Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

அரைகுறை:கர்வம் முழுமை:விநயம்

அரைகுறை:கர்வம் முழுமை:விநயம்

அரைகுறைப் படிப்பாளிகள்தான் வித்யாகர்வம் கொண்டாடிக் கொள்வது. பூர்ணமாகக் கற்றறிந்தவர்கள் கர்வம் என்னவென்றே தெரியாமல் எளிமையாகவும் பணிவாகவுந்தான் இருப்பார்கள். 'நிறைகுடம் தளும்பாது' பர்த்ருஹரி ச்லோகம் ஒன்று இருக்கிறது.

யதா கிஞ்சித் - ஜ்ஞோ (அ) ஹம் த்விப இவ மதாந்த:ஸமபவம்

ததா ஸர்வஜ்ஞோ (அ) ஸ்மீத்யபவத் - அவலிப்தம் மம மந:

யதா கிஞ்சித்-கிஞ்சித் புதஜந-ஸகாசாதவகதம்

ததா மூர்கோ (அ) veF ஜ்வர இவ மதோ மே வ்யபகத:11

தம்மையே வைத்துச் சொல்லிக் கொள்கிறார். "ஏதோ கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்த காலத்தில் கிஞ்சித் -ஜ்ஞனாக, அதாவது, சிற்றறிவினனாக இருந்த நான் மதம் பிடித்த யானை மாதிரி 'நானே ஸர்வஜ்ஞன்' (அனைத்தறிவினன்) என்று கர்வப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்புறம் நல்ல அறிவாளிகளுடைய ஸத்ஸங்கம் கிடைத்து, கொஞ்சம் கொஞ்சமாக மேலும் மேலும் தெரிந்து கொண்ட பிறகுதான் நான் ஒன்றும் தெரியாத மூர்க்கன் என்ற நல்லறிவு உண்டாச்சு. ஜ்வரமாக என்னைப் பிடித்திருந்த மதமும் - கர்வமும் - போச்சு" என்று சொல்கிறார். ஆசார்யாள் பிரயோகிக்கும் அதே 'மூர்க்க' சப்தம் என்பதைக் கவனிக்கணும்.

அந்த KS 'த்ருப்த'ராக இருந்த ஜ்வரம் போய், வித்யா கர்வம் போனதோடு குல கர்வமும் போய், 'தாம் ப்ராமணன், ராஜா க்ஷத்ரியன்' என்பதையும் பொருட்படுத்தாமல் அஜாதசத்ருவிடம் உபதேசிக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.

"இப்படி வழக்கமே இல்லையே" என்று முதலில் ஸம்ப்ரதாயத்தை மதித்துச் சொன்ன அஜாதசத்ரு அப்புறம் அவருக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து உபதேசம் கொடுக்கிறார், வாய் வார்த்தையாய் மட்டுமில்லாமல் ஒரு நாடகம் மாதிரியே பண்ணிக் காட்டி!

இந்த ரீதீயிலேயே இன்னொரு கதை கூட இருக்கிறது. ப்ரவாஹணர் என்று ராஜரிஷி, அவர்கிட்டே போய் கர்வபங்கப்பட்டுக் கொண்டு ச்வேதகேது அப்பாகிட்டே திரும்பி வந்து குமுறினான் என்று சொன்னேனோல்லியோ, அதைத் தொடர்ந்து அப்பாக்காரர், பிள்ளையாட்டம் (மாதிரி) கோபப்படாமல், 'ராஜாவுக்குத் தெரிந்தது தனக்குத் தெரியவில்லை என்றால் உடனே அவன்கிட்டே ஒடிப்போய் அதைத் தானம் கற்றுக்கொள்வதுதானே செய்யவேண்டியது?' பிராம்மண KS, க்ஷத்ரியனிடம் சிஷ்யனாவதற்கு ரெடியாக இருக்கிறார். பிள்ளையிடம் "ஸரி, நாம அங்கே போய் சிஷ்யாளா இருந்து கத்துப்போம், வா" என்கிறார்.

பிள்ளை, ஸத்வித்யையில் இருந்த ஆர்வத்தினால், தனக்குத் தெரியாத வித்யையைத் தெரிந்தவரிடம் போய்க் கற்றுக் கொள்கிறவன்தான். இருந்தாலும் இள ரத்தமா? அதனால் இங்கே தான் யாரிடம் மானபங்கப்பட்டோமோ அவரிடமே போய்க் கற்றுக் கொள்வதாவது என்கிற ரோஷம் அவனுக்கு

வந்துவிட்டது. அப்பாவிடம், "நீயே போய்க்கோ" என்ற சொல்லி, தான் போகாமல் நின்றுவிடுகிறான்.

அப்பாக்காரர் மானாபிமானம் பார்க்காமல் தான்மட்டும் போகிறார்.

பொதுவாகச் சொல்வது என்னவென்றால், 'வித்யார்த்தி' என்று மாணவனுக்குப் பேர் சொல்வதற்குக் காரணம், வித்யையையே அர்த்தமாக, அதாவது கல்வியையையே செல்வமாக, நினைத்து, அவன் மேலும் மேலும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு அந்தச் சொத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டியவன் என்பதுதான். அதே மாதிரி அவன்தான் 'தர்ப்பம்' என்கிற கர்வகுணம் இல்லாத விநயத்துடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திச் சொல்வது. இதனால் (விநீதன்' என்றே அவனுக்கு ஒரு பெயர் சொல்வது. ஆனால் இங்கேயோ சிஷ்யப் பிராயத்திலுள்ள ச்வேதகேது ஒரு முறைப்பாகவும், அந்த முறைப்பில் வித்யாக்ரஹணத்தில்கூட அலக்ஷ்யமாகவும் இருக்க, குரு ஸ்தானம் வஹிக்கும் அவனுடைய அப்பாதான் 'விநித'ராகவும் 'வித்யார்த்தி'யாகவும் இருக்கிறார்!

ப்ரவாஹணரிடம் உத்தாலக ஆருணி போய் தமக்குத் தெரியாத வித்யையில் உபதேசம் தரும்படிக் கேட்கிறார். பாலாகி விஷயமாக அஜாதசத்ரு (ப்ராம்மணருக்கு க்ஷத்ரியர் உபதேசிக்கலாமா என்று) யோஜித்த மாதிரியே ப்ரவாஹணரும் யோஜிக்கிறார், அவரை இவர் 'ப்ரெஸ்' பண்ணி உபதேசம் பெற்றுக் கொள்கிறார் - என்பதாக ஒரு குருவுக்கே தன்னைக் குறைத்துக் கொண்டாகிலும் தெரியாத வித்யையை ஸ்வீகரிக்கும் விநயம் இருந்ததை உபநிஷத் தெரிவிக்கிறது.

உத்தாலக ஆருணியுடைய இந்த குணச் சிறப்புக்கு சாந்தோக்யமே இன்னொரு எடுத்துக்காட்டும் கொடுக்கிறது. 'மஹாச்ரோத்ரியர்' என்கப்படுகிறது, விசேஷமான வேதக் கல்வியில் தேர்ந்த ஐந்து பேர். அவர்கள் ஆத்ம ஸம்பந்தமாக உத்தாலகரிடம் ஒரு விஷயம் தெரிந்து கொள்ளப் போகிறார்கள். அவர்களைப் பார்த்தவுடனேயே அவர், "இவ்வளவு பெரியவாளுக்கே தெரியாத விஷயம்னா அது நமக்கும் தெரிஞ்சுதான் இருக்காது. அதனாலே, எல்லாம் தெரிஞ்ச ராஜா அச்வபதிகிட்டே அவாளை அழைச்சுண்டு போவோம். தெரியாததை அவா மட்டுமில்லாம நாமும் தெரிஞ்சுப்போம்" என்று எளிமையாக, கபடமில்லாமல் நினைக்கிறார். அப்படியே எல்லாரும் போய், அடக்கத்தோடு, வித்யையிலுள்ள ஆர்வத்தினால் தாங்கள் ப்ராம்மண ச்ரேஷ்டர்களாக இருந்தபோதிலும், க்ஷத்ரியரான அச்வபதியிடம் உபதேசம் கேட்டுக் கொள்கிறார்கள்.

எதற்குச் சொல்லவந்தேன் என்றால்: வழி சொல்லித்தருகிறவர் தாமே முதலில் ஸரியாகத் தெரிந்துகொண்டிருக்கணும். தெரிந்ததாக நினைத்துக்கொண்ட குரு ஸ்தானம் கொண்டாடிக் கொள்கிற ஒருவர், தெரிந்து கொள்ளவில்லை என்று ஏற்படும்போது அதை மனஸார ஒப்புக்கொண்டு அப்புறமாவது குருஸ்தானத்திலிருந்து சிஷ்யஸ்தானத்திற்குக் கூச்சப்படாமல் இறங்கி வந்து தெரிந்து கொள்ளணும். குரு என்கிறவன் எந்நாளும், எவர்கிட்டேயும் (எவரிடமும்) சிஷ்யனாகவும் இருக்கத் தெரிந்துகொள்ளணும்.

வழிகாட்டுகிறவன் முடிந்த மட்டில் எல்லா வழியுமே தெரிந்தவனாகத் தன்னை ஆக்கிக் கொள்ளணும் - ஸதாகால வித்யார்த்தியாக இருக்கணும். அப்படி வழியெல்லாம் வாழ்நாள் பூராவும் தெரிந்து கொண்டு சொல்கிறவனே தேசிகன்.

வழிகண்டவன்தான் வழிகாட்டவும் முடியும் இங்கே, (குருவிஷயத்தில்) கண்டவன் என்பதை, 'தான் சொல்கிற விஷயத்தை அநுபவப் பூர்வமாகக் கண்டு கொண்டவன்' என்று அர்த்தம் பண்ணிக்கணும்.

மேல் நாட்டில் சொல்கிறார்கள், ' preacher பிரயோஜனமில்லை, teacher தான் வேண்டும்' என்று! 'ப்ரீச்சர்' என்றால் பிறத்தியாருக்குப் பிரகடனப்படுத்துகிறவர், அப்படிப் பண்ணுவதையே நோக்கமாகக் கொண்டவர் என்றும், 'டீச்சர்' என்றாலே தம்முடைய வாழ்க்கையிலேயே பாடத்தைப் பின்பற்றியழுகிப் பிறருக்கும் எடுத்துக்காட்டுகிறவர் என்றும் அவர்கள் 'டிஸ்டிங்க்விஷ்' செய்கிறார்கள். 'ப்ரசார' என்ற வார்த்தையை வைத்தே ' preach' ஏற்பட்டது, 'காட்டுவது' என்பதற்கான க்ரீக் வார்த்தையின் அடியாக teach ஏற்பட்டது என்கிறார்கள். 'காட்டுவது' என்றால் 'வழி காட்டுவது'தான், தாமே ப்ரத்யட்ச உதாரணமாக இருந்து 'காட்டுவது'ந்தான் அப்படி இருக்கும்போது குரு வழிகாட்டியாக மாத்திரமில்லாமல் அவரே வழியாகி விடுகிறார், வழி கொண்டு போய் முடிவாய் நிறுத்தும் குறிக்கோளும் ஆகிவிடுகிறார். "Way and the goal " என்று பைபிள் சொல்வது!

'தேசிகன்' விஷயமாக இத்தனையும்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is குருவும் சீடராகும் உயர்பண்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  'புரோஹிதர்'
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it