எல்லாம் வல்ல இறைவன் வீற்றிருக்கும் கைலையில் எப்போதும் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் நந்தி தேவனிடம் பயின்று அவருடைய திருவருளைப் பெற்ற நான்மறை யோகிகளில் ஒருவர் தென்னாட்டில் பொதிகை மலையில் வாழ்ந்து வந்த அகத்திய முனிவரைத் தரிசித்து அவரோடு சில காலம் தங்கி இருக்க எண்ணம் கொண்டு தெற்கு நோக்கி வந்தார். காவிரிக் கரையில் சாந்தனூர் என்னுமிடத்தில் இந்த யோகியார் ஆடு மேய்க்கும் இடையன் ஒருவனது உடலைச் சுற்றி பசுக்கூட்டங்கள் கண்ணீர் விட்டுப் புலம்புவதைக் கண்டார். அவற்றின் மீது அளவற்ற கருணை கொண்டவராக, அவற்றின் துன்பத்தை நீக்கும்பொருட்டு, சிவ யோகியார் தான் பெற்ற அட்டமா சித்திகளைப் பயன்படுத்தித் தனது உடலை ஒரு இடத்தில் மறைத்து வைத்து, தனது உயிரை இடையனது உடலில் பாய்ச்சித் திருமூலராய் எழுந்தார். பசுக்களும் துன்பம் நீங்கி ,அவரைச் சற்றி களிப்பினால் துள்ளி மகிழ்ந்தன. பின்னர் அந்தி நேரத்தில் பசுக்கள் தத்தம் மனைக்குச் செல்ல சிவயோகியார் அவற்றின் பின்னே சென்று ஊர் எல்லையில் நின்றார். திருமூலருடைய உடம்பினைக் கண்ட அளவில் தனது கணவர் என்று நினைத்துக் கொண்ட இடையனது மனைவியார் அவரைப் பற்றி மனைக்கு கொண்டு செல்ல முயன்றார். இதற்குத் திருமூலநாயானர் இசையார். பயந்து மயங்கிய மனைவியாரும், என்ன செய்தீர் என்று மனம் தளர்ந்து வருந்தினார். அப்போது யோகியார், "இங்கு உனக்கு என்னுடன் தொடர்பு ஒன்றுமில்லை" என்று மறுத்து ஒரு பொது மடத்தினுள்ளே போய்ப் புகுந்தார். மறுநாள் தன் மறைத்து வைத்திருந்த தமது உடலைத் தேடினார். அது வைத்த இடத்தில் காணப்படவில்லை. தனது மெய்ஞ்ஞான சிந்தையில் இதனை ஆராய்ந்த சிவயோகியார் இதுவும் இறைவன் அருளே என உணர்ந்தார். இடையனது மனைவியோ யோகியாரின் நுண்ணறிவை உணரவில்லை. பிறரிடம் முறையிட்டார். ஊர்ப்பெருமக்கள் யோகியாரின் முற்றும் உணர்ந்த, தெளிந்த நிலையினைக் கண்டு அதிசயித்து, இவர் சித்த விகற்பம் கலைந்து, தெளிந்து, பற்றறுத்த ஓர் மிகப்பெரிய ஞானியாவார் என அறிவித்தனர்.
திருமூலர் பெருமானும் இறைவனுடைய பெரும் கருணையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு திருவாவடுதுறையினைச் சேர்ந்து, அங்குள்ள திருக்கோயிலில் மேற்குப் பக்கத்தில் இருந்த ஒரு அரச மரத்தின் கீழ் வீற்று யோக நெறி புகுந்தார். இவ்வாறு மூவாயிரம் திருமந்திரங்களை அருளிச் செய்து பின்னர் திருக்கைலையினை அடைந்து இறைவனது இணையடி சேர்ந்தார். இந்த வரலாற்றுச் செய்தி, முன்னமே கூறியதுபோல, சேக்கிழார் பெருமானின் பெரிய புராணத்தில் காணப்படுகிறது.
மெய்ஞ்ஞானம் பெற்ற திருமூலனார் உலகப் பற்றினை விட்டொழித்தவர். அவர் தென்னாடு வருவதன் நோக்கம் அகத்திய முனிவரைச் சந்திப்பதற்காக என்பது மரபாகும். ஆனால், செல்லும் வழியிலே பசுக்களின் துன்பங்களைக் காண்கின்றார். அவருடைய கருணை உள்ளம், பசுக்களின் துயரத்தை நீக்க முற்படுகிறது. பசுக்கள் தலைவனை இழந்து தன்னிலையற்று தவிக்கின்றன.
மாயத்தால் கட்டுண்டு மூலன் என்ற இடையனது உடலிலே நாட்டம் செலுத்துகின்றது. யோகியாரும் அவற்றின் விருப்பத்தை நிறைவேற்றிப் பசுக்களுடைய தலைவனை உயிர்ப்பிக்கின்றார். இதுபோன்ற அற்புதச் செயல்கள் பற்றிய விவரம் பெரிய புராணத்தில் பல இடங்களில் காணப்படுகின்றன. திருஞானசம்பந்தர் பெருமான் எலும்பைப் பெண்ணாக்கியதும், முயலக நோயைத் தீர்த்ததும், அப்பரடிகள் அப்பூதியடிகளுடைய திருமகனின் உடலில் படர்ந்த பாம்பின் விஷத்தை தீர்த்ததும் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆயினும், இந்த நிகழ்ச்சிகளுக்கு அடிப்படையாக உள்ள தத்துவத்தையும் உணர்ந்து கொள்வது அவசியமாகும். மாதவம் செய்த சிவயோகியார் கூடு விட்டுக்கூடு பாய்ந்து உடலில் நுழைந்திருக்க வேண்டியதில்லை. பசுக்களின் துயரை நீக்கவே இவ்வாறு செய்தார். இங்கே பசுக்கள் என்பது உயிர்கள். பாசத்தில் கட்டுண்டு தலைவனை இழக்கின்றன. யோகியாரின் அருளால் தலைவனை மீண்டும் பெற்று நீங்காத இன்பம் பெறுகின்றன. யோகியாரோ மூலனின் உடலில் புகுந்த பின்னர், சாதாரண மனிதனான மூலனுடைய ஆசாபாசங்களுக்கு இடம் கொடுக்க வேண்டியவர். ஆனால், முன் செய்த தவத்தின் வலிமையின் காரணமாகப் பற்றற்ற நிலையில், தொடர்புகளை நீக்கியவராக, முன்னம் வினைகள் அகன்ற நிலையில் நிற்கிறார். அதாவது இந்த சிவயோகியார் யோகத்தின் தொடக்கக் கட்டத்தில் தன்னுடைய மூலாதாரக் கனலை எழுப்பி மெய்ஞ்ஞானம் பெற்றார். தன்னைச் சுற்றியுள்ள பசுக்களின் தளையை அறுத்துக் கொண்டார். இறைவனுக்கும், உயிருக்கும் இடையே நிற்கும் பாசத்தளை அகன்ற பின்னர், இறைவனின் பூரண அருள் பெற்று வேற்றுமை நீங்கியவராகத் தான் பெற்ற ஞானத்தைப் பிறருக்கு நல்கினார்.
திருமூலர் பெருமானுடைய வரலாறே பற்றற்ற நிலையைத் தெளிவாக்குகிறது. அதே நேரத்தில் முற்றிலும் துறந்தவர்கள் உள்ளங்களிலே அன்பும், கருணையும் நிரம்பி, சகல சீவராசிகளுடைய துன்பங்களை நீக்கும் பணியையே தலையாயதாகக் கொள்வதும் அவர்களுடைய இயல்பாகிறது.
ஆனால், பற்றை, பாசத்தை விட்டுவிடுவது அவ்வளவு எளிதல்லவே! பாசம் எனும் தளை உயிராக கட்டுப்படுத்துகிறது. உயிரைப் போலவே பாசமும் தொடக்கம் முடிவற்றது. பாசத்தளையின் ஒரு கூறான ஆணவ மலம் உயிரை இருள் நிலையில் வைக்கின்றது. அறியாமையைத் தருகின்றது. உயிருக்கு ஒரு எழுச்சியைத் தருகின்றது. வேற்றுமை எண்ணத்தை உருவாக்கி, ஒரு உயிரைப் பிற உயிர்களிடமிருந்து பிரித்து, நிறுத்தி வைப்பதும் ஆணவத்தின் விளைவாகும். இறைவனுடைய நிலையை மறைத்து, தன் நிலையை வளர்க்கச் செய்வதும் ஆணமாகும். உயிர் ஆணவத்தில் அழுந்தியுள்ள நிலை இருள் நிலை என அழைக்கப்படுகின்றது. இதையே கேவல நிலை என்றும் சொல்வார்கள். பாசமானது ஆணவம், கன்மம், மாயை என்கின்ற மூன்று வகை மலங்களைக் கொண்டதாகும். கன்மமானது உயிர்களை, வினைப்பயன்களைக் கூட்டுவிக்கத் தூண்டுகின்றது. உயிர், தனது மனம், வாக்கு, காயம் ஆகியவற்றைக் கொண்டு பல செயல்களில் ஈடுபடும்போது அவற்றின் பலாபலன்களைப் பல பிறப்புகளில் அனுபவித்து முடிக்க கன்மமானது பயன்படுகிறது. மாயை இறைவனின் பெரும் கருணையால் உருவாக்கப்பட்ட மறைக்கும் சக்தி ஆகும். படைப்பு, காத்தல், மறைத்தல், ஒடுக்குதல் போன்ற இயக்கங்கள் மாயையின் சக்தியால் நடைபெறுகின்றன. இந்த இயக்கத்தில் தன்னைப் பறிகொடுக்கும் உயிரானது, இந்த இயக்கத்தையே உண்மையென்று எண்ணிக் கொள்கின்றது. இது ஒரு மருள் நிலை ஆகும். ஆணவம், கன்மம், மாயை என்கின்ற மூன்று மலங்கள் ஆன பாசம் கால வரம்பின்றி உயிருடன் பொருந்தி உயிரை அறியாமை நிலையில் நிற்க வைக்கின்றது. இறைஞானம் இல்லாதபோது தனக்குத்தான் நிகரில்லை என்ற எண்ணமும், பிறருடன் தொடர்பு கொண்டு உறவினை வளர்ப்பது தனது இயல்பு என்றும் உயிரானது எண்ணிக் கொள்கின்றது. அறிவு பெற்ற நிலையில் உயிர் தன்னை மற்ற தத்துவங்களிலிருந்த பிரிததுக் கொண்டு பாசத்தளை அகற்றியதாக இறைவனைச் சேருகின்றது. இறைநிலை அறிவும், ஒளியும், தங்கிய நிலையாகும். படைப்பின் நோக்கமே பதி, பசு, பாசம் என்கிற தத்துவங்களை வேற்றுமை நிலையில் நிறுத்தி, பிறகு அந்த வேற்றுமையையும் அகற்றுவதாகும். பின்வரும் திருமந்திரம் இதை விளக்குகின்றது.
"பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசுபாசம்
பதியணு கிற்பசு பாசம் நிலாவே". (திருமந்திரம் - 115)
இந்தப் பாசம் எல்லா உயிர்களையும் ஆட்டிப் படைக்கின்றது. இதற்கு ஒருவரும் விதிவிலக்கல்லர். இறைவன் படைப்பிலுள்ள உயிர்கள் எண்ணற்றவையாகும். பிரம்மன் முதலிய பெரும் தேவர்களையும் உயிரினத்தில் இந்தப் படைப்பு உள்ளடக்கும். இந்த எல்லா உயிர்களுமே உணர்வு பெற்றுக் கன்மத்தின் வாயிலாக பல வினைகளைச் செய்து அவற்றின் பலனை அனுபவித்து, மாயாசக்தியால் உந்தப்பட்டு, புறத்தோற்றங்களையும், உடலின் ஆற்றலையும் முழுமையானவை எனவும், உண்மையானவை எனவும் நினைத்து உயிர்கள் பல பிறப்புகளில் அவைகளுடைய வினைப்பயனை நுகர வேண்டியுள்ளது. மலங்கள் நீங்கும்போது பாசத்தளைகள் அறுபடுகின்றன. உயிர்களும் இறைவனைப் பற்றி விடாது நிற்கும்.
"பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசமூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கியப் பாசம் அறுத்தாற்
பசுக்கள் தலைவனைப் பற்றிவிடாவே". (திருமந்திரம் - 2406)
இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் பாசத்தால் கட்டுண்ட உறவினை வளர்ப்பது இயல்பாகவே அமைகின்றது. பெற்றோர், மனைவி, மக்கள், சுற்றம், உலகம் இவை யாவையுமே நமக்கு உறவெனும தொடர்பைக் கொடுத்து, பாசத்தை வலுப்படுத்துகின்றன. அன்றாட வாழ்விற்கு இந்த உறவு அத்தியாவசியமாகின்றது. இதைத் தவிர்தது உலக நெறியில் நம்மை வெற்றியுடன் ஈடுபடுத்திக் கொள்வது மிகவும் கடினம். ஆகவே, உறவினை வளர்த்துக் கொண்டுதான் நம்முடைய
பணிகைளயும், பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டியுள்ளது. இதைத் தவறு என்று சொல்ல முடியாதல்லவா? அதே நேரத்தில், உறவு என்னும் தத்துவத்தின் அடிப்படை நோக்கத்தை நாம் உணர்ந்து கொண்டாக வேண்டும். உறவின் வழியாக உயிரானது தனது வினைப்பயனை அனுபவிக்கின்றது. அதே நேரத்தில் மேலும் வினைப் பயன்களைச் சேர்த்துக் கொள்கிறது. இது ஒரு அறியாமை நிலையில் நடக்கின்றது. ஆணவ மலமே இதற்குக் காரணமாகும். ஆணவத்தின் வலியால் அறியாமை என்னும் இருள் நம்மைச் சூழ்ந்து படர்ந்து கிடக்கின்றது. நமது அகக்கண்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையை மாயக்குழி என்பார் திருமூலர். மாயக்குழியில் விழுந்த மக்கள், பாசத்தில் உற்றுப் பதைக்கின்றனர். உண்மைக்கு முன்னே ஓர் திரை விரிந்து கிடக்கும் போது உயிர் இறைவனை காணுவதில்லை. புறத்தே நோக்கிச் செல்லும் ஐம்பொறிகளும், ஐம்புலன்களும் பரத்தை மறைக்கின்றன. உலக இயலே உண்மை என்று வாழ்நாளைச் செலவழிப்பது இயல்பாகி விட்டது. அறியாமையால் ஏதோ ஒரு பிரமையில் நம்மை நாம் நடத்திச் செல்லுகின்றோம். குயில் தனது முட்டையைக் காக்கைக் கூட்டினில் விடுகின்றது. காக்கை தனது அறியாமையால் குயிலின் முட்டையையும் பேணிக்குஞ்சு பொரித்துக் குயிற்குஞ்சைக் காத்து வருகின்றது. என்னே இந்த மாயையின் விந்தை!காக்கைக்குத் தன் குஞ்சு என்றும், குயிற்குஞ்சென்றும் பாராட்டிப் பாகுபடுத்துகின்ற அறிவில்லையே!ஏதோ ஒரு மயக்கத்தினால் அல்லவா காக்கை அந்தக் குயிற்குஞ்சைத் தன் கூட்டிலேயே வளர்த்து வருகின்றது!
"குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட் டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லைப் போக்கில்லை யேனென்ப தில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே". (திருமந்திரம் - 488)
பாசத்தில் அழுந்திய உயிர் அந்த வட்டத்திலேயே தனது பணிகளைச் செய்து முடிக்கின்றது. வட்டத்தைச் சுற்றியுள்ள மாயத்திரை வட்டத்திற்கப்பாற்பட்ட ஒன்றை உயிரிடமிருந்து மறைக்கின்றது. அதுமட்டுமல்ல, உயிரானது வட்டத்திற்குள்ளே இருந்து கொண்டு தான் என்றும், தனது என்றும், ஆணவத்தின் காரணமாக வினைகளைத் தொடர்ந்து புரிந்து கொண்டே வருகின்றது. உயிருக்கு இருப்பது சிற்றறிவு. அது அந்த வட்டத்திற்கப்பால் எட்டுவது இல்லை. அந்தச் சிற்றறிவும் ஆட்டிச் செல்வார் வழி நின்று ஆடுகின்றது. இந்தச் சிற்றறிவே மாயையின் கருவியாக இருக்கும் நிலையில் தன்னைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கான ஊக்கத்தை இழந்து விடுகின்றது. நாம் எங்கிருந்து வருகின்றோம், நாம் எங்குச் செல்கின்றோம் என்பதைப் பற்றிச் சிந்திக்கக்கூட நாம் வாய்ப்புப் பெறுவதில்லை, அல்லது கிடைத்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வதில்லை. கிளம்பி வந்த இடத்தையும், போய்ச் சேரும் இடத்தையும் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் இருந்த இடத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருப்பதும், செய்கைகளைப் புரிந்து வருவதும் அறியாமை என்று கூட நம்மால் உணர இயலவில்லை. எல்லாவற்றிற்கும் நாம்தான் காரணம் என்ற இந்த அறியாமையிலும் இறுமாப்புக் கொள்கின்றோம். இது நமது கீழ்மையையே சுட்டிக்காட்டுகிறது.
"இட்டான் அறிந்திலன் ஏற்றவன் கண்டிலன்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே". (திருமந்திரம் - 486)
பாசத்தில் இடப்பட்ட உயிர் பொறி வழியே செல்வதில் முழுநாட்டத்தையும் செலுத்துகிறது. மலப்பிணைப்பால் உயிரின் உண்மை விளக்கம் தடைப்படுகிறது. ஆனால், இதில் விந்தை என்னவென்றால் இந்தப் பாசத்தை உயிருடன் பிணைத்து வைப்பதே இறைவன்தான். ஆணவம், மாயை, கன்மம் போன்ற நமக்குக் கொடுக்கும் அனுபவம் இறையருளால்தான். உயிர்கள் மீதுள்ள எல்லையற்ற கருணையால் இறைவன் உயிர்களுக்குத் தனு, கரணம், புவனம், போகம் ஆகியவற்றை அளிக்கின்றான். இவற்றின் சேர்க்கையுடன் சிற்றறிவு பெற்ற உயிரானது ஐம்பொறிகளைப் பயன்படுத்தி மனம், புத்தி, சித்தம் என்பவற்றைப் பின்பற்றி தான், தனது என்கிற நிலையை உருவாக்கிக் கொண்டு உலகத்தில் மாயை என்கின்ற வட்டத்திற்குள் பல சாதனைகளை புரிகிறது. பிறகு அவற்றின் மூலமாக அடையக்கூடிய வினைப்பயனைப் பல பிறவிகளில் வெவ்வேறு உடல் கொண்டு அனுபவிக்கின்றது. உயிர்களைப் பாசத்தில் பொருத்தி அனுபவிக்கச் செய்வது திரு அருளாகும். பல காலம் உடலில் தங்கி உடலில் பல்வேறு வினைகளை அனுபவித்துப் பின்னர் அந்தப் பாசத்திலிருந்து உயிர்களை வேறுபடுத்திச் செய்வதும் இறைவனுடைய அருளாகும். வேறுபட்ட உயிர்கள் சீவன் என்றும், சிவன் என்றும், அதுவரை மனதின்கண் வைத்திருந்த மருள் நிறைந்த நிலையை நீக்கி உண்மை ஞான ஒளி பெறச் செய்வதும் இறைவனுடைய அருளாகும். அறிவானும், அறியப்படும் பொருளும், உள்ளத்திலே ஒன்றாக இணைவதும் திரு அருளால்தான். இந்த அருளினை சீவராசிகள் அடையும் பொருட்டு பரம்பொருள் தன்னையே சிவமாகவும், சக்தியாகவும் பிரித்துக் கொள்கின்றது. எல்லாவற்றிற்கும் இந்த அருளே காரணமாய் இருப்பதால் மாணிக்கவாசகர் "அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்று வாழ்த்துகின்றார்.
"பாசத்தி லிட்ட தருளந்தப் பாசத்தின்
நேசத்தை விட்ட தருளந்த நேசத்திற்
கூசற்ற முத்தி யருளந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே". (திருமந்திரம் - 1802)
மருள் நிலையிலிருந்து அருள் நிலைக்குச் செல்வதே உயிரினுடைய கோட்பாடாக அமைய வேண்டும். இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அறிவாற்றலை உள்நோக்கித் திருப்பி, உண்மை நிலையை ஆராய முற்பட வேண்டும். நமது பொறிகளையும், புலன்களையும் புறத்தே உள்ளவற்றை
எதிர்நோக்கிச் செலுத்தாது அகத்தே உள்ளவற்றை அனுபவிக்கச் செய்ய வேண்டும். உயிரானது சூர்யகாந்தக் கல்லைப் போல, உயிரைச் சுற்றியுள்ள பாசம் சூர்யகாந்தத்தைச் சுற்றியுள்ள பஞ்சைப் போல ஆகும். சூர்யகாந்தக்கல் தானாகவே பஞ்சைச் சுட்டுவிடாது. ஆனால், சூர்யகாந்தக் கல்லைச் சூரியன் மன்பு எடுத்து வைத்தால் சூரிய வெப்பம் சூர்யகாந்தக் கல் வழியாக பாயந்து அதைச் சுற்றியுள்ள பஞ்சினை எரித்துவிடுமல்லவா? அதேபோல உயிரைச் சுற்றியுள்ள பாசமானது இறைவனுடைய தோற்றம் முன் நீங்கி விடும். திருவருளால் அறிவாற்றலின் தன்மை மாறும். குணங்கள் சீரடையும். இதைத் திருமூலர் பெருமான் "மனத்து விளக்கினை மாண்பட ஏற்றி" என்பார்.
"சூரிய காந்தமுஞ் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தஞ் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமும் அற்ற மலங்களே". (திருமந்திரம் - 117)
ஆணவம், கன்மம், மாயை என்கிற மூன்று மலங்களும் உயிருக்கு ஒருவிதமான எழுச்சியை அளித்து, உயிரை மாயா காரியங்களைச் செய்யத் தூண்டி, வினை அனுபவங்களைத் தொடர் கதையாக்கி விடுகின்றன. சிற்றறிவுள்ள உயிர் இதைத் தெரிந்து கொள்வதில்லை. அறிவிக்கக்கூடியவன் இறைவன் ஒருவனே. இறைவன் அறிவித்தாலேயன்றி உயிருக்கு தன்னுடைய உண்மைத் தன்மையினைப் பற்றிய ஞானம் தோன்றுவதில்லை. மலங்களை உடலுடன் கூட்டி உயிரைச் சார்ந்த நிலையில் வைத்திருப்பதும் இறைவனுடைய பெரும் கருணையாகும். அந்தப் பெரும் கருணையைப் பற்றிய அறிவும் உயிருக்குப் புலப்படுவதில்லை. பாசம் உடலுக்கே என்கிற வகையில், உடலுடன் சேர்ந்த ஐம்பொறிகளுக்கும், ஐம்புலன்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வரும் வரை உள்ளத்தின் உணர்வுகள் தோன்றா. காரணம், நமது அறிவிற்கெட்டியவரை ஐம்புலன்களால் கிடைக்கப்பெறும் அனுபவத்திலேயே வாழ்வு அமைகின்றது. இன்ப, துன்பங்கள் பெறப்படுகின்றன. வினையினுடைய விளைவுகள் கிடைக்கப்பெறுகின்றன. மானுடரும், தேவர்களும் இந்த அனுபவத்தையே நாடுகின்றார்கள். இந்த அனுபவம் உறவினை, பாசத்தை மேலும் மேலும் வலுப்படுத்துகின்றது. ஆகவே, பாச வழியிலிருந்து உயிரை மாற்ற வேண்டுமனால் ஐம்பொறிகளையும், உட்கருவிகளையும் ஒடுக்கி மனதினை இறைவனிடம் தங்கச் செய்ய வேண்டும். ஐம்புலன்களின் தன்மை பெருக்கின் பெருகும். சுருக்கின் சுருங்கும். ஆகவே, ஐம்புலன்களை ஞானத்தறியில் பூட்டி வைக்க வேண்டும். அவ்வாறு செய்வது பிளிறிக்கொண்டு எழும்பி வரும் யானையைக் கோட்டைக்குள் வைப்பது போலாகும். ஐம்புலன்கள் செல்லும் வழியில் மனதைச் செலுத்த விடாமல், மனத்தின் தன்மையை உயர்த்தி "குறிகொண்ட சிந்தை குறிவழி" நோக்குதல் வேண்டும். ஆகவேதான்.
"வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழவதில் தாங்கலுமாமே". (திருமந்திரம் - 2040)
ஐம்பொறிகளின் இயக்கம் காரணமாக மனதிலே ஆசை பிறக்கும். ஆசைகள் பாசத்திற்கு வித்திடும். ஆசையைக் குறைக்க வேண்டும். ஆசையை முழுவதும் ஒடுக்கி விடுவது என்பது தேவர்களாலும் இயலாத காரியம். ஆசைமேல் ஆசைப்படாது வாழ முயல வேண்டும். ஆசைகள் உயிருக்குத் துன்பம் தருகின்றன என்பதை உணர்ந்து கொண்டால் அவற்றை நீக்கிக் கொள்ளும் ஆற்றலைப் பெறலாம். அவ்வாறு செய்யும்போது உள்ளத்திலே ஒரு நடுநிலைமை தோன்றும். அதே நேரத்தில் ஒன்றின் மீது பற்றுக்குறையும் போது மற்றதின் மீது பற்றை வளர்ப்பது உயிரின் இயல்பாகும். உலகப் பொருட்கள் மீது ஆசையை விட்ட உயிர் இறைவன் மீது மிகுந்த ஆசை வைக்கத் தொடங்கும். அதுவும் நமக்கு ஒருவகைத் துன்பத்தை அளிக்கும் என்பது திருமந்திரக் கருத்தாகும். ஆசைப்படுவது துன்பம். ஆசை விடுவது இன்பம்.
"ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே". (திருமந்திரம் - 2615)
ஆசைகள் அறுபடுவதும் இறைவனின் சித்தமே, அவனருளின்றி ஆவது ஒன்றுமில்லை. அவனருள் பெற்ற மாத்திரத்திலேயே உடலின் மீது உயிர் வைத்திருக்கும் மதிப்பு மாறிவிடும். உள்ளம் பெருங்கோவிலாகவும், ஊனுடம்பு ஆலயமாகவும், வாய் கோபுர வாசலாகவும், ஐம்புலன்கள் காளாமணி விளக்காகவும், தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கமாகவும், அமைந்து விடும். தில்லையம்பதியில் நடராசப் பெருமானின் திருக்கூத்தினைக் கண்ணாரக் கண்ட சுந்தரமூர்த்தி நாயனார், தனது உடலிலும், உள்ளத்திலும் பெற்ற ஈடு இணையற்ற இன்ப அனுபவம் புலன்களின் தன்மை மாற்றத்திற்கு ஒரு ஒப்பற்ற விளக்கமாக நிற்கின்றது. அதே உணர்வும் சேக்கிழார் பெருமானுடைய உள்ளத்திலே எழுந்தால்தான் பெரிய புராணத்தில் மெய்சிலிர்க்கும் ஒரு பாடலை அருளிச் செய்து நம் எல்லோருடைய உள்ளத்திற்கும் மட்டிலா மகிழ்ச்சியைத் தந்து விடுகின்றனர்.
"ஐந்து பே ரறிவுங் கண்களே கொள்ள
வளப்பருங் கரணங்க ணான்குஞ்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றுந்
திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையா னாடு மானந்த
வெல்லையி றனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துட் டிளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்". பெரியபுராணம் - தடுத் -106)
காரைக்கால் அம்மையார் ஓர் சிறந்த அருளாளர் ஆவார். அவருடைய கணவரால், இவர் ஒரு மானுடப் பிறவி அல்லர், நற்பெரும் தெய்வமே ஆவார் என்று போற்றப்படுகின்றார். ஆயினும், கணவரான பரமதத்தன் அம்மையாரிடமிருந்து விலகி வேறொருவரை மணம் புரிகின்றாரேயழிய அம்மையார் போல் அருள் பெற்றவரல்லர். வினைப்பயன்கள் அவரைத் தொடருகின்றன. உடல் உறவுகளை முடித்துக் கொள்ள இயலவில்லை. ஆனால், காரைக்கால் அம்மையாரோ கணவன் அவ்வாறு முடிவு செய்து விட்டான் என நினைத்த மாத்திரத்திலேயே அவனுக்காகத் தாங்கி வந்த அழகிற்கிடமாகிய தசைப்பொதியைக் கழித்து விட்டுப் பேய் உருவம் பெற்று, இறைவனுக்குப் பணி செய்ய வேண்டுகின்றார். இறைவனின் அருள் மிக்கவராக அங்கேயே, அப்போதே உறவினைத் துறக்கின்றார். என்னே இறைவனின் கருணை!
"ஈங்கிவன் குறித்த கொள்கை யிது, MQ யிவனுக் காகத்
தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்திங், குன்பால்
ஆங்குநின் றாள்கள் போற்றும் பேய்வடி வடியே னுக்குப்
பாங்குற வேண்டு" மென்று பரமர்தாள் பரவி நின்றார்".
(பெரிய புராணம் - காரைக் - 49)
மக்கள் அன்றாட வாழ்வில் உலகத்தோடு இணைந்து வாழ முற்படுகின்றார்கள். அவ்வழியாக இன்பம் அடையப் பார்க்கின்றார்கள். பிறப்பின் நோக்கம் நிறைவேறுவதற்கு இது தேவைப்படுகின்றது. ஆனால், இந்த வழியில் இன்பத்தை நாம் தொடர்ந்து பெற்றுவர முடியாது. இதை அறிந்தும் கூட மக்கள் "இச்சையுளே வைப்பர்". சற்று சிந்தித்துப் பார்க்கும்போது இவையெல்லாம் தேவையற்றது எனப் புரிந்து கொள்ள முடிந்தாலும், வலுவான பாசத்தால் கட்டப்பட்டு நிலையான இறை நாட்டத்தால் பெரும் இன்பத்தை அடைய முடிவதில்லை. ஆனால், ஒரு நாள் இறைவன் தகுந்த வழியைக் காட்டுகின்றான். அவனருளால் அந்த நேரம் கிட்டும்போது, உலக அனுபவங்களை முடித்துக் கொள்ளலாம் என்கின்ற உணர்வு தோன்றுகின்றது. மனச்சேட்டைகள் அடங்குகின்றன. பிறவித் துயரைக் கொடுத்து வரும் அறிவு மாறி வாழ்க்கையின் உண்மையான நோக்கம் அகக்கண்களுக்குப் பளிச்சென விளங்கத் துவங்குகின்றது. "ஊன் கெட்டு, உயிர் கெட்டு, உணர்வு கெட்டு, என் உள்ளமும் போய் நான் கெட்டவா" என மணிவாசகர் பெருமான் உருகுகின்றார். நிலையான நெறி ஒன்றினை மனம் பற்றிய பிறகு விவரிக்கவொண்ணா அமைதியைக் காண்கின்றது. தம்முள் இருக்கும் இந்த நிலையான அறவி¬ அறிந்தவர்களுக்கு மலமில்லை, மாசில்லை, மான அபிமானமில்லை, குலமில்லை, உயிர்களைப் பற்றி நிற்கும் குண விசேஷங்களும் இல்லை, நலன் இல்லை, கேடில்லை, பிரம்மன் போன்ற கோடிக்கணக்கான தேவர்கள் முதல் மனிதன் வரை உள்ள பாசத்தால் கட்டப்பட்ட நிலையுமில்லை. இதுவே இறைவனுடன் பொருந்திய நிலையாகும். திருமூலரைப் போன்ற சித்த புருடர்கள் அந்த நிலையை அடைந்தவர்கள். அவர்கள் காட்டும் வழியினை நாமும் பின்பற்ற வேண்டாமா?
"ஒழிந்தேன் பிறவி யுறவென்னும் பாசங்
கழிந்தேன் கடவுளும் நானுமொன் றானேன்
அழிந்தாங் கினிவரு மாக்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக் கண்டேனே". (திருமந்திரம் - 2958)
உறவு என்னும் பாசத்தைக் கழிக்க வேண்டும். அதுவே மிகப்பெரும் சாதனையாகும். பிறப்பறுப்பதற்கு அதுவே ஒப்பற்ற சாதகமாகும். பாசம் நீங்கிய உயிர் சிவத்தில் ஆழ்ந்து நிற்கின்றது. திருவருள் அதனுடைய சென்னியில் படிகிறது. திருவருள் வீழ்ச்சி தீவிரதர நிலையை அடைகிறது. மனிதன் மாறுகிறான். கடவுளாகிறான். எத்தனை பிறவிகள் எடுக்க நேர்ந்தாலும் இந்தக் குறிக்கோளே பின்பற்றத் தகுந்த குறிக்கோளாகும்.