன்

அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே! 4

கோவிந்தஸ்வாமி என்ற அந்தணனுக்கு அருள் செய்தவன்

1422. மாக மாநிலம் முழுதும்வந் திறைஞ்சும்

மலர டிகண்ட மாமறை யாளன்,

தோகை மாமயி லன்னவ ரின்பம்

துற்றி லாமையில் 'அத்த!இங் கொழிந்து

போகம் நீயெய்திப் பின்னும்நம் மிடைக்கே

போது வாய்,'என்ற பொன்னருள், எனக்கும்

ஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன்

அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே! 5

மார்க்கண்டேயனைக் காப்பாற்றியவன்

1423. மன்னு நான்மறை மாமுனி பெற்ற

மைந்த னைமதி யாதவெங் கூற்றந்-

தன்னை யஞ்சிநின் சரணெனச் சரணாய்த்

தகவில் காலனை யுகமுனிந் தொழியா

பின்னை யென்றும்நின் திருவடி பிரியா

வண்ண மெண்ணிய பேரருள், எனக்கும்

அன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன்

அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே! 6

சாந்தீபினிக்கு அருள் புரிந்தவன்

1424. ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்

உனக்கு முன்தந்த அந்தண னொருவன்,

'காத லென்மகன் புகலிடங் காணேன்;

கண்டு நீதரு வாயெனக் ª 'கன்று,

கோதில் வாய்மையி னானுனை வேண்டிய

குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்,

ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்

அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே! 7

அரங்கனே! எனக்கும் அருள் செய்

1425. வேத வாய்மொழி யந்தண னொருவன்

'எந்தை நின்சர ணென்னுடை மனைவி,

காதல் மக்களைப் பயத்தலும் காணாள்

கடிய தெய்வங்கொண் டொளிக்கும்,'என் றழைப்ப,

ஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச்

செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய்,

ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்

அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே! 8

தொண்டை மன்னனுக்குத் திருமந்திரம் உபதேசித்தவன்

1426. துளங்கு நீண்முடி அரசர்தம் குரிசில்

தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு,

உளங்கொ ளம்பினோ டின்னருள் சுரந்தங்

கோடு நாழிகை யேழுட னிருப்ப,

வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச்

செய்த வாறடி யேனறிந்து, உலகம்

அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன்

அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே! 9

இவற்றைப் பாடுங்கள்: பாவம் பறந்துவிடும்

1427. மாட மாளிகை சூழ்திரு மங்கை

மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்,

ஆடல் மாவல வன்கலி கன்றி

அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை,

நீடு தொல்புக ழாழிவல் லானை

எந்தை யைநெடு மாலைநி னைந்த,

பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்!

பாட நும்மிடைப் பாவம்நில் லாவே. 10

அடிவரவு: ஏழை வாத கடி நஞ்சு மாக மன்னு ஓது வேத துளங்கு மாட -- கையிலங்கு.


 


  


 


 
 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is பண்டை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கையிலங்கு
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it