Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

மாற்றரசர்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

நான்காம் பத்து

மாற்றரசர்

திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்

திருத்தெற்றியம்பலம் திருநாங்கூர்த் திவ்விய தேசங்களுள் ஒன்று. இதைப் பள்ளிகொண்ட பெருமாள் சன்னிதி என்றும் கூறுவார்கள். இங்கே பெருமாள் திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொண்டிருக்கிறார். பெருமாள் செங்கண்மால்: தாயார் செங்கமலவல்லி. இவர்களைச் சேவிப்பவர்கள் அரசாளும் வல்லமை பெறுவர்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

செங்கண்மால் திருத்தெற்றியம்பலத்தே யுள்ளார்

1278. மாற்றரசர் மணிமுடியும்

திறலும் தேசும்

மற்றவர்தம் காதலிமார்

குழையும், தந்தை

காற்றளையு முடன்கழல

வந்து தோன்றிக்

கதநாகம் காத்தளித்த

கண்ணர் கண்டீர்,

நூற்றிதர்கொ ளரவிந்தம்

நுழைந்த பள்ளத்

திளங்கமுகின் முதுபாளை

பகுவாய் நண்டின்,

சேற்றளையில் வெண்முத்தம்

சிந்து நாங்கூர்த்

திருத்தெற்றி யம்பலத்தென்

செங்கண் மாலே. 1

பேய்ச்சி பாலுண்டவன் வாழுமிடம் இது

1279. பொற்றொடித்தோள் மடமகள்தன்

வடிவு கொண்ட

பொல்லாத வன்பேய்ச்சி

கொங்கை வாங்கி,

பெற்றெடுத்த தாய்போல

மடுப்ப ஆரும்

பேணாநஞ் சுண்டுகந்த

பிள்ளை கண்டீர்,

நெற்றொடுத்த மலர்நீலம்

நிறைந்த சூழல்

இருஞ்சிறைய வண்டொலியும்

நெடுங்க ணார்தம்,

சிற்றடிமேல் சிலம்பொலியும்

மிழற்று நாங்கூர்த்

திருத்தெற்றி யம்பலத்தென்

செங்கண் மாலே. 2

கண்ணனே திருத்தெற்றியம்பலத்து ஐயன்

1280. படலடைத்த சிறுகுரம்பை

நுழைந்து புக்குப்

பசுவெண்ணெய் பதமாரப்

பண்ணை முற்றும்,

அடலடர்த்த வேற்கண்ணார்

தோக்கை பற்றி

அலந்தலைமை செய்துழலு

மையன் கண்டீர்,

மடலெடுத்த நெடுந்தெங்கின்

பழங்கள் வீழ

மாங்கனிகள் திரட்டுருட்டா

வருநீர்ப் பொன்னி,

திடலெடுத்து மலர்சுமந்தங்

கிழியு நாங்கூர்த்

திருத்தெற்றி யம்பலத்தென்

செங்கண் மாலே. 3

நம்பின்னை மணாளன் வாழ்விடம் இது

1281. வாராரும் முலைமடவான்

பின்னைக் காகி

வளைபருப்பில் கடுஞ்சினத்து

வன்தா ளார்ந்த,

காரார்திண் விடையடர்த்து

வதுவை யாண்ட

கருமுகில்போல் திருநிறத்தென்

கண்ணர் கண்டீர்,

ஏராரும் மலர்ப்பொழில்கள்

தழுவி யெங்கும்

எழில்மதியைக் கால்தொடர

விளங்கு சோதி,

சீராரு மணிமாடம்

திகழும் நாங்கூர்த்

திருத்தெற்றி யம்பலத்தென்

செங்கண் மாலே. 4

செங்கண்மால் வாழ்விடம் இது

1282. கலையிலங்கு மகலல்குல்

கமலப் பாவை

கதிர்முத்த வெண்ணகையாள்

கருங்க ணாய்ச்சி,

முலையிலங்கு மொளிமணிப்பூண்

வடமும் தேய்ப்ப

மூவாத வரைநெடுந்தோள்

மூர்த்தி கண்டீர்,

மலையிலங்கு நிரைச்சந்தி

மாட iF

ஆடவரை மடமொழியார்

முகத்து,இரண்டு

சிலைவிலங்கி மனஞ்சிறைகொண்

டிருக்கும் நாங்கூர்த்

திருத்தெற்றி யம்பலத்தென்

செங்கண் மாலே. 5

இராவணன் தோள்களைத் துணித்தவன் இடம் இது

1283. தான்போலு மென்றெழுந்தான்

தரணி யாளன்

அதுகண்டு தரித்திருப்பா

னரக்கர் தங்கள்,

கோன்போலு மென்றெழுந்தான்

குன்ற மன்ன

இருபதுதோ ளுடன் துணித்த

வொருவன் கண்டீர்,

மான்போலு மென்னொக்கின்

செய்ய வாயார்

மரகதம்போல் மடக்கிளியைக்

கைமேல் கொண்டு,

தேன்போலு மென்மழலை

பயிற்றும் நாங்கூர்த்

திருத்தெற்றி யம்பலத்தென்

செங்கண் மாலே. 6

குறளுருவான பெருமாள் வாழ்விடம் இது

1284. பொங்கிலங்கு புரிநூலும்

தோலும் தாழப்

பொல்லாத குறளுருவாய்ப்

பொருந்தா வாணன்,

மங்கலம்சேர் மறைவேள்வி

யதனுள் புக்கு

மண்ணகலம் குறையிரந்த

மைந்தன் கண்டீர்,

கொங்கலர்ந்த மலர்க்குழலார்

கொங்கை தோய்ந்த

குங்குமத்தின் குழம்பளைந்த

கோலந் தன்னால்,

செங்கலங்கல் வெண்மணல்மேல்

தவழும் நாங்கூர்த்

திருத்தெற்றி யம்பலத்தென்

செங்கண் மாலே. 7

வராகவதாரம் எடுத்தவன் வாழ்விடம் இது

1285. சிலம்பினிடைச் சிறுபரல்போல்

பெரிய மேரு

திருக்குளம்பில் கணகணப்பத்

திருவா காரம்

குலுங்க,நில மடந்தைதனை

யிடந்து புல்கிக்

கோட்டிடைவைத் தருளியவெங்

கோமான் கண்டீர்,

இலங்கியநான் மறையனைத்து

மங்க மாறும்

ஏழிசையும் கேள்விகளு

மெண்டிக் கெங்கும்

சிலம்பியநற் பெருஞ்செல்வம்

திகழும் நாங்கூர்த்

திருத்தெற்றி யம்பலத்தென்

செங்கண் மாலே. 8

உலகங்களைத் தன் வயிற்றில் அடக்கியவன் அமரும் இடம்

1286. ஏழுலகும் தாழ்வரையு

மெங்கு மூடி,

எண்டிசையு மண்டலமும்

மண்டி, அண்டம்

மோழையெழுந் தாழிமிகும்

ஊழி வெள்ளம்

முன்கட்டி லொடுக்கியவெம்

மூர்த்தி கண்டீர்,

ஊழிதொறு மூழிதொறு

முயர்ந்த செல்வத்

தோங்கியநான் மறையனைத்தும்

தாங்கு நாவர்,

சேழுயர்ந்த மணிமாடம்

திகழும் நாங்கூர்த்

திருத்தெற்றி யம்பலத்தென்

செங்கண் மாலே. 9

தேவர்களுள் ஒருவர் ஆவர்

1287. சீரணிந்த மணிமாடம்

திகழும் நாங்கூர்த்

திருத்தெற்றி யம்பலத்தென்

செங்கண் மாலை,

கூரணிந்த வேல்வலவன்

ஆலி நாடன்

கொடிமாட மங்கையர்கோன்

குறைய லாளி,

பாரணிந்த தொல்புகழான்

கலியன் சொன்ன

பாமாலை யிவையைந்து

மைந்தும் வல்லார்,

சீரணிந்த வுலகத்து

மன்ன ராகிச்

சேண்விசும்பில் வானவராய்த்

திகழ்வர் தாமே. 10

அடிவரவு: மாற்றரசர் பொற்றொடி படல் வாரார் கலை தான் பொங்கு சிலம்பின் ஏழுலகும் சீரணிந்த -- தூம்புடை.

 


 


 
 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is பேரணிந்து
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  தூம்புடை
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it