திருமணம், வளைகாப்பு சீமந்தம்,முதல் வருட பண்டிகைகள்,உபநயனம்,பெண்கள் பின்பற்ற வேண்டியவை
ஜகத்குருவின் பாதார விந்தங்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள். பெரியவர்கள் எல்லோரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். என் மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய மாமா திரு.கே.சி.லட்சுமிநாராயணன் அவர்களுக்கு எப்படி என் நன்றியைத் தெரிவிப்பது என்றே தெரியவில்லை. என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, என்னை, நம் வட ஆர்க்காடு சம்பிரதாயங்களைப் பற்றி எழுதச் சொல்லி ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். என்னால் முடியாது என்றாலும் "முடியும்"என்று தைரியம் கொடுத்ததே அவர்தான். அவர் என்னை ஊக்கப்படுத்தியதால் என் வீட்டில் உள்ள பெரியவர்களின் துணையோடு எழுதுகிறேன்.
இதில் தவறுகள் இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும். என் மாமியார் திருமதி.செல்லம்மாள் அம்மாள் அவர்களிடமிருந்து நாங்கள் (மகள்கள், மருமகள்கள்) கற்றுக்கொண்டது ஏராளம். அவற்றிலிருந்து சிலவற்றை எனக்குத் தெரிந்தவரை மற்றவர்களின் உதவியுடன் எழுதுகிறேன்.
பொங்கி இடுதல்:-
கல்யாணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் ஆனவுடன், கல்யாணப் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் அவரவர் வீட்டில் பொங்கியிட வேண்டும். கல்யாணத்திற்கு முன்பாக நல்ல நாளாகப் பார்த்து பொங்கியிட வேண்டும். காலையில் வாசலில் கோலம் போட்டு செம்மண் இட்டு, மாவிலை கட்ட வேண்டும். பிறகு எண்ணெய் தேய்க்கும் இடத்தில் கிழக்கு முகமாக கோலம், செம்மண் இட்டு அதன்மேல் மணை போட்டு உட்காரவைத்து ஆரத்தி எடுத்து, எண்ணெய் தேய்க்க வேண்டும். "ஸ்ரீராம ஜெய ஜெய"பாட வேண்டும்.
பிறகு காலுக்கு மஞ்சள் பூசி நலங்கு இட்டு அவர்கள் குளித்துவிட்டு வந்தவுடன் வெற்றிலைப் பாக்கு வைத்து புதுத்துணி கொடுக்க வேண்டும்.
பிள்ளை வீட்டில் பிள்ளைக்கு வேஷ்டி சட்டையும் பெண் வீட்டில் பெண்ணுக்கு, ஊஞ்சலின்பொழுது கட்டிக்கொள்ள வாங்கியிருக்கும் புடவையும் கொடுக்க வேண்டும்.
பிறகு கிழக்கே பார்த்து உட்காரவைத்து நுனி இலை போட்டு பாயசம், பொங்க சாதம், வற்றல் குழம்பு, வடாம், வடை, கறிகாய்கள் எல்லாம் பண்ணிப்போட வேண்டும். அவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு நமஸ்காரம் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பிரார்த்ததனை:-
இதற்கும் நல்ல நாள் பார்த்து வீட்டில் பிறந்த பெண்ணுக்கு 9 கஜம் புடவை வாங்க வேண்டும். 5 அல்லது 7 அல்லது 9 சுமங்களிகள், 2 கன்னிகைப் பெண்கள் அவரவர் சௌகரியம்போல் ஒற்றைப்படையில் வரும்படி வைக்க வேண்டும்.
9 கஜம் புடவையை ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரத்தில்,
புடவைக்கும், ரவிக்கைக்கும் குங்குமம் தடவி, கிழக்கு முகமாக நின்றுகொண்டு, "கௌரி கல்யாணம்"பாடி தண்ணீரில் நனைக்க வேண்டும். பிறகு புடவையை "கிழக்கு மேற்காக"உலர்த்த வேண்டும். உலர்ந்தவுடன் தலைப்பு மேலே வரும்படி மடித்து, நுனி வடக்கு முகமாக இருக்கும்படி வைக்க வேண்டும்.
கூடத்தின் நடுவில் கிழக்கு முகமாக பெரிய இழை கோலம் போட்டு அதன்மேல் 2 மணைகள் வைத்து, அதிலும் கோலம் போட்டு, கோலம் உலர்ந்ததும்,9 கஜம் புடவையை முன்பு சொன்னதுபோல் தலைப்பு மேலே வரும்படியும், நுனி வடக்கு முகமாக இருக்கும்படியும் வைத்து அதன்மேல் ரவிக்கையையும் மடித்து வைக்க வேண்டும்.
அதன்மேல் நிறைய வெற்றைலை, பாக்கு, மஞ்சள் வைத்து குங்கும பரணி, கண்ணாடி, சீப்பு, வளையல்கள், தேங்காய், பழங்கள், புஷ்பம் ஆகியவற்றை வைக்க வேண்டும். செயின், நெக்லஸ் எது வேண்டுமானாலும் அதன்மேல் சார்த்தலாம்.
பக்கத்தில் மற்றொரு மணையில் கல்யாணத்திற்கு வாங்கியிருக்கும் கூரை சேலை, திருமாங்கல்யம் ஆகியவற்றையும் வைத்து அதன் மீதும் வெற்றைலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை வைக்க வேண்டும்.
கன்னிகைப் பெண்களுக்கு பாவாடை, சட்டை வாங்கியிருந்தால் அவற்றையும் அதற்குப் பக்கத்தில் வைக்க வேண்டும். மதன் மணைக்கு எதிரே 2 பெரிய நுனி இலைகள் போடவேண்டும். மணைக்குப் பக்கத்தில் வீட்டுப் பெண்களுக்கு இலை போட வேண்டும். வடக்கு நோக்கி மட்டும் கூடுமானரை இலை போடுவதைத் தவிர்ப்பது நல்லது.
ஒவ்வொரு இலைக்கும் அடியில் கோலம் போட வேண்டும். வரித்திருக்கும் சுமங்கலிகள் எல்லோருக்கும் எண்ணெய் கொடுத்து தேய்த்துக் குளிக்கச் சொல்ல வேண்டும். பிறகு எல்லோரையும் இலைக்கு நேராக உட்கார வைத்து மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புஷ்பம் கொடுக்க வேண்டும்.
இலைகளில் பரிமாறும்பொழுது, முதலில், மணைக்கு நேரே இருக்கும் இலையிலிருந்து பரிமாற ஆரம்பித்து பிரதட்சிணமாக (வலது புறமாக) பரிமாற வேண்டும். எல்லாமே அந்த இரண்டு இலைகளிலிருந்துதான் பரிமாற வேண்டும். அந்த இலைக்குப் பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் தீர்த்தம் வைக்க வேண்டும்.
பரிமாறும் முறை:-
முதலில் நுனி இருக்கும் இடத்தில் சர்க்கரை, பழம் வைக்க வேண்டும். பிறகு உட்கார்ந்திருப்பவர்களின் வலதுகை ஓரத்தில் பாயசம் பரிமாற வேண்டும். பிறகு, பழம் சர்க்கரை பக்கத்தில்கோசுமலி பச்சடி வகைகள், கறிகாய்கள், கூட்டு ஆகியவை பரிமாற வேண்டும். பழம், சர்க்கரைக்குக் கீழே போளி,வடை பரிமாறவும்.
பிறகு அன்னம் போட்டு பருப்பு, நெய் விட்டு அபிகாரம் பண்ணிப் பிறகு தீர்த்தம் போட வேண்டும். மணையின் முன்னால் உள்ள இலைக்கு பருப்புடன் ரசமும் கலந்துவிடவும். அந்த இலைக்கு முன்பாக வெற்றிலை, பாக்கு, பழங்கள், 2 தேங்காய், கற்பூரம், ஊதுவத்தி, சாம்பிராணி எல்லாம் தயாராக வைத்திருக்கவும்.
அந்த சுவாமி மணைக்கு பக்கத்தில் இரு பக்கமும் 5 முகம் FK போட்டு குத்துவிளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். எல்லாம் பரிமாறியவுடன் முதலில் சாம்பிராணியை சுவாமி இலையிலிருந்து காண்பித்துக்கொண்டு பிரதட்சிணமாக வைக்க வேண்டும்.
இதையெல்லாம் வீட்டில் உள்ள பெரிய மருமகள்தான் செய்ய வேண்டும். பிறகு கற்பூரம் நிறைய வைத்து ஏற்றி, அதேபோல் எல்லா சுமங்கலிகளிடம் காட்ட வேண்டும். பிறகு நிறைய அட்சதை, புஷ்பம், கதம்பப்பொடி எல்லாம் போட்டு வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் முதலில் நமஸ்காரம் பண்ண வேண்டும்.
பிறகு பெண்டுகளாக உட்கார்ந்திருக்கும் வீட்டுப் பெண்களும் நமஸ்காரம் பண்ணிவிட்டு சாப்பிட உட்கார வேண்டும். நம் வீட்டில் சுமங்கலிகளாக மறைந்த நம் முன்னோர்களின் பெயர்களைச் சொல்லி, நம் குடும்பத்தில் எந்தக் குறையும் வராமல் காப்பாற்றும்படி வேண்டிக்கொண்டு எல்லோரையும் திருப்தியாக சாப்பிடும்படி சொல்ல வேண்டும்.
நமஸ்காரம் செய்தல்:-
எல்லோரும் சாப்பிட்ட பிறகு "எல்லோரும் திருப்தியாக சாப்பிட்டீர்களா?"என்று கேட்டுவிட்டு, சுவாமி இலையிலிருந்து தீர்த்தம் போட வேண்டும். எல்லோரையும் வேறொரு இடத்தில் உட்காரவைத்து மஞ்சள் பூசி, நலங்கு இட்டு, குங்குமம், சந்தனம் கொடுத்து, சுக்கு வெல்லம், நீர்மோர், பானகம் எல்லாம் தர வேண்டும்.
கத்தியை விளக்கில் காட்டி மை பிடித்து, அதில் சொட்டு எண்ணெய் விட்டுக் குழைத்து அவர்களுக்கு அந்த மையைக் காட்ட வேண்டும். பிறகு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், தேங்காய், புஷ்பம், பழம், ரவிக்கைத் துண்டு, ஒரு ரூபாய் நாணயம், வளையல் மருதாணிப் பொடி எல்லாம் வைத்து அவர்களின் மடியில் கட்ட வேண்டும். பிறகு வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அவர்களுக்கு நமஸ்காரம் பண்ண வேண்டும்.
சுவாமி இலைகளில் பரிமாறியதை வீட்டுப் பிள்ளைகளும், மருமகள்களும் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். மதியம் இரண்டு அல்லது மூன்று மணிக்கு அந்த 9 கஜம் புடவையை எடுத்து கொடியில் கிழக்கு மேற்காக போட்டுவிட்டு, பிறகு அதை வெற்றிலை, பாக்குடன் நம் வீட்டுப் பெண்ணுக்குக் கொடுத்து, அவர்கள் அதை கட்டிக்கொண்டு அவர்களைவிடப் பெரியவர்கள் இருந்தால் நமஸ்காரம் பண்ணவும்.
சுவாமி சமாராதனை:-
இதற்கு அவரவர்கள் குலதெய்வம் எதுவோ அதற்கு மாவிளக்குப் போட்டு பூஜை பண்ணி அவரவர் சௌகரியத்திற்கு ஏற்ப பிராமணர்களுக்குச் சாப்பாடு போட்டு தட்சிணை கொடுக்க வேண்டும்.
இதற்கு முக்கியமாக எள் சாதம், சர்க்கரைப் பொங்கல், வடை, புளியஞ்சாதம் ஆகியவை நைவேத்யம் பண்ண வேண்டும்.
பிள்ளையார் பூஜை:-
கல்யாண சத்திரத்திற்கு கிளம்புவதற்கு முன் பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும் அவரவர் வீட்டில் பிள்ளையார் பூஜை பண்ணிவிட்டு கிளம்ப வேண்டும். கல்யாண சத்திரத்தில் சம்பந்தி அழைப்பு, மாலை லக்ன பத்திரிக்கை, லக்ன பத்திரிக்கை வாசிக்கும்பொழுது எல்லா பெரியவர்களையும் வைத்துக்கொண்டு வாசிக்க வேண்டும்.
அதற்குப் பெண் வீட்டார் பருப்பு தேங்காய், மாலை, புஷ்பம், பழம், கல்கண்டு எல்லாம் வைக்க வேண்டும். பிறகு பெண்ணின் பெற்றோருக்குப் பிள்ளை வீட்டார் வேஷ்டி, ரவிக்கைத் துண்டு வைத்து மரியாதை பண்ண வேண்டும்.
ஜான வாசம்:-
பிறகு ஜானவாசம். ஜானவாவத்திற்கு மாப்பிள்ளைக்கு கோட்டும், சூட்டும் வாங்கிக் கொடுத்து அவரவர் வசதிக்கேற்ப மோதிரம், செயின், கைக்கடிகாரம் எல்லாம் பெண் வீட்டில் வாங்கி, பெண்ணின் சகோதரன் மாப்பிள்ளைக்குக் கொடுக்க வேண்டும். பிறகு கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வரவேண்டும்.
மாப்பிள்ளை கோயிலிலிருந்து சத்திரத்திற்குள் வரும்போது ஆரத்தி எடுக்க வேண்டும்.
நிச்சயதார்த்தம்:-
பிறகு நிச்சயதார்த்தம் இதற்கு பெண்ணுக்கு புடவை ரவிக்கையும், மாப்பிள்ளைக்கு வேஷ்டியும், அங்கவஸ்திரமும் ஆசீர்வாதம் பண்ண வேண்டும். பிறகு அட்சதை ஆசீர்வாதம். பிறகு ஆரத்தி பிறகு அவர்கள் இருவரும் பெரியவர்கள் எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ண வேண்டும்.
எண்ணெய் தேய்த்தல்:-
மறுநாள் காலை பெண், மாப்பிள்ளை இருக்கும் இடத்திற்குபோய் அவரை எண்ணெய் தேய்த்துக்கொள்ள கூப்பிட்டு வரவேண்டும். பிறகு அவர்கள் இருவரையும் ஒன்றாக உட்காரவைத்து நெற்றியில் குங்குமம் இட்டு, ஆரத்தி எடுக்கவும். ஆர்த்தியை வடக்கில் இருப்பவர்கள்தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு 'ஸ்ரீராம ஜெய ஜெய'பாடி எண்ணெய் தேய்த்து, முகம், கை, கால் என்று எண்ணெய் தடவி முடிக்க வேண்டும். பிறகு காலுக்கு மஞ்சள் பூசி, நலங்கு இட வேண்டும்.
ஜாதகரணம், நாமகரணம்:-
பிறகு, ஜாதகரணம், நாமகரணம். இதற்கு பெண்ணின் அம்மாவின் பிறந்த வீட்டிலும், பிள்ளையின் அம்மாவின் பிறந்த வீட்டிலும் அவரவர்களுடைய வசதிக்கேற்ப பருப்பு தேங்காய், புடவை, வேஷ்டி எல்லாம் கொண்டுவந்து 'கௌரி கல்யாணம்'பாடி பந்தலில் வைக்க வேண்டும்.
பெண் வீட்டார் விரதத்திற்கு அதிரசம், இனிப்பு வகைகள், பருப்பு தேங்காய், சூட்கேஸ், கண்ணாடி, சீப்பு, மை, சாந்து, சோப்பு, எண்ணெய், டவல் எல்லாம் கொண்டு வந்து பிள்ளை வீட்டில் வைக்க வேண்டும்.
அது முடிந்த பிறகு காசி யாத்திரை. காசி யாத்திரைக்குக் கிளம்பும்பொழுது விரத வேஷ்டி கட்டிக்கொள்ள வேண்டும். பிள்ளையின் அத்தை கண்ணுக்கு மை இட வேண்டும்.
காசி யாத்திரைக்குக் குடை, தடி, செருப்பு, புஸ்தகம் ஆகியவை பெண் வீட்டில் வாங்க வேண்டும். காசி யாத்திரை போய் வந்த பிறகு மாலை மாற்ற வேண்டும். மாலை மாற்றியவுடன் மாமாவுக்கு மரியாதை பண்ண வேண்டும்.
பிடி சுற்றுதல்:-
பிறகு ஊஞ்சல் ஒரு முக்கியமான விஷயம். நம் சம்பிரதாயத்தில் பெண்ணுக்கு முகூர்த்தத்தின் பொழுது கொண்டை போட்டுத்தான் அலங்காரம் பண்ண வேண்டும். ஆகவே காலையில் மங்கள ஸ்நானம் ஆனவுடனேயே கொண்டை போட்டு அதற்குப் பூ சுற்றி விடவும்.
ஊஞ்சலில் உட்கார வைத்தவுடன் அவர்களுக்கு பாலும் பழமும் கொடுக்க வேண்டும். 5 அல்லது 7 சுமங்கலிகள் பிறகு அதேபோல் ஒற்றைப்படையில் பாலால் காலை 3 முறை தொட வேண்டும்.
பிறகு பிடி சுற்றிப்போட வேண்டும். (பெண்ணின் அம்மாவும், பிள்ளையின் அம்மாவும் சுற்றக்கூடாது) பிடி சுற்றும்பொழுது கிழக்கிலிருந்து ஆரம்பித்து வடக்கில் முடிக்க வேண்டும். பெண்ணுக்கும் பிள்ளைக்கும் நடுவிலோ, மேலே தூக்கியோ போடக்கூடாது. ஊஞ்சலுக்கு அடியில் போட வேண்டும். பிறகு ஆரத்தியும் ஒற்றைப்டையில் சுற்றிவிட்டு, ஒரு பிரம்மசாரியும் ஆரத்தி சுற்ற வேண்டும்.
தாயார்களிடம் விளக்குகள்:-
பிறகு மூன்று சுமங்கலிகள் ஒரு சொம்பில் ஜலம் எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்ணின் தாயாரும், பிள்ளையின் தாயாரும் விளக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
முதலில் ஜலம் இலேசாக விட்டுக்கொண்டு ஒருவர் போக, பின்னால் விளக்கை எடுத்துக்கொண்டு, அது அணையாமல் தலைப்பால் மூடிக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக ஒரு ஜலம் ஒரு விளக்கு என்று மூன்று முறை பிரதட்சிணமாக வர வேண்டும். பிறகு ஒரு பிரம்மசாரி சூரைக்காயை மணமக்களுக்குச் சுற்றி, வாசலில் போய் உடைக்க வேண்டும்.
பிறகு பெண்ணின் தாயார் பிள்ளையிடம் தேங்காய் தாம்பூலம் கொடுத்து, பிள்ளையை மண மேடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதேபோல் பிள்ளையின் தாயார் பெண்ணிடம் தேங்காய் தாம்பூலம் கொடுத்து பெண்ணை மண மேடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
திருமாங்கல்ய தாரணம்:-
பிறகு ஹோமம். ஹோமம் பண்ணும்போது 5 அல்லது 7 சுமங்கலிகள் பாலிகைக்கு ஜலம் விட வேண்டும். (கௌரி கல்யாணம் பாடவும்) . பிறகு கூரை சேலை ஆசீர்வாதம் பண்ணுவார்கள். அதைப் பிள்ளையின் சகோதரி, பெண்ணிடமிருந்து வாங்கிக்கொண்டு, அதை பெண்ணிற்கு உடுத்தி விட வேண்டும்.
பிறகு திருமாங்கல்ய தாரணம். பிள்ளையின் சகோதரி தாலி முடிய வேண்டும். பிறகு பிள்ளையின் சகோதரிக்குப் பெண் வீட்டில் மரியாதை பண்ண வேண்டும்.
பிள்ளையின் சகோதரியை உட்கார வைத்து, மஞ்சள் பூசி, சந்தனம், குங்குமம் இட்டு தாம்பூலம் கொடுக்க வேண்டும். பிறகு சம்பந்தி மரியாதை.
பிறகு பொரி இடுவது. பெண்ணின் சகோதரன் பொரியிட வேண்டும். அவருக்குப் பிள்ளை வீட்டில் மரியாதை செய்ய வேண்டும்.பிறகு கிரஹப்ரவேசம். பிறகு இருவரையும் உட்காரவைத்து ஆரத்தி எடுக்க வேண்டும்.
நலங்கு இடுதல்:-
பெண்ணையும் பிள்ளையையும் எதிர் எதிரில் உட்காரை வைக்க வேண்டும். முதலில் பெண், பிள்ளைக்கு காலில் மஞ்சள் பூசி, நலங்கு இட்டு, சந்தனம், குங்குமம் இட்டு, தலை வாரி, கண்ணாடியைக் காண்பிக்க வேண்டும்.
பிறகு ஒரு கையில் அரிசியை வைத்துக்கொண்டு, துவரம் பருப்பை பிள்ளையிடம் கொடுத்து "அரிசி கொடுக்கிறேன், பருப்பு கொடுங்கள்"என்று கேட்டு வாங்கி, மூன்றுமுறை பையனின் முன் சுற்றி போடவும். பிறகு அரிசியை பையனிடம் கொடுத்து பருப்பை மற்றொரு கையில் வைத்துக்கொண்டு, "பருப்பு கொடுக்கிறேன், அரிசி கொடுங்கள்"என்று வாங்கிக்கொண்டு மூன்று முறை சுற்றிப்போட வேண்டும்.
பிறகு அரிசியை பையனிடம் கொடுத்து, உப்பைக் கையில் வைத்துக்கொண்டு "உப்பு கொடுக்கிறேன், அரிசி கொடுங்கள்"என்று வாங்கிக்கொண்டு, மூன்று முறை சுற்றிப்போட வேண்டும்.
உப்பை ஒருபொழுதும் கையில் கொடுக்கக்கூடாது பிறகு இரு கைகளிலும் அப்பளத்தை வைத்துக்கொண்டு மூன்று முறை சுற்றி, பையன் முன்பாக நன்றாக நொறுங்கும்படி அடிக்க வேண்டும். பிறகு தட்டில் தாம்பூலம் வைத்து பாட்டுப்பாடி, அதைக் கொடுத்துவிட்டு, பையனை நமஸ்கரித்து விட்டுப் பையனுக்கு எதிரில் உட்கார வேண்டும்.
இதேபோல் எல்லாமும் பையனும் பெண்ணுக்கு பண்ண வேண்டும். (நமஸ்காரம் தவிர) பிறகு இருவரும் தேங்காய் உருட்டி விளையாட வேண்டும். பிறகு இருவரையும் சேர்த்து உட்கார வைத்து, பெண்ணுக்கு பிள்ளை வீட்டிலும், பிள்ளைக்கு பெண் வீட்டிலும் புடவை, வேஷ்டி கொடுத்து ஆரத்தி எடுக்க வேண்டும்.
பச்சை பூசுதல்:-
குங்குமத்தில் எண்ª ணய் விட்டு குழைத்துக்கொண்டு பெண், பிள்ளை இருவரையும் உட்கார வைத்து நெற்றி, கழுத்து, கை ஆகிய இடங்களில் 5 அல்லது 7 சுமங்கலிகள் இட வேண்டும். பிறகு மஞ்கள் நீர் கரைத்துக்கொண்டு அவர்கள் மேல் ப்ரோட்சணம் பண்ணுவார் வாத்தியார்.
நாத்தனார், மாமா:-
பிறகு ஒளபாசனம். பிறகு பாலிகைக்கு ஜலம் விட வேண்டும். பிறகு பிரவேச ஹோமம். இதற்கு பெண் வீட்டார் பிள்ளைக்கு பட்டு வாங்குவார்கள். இரவு சாப்பிட்ட பிறகு, ஊஞ்சலில் உட்கார வைத்து பாடி, நாத்தனார் மணப்பெண்ணுக்கு மரியாதை பண்ண வேண்டும். பெண்ணின் மாமி பெண்ணுக்கு மரியாதை பண்ணுவார். பிறகு ஆரத்தி எடுக்க வேண்டும்.
அந்த காலத்தில் அம்மான் கோலம் என்று பண்ணி, பெண்ணுக்கு ஆணின் உடைகளை அணியச் செய்து பெண்ணும், பிள்ளையும் பேச வைப்பார்கள்.
இரண்டாம் நாள்:-
அடுத்த நாள் காலை முதல்நாள் போலவே மாலை மாற்றி ஊஞ்சல், பிடி சுற்றல், பால் தொடுதல் எல்லாம் பண்ணவும். பிறகு இரண்டு சொம்புகளில் ஜலமும், விளக்கும் எடுத்துக் கொண்டு சுற்ற வேண்டும். விளக்கை பையனின் அம்மா எடுத்துக்கொள்ள வேண்டும்.
தேங்காய் தாம்பூலம் வைத்துக்கொண்டு பெண்ணை அழைத்துக்கொண்டு பையனின் அம்மா முதலில் போக வேண்டும். பின்னால் பையனை அழைத்துக்கொண்டு, பெண்ணின் அம்மா போக வேண்டும்.
பிறகு சேஷ ஹோமம். அதை அடுத்து நாகவல்லி பூஜை. பெண்ணின் சகோதரன் வெற்றிலை மடித்துக் கொடுக்க வேண்டும். இதற்கும் அவருக்கு பிள்ளை வீட்டில் மரியாதை பண்ண வேண்டும்.
பாலிகை கரைத்தல்:-
பிறகு பலதானம். பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். பிறகு ஆரத்தி. பின்னர் பாலிகைக்கு முன் வெற்றிலை, பாக்கு, தேங்காய் வைத்து புஷ்பம் போட்டு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி நமஸ்காரம் பண்ண வேண்டும்.
குளம் பக்கத்தில் இருந்தால், அங்கே பாலிகை கரைக்கலாம். இல்லாவிட்டால் ஒரு பாத்திரத்தில் ஜலம் வைத்து அந்த பாலிகையை பெண்ணும் பையனும் ஒன்றாகக் கரைக்க வேண்டும். பெரிய சுமங்கலிகளும் கரைக்க வேண்டும்.
பிறகு கட்டுசாதம் கட்டி பெண்ணையும் பிள்ளையையும் சுபமாக பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
வளைகாப்பு:-
இந்தச் சடங்கை பெண் வீட்டில் ஏழாம் மாதம் பண்ண வேண்டும். காலையில் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் எண்ணெய் தேய்த்துவிட வேண்டும். (முன்பு சொன்னதுபோல்) . பிறகு பெண்ணுக்கு பொங்க சாதம் பண்ணிப் போட வேண்டும்.
பெண்ணுக்கு தலை பின்னி பூ நிறைய சுற்ற வேண்டும். மணையில் உட்கார வைத்து விட்டு பெரியவர்கள் யாராவது பிள்ளையார் பூஜை பண்ண வேண்டும்.
பிறகு வளையல்களுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு ஒரு கன்னிகைப் பெண்ணுக்கு முதலில் இரண்டு கைகளிலும் வளையல் போட்டுவிட்டு, பிறகு பெண்ணுக்குப் போட வேண்டும்.
பெண்ணுக்கு முதலில் வேப்பில்லை காப்பு போட்டு, பிறகு வெள்ளிக் காப்பு, பிறகு வளையல்கள் போட வேண்டும். இரண்டு கைகளிலும் ஒற்றைப்படையில் வளையல்கள் போட வேண்டும்.
இதற்குப் பெண் வீட்டில் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் புடவை, ரவிக்கை, வேஷ்டி வாங்க வேண்டும். அதை ஆசீர்வாதம் செய்து கொடுத்து பிறகு, ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகுப் பெண்ணை மணையில் உட்கார வைத்து 'அச்சுதம்'தெளிக்க வேண்டும்.
அச்சுதம் தெளித்தல்:
அதாவது பசும்பாலை ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொண்டு அருகம் புல்லால் ª பண்ணின் முதுகில் "ஆண்பிள்ளை பெற்றாள், பெண்பிள்ளை பெற்றாள், அடுப்பங்கரையில் பிள்ளையைப் பெற்றாள்"என்று மூன்று முறை தொட வேண்டும். இதேபோல் 5 அல்லது 7 சுமங்கலிகள் பண்ண வேண்டும்.
பிறகு குத்துவிளக்கிற்கு 5 முகம் ஏற்றி விளக்கைச் சுற்றி பெண்டுகள் கும்மி அடிக்க வேண்டும். முக்கியமாக வளைகாப்பு செய்துகொண்ட பெண். பிறகு பிள்ளையின் பெற்றோருக்கு பெண்ணின் பெற்றோர் மரியாதை பண்ண வேண்டும்.
பிள்ளை வீட்டார் கிளம்பும் முன் அதிரசம், அரிசி, பருப்பு, அவல், அப்பளம், இரு இனிப்பு வகைகள் எல்லாம் பெண் வீட்டார் வரிசை வைக்க வேண்டும்.
உதகசாந்தி:-
சீமந்தம் எட்டாம் மாதம் பிள்ளை வீட்டில் செய்ய வேண்டும்.
உதகசாந்தி:பெண் வீட்டில் இதற்கு பருப்பு, தேங்காய், புடவை, வேஷ்டி, மாலை, குடம், புதுப்பாய், பழங்கள், சர்க்கரை, கல்கண்டு, ஆகியவற்றை பந்தலில் வரிசை வைக்க வேண்டும். பெண்ணுக்குத் தலை பின்னி பூ சுற்ற வேண்டும்.
பெண்ணுக்கு ஜபித்த ஜலத்தைக் கொட்டும்பொழுது, மணையில் கோலம் போட்டு உட்கார வைத்து, "கௌரி கல்யாணம்"பாடி பிறகு கொட்ட வேண்டும். உதகசாந்தி அட்சதை ஆசீர்வாதத்துடன் முடியும். பிறகு ஆரத்தி.
மூக்குப் பிழிதல்:-
காலையில் பெண்ணையும் பிள்ளையையும் உட்கார வைத்து எண்ணெய் தேய்க்க வேண்டும். பெண்ணுக்கு தலை பின்னி நிறைய பூ சுற்ற வேண்டும். மூக்கு பிழிய, ஆலமொக்கு, பசும்பால், நெல் இவற்றை வைத்து இரு கன்னிகைப் பெண்கள் அரைக்க வேண்டும். இதைப் பட்டு துணியில் வைத்துத்தான் மூக்கில் பிழிய வேண்டும். வலது மூக்கில் பிழிய வேண்டும். "கௌரி கல்யாணம்"பாட வேண்டும்.
பருப்பு தேங்காய், ஐந்து வித பட்சணங்கள், பொரிகொள்ளு, புடவை, வேஷ்டி, மாலை, பழங்கள், திரட்டுப்பால் இவை பந்தலில் வரிசையாக பெண் வீட்டார் வைக்க வேண்டும்.
பிள்ளை வீட்டார் வரிசை:-
சீமந்த முகூர்த்தம் முடிந்ததும் இருவரையும் உட்கார வைத்து ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு பெண்ணின் பெற்றோர்க்கு மரியாதை செய்ய வேண்டும். பிறகு முன்பு சொன்னதுபோல் கும்மி அடிக்க வேண்டும். அதிரசம், இரு இனிப்பு பலகாரம், அவல், வெல்லம், பருப்பு, தேங்காய், பழம் எல்லாம் பெண் வீட்டாருக்கு பிள்ளை வீட்டார் வரிசை வைக்க வேண்டும்.
பெண்ணைப் பிரசவத்திற்கு அடுத்த நாளே அழைத்துப் போகலாம். இல்லாவிட்டால் 9-ம் மாதம் நல்ல நாளாகப் பார்த்து அழைத்துப் போகலாம்.
புண்ணியாஹ வசனம்:-
குழந்தை பிறந்தவுடன் பெண் வீட்டிலிருந்து யாராவது பிள்ளை வீட்டிற்கு வெற்றிலை, பாக்கு, பழம், புஷ்பம், சர்க்கரை, கல்கண்டு இவற்றைக் கொண்டுவந்து வைத்து சுபச் செய்தியைச் சொல்ல வேண்டும்.
காலையில், பிரசவித்த பெண்ணுக்கும், குழந்தைக்கும் எண்ணெய் ஸ்நானம் செய்விக்க வேண்டும். பெண் வீட்டில் பருப்பு தேங்காய், குழந்தைக்கு புதுத் துணி, மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் வேஷ்டி, புடவை இவை பந்தலில் வைக்க வேண்டும். ஆசீர்வாதம் ஆன பிறகு ஆரத்தி எடுக்க வேண்டும்.
தொட்டில் இடுதல்:-
தொட்டில் போட, தொட்டிலுக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, பூ சுற்றி அலங்காரம் பண்ண வேண்டும். தொட்டிலுக்கு முன்பாகக் கோலம் போட்டு, அதன் மேல் நெல் பரப்ப வேண்டும். அதற்கு முன்பாகக் கிழக்கு முகமாக மணையைப் போட்டு, குழந்தைக்கு அத்தையோ, பாட்டியோ குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி, நெற்றிக்கும் கண்ணுக்கும் மையிட வேண்டும்.
மஞ்சள் கயிற்றில் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும். இவையெல்லாம் செய்பவருக்கு பெண் வீட்டில் யாராவது காலுக்கு மஞ்சள் பூசி, சந்தனம் குங்குமம் இட வேண்டும். குழந்தைக்கு அத்தை, கைக்கு பொன் காப்பும், காலுக்கு வெள்ளி காப்பு, மரவட்டை காப்பும் வாங்க வேண்டும். முதலில் கைக்கும் காலுக்கும் வேப்பிலை காப்பு போட்டு, பிறகு பொன் காப்பும், வெள்ளிக் காப்பும் போட வேண்டும்.
பெயர் சொல்லுதல்:-
பிறகு குழந்தையின் வலது காதில் பெயரை மூன்று முறை சொல்லி, ஒரு மோதிரத்துடன் குழந்தையை நெல்லில் விட வேண்டும். பிறகு குழந்தையின் தாய் அந்த மோதிரத்துடன் குழந்தையை எடுத்துக்கொண்டு, அதன் வலது காதில் பெயரை மூன்று முறை சொல்லி, குழந்தையை அத்தையிடமோ பாட்டியிடமோ கொடுக்க வேண்டும்.
அவர்கள் குழந்தையை "கௌரி கல்யாணம்"பாடி, தொட்டிலில் கிழக்கு மேற்காக விட வேண்டும். பிறகு தாலாட்டு பாட வேண்டும்.
வெள்ளை கடலை சுண்டல் செய்து தொட்டிலில் வைக்க வேண்டும். பிறகு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அழைத்து அவர்களுக்குத் தாம்பூலம் கொடுக்க வேண்டும்.
திருஷ்டி சுற்றுதல்:-
பிள்ளையின் பெற்றோருக்கு மரியாதை பண்ண வேண்டும். காப்பு போட்ட அத்தைக்கும் மரியாதை பண்ண வேண்டும். கடைசியில் ஆரத்தி எடுக்க வேண்டும்.
குழந்தைக்கு தினமும் திருஷ்டி சுற்ற வேண்டும். ஐந்து மாதம் வரை வெளியில் இருந்து வரும் எவரும் கை கால் அலம்பாமல் குழந்தையை தூக்கக்கூடாது. குழந்தையை ஒற்றைப்படை மாதத்தில் கொண்டுவந்து பிள்ளை வீட்டில் விட வேண்டும்.
இதுவரை எனக்குத் தெரிந்தவற்றை இதில் எழுதியிருக்கிறேன். இதில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். இதில் பலவற்றை நான் எழுதாமல் விட்டும் இருக்கலாம். இதை எழுத எனக்கு வாய்ப்பளித்த என் மரியாதைக்குரிய மாமா திரு.லட்சுமிநாராயணன் அவர்களுக்கு என் நன்றியை எப்படி தெரிவிப்பது என்று தெரியவில்லை. இதில் உள்ள குறைகளை பொறுத்தருள எல்லோரையும் வேண்டுகிறேன்.