Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

கையிலங்கு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

கையிலங்கு

திருப்பேர் நகர்

திருப்பேர்நகர் ஒரு திவ்விய தேசம். இதற்கு அப்பக் குடத்தான் சன்னிதி என்று பெயர். கோவிலடி என்றும் இதனைக் கூறுவர். அப்பக்குடத்தானை ஆழ்வார் அங்கனிந்து பாடுகிறார்.

அறுசீர்க் கடிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பரமனைப் பாடி நான் உய்ந்தேன்

1428. கையிலங் காழி சங்கன்

கருமுகில் திருநி றத்தன்,

பொய்யிலன் மெய்யன் தன்தாள்

அடைவரே லடிமை யாக்கும்,

செய்யலர் கமல மோங்கு

செறிபொழில் தென்தி ருப்பேர்

பையர வணையான் நாமம்

பரவிநா னுய்ந்த வாறே! 1

திருமாலைத் துதித்து நான் உய்ந்தேன்

1429. வங்கமார் கடல்க ளேழும்

மலையும்வா னகமும் மற்றும்,

அங்கண்மா ஞால மெல்லாம்

அமுதுசெய் துமிழ்ந்த எந்தை,

திங்கள்மா முகில்அ ணாவு

செறிபொழில் தென்தி ருப்பேர்,

எங்கள்மா லிறைவன் நாமம்

ஏந்திநா னுய்ந்த வாறே! 2

திருப்பேர் நகரை நினைந்து நான் உய்ந்தேன்

1430. ஒருவனை யுந்திப் பூமேல்

ஒங்குவித் தாகந் தன்னால்,

ஒருவனைச் சாபம் நீக்கி

'உம்பராள்', என்று விட்டான்,

பெருவரை மதிள்கள் சூழ்ந்த

பெருநகர் அரவ ணைமேல்,

கருவரை வண்ணன் தென்பேர்

கருநிநா னுய்ந்த வாறே! 3

அப்பக் குடத்தானை வாழ்த்தி நான் உய்ந்தேன்

1431. ஊனமர் தலையன் றேந்தி

உலகெலாம் திரியு மீசன்,

'ஈனமர் சாபம் நீக்காய்,

என்னவொண் புனலை யீந்தான்,

தேனமர் பொழில்கள் சூழ்ந்த

செறிவயல் தென்தி ருப்பேர்,

வானவர் தலைவன் நாமம்

வாழ்த்திநா னுய்ந்த வாறே! 4

நரசிங்கனின் திருவடிகளை அடைந்து உய்ந்தேன்

1432. 'வக்கரன் வாய்முன் கீண்ட

மாயனே!' என்று வானோர்

புக்கு, 'அரண் தந்த ருள்வாய்,'

என்னப்பொன் னாகத் தானை,

நக்கரி யுருவ மாகி

நகங்கிளர்ந் திடந்து கந்த,

சக்கரச் செல்வன் தென்பேர்த்

தலைவன்தா ளடைந்துய்ந் தேனே! 5

திருப்பேர்நகர் சேர்ந்து நான் வாழ்ந்தேன்

1433. விலங்கலால் கடல டைத்து

விளங்கிழை பொருட்டு, வில்லால்

இலங்கைமா நகர்க்கி றைவன்

இருபது புயம்து ணித்தான்,

நலங்கொள்நான் மறைவல் லார்கள்

ஒத்தொலி யேத்தக் கேட்டு

மலங்குபாய் வயல்தி ருப்பேர்

மருவிநான் வாழ்ந்த வாறே! 6

கண்ணனின் பெயரையே சொல்லி உய்ந்தேன்

1434. வெண்ணெய்தா னமுது செய்ய

வெகுண்டுமத் தாய்ச்சி யோச்சி,

கண்ணியார் குறுங்க யிற்றால்

கட்டவெட் டென்றி ருந்தான்,

திண்ணமா மதிள்கள் சூழ்ந்த

தென்திருப் பேருள், வேலை

வண்ணனார் நாமம் நாளும்

வாய்மொழிந் துய்ந்த வாறே! 7

நாள்தோறும் கண்ணனையே துதிப்பேன்

1435. அம்பொனா ருலக மேழும்

அறியஆய்ப் பாடி தன்னுள்,

கொம்பனார் பின்னை கோலம்

கூடுதற் கேறு கொன்றான்,

செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த

தென்திருப் பேருள் மேவும்,

எம்பிரான் நாமம் நாளும்

ஏத்திநா னுய்ந்த வாறே! 8

என் சிந்தையில் வாழ்பவன் திருப்பேரூரான்

1436. நால்வகை வேத மைந்து

வேள்வியா றங்கம் வல்லார்,

மேலைவா னவரின் மிக்க

வேதிய ராதி காலம்,

சேலுகள் வயல்தி ருப்பேர்ச்

செங்கண்மா லோடும் வாழ்வார்,

சீலமா தவத்தர் சிந்தை

யாளியென் சிந்தை யானே. 9

தேவர் உலகு கிடைக்கும்

1437. வண்டறை பொழில்தி ருப்பேர்

வரியர வணையில், பள்ளி

கொண்டுறை கின்ற மாலைக்

கொடிமதிள் மாட மங்கை,

திண்டிறல் தோள்க லியன்

செஞ்சொலால் மொழிந்த மாலை,

கொண்டிவை பாடி யாடக்

கூடுவார் நீள்வி சும்பே. 10

அடிவரவு: கையிலங்கு வங்கம் ஒருவனை ஊன் வக்கரன் விலங்கல் வெண்ணெய் அம்பொன் நால் வண்டு -- தீதறு.
 


  


 


 
 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is ஏழை ஏதலன்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  தீதறு
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it