'புரோஹிதர்'

'புரோஹிதர்'

(குருவுக்கு உள்ள அநேகப் பெயர்களில்) 'புரோஹிதர்' பாக்கியிருக்கிறது. அநேக ஸம்ஸ்க்ருத வார்த்தைகளில் ஸம்யுக்தாட்சரம் என்ற கூட்டெழுத்துக்கள் வரும். உதாரணமாக 'சுக்லாம்பரதரம்' என்பதில் 'க்லா' (என்பது ஒரு மெய்யெழுத்தும் ஒரு உயிர்மெய்யெழுத்தும் ஒன்றாகக் கூடிய எழுத்து. தமிழில் அப்படிப்பட்ட கூட்டெழுத்துகளும், basic ஆகக் கூட்டொலிகளுமே கிடையாது. அதனால் 'சுக்லம்' என்பதைத் தமிழில் 'சுக்கிலம்' என்றுதூன் எழுதுவார்கள். தமிழில் 'க்' முதலிய மெய்யெழுத்துக்கள் அதே வர்க்கத்தை - இந்த உதரணத்தில் 'க' என்பதை - சேர்ந்த உயிர்மெய்யுடன் தான் சேரும். அதனால்தான் 'சுக்கில', 'பச்சை', 'மைத்துன', 'அப்பா', 'அம்மா' என்பது மாதிரியான கூட்டொலிகளே தமிழில் உண்டு. 'க்ருஷ்ணர்' என்று ஆரம்பத்திலேயே மெய்யெழுத்து தமிழில் வராதாகையால்தான் அதைக் 'கிருஷ்ண' என்பது. தமிழ்ப் புலவர்கள் 'ஷ்ண'வும் தமிழில் வராது என்பதால் 'கிருட்டிண' என்றே சொல்வார்கள், எழுதுவார்கள். அதே ரீதியில் 'ப்ரோக்ஷணம்' என்பதைத் தமிழில் 'புரோட்சணம்' என்றே எழுதுவார்கள். 'ட்ச' என்று ஸம்ஸ்க்ருத 'க்ஷ' (க்க்ஷ) வைச் சொல்வதுகூட ஸரியில்லை என்று நினைக்கும் புலவர்கள் 'புரோக்கணம்' என்றே சொல்வார்கள். எதற்கு இந்தப் பேச்சு வந்திருக்கிறது என்றால், 'புரோஹிதர்' என்பதிலும் ஆரம்பம் 'புரோ' தானே? தலைகீழ்ப் பாடமாக இங்கே பல பேர் ஒரு தப்புப் பண்ணுகிறார்கள். என்ன தப்பு என்றால், 'ப்ரோட்சணம்' மாதிரிதான் இதுவும் மூலத்தில் 'ப்ரோஹிதர்' என்ற வார்த்தை என்றும் அதையே தமிழ் வழக்கில் 'புரோகிதர்' ஆகியிருக்கிறது என்றும் நினைக்கிறார்கள். இலக்கணமாக எழுதுவது மாதிரிப் பேச்சு வழக்கில் பண்ணுவதில்லையாகையால், பேசும்போது 'ப்ரோஹித்' என்றே சொல்கிறார்கள். அது தப்பு. மூலமான ஸம்ஸ்க்ருதத்திலேயே அது புரோஹிதர்'தான், 'ப்ரோஹிதர்' இல்லை. 'புரா' என்றால் 'முன்னால்'. 'புராணம்' என்றால் முற்காலத்தில் நடந்தது. 'புரோ-ஹித' என்றால் 'முன்னால் ஹிதம்'. ஒருத்தனுக்கு எது ஹிதமோ அதை முன்கூட்டியே சொல்பவர்தான் புரோஹிதர். 'ஹிதம்' என்றால் நல்லது அது நல்லதாக இருப்பதோடு மாத்திரமில்லாமல் மனஸுக்கு ஸந்தோஷமாகவும் இருக்கும். ஸாதாரணமாக நமக்கு எதெது நல்லதோ அதெல்லாந்தான் மனஸுக்குப் பிடிக்காததாக இருப்பது!அப்படித்தான் உபநிஷத்தே வித்யாஸப்படுத்தி நல்லதை 'ச்ரேயஸ்' என்றும், மனஸுக்குப் பிடித்ததை, ப்ரியமானதை 'ப்ரேயஸ்' என்றும் சொல்கிறது. நல்லதையே மனஸுக்கும் பிடித்த மாதிரியான முறையில் செய்வதும், சொல்வதுந்தான் ஹிதம்.

ஒரு கட்டி - கிழங்கு வந்து ரொம்பக் கஷ்டப் படுத்துகிறது. மேலே ஸரியான சூட்டிலே ஜலம் விட்டால், ஒத்தடம் கொடுத்தால் கஷ்டம் அப்போதைக்காவது, ஓடிப்போகிறது, "எதம்..மா இருக்கு" என்கிறோம். அந்த 'எதம்' என்பது 'ஹிதம்தான். பாபம் நம்மை ஸம்ஸாரத்தில் கட்டிப்போட்டுக் கஷ்டப்படுத்துகிறது. இதுவும் ஒரு 'கட்டி'. பாபம் தீரப் புண்யம் பண்ணவேண்டும். அந்தப் புண்யம் ஸாதாரணமாக நமக்கு எரிச்சல் தரும் மருந்தாகவே இருக்கும். அப்படி இல்லாமல் அதையும் ஸெளக்யம் தரும் ஒத்தடமாக்கிக் கொடுப்பவர்தான் நமக்கு ஹிதம்

செய்கிற, ஹிதமாக இருக்கும் குரு.

ஸத்யம் நல்லது .ஆனால் அது அநேகமாக மனஸுக்குப் பிடிக்காது. "ஸத்யத்தையும் ஹிதமாகச் சொல்லி, பிடிக்கிற மாதிரி பண்ணு, ஸத்யம் ப்ரூயாத், ப்ரியம் ப்ரூயாத்" என்று மநு சொல்கிறார். திருவள்ளுவரும்

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

என்கிறார். 'தீமை இலாத', அதாவது ஹிதமாக!

'ஹிதோபதேசம்' என்று ஒரு புஸ்தகம். 'பஞ்சதந்த்ரக் கதைகள்' என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். cF உபதேசம் என்றால் ஸாதாரணமாக யாருக்குமே அது ரஞ்ஜகமாக இருக்காது. ஆனால் குழந்தைகளுக்குங்கூட நீதிபோதனை பிடிக்கும் படியாகக் கதாரூபத்தில் மிருக -பட்சிகளைக்கூட பாத்திரங்களாக வைத்து பஹ§ ஸ்வாரஸ்யமாக விஷ்ணு சர்மா என்கிறவர் ஒரு புஸ்தகம் எழுதினார். அதற்குப் பேர்தான் 'பஞ்சதந்த்ரம்'. ஐந்து முக்யமான 'டாபிக்'கு களாகப் பிரித்து எழுதியதால் அப்படிப் பேர். அது கிறிஸ்து சகாப்த ஆரம்ப நூற்றாண்டுகளில் எழுதியது என்று வெள்ளைக்காரர்களே சொல்கிறார்கள். அதை base பண்ணி, இன்னமுங்கூட நைஸ் பண்ணி பல நீதிக் கதைகளாகச் சிறு வயசு மாணவர்களும் ஆசையாகப் படிக்கிற விதத்தில் நாராயணர் என்ற வங்காளியர் எண்ணூறு வருஷத்திற்கு முன் எழுதினதுதான் 'ஹிதோபதேசம்'. Middle School என்கிற நடுநிலைப் பள்ளிக்கூட கட்டத்தில் ஸம்ஸ்க்ருத மாணவர்களுக்கு 'ஹிதோபதேச' -த்திலிருந்து பாடங்களும், ஹைஸ்கூல் வகுப்பு மாணவர்களுக்கு மூல 'பஞ்சதந்த்ர'த்திலிருந்து பாடங்களும் வைப்பதாக முன்னெல்லாம் நடந்து வந்தது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is அரைகுறை:கர்வம் முழுமை:விநயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  சுதந்திர இந்தியாவில் கலாசாரக் குழிபறிப்பு
Next