Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

பண்டை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

பண்டை

திருவரங்கம்--4

ஈண்டுள்ள பாசுரங்களும் திருவரங்கனின் பெருமைகளைக் கூறுகின்றன.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எல்லாமாய் இருப்பவன் திருவரங்கன்

1408. பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப்

பதங்களும் பதங்களின் பொருளும்,

பிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும்

பெருகிய புனலொடு நிலனும்,

கொண்டல்மா ருதமும் குரைகட லேழும்

ஏழுமா மலைகளும் விசும்பும்,

அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான்

அரங்கமா நகரமர்ந் தானே. 1

உயிர்களுக்கு வாழ்வு அளிப்பவன் திருவரங்கன்

1409. இந்திரன் பிரம னீசனென் றிவர்கள்

எண்ணில்பல் குணங்களே யியற்ற,

தந்தையும் தாயும் மக்களும் மிக்க

சுற்றமும் சுற்றிநின் றகலாப்

பந்தமும், பந்த மறுப்பதோர் மருந்தும்

பான்மையும் பல்லுயிர்க் கெல்லாம்,

அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான்

அரங்கமா நகரமர்ந் தானே. 2

அன்னமாகி அருமறை அளித்தவன் அரங்கன்

1410. மன்னுமா நிலனும் மலைகளும் கடலும்

வானமும் தானவ ருலகும்,

துன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித்

தொல்லைநான் மறைகளும் மறைய,

பின்னும்வா னவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப்

பிறங்கிருள் நிறங்கெட, ஒருநாள்

அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான்

அரங்கமா நகரமர்ந் தானே. 3

அலைகடல் கடைந்தவன் அரங்கன்

1411. மாயிருங் குன்ற மொன்றுமத் தாக

மாசுண மதனொடும் அளவி,

பாயிரும் பௌவம் பகடுவிண் டலறப்

படுதிரை விசும்பிடைப் படர,

சேயிரு விசும்பும் திங்களும் சுடரும்

தேவரும் தாமுடன் திசைப்ப,

ஆயிரந் தோளா லலைகடல் கடைந்தான்

அரங்கமா நகரமர்ந் தானே. 4

நரசிம்மனாகப் தோன்றியவன் அரங்கன்

1412. எங்ஙனே யுய்வர் தானவர் நினைந்தால்?

இரணியன் இலங்குபூ ணகலம்,

பொங்குவெங் குருதி பொன்மலை பிளந்து

பொழிதரு மருவியத் திழிய,

வெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல்

விண்ணுறக் கனல்விழித் தெழுந்தது,

அங்ஙனே யக்க அரியுரு வானான்

அரங்கமா நகரமர்ந் தானே. 5


பாற்கடலில் பள்ளிகொண்டவன் அரங்கன்

1413. ஆயிரம் குன்றம் சென்றுதொக் கனைய

அடல்புரை யெழில்திகழ் திரள்தோள்,

ஆயிரந் துணிய அடல்மழுப் பற்றி

மற்றவன் அகல்விசும் பணைய,

ஆயிரம் பெயரா லமரர்சென் றிறைஞ்ச

அறிதுயி லலைகடல் நடுவே,

ஆயிரம் சுடர்வா யரவணைத் துயின்றான்

அரங்கமா நதரமர்ந் தானே. 6

கடலில் அணை கட்டியவன் அரங்கன்

1414. கரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த

கொடுமையிற் கடுவிசை யரக்கன்,

எரிவிழித் திலங்கு மணிமுடி பொடிசெய்

திலங்கைபாழ் படுப்பதற் கெண்ணி,

வரிசிலை வளைய அடுசரம் துரந்து

மறிகடல் நெறிபட, மலையால்

அரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான்

அரங்கமா நகரமர்ந் தானே. 7

அருச்சுனனுக்கு அருளியவன் அரங்கன்

1415. ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால்

உடையதே ரொருவனாய் உலகில்,

குழிமால் யானைத் துயர்கெடுத் திலங்கை

மலங்கவன் றடுசரந் துரந்து,

பாழியால் மிக்க பார்த்தனுக் கருளிப்

பகலவ னொளிகெட, பகலே

ஆழியா லன்றங் காழியை மறைத்தான்

அரங்கமா நமரமர்ந் தானே. 8

மலையைக் குடையாகப் பிடித்தவன் அரங்கன்

1416. பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால்

பெருநிலம் விழுங்கி,அ துமிழ்ந்த

வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து

மணிமுடி வானவர் தமக்குச்

சேயனாய், அடியேற் கணியனாய் வந்தென்

சிந்தையுள் வெந்துய ரறுக்கும்,

ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான்

அரங்கமா நகரமர்ந் தானே. 9

பழவினைகள் அகலும்

1417. பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்த

பொருதிரை மாநதி புடைசூழ்ந்து,

அன்னமா டுலவும் அலைபுனல் சூழ்ந்த

அரங்கமா நகரமர்ந் தானை,

மன்னுமா மாட மங்கையர் தலைவன்

மானவேல் கலியன்வா யலிகள்,

பன்னிய பனுவல் பாடுவார் நாளும்

பழவினை பற்றறுப் பாரே. 10

அடிவரவு: பண்டை இந்திரன் மன்னு மாயிரு எங்ஙனே ஆயிரம் சுரி ஊழி பேய் பொன் -- ஏழை.


 


  


 


 
 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கைம்மானம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  ஏழை ஏதலன்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it