இறைவன் அளப்பதற்கு அரியன். புலன்களுக்கும் தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டவன். விண்ணுலகிலும் அதற்கு அப்பாலும் உள்ள தேவர்களும் மற்றவர்களும் தேடித் தேடி அலைந்து, திரிந்து காண முயன்றாலும் அவர்களுடைய கண்களுக்குத் தென்படாதவன். பூவுலகில் மக்கள் செல்வத்தாலும் கல்வியாலும் இறைவனை அடைந்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால், செல்வத்தாலும் கல்வியாலும் இறைவனை அடைந்து விட முடியாது. ஏன், இவற்றிற்கு மேலே பல படிகளுக்கு அப்பாலுள்ள அறிவு எனும் அறிவு என்கிற சாதனைப் படிகளிலிருந்து இறைவனைக் காண முயல்பவர்கள் தோல்வி அடைவார்கள். செல்வமும், கல்வியும் ஆணவமலத்தை வலுப்படுத்துகின்றன. அகங்காரத்தை வளர்க்கின்றன. இவற்றின் வழியாக இறைவன் என்கின்ற உண்மையை அடைய முடியாது. ஆனால் தேவை அருட்கண்கள் என்பார்கள். திருவட்சக்தி உள்ளத்தில் பதிந்தமாத்திரத்தில், இறை உணர்வு தோன்றத் தொடங்கும் என்பார்கள். சிந்தனைகள் மாற்றம் பெறுகின்றன. உடலும், மனமும், மற்ற கருவிகளும், இருள் நீங்கியது போன்ற உணர்வினைப் பெறுகின்றன. அகக்கண்கள் திறக்கின்றன. அறிவாலான சோதி ஒன்று, உள்ளத்தில் தோன்றி, விவரிக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கின்றது.
"அருளால் எவையும்பார் என்றான் - அத்தை
அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்
இருளான பொருள்கண்ட தல்லால் - கண்ட
என்னையும் கண்டிலன் என்னேடி தோழி"
என்பார் தாயுமானவர்.
இறைவனின் அருளை முழுமையாகப் பெற்றவர் திருநாவுக்கரசர். இறைவன் அவரைப் பல துன்பங்களுக்கு ஆளாக்குகின்றான். திருநாவுக்கரசர் பரம்பொருளிடம் பற்றுக்கொண்டவராக மாறாத குறிக்கோளுடன் நீங்காத அன்புடையவராக இருப்பதன் காரணமாகத் திருமாலும், நான்முகனும் காணாத சோதியைத் தம்முள்ளேயே கண்டு கொள்கின்றார்.
"தேடிக் கண்டு கொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொனாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்".
என்று திருநாவுக்கரசர் தான் பெற்ற பேரின்பத்தில் மிகுந்த பெருமை கொள்கின்றார்.
காரைக்கால் அம்மையாரும் அதே நிலையில் இருப்பவர். இறைவனுடைய அருளின் தன்மையை முற்றிலும் அறிந்தவர் அவர். அவனுடைய அருளால்
திருமாலும், நான்முகனும் காணாத ஒருவனைத்தான் கண்டு கொண்டதை நினைத்து நினைத்துப் பரவசப்படுகின்றார். பிறருக்கு அரியதாக உள்ள ஒன்று தனக்கு எளிதாகக் கிடைத்து விட்டதே என்று எண்ணி எண்ணி வியப்படைகின்றார்.
"இன்று நமக்குஎளிதே, மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றும் ஒர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு". (அற்புதத் திருவந்தாதி)
அருளாளர்கள் இறைவனுடைய அருளை எளிதாகப் பெறக்கூடிய முழுமையான தகுதி பெற்றவர்கள். இறைவன் அள்ளித் தருவது அருள். அந்த அருள் இன்பத்திலே திளைப்பதே நம்முடைய கோட்பாடாக அமைய வேண்டும். அருள் நமக்கு வெறுமனே கிடைத்துவிடுமா? நாம் அதற்கு ஏதாவது செய்ய வேண்டுமா என்கிற கேள்விகள் எழலாமல்லவா? காரைக்கால் அம்மையார் இதை எண்ணிப் பார்க்கின்றார். தனது நெஞ்சை நோக்கிப் பேசுகின்றார். "நெஞ்சே இதுவரை c அறியாமல் இருந்தாய், இன்று உனக்கு ஈசன் அருள் கிட்டிவிட்டது. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? c என்ன தவறு செய்திருந்தாலும் இறைவனிடம் உன்னுடைய அன்பைப் பெருக்கினாய் அவனுடைய அருளாகிய பெரும் சேமம், நன்மை, பாதுகாப்பு எல்லாம் உனக்குக் கிட்டிவிட்டன. ஆகவே, c பெரு மகிழ்ச்சி பெற்ற நிலையில் இருக்கின்றாய். ஆனால், இத்துடன் போதும் என்று நிறுத்தி விடாதே. ஊரெல்லாம் பிச்சைக் கோலத்துடன் திரிந்து வருபவன் இறைவன். பிறர் தொடாத எலும்பினை மாலையாகக் கோர்த்து அணிந்து வருகின்றான். அவனைச் சாதாரணம் என்று நினைத்து விடாதே. அவன் மீது மேலும் மேலும் உனது அன்பைப் பெருகச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாகத்தான் இறைவனுடைய அருளை c தொடர்ந்து பெறுவாய்" என்று காரைக்கால் அம்மையார் தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுகின்றார்.
"மகிழ்தி மடநெஞ்சே!மானிடரின் நீயும்
திகழ்தி;பெருஞ்சேமம் சேர்ந்தாய்;- இகழாதே
யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு". (அற்புதத் திருவந்தாதி)
இந்த அன்பைப் பற்றி நாம் சற்று சிந்திக்க வேண்டும். நாம் நமது குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பை வைக்கின்றோம். நமக்குத் தெரிந்தவர்களிடம் பாசத்தைக் கொட்டுகின்றோம். மனைவி, மக்கள், நண்பர்கள் என்றவாறு கூறிக்கொண்டு அவர்கள்மீது உயிரையே வைத்திருக்கிறோமென்று பேசிக்கொள்கின்றோம். இந்த உணர்வினால் வரக்கூடிய அனுபவம் அன்பாகுமா? சற்று ஆழ்ந்து நோக்கினால் அது அன்பாகாது என்று புலப்படும். இந்த உறவிலே ஆசை இருக்கும், வேட்கை இருக்கும், நமக்குத தெரியாமலேயே பிரதிபலன்களை எதிர்பார்க்கும், நோக்கமும் பொதிந்து கிடக்கும். எல்லாவற்றிற்கும் மேலாகத் தான்
என்றும், தனது என்றும் வைத்துப் பார்க்கும் தன்மை இருக்கும். ஆகவே, சுயநலம் இருக்கும். "மனிதர்கள் இச்சையுள்ளே வைப்பர்" என்கிறார் திருமூலர். புணர்ச்சிக் காலத்தில் இல்லாளுடன் ஒருவன் அன்பு கொண்டு உணர்ச்சி நிரம்பி இருக்கும் நிலை அன்பு என்று கூறப்பட்டாலும் அது சுயநலத்திலே தோன்றிய அன்பாகுமேயழிய உண்மையான அன்பாகாது. உண்மையான அன்பில் தியாகம் இருக்கும், ஆசை இருக்காது. பலாபலன்களை எதிர்பார்க்கும், குறிக்கோள் இருக்காது. பயன்கருதாமல் அன்பு செய்வதே ஒப்பற்றதாகும். மனைவி, மக்கள், உறவினர் நன்பர்கள் மீது வைப்பது மட்டும் அன்பன்று. தன்னுடன் தொடர்பு இல்லாதவர்கள் மீதும் வைக்கும் அன்பே உண்மையான அன்பாகும். இந்த அன்பு தெய்வீகத் தன்மையுடையது. மனிதனை மனிதனாக்குவது. இத்தகைய அன்பு உயிர்களிடையே இயல்பாகவே இருக்கின்றது.
ஆனால், மும்மலங்களாகிய திரை உண்மையை மறைக்கும்போது இந்த அன்பானது ஆசையாக மாறிவிடுகின்றது. உண்மையில் எவ்வாறு அருள் இறைவனுடைய இயல்பாகின்றதோ, அவ்வாறே உயிருடைய இயல்பாக அன்பும் அமைந்துள்ளது. இதைத் தெரிந்து கொள்ளாதவர்கள் அன்புக் கண்களால் உலகினைப் பார்க்க மாட்டார்கள். இவர்கள் எலும்பின் மீது தோல் போர்த்தப்பட்ட உயிரற்ற, பயனற்ற, வெற்றுடம்பு மட்டுமே என்கிறார் திருவள்ளுவர்.
"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு".
உயிர்களிடையே தன்னலமற்ற அன்பு வைப்பது இறைவனுடைய அருளுக்குச் சமானமாகும். அத்தகைய அன்பு மனிதர்களை இறைவனுக்கு அருகிலேயே அழைத்துச் செல்லும். அன்பு வளர வளர வளர இறைத் தன்மையும் வளரும். இறைவன் உயிர்கள் உய்யும் பொருட்டு உடலையும், உடலால் பெறக்கூடிய அனுபவங்களையும், இன்ப, துன்பங்களையும் அளிக்கின்றான். உயிர்கள் வினைப்பயன்களை அனுபவிக்க வேண்டி, இறப்பையும், பிறப்பையும் அமைத்துக் கொடுத்துள்ளான். இறப்பு, பிறப்பு எனும் சூழலில் உயிர்கள் சிக்கித் தூண்டப்பட்டாலும், அவைகளை உய்விக்கும் நியதியாகவே இது அமைகிறது. அது எப்படி இருந்தாலும் அன்பு வழியில் வாழ்க்கை பிறவிப் பயனை அன்பின் வழியே அடையலாம் என்கின்றார் திருமூலர். இறைவன் அன்புள்ளம் கொண்ட உயிர்களிடையதோன் புகுந்து, கலந்து நின்று பிறவித் துன்பத்தை நீக்குகின்றான். இதைக் கோடிட்டுக் காட்டும் திருமந்திரம் பின்வருமாறு -
"இன்பப் பிறவிக் கியல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல எண்ணினும்
அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த
முன்பப் பிறவி முடிவது தானே". (திருமந்திரம் - 281)
இறைவனிடத்தில் வைக்கும் அன்பு எல்லாவற்றையும் விட மேலானது.
ஆனால், இந்த அன்பும் தன்னலமற்றதாக இருக்க வேண்டும். மாசற்றதாகவும், தூய்மையானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும். இத்தகைய அன்பு உயிர்கள் மீதெல்லாம் பொருந்தி இறைவனை நாடிச் செல்கின்றது. உலகத்தில் ஆசா பாசங்களின் அடிப்படையில் தோன்றும் அன்பானது ஐம்புலன்களின் சக்திக்குட்பட்டு இயங்குகின்றது. ஆசை வடிவிலே நிற்கின்றது. இறைவனின் மறைப்புச் சக்திக்கு உட்பட்டது. ஆனால், ஐம்பொறிகளின் தொடர்பு அறுபட்ட நிலையில் எழும் அன்பானது இறைவனுடைய அருளுக்குப் பாத்திரமானது. அத்தகைய அன்பு உள்ளத்தில் இறைவன் தனது திருவடியைப் பதிக்கின்றான். அவனுடைய அருட்சக்தி அந்த உள்ளத்தை ஏற்றுக் கொள்ளுகின்றது. அந்த அருட்சக்தியே அவ்வுள்ளத்தை ஒளிமயமாக்குகின்றது. அதுவே அந்த உள்ளத்தோடு பரம்பொருளையும் சேர்க்கும். அவ்வுள்ளங்களில் சிவபெருமான் "அன்பினில் விளையும் ஆரமுதாய்" விளங்கி அருள் புரிவான்.
"அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணிய டேற்க இசைந்தன
துன்புறு கண்ணியைந் தாடுந் துடக்கற்று
நன்புறு சிந்தையை நாடுமின் நீரே". (திருமந்திரம் - 282) ¦
அன்பை யாரிடம் வைப்பது? சிவபரம்பொருள் மீது வையங்கள் என்கிறார் திருமூலர். அவன் பொன்னிலும் பிரகாசமானவன். செக்கர் மேனியன். அவனுடைய திருமேனி செக்கர் வானத்தைப் போலச் சிவந்திருக்கும் "சிவனெனும் பெயர் தனக்கே உடைய செம்மேனி எம்மான்" என்கிறார் அப்பர் சுவாமிகள். உடலெலாம் திருநீறு பூசிக் கொண்டவன். செக்கர் வானாகிய செஞ்சடையிலே இறைவன் பிறையை அணிந்திருக்கின்றான். அது மிகவும் இளம்பிறை. ஆயினும், பளிச்சென்று பிரகாசிக்கின்றது. முதலில் பிறைக்கு இறைவன் தண்டனை வழங்கியிருந்தான். பின்னர்ப் பெருங்கருணையுடன் பிறையைத் தனது சடையிலே சூடிக்கொண்டான். வெண்ணீறு சுடுகாட்டுப் பொடியாகும். எல்லாம் முடிந்த பிறகு எஞ்சி நிற்கும் "அந்தம் ஆதி"யை சுட்டிக் காட்டுகின்றது. இந்த வெண்ணீற்று ஒளியில் விளங்கும்ள சிவபெருமானுடன் பிரியாது பின்னிக் கிடக்கம் அன்பே எல்லாவற்றிற்கும் மேலானதாகும். அன்பே உருவான சிவபிரானை நாடுங்கள், அவனிடம் அன்பை வையுங்கள், அவனருளைப் பெறுங்கள் என்கிறார் திருமூலர்.
"பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துள்ளிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே". (திருமந்திரம் - 271)
இறைவனை அடையப் பல வழிகள் உண்டென்பர் பெரியோர். இவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று முறைப்படுத்தப்பட்டுள்ளது. திருமூலரே வேறொரு இடத்தில் தவமும், அறமும் மேற்றுணையாமே என்கின்றார்.
வாழ்க்கையிலே கடைபிடிக்க வேண்டிய அன்பும், அறமும் மனிதனைப் பக்குவப்படுத்துகின்றன. புலனடக்கம் செய்து மனதைக் கட்டுப்படுத்தி உடலால் அடையப்பெறும் இன்பங்களைக் குறைத்து அல்லது தவிர்த்து, கடுமையான துறவறம் பூண்டு யோக சாதனை மூலமாகவே இறைவனை அடைதல் சாலச் சிறந்தது என்னும் கொள்கையுடையவர்கள் உண்டு. திருமூலர் அருளிச் செய்துள்ள திருமந்திரத்தில் முக்கியமான பகுதியான தந்திரம் யோக நெறிகளை விரிவாக எடுத்துச் சொல்லுகின்றது. திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் கடுமையான யோகம் புரிந்து வாழ்ந்த யோகியானதால் அட்டாங்க யோகம் என்கின்ற நெறிக்கு முக்கியமான இடத்தைத் தருகின்றார். அதே நேரத்தில் அவர் அன்பைப் புறக்கணிக்கவில்லை. அன்பு இன்றியமையாதது என்று சொல்லுகின்றார். கடுமையான தவம் செய்துதான் இறைவனை அடைய முடியும் என்பதன்று.
எலும்பை விறகாக்கும் வகையிலும், ஊனுடலைத் தவக்கனலில் வாட்டும் வகையிலும் இறைவனை நாடினாலும் அந்த முயற்சிக்கு அடிப்படையாக உள்ளத்திலே அன்பு இல்லையெனில் ஒரு பயனும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இறைவன் விரும்புவது அன்பு. அந்த அன்பினால் இறைவன் தொண்டரை உருக்கவல்லவன். அன்பினால் உருகி உருகி மாணிக்கவாசகர் சிவமானார். இறைவனைப் அடைய அன்பில் உருகி அழ வேண்டும். அரற்ற வேண்டும். இராப்பகல் இறைவனை பணிந்தேத்த வேண்டும். அகமுருகி இறை நினைவை, நிரப்பி இறைவன் பால் தன்னை முழுதும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். "நானும் அப்படிச் செய்துள்ளேன். அதையும் நீங்கள் செய்யுங்கள். என்போல நீங்களும் அன்பால் உருகி இறைவனை ஏற்றினால் ஞானத்தை அடையலாம். இல்லாவிட்டால் இறைவனை அடைய முடியாது" என்கிறார் திருமூலர்.
"என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை யெய்தஒண் ணாதே". (திருமந்திரம் - 272)
ஆதியும், அந்தமும் இல்லாதவன் இறைவன். ஊழிதோறும் ஊழி ஐந்தொழில்களை விடாது புரிந்து கொண்டு வருகின்றான். சிவபெருமான் கொன்றை மலரைச்சூடி இருக்கின்றான். அவனுக்கு அது மிகவும் பிடித்தமான மலர். தன்னுடைய அருளினால் தேனையும் மிக்க இன்பம் தரும் சக்தியை ஒரு பக்கத்தில் உடையவனாக இருக்கின்றான். அவனுடைய ஒளி பொன்னைப் போல இருக்கின்றது. ஆனால், இத்தகைய இறைவன் அடைய முடியாதவன் என்று ஐயுற வேண்டாம். அவனிடம் அன்பு வைப்பவர்கள் மீது அருள் மழை பொழிகின்றான். "ஆர்வம் உடையவர் காண்பார் அறந்தன்னை" என்கிறார் திருமூலர். இறைவன் அவ்வாறு தன்னிடம் அன்பு செய்பவர்களுக்கு வேண்டியவற்றைத் தருகின்றான். ஏனென்றால், அவன் அன்பு வடிவமாக இருக்கின்றான். அவனிடம் யார் அன்பு கொள்கின்றார்களோ அவர்களிடம் நிலையாக நின்று கொண்டு அருள்பாலிக்கின்றான். அவர்களுக்கு வழி துணையாகவும் இருக்கின்றான்.
"தானொறு வண்ணம் என் அன்பில் நின்றானே" என்கிறார் திருமூலர். இறைவனுடைய நினைப்பில் தங்களுடைய முழுச் சிந்தனையை வைப்பவர்களுக்குச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் சோதியாக தோற்றமளிக்கின்றான்.
"அன்பினுள் ளான்புறத் தானுட லாயுள்ளான்
முன்பினுள் வான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகிஅமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே". (திருமந்திரம் - 279)
இறைவன் பேரின்ப வடிவானவன். சீவர்களுடைய இன்பத்தில் பொருந்தி மகிழ்கின்ற அன்பு வடிவானவன். இராப்பகல் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிவு செய்வார்களை நன்கு அறிவன். அவர்களிடையே வந்து அவர்கள் உள்ளத்திலேயே உறைந்து கொள்வான். ஆனால், இதை யாரும் அறிந்து கொள்வதில்லையே! அவனை விட்டு விட்டு நினைப்பதில் பயனில்லை. கிடைப்பதற்கரிய ஒளி வடிவாகிய இறைவனை சிக்கெனப் பற்றிக் கொண்டு அவன் வழியே செல்ல வேண்டாமா? அவ்வாறு செல்வதன் மூலம் எல்லையில்லாப் பெருமையை அடைய வேண்டாமா? அவ்வாறு நீக்கமற நினைந்து அவனுடன் ஒன்றி இருப்பதே இனிமையான நீராடல் ஆகுமல்லவா? இவ்வாறு தான் செய்தவாறு மற்றவரையும் இறைவனைச் சிக்கெனப்பிடித்துக் கொள்ளுங்கள் என்று அழைக்கின்றார் திருமூலர்.
"விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாய பெருமையை
எட்டுமென் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சன மாமே". (திருமந்திரம் - 289)
மாணிக்கவாசகர் இறைவனைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டவர். தன் எண்ணங்களையெல்லாம் இறைவனிடம் அர்ப்பணித்துத்தன் கண்களை அழகிய திருவடிகளாகிய மலர்களுக்கு அடிமையாக்கித் தனது வாக்கை இறைவனுடைய நாமத்திற்கு நிழலாக்கி மாணிக்கவாசகர் இறைவனைச் சிக்கென பிடித்துக் கொள்கின்றார். அம்மையப்பன் ஓர் ஒப்பிலாத மணி, அன்பினில் விளைந்த ஆரமுது. நானோ புழுவிற்கும் கீழானவன். அஞ்ஞானத்தில் மூழ்கி நிற்பவன். ஆயினும் இறைவன் எனக்குச் சிவபதத்தை அளித்தான். செல்வன் சிவபெருமான். அவனை சிக்கெனப் பிடித்துக் கொண்டு விட்டேன் என்கின்றார்.
"அம்மையே அப்பா ஒப்பு இலா மணியே
அன்பினில் விளைந்த ஆர் அமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்து அலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவ பதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே". (திருவாசகம்)
இறைவனை ஒருவர் சிக்கெனப் பற்றிக் கொண்டால் அவர் வேண்டியவற்றையெல்லாம் இறைவன் வாரி வழங்குகின்றான். மும்மலங்களை அழிக்கின்றான். அருட்கண்ணை விழிப்பிக்கின்றான். அன்பர்களுடைய உள்ளத்தில் சிவ ஒளியை பெருகச் செய்வான்.
"அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே". (திருமந்திரம் - 277)
இறைவனிடம் மக்கள் பலவிதங்களில் அன்பு வைக்கின்றனர். இம்மையிலும் மறுமையிலும் இறைவனருளால் பலவிதமான நன்மைகளைப் பெறுகின்றனர். ஆனால், உண்மையான அனபர்கள் இறைவனிடமிருந்து இத்தகைய நன்மைகளை நாடுவதில்லை. அவற்றை அவர்கள் வெறுப்பார்கள். அன்பிலே ஊறி நிற்கின்ற அடியவர்கள் இறைவனிடமிருந்து ஒன்றுமே வேண்டுவதில்லை. அவர்கள் வீட்டுப் பேறினைக் கூடப் பெரிதாக நினைப்பதில்லை. அத்தகைய பேற்றினை அடைய வேண்டும் என்கின்ற ஆசையும் அவர்களிடம் இருப்பதில்லை. உலகில் மக்கள் பல பொருள்களைச் சேர்த்து வாழ வேண்டுமென்று விரும்புகின்றார்கள். ஆனால், இறைவனுடைய உண்மை அன்பர்கள் பொருட்செல்வத்தை நாடுவதில்லை. அதனால் கிடைக்கும் இன்பத்தை விரும்புவதில்லை. இன்பத்திற்குப்பிறகு துன்பமும் வரும் என்று அவர்கள் நன்கு உணர்ந்தவர்கள். அவர்கள் இன்ப துன்பங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எல்லாவற்றையும் சமதிருஷ்டியோடு பார்ப்பார்கள். இவர்கள் வேண்டுவது இறைவனுடைய அன்பு. இறைவன் மீது அன்பு வைப்பதையே பேரின்பமாகக் கருதுவார்கள். இவர்கள் பற்றற்றவர்கள். அவர்கள் இறைவனை வேண்டி வணங்குவது உயர்ந்த அன்பின் அடிப்படையில் அமைகின்றது. சேக்கிழார் பெருமான் இத்தகைய திருத்தொண்டர்களின் அன்பினை வெகுவாகப் புகழ்ந்து பாடுகின்றார்.
"கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்,
ஓடும் செம்பொனும் ஓக்கவே நோக்குவார்,
கூடும் அன்பினிற் கும்பிட லேஅன்றி
வீடும் வேண்டா விறவின் விளங்கினார்".
(பெரிய புராணம், திருக்கூட்டச் சிறப்பு, 8)
ஆகவே, அன்பு மிகப் பெரிது. தவம், யோகம் போன்றவைகளைவிடப் பெரிது, அன்பினால் உருகினால் சிவத்தை அடையலாம். அவ்வாறு முதல்வனை நாடுங்கள். நானும் சிவத்தை அன்பினாலேயே நாடினேன். பெரும் கருணையோடு சிவபெருமான் என் அன்பை ஏற்று உருக்கித்தன் அன்பையே தலையாக நிற்கச்
செய்தான். மீண்டும் மீண்டும் பிறவிக் கடலிலே மூழ்கக்கூடிய நிலையை நீக்கி வினைகளைச் சிறிது சிறதாகக் குறைத்துக் கொண்டு சாவை நோக்கிச் செல்வதைவிட இறவாமையை நாடுவதே மேலாகும். அதை அன்பினால் செய்வதே சாலச் சிறந்தது. அன்பு அறிவைத் தருகின்றது. ஒளியைத் தருகின்றது, மும்மலங்களை அழிக்கின்றது. அன்புள்ளம் படைத்தவர்கள் சிவமாம் தன்மையைப் பெறுகின்றனர். அன்பிற்கும், சிவத்திற்கும் இடைவெளி இல்லை. அன்பே சிவம்.
"அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே." (திருமந்திரம் - 270)