வாய் சுத்தி வாயை நாம் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் ஆபீஸ் மற்றும் பள்ளிகளில் மதிய உணவை சாப்பிட்ட பிறகு பலரும் வாயை தண்ணீர் விட்டு அலம்பாமல் அப்படியே போ

வாய் சுத்தி

வாயை நாம் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆபீஸ் மற்றும் பள்ளிகளில் மதிய உணவை சாப்பிட்ட பிறகு பலரும் வாயை தண்ணீர் விட்டு அலம்பாமல் அப்படியே போய் விடுகின்றனர். வாயை சுத்தமாக வைத்திருக்கும் பழக்கமுள்ளவருக்கு ஜீரணக் கோளாறுகள் ஏதும் ஏற்படாது. வாய்ப்புண், தொண்டை நோய், வாய் துர் நாற்றம் போன்றவை இன்று மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைப் பொருட்களால் வாய் சம்பந்தப்பட்ட கடுமையான வியாதிகளையும் நம்மால் சுலபமாக சரிசெய்து விடமுடியும்.

பல் கூச்சம், பல் ஆடுதல், வாயில் உமிழ்நீர் வரண்டு வெடிப்பு ஏற்படுதல், வாய் வறட்சி, வாயின் உட்புற சுவர்களில் வலி, காலையில் எழும் போது வாயில் துவர்ப்புச் சுவை போன்றவற்றில் கருப்பு எள்ளை மைய அரைத்து குளிர்ந்த நீரிலோ, அல்லது சூடான நீரிலோ கலந்து வாய் கொப்பளித்தல் சிறந்த முறையாகும். 5-10IL நல்லெண்ணெயை வெது வெதுப்பான தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து வாய் கொப்பளிப்பதும் நலம் தரும்.

வாயில் நெருப்பு சுட்டது போன்ற எரிச்சல், வாய் வேக்காடு, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காயம், நஞ்சு, நெருப்பு இவற்றால் சுட்டபுண், இப்பிணிகளை நீக்க நெய் அல்லது பாலைப் பருகி வாயில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் வாய் சுத்தமாவதுடன், வாயில் பிளந்த புண்களைக் கூட்டி வைக்கிறது. தேனைக் கொண்டு வாயைக் கொப்பளிப்பதனால் எரிச்சலும் தாகமும் அடங்குகின்றன. கைப்பு (கசப்பு) , துவர்ப்பு, இனிப்புச் சுவையுள்ள, குளிர்ச்சியான பொருட்களால் தயாரிக்கப்பட்டதும் பேய்ப்புடல், வேம்பு, நாவல், மா, ஜாதிமல்லி இவற்றின் தளிர்களால் தயாரிக்கப்பட்டதும், ஆம்பல் கிழங்கு, அதிமதுரம் இவற்றால் செய்ததுமான கஷாயத்துடன் சர்பத், தேன், பால், கரும்புச்சாறு, நெய் இவற்றின் கூட்டை வாயிலிட்டு கொப்பளிப்பதால் பித்த மிகுதியால் ஏற்படும் வாய்க்கோளாறுகள் நீங்கிவிடும்.

வாயில் பிசுபிசுப்பு, கபத்தின் ஊறலால் நாற்றம், கொழகொழப்பு, உமிழ்நீர் அதிகரித்தல், எப்போதும் இனிப்பு அல்லது உப்புச்சுவை வாயில் தென்படுதல், கிருமிகளால் ஏற்படும் பல் சொத்தை, உட்புற சுவர்களில் அரிப்பு போன்ற நிலைகளில் காரம், புளி, உப்புச் சுவையுள்ளதும் சூடான வீர்யத்தைக் கொண்டதும், அழுக்கை சுரண்டி எடுத்துவிடும் தன்மையுள்ள பொருட்களைக் கொண்டு வாய்கொப்பளித்தல் நலம் தரும். பசுவின் மூத்திரம் இதற்கு மிகவும் ஏற்றது. புழுங்கலரிசி 10 கிராம், அவல் 10 கிராம், கொள்ளு 10 கிராம், நெல் பொறி 40 கிராம், தினை விதை 4 கிராம், கேழ்வரகு 4 கிராம், சுக்குப்பொடி 2 கிராம், எலுமிச்சம் பழம் 1 மூடி பிழிந்தசாறு, ஓமம் 2 கிராம் இவைகளை ஒரு மண் பாத்திரத்திலிட்டு 200 IL வெந்நீர் விட்டு மூடி பிறகு அடுப்பிலேற்றி சூடாக்கவும். கொதிக்க விட வேண்டாம். இந்த மூலிகைத் தண்ணீரினால் வாய் கொப்பளித்தால் மேற் கூறிய நோய்கள் நீங்கிவிடும்.

கடுக்காய், நெல்லிக்காய், தாணிக்காய் (திரிபலா) மற்றும் அதிமதுரம் ஆகியவற்றை தூள் செய்து சிறிது தேன் மற்றும் நெய் விட்டு குழைத்து வாய்ப் புண்ணில் போடுவதால் புண் உடனே ஆறிவிடும்.

வாய் கொப்பளிக்கும் முறை :-

அதிகக் காற்றோட்டம் இல்லாத, சூரிய ஒளியுள்ள இடத்தில் நன்றாக அமர்ந்து கொண்டு, அதிலேயே மனதை ஈடுபடுத்தி, தொண்டை, தாடை, நெற்றி இவற்றை வியர்க்கச் செய்து, கொப்பளிக்கும் திரவத்தை வாயில் பாதி அளவு நிரப்பிக் கொண்டு கொப்பளிப்பது உயர்ந்த அளவாகும். மூன்றில் ஒரு பங்கு நிரப்பிக் கொண்டு கொப்பளிப்பது உயர்ந்த அளவாகும். மூன்றில் ஒரு பங்கு நிரப்பிக் கொண்டு கொப்பளிப்பது நடுத்தர அளவாகும். நான்கில் ஒரு பங்கு நிரப்பிக் கொண்டு கொப்பளிப்பது குறைந்த அளவாகும். வாய் கொப்பளிக்கும் போது தலையைக் கொஞ்சம் நிமிர்த்தியபடி இருக்க வேண்டும். கொப்பளித்த பிறகு வியர்வை உண்டாக்குதலையும், உடல் பிடித்து விடுதலையும் செய்ய வேண்டும். அதனால் தூண்டி விடப்பட்ட கபம், வாய்க்கு வந்து சேருகிறது.

தாடையின் உட்பகுதி கபத்தினால் நிரம்பும் வரையும், மூக்கு, கண் இவற்றிலிருந்து நீர் பெருகத் தொடங்கும் வரையும், கபத்தினால் வாயிலிடப்பட்ட பொருட்கள் கெடாதவரையும் கொப்பளிக்கப் பயன்படும் கஷாயத்தை வாயில் வைத்திருக்க வேண்டும். இம் மாதிரி மூன்று, ஐந்து அல்லது ஏழு முறை செய்ய வேண்டும்.

மேற்குறிபிட்ட விதிகள் அனைத்தும் வாயில் நோய் பற்றிய நிலையில் செய்ய வேண்டியவை. வாயில் நோய் வராமல் பாதுகாக்க உணவு உண்ட பிறகு வாயை சுத்தமாக அலம்பினால் போதும் என்று எண்ண வேண்டாம். வாயில் சுரக்கும் லாலா ரஸம் குடலின் உள்ளே சென்று கொண்டேதானிருக்கிறது. குடலுக்கு வாய் நிரந்தர மார்க்கமாயிருப்பதால் வாயை சர்வ காலமும் சுத்தமாய் வைத்துக் கொள்ள வேண்டும்.

மலம், சிறுநீர் கழித்த பிறகு வாயில் ஊறும் லாலா ரஸத்தில் ஒரு மாறுபாடு ஏற்படுகிறது. அந்த ரஸத்தை விழுங்கினால் வயிற்றுக்குக் கெடுதல். மலஜலம் கழித்துக் கொண்டே வாயில் ஊறுவதைக் காறிக்காறி துப்புவதும் சரியல்ல. மலம் ஜலம் கழித்தபின் கை கால்களை நன்கு அலம்பி வாயை சுத்த ஜலத்தினால் நன்கு கொப்பளிக்க வேண்டும். இடது புறத்தில் வாய் ஜலத்தைப் துப்ப வேண்டும் என்று தர்ம சாஸ்த்ரம்.

வாயை சுத்தமாக வைத்திருப்பதால் இருவிதத்தில் கை கண்ட பலன். அழுக்கு சேராமல் வாய் சுத்தப்படுவது ஒன்று. மற்றது மனம் நம் வசப்படுகிறது என்பதே. மனம் வசப்பட்டால் சாந்த நிலையை எப்போதும் மனிதனால் பெற இயலும். மனச் சாந்தியைப் பார்க்கிலும் வாழ்க்கையில் சிறந்த லாபம் ஏது?

கடினமோ, திரவமாகிய பால், பழரஸம், பானகம், காபி போன்ற எதைப் பருகினாலும், பருகிய பிறகு வாயை சுத்தமான ஜலத்தினால் நன்கு கொப்பளிக்க வேண்டும். சூடான காபி, பால் போன்றவற்றைப் பருகினால் உடனே குளிர்ந்த ஜலத்தினால் வாயை கொப்பளித்தால் வாயுவினால் பற்களுக்கு கெடுதி ஏற்படும். அம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் வாய் கொப்பளிக்கலாம். அல்லது வாயில் சூடு தணிந்த பிறகு குளிர்ந்த நீரை உபயோகிக்கலாம். குளிர்காலங்களில் வெந்நீரினால் வாய் கொப்பளித்தல் நலமாகும்.

-சுபம்-

மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்க:
- ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, நசரத்பேட்டை-602 103.
Tel : (044) 26272162, 26491823, Email: sjcac@vsnl.net