Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

பேரணிந்து

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

நான்காம் பத்து

பேரணிந்து

திருநாங்கூர்ச் செம்பொன்செய் கோயில்

இது திருநாங்கூர்த் திவ்விய தேசங்களுள் ஒன்று. செம்பொனரங்கர் கோயில் என்று இதனைக் கூறுவார்கள். இக்கோயிலில் இருக்கும் எம்பெருமானுக்குச் செம்பொனரங்கர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள் உள்ளன.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருமாலைச் செம்பொன்செய் கோயிலில் கண்டேன்

1268. பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும்

பேரரு ளாளென் பிரானை,

வாரணி முலையாள் மலர்மக ளோடு

மண்மக ளுமுடன் நிற்ப,

சீரணி மாட நாங்கைநன் னடுவுள்

செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

காரணி மேகம் நின்றதொப் பானைக்

கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே. 1

வானவர்கோன் வாழ்விடம் இக்கோயில்

1269. பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னைப்

பேதியா வின்பவெள் ளத்தை,

இறப்பெதிர் காலக் கழிவுமா னானை

ஏழிசை யின்சுவை தன்னை,

சிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள்

செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக்

கண்டுநான் வாழ்ந்தொழிந் தேனே. 2

கடல்நிற வண்ணனைக் காணலாம் இங்கே

1270. திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும்

செழுநிலத் துயிர்களும் மற்றும்,

படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை,

பங்கயத் தயனவ னனைய,

திடமொழி மறையோர் நாங்கைநன் னடுவுள்

செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன்

கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே. 3

அலைகடல் துயின்றவன் அமரும் கோயில் இது

1271. வசையறு குறளாய் மாவலி வேள்வி

மண்ணள விட்டவன் றன்னை,

அசைவறு மமர ரடியிணை வணங்க

அலைகடல் துயின்றவம் மானை,

திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள்

செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

உயர்மணி மகுடம் சூடிநின் றானைக்

கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே. 4

தசரதன் மகனை இக்கோயிலில் காணலாம்

1272. 'தீமனத் தரக்கர் திறலழித் தவனே!'

என்றுசென் றடைந்தவர் தமக்கு,

தாய்மனத் திரங்கி யருளினைக் கொடுக்கும்

தயரதன் மதலையைச் சயமே,

தேமலர்ப் பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள்

செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

காமனைப் பயந்தான் றன்னைநா னடியேன்

கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே. 5

கடலில் அணைகட்டியவனைக் கண்டேன்

1273. மல்லைமா முந்நீ ரதர்பட மலையால்

அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை,

கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை

கலங்கவோர் வாளிதொட் டானை,

செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள்

செம்பொன்செய் கோயிலி னுள்ளே

அல்லிமா மலராள் தன்னொடு மடியேன்

கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே. 6

கஞ்சனைக் காய்ந்த காளையைக் காணலாம்

1274. வெஞ்சினக் களிறும் வில்லொடு மல்லும்

வெகுண்டிறுத் தடர்த்தவன் றன்னை,

கஞ்சனைக் காய்ந்த காளையம் மானைக்

கருமுகில் திருநிறத் தவனை,

செஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள்

செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

அஞ்சனக் குன்றம் நின்றதொப் பானைக்

கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே. 7

வேங்கடவாணனே இக்கோயிலில் உள்ளான்

1275. அன்றிய வாண் னாயிரம் தோளும்

துணியவன் றாழிதொட் டானை,

மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல்

மேவிய வேதநல் விளக்கை,

தென்திசைத் திலகம் அனையவர் நாங்கைச்

செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை

வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே. 8

அடியவரின் உள்ளத்தில் ஊறும் தேன்

1276. 'களங்கனி வண்ணா! கண்ணனே! என்றன்

கார்முகி லே!' என நினைந்திட்டு,

உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள்

உள்ளத்து ளூறிய தேனை,

தெளிந்தநான் மறையோர் நாங்கைநன்னடுவுள்

செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை

வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே. 9

உலகை ஆண்டு தேவரும் ஆவர்

1277. தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள்

செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

வானவர் கோனைக் கண்டமை சொல்லும்

மங்கையார் வாட்கலி கன்றி,

ஊனமில் பாட லொன்பதோ டொன்றும்

ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள்,

மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு

வானவ ராகுவர் மகிழ்ந்தே. 10

அடிவரவு: பேரணிந்து பிறப்பு திட வசை தீமனத்து மல்லை வெஞ்சின அன்றிய களங்கனி தேனமர் -- மாற்ரசர்.
 


 


 
 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கம்பமா
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  மாற்றரசர்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it