Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

கம்பமா

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

நான்காம் பத்து

கம்பமா

திருவண்புருடோத்தமம்

இந்த சன்னிதியைப் புருஷோத்தமன் சன்னிதி என்று கூறுவர். இங்கே நாற்பெரும் பயன்களையும் வாரிவழங்குகிறவனாய் புருஷோத்தமன் எழுந்தருளியிருக்கிறான். அதனால் இந்தத் திவ்வியதேசம் வண்புருடோத்தமம் ஆயிற்று. கோயிலுக்கு அருகில் திருப்பாற்கடல் என்ற தீர்த்தம் அமைந்துள்ளது. கடலடைத்த பெருமாள் உத்ஸவர் இங்கு எழுந்தருளியிருக்கிறார். இதுவும் திருநாங்கூர்த் திவ்விய தேசங்களுள் ஒன்று.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இராமனின் கோயில் திருவண்புருடோத்தமம்

1258. கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன்

கதிர்முடி யவைபத்தும்

அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு

அளித்தவ னுறைகோயில்

செம்ப லாநிரை செண்பகம் மாதவி

சூதகம் வாழைகள்சூழ்,

வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர்

வண்புரு டோத்தமமே. 1

காளியன்மீது நடனமாடியவன் கோயில் இது

1259. பல்ல வம்திகழ் பூங்கடம் பேறியக்

காளியன் பணவரங்கில்,

ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த

உம்பர்கோ னுறைகோயில்,

நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை

வேள்வியோ டாறங்கம்,

வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர்

வண்புரு டோத்தமமே. 2

ஆநிரை காத்தவன் உறையும் கோயில் இது

1260. அண்ட ரானவர் வானவர் கோனுக்கென்

றமைத்தசோ றதுவெல்லாம்

உண்டு,கோநிரை மேய்த்தவை காத்தவன்

உகந்தினி துறைகோயில்,

கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில்

குலமயில் நடமாட,

வண்டு தானிசை பாடிடு நாங்கூர்

வண்புரு டோத்தமமே. 3

கம்சனைக் கொன்றவன் உறையும் கோயில் இது

1261. பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன்

பாகனைச் சாடிப்புக்கு,

ஒருங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை

உதைத்தவ னுறைகோயில்,

கரும்பி னூடுயர் சாலிகள் விளைதரு

கழனியில் மலிவாவி,

மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர்

வண்புரு டோத்தமமே. 4

வாணாசுரனை வென்றவன் உறைவிடம் இக்கோயில்

1262. சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன்

படையடுங் கிளையோடும்

ஓட, வாணனை யாயிரந் தோள்களும்

துணித்தவ னுறைகோயில்,

ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப்

பகலவ னொளிமறைக்கும்,

மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்

வண்புரு டோத்தமமே. 5

கண்ணன் உறைகோயில் வண்புருடோத்தமம்

1263. அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன்

அலர்கொடு தொழுதேத்த,

கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய

கண்ணன்வந் துறைகோயில்,

கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள்

காட்டவா பதுமங்கள்,

மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர்

வண்புரு டோத்தமமே. 6

இரணியனைக் கொன்றவன் கோயில் இது

1264. உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன

துரம்பிளந் துதிரத்தை

அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய

அப்பன்வந் துறைகோயில்,

இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினொ

டெழில்கொள்பந் தடிப்போர்,கை

வளையில் நின்றொல் மல்கிய நாங்கூர்

வண்புரு டோத்தமமே. 7

மேகவண்ணன் மேவும் கோயில் இது

1265. வாளை யார்தடங் கண்ணுமை பங்கன்வன்

சாபமற் றதுநீங்க

மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம்

முகில்வண்ண னுறைகோயில்

பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வண்

பழம்விழ வெருவிப்போய்

வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர்

வண்புரு டோத்தமமே. 8

நான்முகனைப் படைத்தவன் உறையும் கோயில் இது

1266. இந்து வார்சடை யீசனைப் பயந்தநான்

முகனைத்தன் னெழிலாரும்,

உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன்

உகந்தினி துறைகோயில்,

குந்தி வாழையின் கொழுங்கனி நுகர்ந்துதன்

குருளையைத் தழுவிப்போய்,

மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர்

வண்புரு டோத்தமமே. 9

இவற்றைப் படிப்போர் தேவரோடு கூடுவர்

1267. மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர்

வண்புரு டோத்தமத்துள்,

அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன்

ஆலிமன் அருள்மாரி,

பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப்

பத்தும்வல் லார்,உலகில்

எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ

ரோடும் கூடுவரே. 10

அடிவரவு: கம்பமா பல்லவம் அண்டர் பருங்கை சாடு அங்கை உளைய வாளை இந்து மண் -- பேரணிந்து.
 


 


 
 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is போதலர்ந்த
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  பேரணிந்து
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it