குருவும் சீடராகும் உயர்பண்பு

குருவும் சீடராகும் உயர்பண்பு

தேசிகன் என்றால் அவன் வழிகாட்டியாக வேண்டும். ஒரே லக்ஷ்யத்திற்கு அநேக வழி, கிளை வழி, சுற்றுவழி, குறுக்கு வழி , மெய்ன் ரோட், ஒற்றையடிப் பாதை என்று பல இருக்கும். அதில் எல்லாவற்றிலும் அந்த தேசிகன் வழிகாட்ட வேண்டுமென்பதில்லை. ஸர்வஞ்ராக நம்முடைய ஆசார்யாள், வித்யாரண்யாள் மாதிரியானவர்களைத் தவிர மற்ற குருமாருக்கு அது ஸாத்யமுமில்லை. அப்போது தெரியாத வழியை ஒருத்தன் வந்து கேட்டுவிட்டால் ஸங்கோசப்படாமல் ஸத்யத்தை சொல்லிவிடணும். அவன் கேட்ட வழியைத் தாமும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்து, குரு ஸ்தானத்திலுள்ள தாமே, தெரிந்த இன்னாருவரிடம் போய் சிஷ்யனாக இருந்து கொண்டு கற்றுக்கொள்வாரானால் இன்னும் விசேஷம். நாம் பார்த்துக்கொண்டிருக்கும் உபநிஷத KS அப்படித்தான். ஷோடசகலா புருஷ விஷயமாகத் தாமே பிப்பலாதரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக யதாவிதி அவரிடம் அடக்கமாக வந்தார். "அவன் கேட்ட புருஷன் பற்றியே தங்களை நான் கேட்டுக்கறேன்" என்றார்.

"அவன் கேட்ட நாளாக அந்தக் கேள்வி என் ஹ்ருதயத்திலே முள் தைச்சாப்பல பதிஞ்சு போச்சு" என்று அவர் சொன்னதாக இங்கே ஆசார்யாள் பாஷ்யத்திலே அழகா மெருகேற்றிச் சொல்லியிருக்கிறார். 'தன்னை நாடி சிஷ்யன் என்று ஒருத்தன் வந்து கேட்கிறதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் குரு என்கிற தாம் இருக்கலாமா?' என்று சிஷ்யனை உத்தேசித்தும், தன்னையே உத்தேசித்து, பண்ணிக்கணுமே' என்று தவித்தும் இப்படி (இதயத்தில் முள் தைத்தாற்போல்) பண்ணியிருக்கிறார்.

முடிந்த மட்டும் அத்தனை வழியுமே கற்றுக் கொண்டு, அப்புறம் கற்றுக்கொடுக்கிறவனே உச்சியிலுள்ள தேசிகன்.

எல்லாம் தெரிந்தவன் என்று தன்னைப் பற்றி கர்வப்பட்டுக் கொண்டிருந்த சிஷ்யன் ச்வேதகேது அப்புறம் தகப்பனாரிடம் அடக்கமாக ப்ரஹ்ம வித்யோபதேசம் பெற்றதைச் சொன்னேன். எல்லாம் தெரிந்தவர் என்று குருமாரிலும், விதிவிலக்காகத் தம்மைப் பற்றி கர்வப்பட்ட ஒருத்தர் கதை சொல்கிறேன்.

அவர் கர்க கோத்ரக்காரரான ஒரு KS. 'கர்க' என்பதன் அடியாக அந்த கோத்ரக்காரர்களை 'கார்க்யர்' என்பார்கள். இவரையும் உபநிஷத் அப்படித்தான் குறிப்பிடுகிறது. அது கோத்ரப் பெயர். அவருடைய அப்பா பெயர் 'பலாகர்' அதை வைத்து அவரை 'பாலாகி' என்று கூப்பிடுவது. அவருக்கு 'த்ருப்த' பாலாகி என்று உபநிஷத்தில் அடைமொழி போட்டுப் பேர் சொல்லியிருக்கிறது. 'த்ருப்த' என்றால் 'கர்வம் கொண்ட', 'தர்பம்' என்றால் கர்வம். 'த்ருப்த்' - கர்வி.

அப்படிப்பட்டவரான அந்த KS காசிராஜனான அஜாதசத்ருவிடம், "உபதேசம் பண்ணி வைக்கிறேண்டா!" என்று சொல்லிக்கொண்டு போனார். அப்படிச் சொல்லிவிட்டு ஸ¨ர்யன், சந்திரன், பஞ்சபூதங்கள், திக்குகள், ப்ரதிபிம்பம், நிழல் என்றிப்படிப் பத்துப் பன்னிரண்டு சொல்லி அவற்றை ப்ரஹ்ம ஸ்வரூபமாகச் சொல்கிறார். அவர் சொன்னது 'உபாதி ஸஹிதம்' எனப்படுவதான, அதாவது, மாய ஸம்பந்தத்தினால் கட்டப்பட்டதாகத் தோன்றும் ப்ரஹ்மத்தைப்

பற்றியது தானேயழிய, எந்தக் கட்டுப்பாடற்று உள்ள 'உபாதிரஹித'மான ப்ரஹ்மம் அல்ல. அந்த நிர்குண ப்ரஹ்மத்தின் வேஷமாகவே ஸகலத்தையும் தெரிந்துகொள்வதுதான் நிஜமான ஞானம். அதைச் சொல்லிக் கொடுப்பதுதான் நிஜமான ப்ரஹ்ம வித்யை.

இவர் சொன்ன உபாதி ஸஹித ப்ரஹ்ம ஸமாசாரங்கள் அஜாதசத்ருவுக்கு ஏற்கெனவே தெரிந்ததுதான். அதற்கும் மேலே உபாதிரஹித ப்ரஹ்ம வித்யயையும் அவருக்குத் தெரியும். அதனால் இவர் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தபோது அவர் (அஜாதசத்ரு) இடைமறித்து? "நிறுத்தும்" என்று சொல்லி, தான் எப்படி அந்த வஸ்துக்களைப் பற்றித் தத்வார்த்தம் தெரிந்து கொண்டிருந்தாரோ அதைச் சுருக்கமாகத் தெரிவித்தார்.

இப்படி த்ருப்த பாலாகி அநேகம் சொல்லி ஒரு ஜீவனின் ஆத்மாவையும் உபாதி ஸஹித ப்ரஹ்மமாகவே சொல்ல, அதையும் ராஜா உபாதி ரஹிதமாகச் சொன்னபோது- இதொன்றைத் தெரிந்து கொள்ளத்தான் ப்ரஹ்மவித்யை என்று ஒன்று, அதைக் கற்பிக்கிற குரு, கற்றுக்கொள்கிற சிஷ்யன் என்றெல்லாமே பெரிய ஸம்ப்ரதாயம் ஏற்பட்டது, அப்படிப்பட்ட விஷயத்தை அவர் சுருக்கமாகச் சொன்னவுடன் - அந்த த்ருப்தர் மேலே ஒன்றும் சொல்வதற்கில்லாமல் வாயை மூடிக் கொண்டுவிட்டார்.

"நீர் சொல்ல வந்ததெல்லாம் சொல்லியாகி விட்டதா"? என்று அஜாதசத்ரு கேட்டார்.

"ஆச்சு" என்றார்.

"இதைக்கொண்டு ஒருத்தன் ப்ரஹ்மஞானம் பெற முடியாது" என்று அவர் சொன்னார்.

அவ்வளவுதான் 'கர்வி' என்றே வாங்கியிருந்தவர் ரூபமே மாறி, பரம விநய ஸம்பன்னராக ஆனார்!"அப்படியானா நான் உன்கிட்டே சிஷ்யனாகிக் கேட்டுக்கறேன்" என்றார்!

ச்வேதகேது, பாலாகி இரண்டு பேரும் கர்விகளாக இருந்தபோதிலும் ஸத்வித்யையில் நிஜமான ஆர்வம் கொண்டவர்களாக இருந்ததால், தங்களுக்குத் தெரியாத உசந்த வித்யை ஒன்று இருக்கிறது, அதை எடுத்துச் சொல்லக்கூடிய ஒருத்தர் இருக்கிறார் என்று தெரிந்தபோது கர்வத்தை அப்படியே விட்டு பணிவோடு உபதேசம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த விநயம் அதுவரை ஸம்ப்ரதாய வழியில் அவர்கள் வேறே வித்யைகள் கற்றுறுக்கொண்டதாலேயே அந்த மரபுச் சக்தி அவர்களுடைய கர்வத்துக்கும் உள்ளே போய்ப் போட்டிருந்த வித்து விளைந்த ஏற்பட்டதுதான். அவர்களுக்கு உபதேசித்த குருமார்களின் ஸொந்த விநயமும், அதோடு அநுக்ரஹமும் சிஷ்யர்களுடைய உள்ளுக்குள்ளே இந்த அரூவம், விநயம் இரண்டையும் உண்டாக்கி, ஸமயத்திலே அது வெடித்து முளைவிடப் பண்ணியிருக்கும்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is குருவின் யோக்கியதையைப் பார்ப்பதும், சரணாகதி செய்வதும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  அரைகுறை:கர்வம் முழுமை:விநயம்
Next