ஆயுர் வேதம் தூக்கம் - தடுக்க வேண்டாம் இரவுதான் தூங்குவதற்கு ஏற்றவேளை அதற்குக் காரணம் இரவில் தமோ குணத்தின் ஆதிக்கமே புலன்கள் நாள் முழுவதும் வேலையில்

ஆயுர் வேதம்

தூக்கம் - தடுக்க வேண்டாம்

இரவுதான் தூங்குவதற்கு ஏற்றவேளை. அதற்குக் காரணம் இரவில் தமோ குணத்தின் ஆதிக்கமே. புலன்கள் நாள் முழுவதும் வேலையில் ஈடுபட்டு இரவில் களைப்படைவதால் தம் வேலைகளை செய்யும் சக்தி குன்றுவதால் உறக்கம் ஏற்படுகிறது. போதுமான அளவு தூக்கம் கிடைத்ததும் மறுநாள் காலை அவைகள் தெளிவடைவதால் புலன்களின் செயல்கள் மறுபடியும் சுறுசுறுப்படைகின்றன. இப்படி இயற்கையாக நடைபெறும் விஷயத்தில் கொடுத்த வேலையை நிறைவேற்ற வேண்டுமே என்ற பயத்தினால் பலர் தூக்கத்தை அடக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தூக்கத்தை கட்டுப்படுத்தும் வழக்கத்தை கொண்டவர்களுக்கு கீழ்காணும் உபாதைகள் ஏற்படும்.

1.மயக்கம், 2. தலை - கண்களில் பாரம், 3. சோம்பேறித்தனம், 4. கொட்டாவி 5.உடல்வலி

இவற்றைப்போக்க தூக்கவும் உடலைப் பிடித்து விடுவதும் நல்லது. உறக்கத்திற்குக் காரணம் கபத்தின் மூலம் துவாரங்கள் அடைபடுவதாலும், மேல்குறிப்பிபட்டபடி களைப்பினால் புலன்கள் தம்தம் பொருட்களுடன் தொடர்பிலிருந்து கொள்வதாலும், மனிதனை உறக்கம் தழுவிக்கொள்கிறது. அப்பொழுது எல்லாப் புலன்களும் தம்தம் பொருட்களிலிருந்து விலகினாலும் மனது இந்தப் புலப் பொருட்களுடன் தொடர்பு விடாமலிருந்து கொள்வதால் மனிதன் பலவகையான கனவுகளைக் காண்கிறான். இன்பம், உடல்வளர்ச்சி, வலிவு, அறிவு, நீண்ட வாழ்வு இவை அனைத்தும் நல்லுறக்கத்தைச் சார்ந்தவை இவைகளுக்கு எதிரான துன்பம், உடல் இளைப்பு, வலிவின்மை, அறிவின்மை, இறப்பு ஆகியவை தூக்கத்தை இழந்தவர்க்கு ஏற்படுபவை. தகாத காலத்தில் உறங்குவதும், மிதமில்லாமல் உறங்குவதும், உறங்காமலே இருப்பதும் மரணபயத்தைத் தோற்றுவிக்கும் மிகக் கொடிய அடையாளங்களைக் காட்டும் காட்சிகளுடன் கூடிய இரவான காலராத்திரியைப்போல் உடல்நலத்தைக் கெடுப்பதுமின்றி ஆயுளையும் குறைத்துவிடும்.

புலனடக்கமுடையவர்களின் அறிவு, தவத்தினால் தெளிவடைவதுபோல், முறையான உறக்கம் உடலுக்கு சுகம் தரும். ஆயுளைவளர்க்கும். இரவில் உறங்காமலிருப்பதால் உடலில் வறட்சி ஏற்படும். பகல் உறக்கம் கபத்தை வளர்க்கும் அமர்ந்த நிலையில் அசைந்து கொண்டே தூங்குவது அதிக வறட்சியோ, கபத்தையோ தோற்றுவிக்கிறது. ஆனி, ஆடி மாதங்களான கோடைக்காலத்தில் வாதம் உடலில் குவிந்திருப்பதாலும், உத்தராயணம் என வழங்கும் தைமுதல் ஆனி வரையுள்ள ஆறு மாதங்களாகிய ஆதான காலத்தின் இயல்பாலும், வறட்சியாலும் இரவு நேரம் குறைவாக இருப்பதாலும்ட பகல் நேர்த்தில் உறங்குவது நலம் மற்ற பருவங்களில் பகலில் உறங்குவதால் கப பித்தங்கள் வளரும்.ஆனால் அதிகப்படி சொற்பொழிவாற்றுபவர், வாகனமேறி சவாரி செய்பவர், வழி நடப்பவர், மது அருந்துபவர், பாரம் சுமப்பவர், தொழிலாளி, கோபம், மனவருத்தம், அச்சம் இவற்றால் களைத்தவர், சுவாசம், விக்கல், கழிச்சல் இவற்றால் துன்புற்றவர், வயது முதிர்ந்தவர், குழந்தைகள், வலிவு இழந்தவர், இளைத்தவர், நாவறட்சி, வயிற்றுவலி, சிரணமற்றவர், அடியுண்டு வருந்துகிறவர், பித்துப் பிடித்தவர் ஆகியோர் பகலில் வழக்கமாக உறங்குபவர் ஆகிய இவர்கள் பகலிலும் உறங்கலாம், அதனால் தாதுக்கள் சமநிலையை அடையும், கபம் வளர்ந்து உடல் உறுப்புகள் வளர்ச்சி பெறும்.

அதிக கொழுப்புள்ளவர்கள், கபச்சீற்றம், நாள் தோறும் எண்ணெய் குளிப்பவர்,இவர்கள் பகலில் தூங்கக்கூடாது. நஞ்சு தீண்டப் பெற்றவனும், தொண்டை, நோய் உள்ளவனும் இரவிலும் உறங்கக்கூடாது. தகாத காலத்தில் உறங்குவதால் ஹலீமகம் என்னும் காமாலை நோய், மயக்கம், உடல் அசைக்க முடியாமற் போதல், உடல்பளு, காய்ச்சல், தலைசுற்றல், அறிவிழத்தல், வியர்வை வெளிவராதிருத்தல், பசிகுறைதல், வீக்கம், சுவையின்மை, மனப்பிரட்டல், நாட்பட்ட ஜலதோஷம், ஒற்றைத் தலைவலி, தினவு, குடல்வலி, குஷ்டம், சிறுகட்டி, இருமல், சோம்பல், தொண்டைநோய், விஷம் தீண்டப்பட்டவனுக்கு விஷத்தின் செயல் அதிகரிப்பது போன்ற தீமைகள் ஏற்படும்.

வழக்கத்திற்கு மாறாகக் கண்விழித்தால் காலையில் உணவு உண்ணுவதற்கு முன் இரவில் தூங்கவேண்டிய நேரத்தின் பாதியளவு உறங்கலாம். குறைந்த உறக்கமுள்ளவனுக்கு பூரண உறக்க இன்பத்தைப் பெற கீழ்காணும் வழிகள் உதவும்.

1.பால், கரும்புச்சாறு, சிறிதளவு பாலில் அதிகம் சேர்த்து பக்வம் செய்யப்படும் தயிர், எருமைத்தயிர், 2. வெல்லம், மாவு இவற்றால் செய்யப்பட்ட பொருட்கள், அரிசி உணவு, உளுந்து, 3. எண்ணெய் குளித்தல், உடற்பூச்சு, 'சிரோவஸ்தி' என்னும் தலையில் எண்ணெய் நிரப்பும் சிகித்ஸை, காதுகளில் எண்ணெய் நிரப்புதல், கண்களுக்கு எண்ணெய் கட்டுதல், தலை, முகம் இரண்டிலும் வாசனை பொருட்களைப் பூசுதல், தென்றல் காற்றில் மணம் வீசும் இடத்தில் இன்பம் பயக்கும் படுக்கையில் படுத்தல், உடலுக்கு இன்பம் தரும்படி பிடித்துவிடுதல்.

4. செய்வன திருந்தச் செய்து அமைதியுடனிருத்தல், மனதிற்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடுதல்.

உறக்கம் ஏழுவகையாக ஆயுர்வேதம் கூறுகிறது.

1. இயற்கை. 2. நோய். 3.மானசீக துக்கம், 4.உடல் உபாதை, 5. கபத்தின் காரணமாக உணர்வை அழிக்கும் நாடிகள் அடைபடுதல் 6. எதிர்பாராத காரணங்கள், 7. மிகுதியான தமோகுணம்.

இவையில் முதலில் குறிப்பிட்டது உடலை நிலைநிறுத்த உதவுகிறது, இறுதியில் கூறப்பட்டடது பாபத்தினால் ஏற்படுவது. மற்றுள்ளவை அனைத்தும் நோய்க்கு காரணமாகின்றன.

மாலையில் சிறிதளவே இதமான உணவு உட்கொண்டு அமைதியான மனத்துடன் சுத்தமாக இருந்து, ஆண்டவனை நினைத்துக்கொண்டு, படுக்கைக்குச் செல்லவேண்டும், படுக்குமிடம் சுத்தமாகவும், ஜனக் கூட்டமில்லாததாகவும், தனக்கு வேண்டிய இரண்டு மூன்று பணியாட்களை மட்டும் கொண்டதாகவும் இருக்கவேண்டும்.

தக்க தலையணையுடன், நன்கு பரப்பப்பட்டு, மேடுபள்ளமில்லாத, முழங்கால் உயரமுள்ள, மெத்தென, சுபமான படுக்கையில் படுக்கவேண்டும். கிழக்கு அல்லது தெற்கில் தலைவைத்து, பெரியோர்கள் பக்கம் கால்நீட்டாமல், இரவின் முற்பகுதியிலும், பிற்பகுதியிலும் அறத்தையே நினைத்து காலத்தைக் கழிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்க:
- ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, நசரத்பேட்டை-602 103.
Tel : (044) 26272162, 26491823, Email: sjcac@vsnl.net