"அன்னம் இரண்டு உள" விஞ்ஞான அறிவு வெகு வேகமாக வளர்ந்து வருகிறது பொருட்களின் உற்பத்தியை வளர்ப்பதற்காகவே இந்த விஞ்ஞான அறிவு பயன்படுத்தப்படுகிறது அறிவு வளர வளர மக்க

"அன்னம் இரண்டு உள"

விஞ்ஞான அறிவு வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. பொருட்களின் உற்பத்தியை வளர்ப்பதற்காகவே இந்த விஞ்ஞான அறிவு பயன்படுத்தப்படுகிறது. அறிவு வளர வளர மக்களுடைய தேவைகளும் பெருகி வருகின்றன. வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமென்பது எல்லோருடைய குறிக்கோளுமாய் இருக்கின்றது. தேவைகள் பெருகி அவற்றை நிறைவேற்றிக் கொள்வதே பொருளாதார வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு என்கின்ற அளவுக்கு ஒரு தவறான எண்ணம் நம்முடைய உள்ளத்திலே ஆழமாகப் பதிந்து விட்டது. ஒரு நிலையில் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் மன நிறைவு பெறும் வகையில் அமைந்தால் அதுவே போதுமென்று மக்கள் கருதினர். ஆனால், இப்பொழுது தேவைகளின் வளர்ச்சி மனிதனுடைய பொருளாதார நிலையை நிர்ணயிக்கும் அளவுக்கு நம்முடைய பண்புகளும் எண்ணங்களும் மாறிவிட்டன. ஒரு குடும்பத்தை எடுத்துக் கொள்ளலாம். கணவன் வேலை செய்து சம்பாதிக்கின்றான் மனைவி வீட்டைப் பார்த்துக் கொள்கின்றாள் குழந்தைகளின் வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றாள். இருவரும் குடும்பத்தில் ஒரு எளிய வாழ்க்கையை நடத்தி இன்பம் பெறுவதே போதும் என்று நினைக்கும்வரை கவலையில்லாமல் இருக்கின்றார்கள். ஆனால் விஞ்ஞான அறிவின் வளர்ச்சி, தேவையில்லாப் பொருட்களின் உற்பத்திப் பெருக்கம் போன்றவை அவர்களுடைய கவனத்தைக் கவர ஆரம்பிக்கின்றன. முதலில் ஒரு வானொலிப் பெட்டி தேவைப்படுகின்றது. அடுத்து ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வேண்டும்.. பின்னர் அது ஒரு நல்ல வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியாக இருக்க வேண்டும் என்கிற ஆசை எழுகின்றது. மேலும் மேலும் புதிய நவீன சாதனைகள் தேவைப்படுகின்றன. அவற்றைப் பெற முடியவில்லையென்றால் மனக் குறைவு ஏற்படுகின்றது. வசதி படைத்தவர்களைப் பார்க்கும்பொழுது பொறாமை ஏற்படுகிறது. வாழ்க்கையில் அமைதி குன்றுகிறது. தவறான வழிகளை கடைப்பிடித்து நம்முடைய ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளவேண்டுமென்று ஒரு வேகம் உள்ளத்திலே தோன்றுகிறது. ஒரு காலத்தில் வசதிகளைப் பெறுவதைவிட அவற்றை எந்த வழியிலே பெறுகின்றோம் என்பது முக்கியமாக இருந்தது. இப்பொழுதல்லாம் எப்படியாயினும் வசதிகளைப் பெற வேண்டும் என்கின்ற எண்ணம் ஓங்கி நிற்பதால் நாம் கடைப்பிடிக்கும் நெறிகள் நமக்கு முக்கியமாகத் தோன்றவில்லை. இது ஒரு ஆழ்ந்த வேதனையைக் கொடுக்கும் நிலையாகும். என்னே மாயையின் கீழ்மை!

நாம் படும்பாடெல்லாம் இந்த உடலுக்குத்தானே. ஆனால் நாம் இதை அறிந்து கொள்வதில்லை. உடலைப் பேணிப்பேணி, உடலின் வனப்பையும் பொலிவையும் கண்டு மற்றவர் வியப்படைய வேண்டுமென்கிற ஒரே கொள்கையுடன் வாழ்நாள் முழுவதையும் கழித்து விடுகின்றோம். விஞ்ஞான அறிவு உடலுக்கும் புறப்பொருள்களுக்கும் முதுமையைக் கொடுக்கின்றது. விஞ்ஞான வளர்ச்சியிலே பங்கு எடுக்கும் நாமும் உடலின் இயக்கத்திலேயே

மூழ்கி விடுகின்றோமேயழி அந்த இயக்கத்தின் காரணம் எது என்பதை பற்றித் தெரிந்து கொள்ள முற்படுவது இல்லை. அத்தகைய காரணம் என்று ஒன்று

இருக்கின்றதா என்று விஞ்ஞானம் கேட்கும் கேள்விக்குச் சரியான விடையைக் கண்டு கொள்ளும் முயற்சியிலும் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. "கெட்டேன் இம்மாயையின் கீழ்மை எவ்வாறே" என்று திருமூல நாயனார் அன்று சொன்னது இன்றும் பொருந்தும்.

உடலெனும் பை நிலையற்றது. இதைத் திருமூலர் பெருமான் மாயப்பை என்று அழைக்கின்றார். அன்னரசம், இரத்தம், ஊன், கொழுப்பு, எலும்பு மச்சை ஆகியவற்றின் தாதுப்பொருள்களின் கலப்பே உடலாகும். இத்தகைய உடம்பானது தூலம், சூக்குமம் என்று இரு வகைப்படும் சூட்சும உடலானது ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப்படும் ஐந்து தன்மாத்திரைகளையும், புத்தி, மனம், ஆங்காரம் எனும் உட்கரணங்களையும் கொண்டதாகும். இந்த உடலுக்குள்ளே ஐம்பொறிகள், ஐந்து ஞான இந்த்ரியங்கள் ஐந்து தன்மாத்திரைகள், பத்து வாயுக்கள், பத்து நாடிகள், மூன்று குணங்கள் போன்றவை தங்கி நிற்கின்றன. மேலும் இவ்வுடலானது ஐந்துவிதக் கூறுகளால் ஆனது. அவற்றைக்கோசங்கள் என்று பெயரிட்டுள்னர். உணவால் ஆன கோசம், உயிர்ப்பால் ஆன கோசம், மனத்தால் ஆன கோசம், அறிவால் ஆன கோசம், ஆனந்தத்தால் ஆன கோசம் என்று ஐந்து கோசங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் சூக்கும உடலின் பகுதிகளேயாகும். ஆயினும், இவைகள் சடப்பொருள்களே. தானாகவே இயக்குவதில்லை. வேறொரு சக்தி இவற்றை இயக்கினால்தான் இவை இயங்கும். ஆனால், நாம் சடமாகிய உடம்பு தானாகவே செயல்படுகிறது என்று நம்புகின்றோம். உண்மையில் உடல் தானாக இயங்காது. இதை நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உணர்ந்து கொள்வதில்லை. உடலை இயக்குவது உயிரேயாகும். உயிருக்கே இந்தச் சக்தி உண்டு. ஆனால், உயிரானது தானாக இயங்குவதில்லை. வேறொரு சக்தியால் இயக்கப்படாத வரை உயிர் தானாகவே கிடக்கும் உயிரினுள் நின்று கொண்டு, உயிருக்கு உயிராகக் கலந்து உயிரை நடத்திச் செல்வது இறைவன் ஆகும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனே உயிரோடு உயிராகக் கலந்து நின்று உடலுக்குள் இயங்குகின்றான். உடலை விட்டு உயிர் பிரிந்தால் உடல் மண்ணாகிறது உயிர் பிரிந்தது என்றால் இறைவன் அந்த உடலிலும் உயிரிலும் குடிகொள்ளவில்லை என்பதே பொருளாகும்.

"உடம்புக்கும் நாலுக்கும் உயிராய சீவன்

ஓடுங்கும் பரனோ டொழியாப் பிரமங்

கடந்தொறு நின்ற கணக்கது காட்டி

அடங்கியே அற்றது ஆரறி வாரே". (திருமந்திரம் - 2128)

நம்மைச் சுற்றி எண்ணற்ற சீவராசிகளைக் காண்கின்றோம். இன்று இருப்பவை நாளை இருப்பதில்லை. தோன்றுபவை மறைவது இயற்கையாக இருக்கின்றது. உடல் நிலைப்பதில்லை. உடலைப் பயன்படுத்தி நாம் தேடிப் பெறும் செல்வமும் நிலைப்பதில்லை. உடலின் இளமை நிலைப்பதில்லை. உடலுக்குள்

இருக்கும் உயிரும் அங்கு நிலையாகத் தங்குவது இல்லை. உடலிலிருந்து உயிர் பிரிந்தவுடனேயே பிணம் என்று பெயரிட்டு சற்றும் தாமதியால் அதற்கு b மூட்டி விடுகின்றோம். ஒருநாள் அழுது விட்டு மறுநாள் மறந்து விடுகிறோம். இதுதான் உடலின் வரலாறு. பின்வரும் திருமந்திரம் மனத்தில வைத்துக்கொள்ளத்தக்கது.

"ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை

நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே". (திருமந்திரம் - 145)

உடல் ஒரு குடிசையைப் போன்றது. மூங்கில்களால் கட்டப்பட்டிருக்கின்றது. எலும்பே மூங்கில். அதற்குள்ளே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. உடலாகிய வீடுதான் நமக்கு முக்கியமாகத் தோன்றுகிறது. உயிரைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அந்த வீட்டைப் பெரிதாக்க வேண்டுமென்று, அந்த வீட்டின் கூரை வழியாகப் பலவிதப் பண்டங்களைப் பெய்து உடலைப் பேணுகின்றோம். வளர்க்கின்றோம். உயிர்தான் அந்த உடலாகிய வீட்டிற்குச் சொந்தக்காரன். மனைவி, மக்கள், சுற்றம் என்று நிறையப் பேர்கள் உண்டு. அவர்களை அவன் மனதார நேசிக்கின்றான். அவர்களும் அவனை நம்பி வாழ்கின்றார்கள். அவனுடைய செல்வத்தை வைத்துக் கொண்டு அவர்கள் வாழ்கின்றார்கள். ஆனால், இந்த ஆசையும், பாசமும், நேசமும் உடலாகிய வீடு நிற்கும் வரைதான். நாளாக நாளாக அந்த வீடு பழுதடைகின்றது. ஒருநாள்கூரை சரிகின்றது. வீடும் விழுந்து விடுகின்றது. உடனேயே மனைவியும், மக்களும் ,சுற்றமும் விலகிக்கொள்கின்றனர். அந்தவீட்டுச் சொந்தக்காரன் செல்லுமிடத்திற்கு அவர்கள் செல்லுவது இல்லை. அவனுடன் பின்தொடர்ந்து செல்வது மனைவியும், மக்களுமல்லர். அவன் கொண்ட விரதமும், ஞானமுமே அவனுக்கு உறுதுணையாக அவனுடன் பின்செல்லும்,

"பண்டம் பெய்கூரை பழகி விழுந்தக்கால்

உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்

கொண்ட விரதமும் ஞானமும் அல்லது

மண்டி அவருடன் வழிநட வாதே". (திருமந்திரம் - 144)

உயிருள்ள வரை பெண்டிரும், மக்களும், சுற்றமும் இல்லத் தலைவனை நாடி, அவனைப் போற்றி, அவனுடைய நிழலில் வாழ்ந்து, அவனுடைய பெருமையால் தாங்களும் பெருமையடைந்து, அவனுடைய செல்வத்தில் திளைத்து, அவனிடமிருந்து பல்வேறு பலன்களைப் பெற்றும் வாழ்வார்கள். ஒரு நாள் உயிர் பிரிகின்றது. அந்த உடலிலிருந்து அவர்கள் மேலும் பயன் ஒன்றும் பெறப்போவதில்லை. படுவிரைவாக அதை எடுத்துக் கொண்டு போய் ஊருக்கு வெளியே உள்ள மயானத்தில் இறக்கி, அதற்குத் தீயினை மூட்டி, உடலைத் தூக்கி வந்த களைப்புத் தீர அருகிலுள்ள ஆற்றில் தலைமுழுகிச் செல்வர். உள்ளளவு

நமக்குப் பயனுள்ளவனாக இருந்தானே என்று உண்மையில் வருத்தப்படுகின்றார்கள். இல்லையே!நீதியில்லாத மக்கள்!

"ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்

ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்

வேர்த்தலை போக்கி விறகிட் டெரிமூட்டி

நீர்த்தலை மூழ்குவர் cFJ லோரே". (திருமந்திரம் - 157)

மண்ணாலாகிய குடல் எல்லோருக்கும் பயன்படுகிறது. பினன்ர்க் குடம் உடைந்து விடுகின்றது. உடைந்து விட்டாலும் உடைந்த குடம் மக்களுக்குத் தொடர்ந்து பயன்படுகிறது. எப்படி? உடைந்த குடத்திலிருந்து கிடைக்கும் ஓடு எப்போதாவது தேவைப்படும் என்று மக்கள் சேகரித்து வைப்பார்கள். உடல் ஒரு குடம். உயிர் அதற்குள் வாழ்கிறது. ஒருநாள் உயிர் உடலை விட்டுப் புறப்பட்டு விடுகிறது. உடலால் இனிமேல் ஒரு பயனும் இல்லை. உடலிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது? அதற்கு மேலும் நமது உறவினர்கள் நமது உடலை பாதுக்காக்கப் போகின்றார்களா என்ன? இல்லையே ஒரு போதும் உடலை வைக்க மாட்டார்கள். இந்த உடலைத்தான் பேணிவளர்ப்பதில் நம் வாழ்நாளையெல்லாம் செலவழித்துக் கொண்டிருக்கிறோம் என்ன மடத்தனம்!

".... .... .... .... .....

.... .... .... ..... .....

குடமுடைந்தக் கால்அவை ஓடென்று வைப்பர்

உடலுடைந் தால் இறைப் போதும் வையாரே". (திருமந்திரம் - 158)

திருமந்திரத்தில் உடலின் நிலையாமையைப் பற்றித் திருமூலர் பெருமான் பல மந்திரங்களில் அழகாகச் சித்தரித்துக் காட்டுகின்றார். நாட்டுக்குத் தலைமகன் ஒருவனைப் பற்றிச் பேசுகின்றார். இவர் நம் ஊர் நாயகன். கொடி கட்டிப் பறந்த வாழ்க்கையை நடத்தினவர். ஒரு நாள் உயிர் பிரிகின்றது. ஊர் மக்கள் அவருடைய உடலைச் சிறந்த முறையிலே அடக்கம் செய்கின்றனர். மிகப்பெரிய ஊர்வலம். ஊர்வலத்திற்கு முன்னே பலவிதப் பறைகளைக் கொட்டிக் கொண்டு வாத்தியக்காரர்கள் செல்கின்றார்கள். பின்னே அந்த ஊர் கடைமுறை நாட்டார்கள் வழிநடந்து செல்கின்றார்கள். இவ்வாறு நாட்டுக்கு நம்பியாக இருந்த ஒருவர் சுடுகாடு போகும் காட்சியை மக்கள் பார்த்து அவரைப் பற்றிப் பேசிக்கொள்கின்றனர். ஆனால் எவ்வளவு நாட்கள் இது நீடிக்கும்? அவரைப் பற்றிய நினைப்பானது நொடிப்பொழுதிலே கழிந்து ஓடி விடும். இறந்த தலைவருக்குப் புகழாரம் சூட்டிப் பலர் பேசுகின்றார்கள். அதே நேரத்தில் அவரை வெறுத்தவர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவரைப் பற்றிக் குறையாகப் பேசுகின்றார்கள். உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்னர் உடல் இவற்றையெல்லாம் செவிசாய்த்துக் கேட்கப்போகிறதா? காக்கை கவர்ந்து கொண்டால் என்ன? கண்டவர்கள் பழித்தால் என்ன? உடலின் வாயில் பாலூற்றிப் போற்றினால் என்ன? இவையெல்லாமே தேவையற்றன அல்லவா? அந்தத் தலைவருடைய உள்ளத்திலே வாழ்ந்திருந்த உயிர் தன் பணிகளையெல்லாம் முடித்துக் கொண்டு, புறப்பட்டுப்போன பிறகு எஞ்சியிருப்பது கட்டை ஏற வேண்டிய சடப்பொருள்தானே!

"காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்

பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்

தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்

கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே". (திருமந்திரம் - 167)

உடலைப் போல செல்வமும் நிலையற்றது. இங்கே குறிக்கப்படுவது பொருட் செல்வமாகும். பதவியும், அந்தஸ்தும், படையும் பொருட் குவியலும் நிலையற்றவை. அவை வரும், சேரும், தேயும், மறையும் எங்கிருந்து வந்தது, எங்கு போகும் என்று சொல்வதற்கில்லை. பொருட்செல்வம் உடலைப் பற்றி நிற்கும். உடல் இயக்கம் நின்றதும் அதுவும் விலகும். மலர்கள் தோறும் சென்ற தேனீக்கள் தேனை நுகர்ந்து, மரத்தின் கொம்பில் கூடு கட்டிக் கண்ணும் கருத்துமாய்த் தேனைச் சேர்க்கின்றன. பல நாள்க்கணக்கான தேனீக்கள் கூட்டைச் சுற்றி ரீங்காரம் செய்து, தாங்கள் ஈட்டீய செல்வத்தைப் பற்றிப் பெருமையடைகின்றன. அந்தோ ஒரு நாள் தேன் கூட்டைத் தேடி வந்த மக்கள் b மூட்டி, தேனீக்களை ஒட்டி விடுகின்றனர். கூட்டை உடைத்து, தேனைப் பறித்துக் கொள்கின்றனர். வாழ்நாள் முழுவதும் உழைத்துச் தேடிச் சம்பாதித்த தேனைத் தேனீக்கள் கைவிட்டவாறு பறந்து செல்ல நேரிடுகின்றது. அதுபோலவே, ஒருவனுடைய செல்வமானது வாழ்நாள் முழுவதும் அவனைத்தான் சேரும் என்று சொல்வதற்கில்லை. அதை அவனிடமிருந்து பறித்துக் கொண்டு போகப் பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவன் உயிருள்ளபோதே தான் ஈட்டிய செல்வத்தை நழுவ விடுவதும் அன்றாட நிகழ்ச்சியாகின்றது. இந்தச் செல்வத்திற்கா நாம் இவ்வளவு பாடுபட வேண்டும்.

"ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்

கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்

ஓட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக்

காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே". (திருமந்திரம் - 171)

குழந்தை பிறந்து கால ஒட்டததில் இளமைப் பருவத்தை அடைகின்றது. இளமைத் துடிப்பு உள்ளத்தை ஊக்குவிக்கிறது. இதிலும் எல்லாவற்றிலும் இனிமையையும் பசுமையையும் காணும் கண்களை இளமை நிரம்பிய ஆண் மகன் பெறுகின்றான். நம்முடைய ஒரே விருப்பமெல்லாம் என்றும் குன்றாத இளமையோடு இருக்க வேண்டும் என்பதுதான். துடிப்பான பருவமது. ஆற்றல் மிகுந்த காலம். சிந்தனையும், கற்பனையும் உடல் வலிமையும், மற்ற திறன்களும் உச்சக் கட்டத்தில் இருக்கும் நேரம். மெல்லியல் மாதர் கருப்பம் சாற்றைப் போல் விரும்பும் வனப்பு பொருந்திய உடல் எல்லா வகையிலும் விரும்பதக்கவாறு

அமைந்திருக்கும் காலம். எவ்வளவு ஆண்டுகளானாலும் இளமை நீடித்து இருக்க வேணடுமென்பதே நம்மில் பலர் பெறும் ஆசையும் ஆகும். ஆனால், பிறந்த குழந்தை பாலகனாகி, இளைஞனாகும் போது சில ஆண்டுகள் கழித்து ளிருத்தனும் ஆக வேண்டியதுதானே. காலை எழுகிறது. கழிகிறது. பகல் இரவாகிறது. கிழக்கே உதிக்கும் சூரியன், உலகிற்கெல்லாம் ஒளியூட்டி மாலையில் வானில் மேற்கே சென்று மறைகின்றது. இன்று துள்ளி விளையாடும் இளங்கன்று நாளை எருவாகிச் சில நாளில் முதுமையடைந்து விடுகின்றது. ஒருக்காலும் மக்கள் இதை அறிவதில்லையே. இளமையில் நிலையாமையை உணர மாட்டாரே.

"கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே

விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்

குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்

விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே". (திருமந்திரம் - 177)

ஆகவே, தோன்றி மறையும் பொருள்கள் எல்லாம் நிலையற்றவை. என்பதை முதலில் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். நிலையற்றவற்றை நிலையானவை என்று நினைத்துத் தவறு செய்யக்கூடாது. உடல் போன்றவையெல்லாம் சடப்பொருள்கள். தோன்றி மறையும் இயல்பைப் பெற்றவை. அந்த இயல்பு அவைகளுக்குத் தானாகவே வந்த இயல்பு அன்று. உடலையும், கருவிகளையும் உயிருக்குக் கொடுத்து உயிரானது எல்லாவிதமான அனுபவங்களையும் வினைக்கேற்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது இறைவனுடைய திருவருள் செய்கையாகும். உடலுக்கும் உயிருக்கும் உள்ள வேற்றுமைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். கட்டிக் காக்க வேண்டியது உயிர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உயிர் தானாகவே இயங்குவதில்லை என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஆட்டுபவன் ஒருவன் ஆட்டுவதால்தான் உயிர் ஆடுகின்றது என்பதே அடிப்படை உண்மையாகும். பரம்பொருள் இந்தப்பணியை ஐந்தொழில்கள் என்கின்ற வகையில் செய்கின்றது. இதைத் தெரிந்து கொள்ளாமல் நில்லா உடலை நிலை என்று கற்பனை செய்து நமது வாழ்க்கையை நடத்திச் செல்வது அறிவின்மையாகும். முதல்வனே எல்லா உயிர்களிடமும் உயிருக்க உயிராக நிற்கிறான் என்பது அறிவாகும்.. இதை உணராதவர்கள் கல்லாதார் ஆவார்கள். நாம் பல துறைகளிலே அறிவு பெற்றிருக்கலாம். ஆனால், நாம் இந்த அடிப்படைத் துறையிலே கல்வி பெறாதவரை நாம் எல்லோரும் கல்லாத மூடர்கள்தான். கல்லாமை என்பதும், அறியாமை என்பதும் இறைவனுடைய திரோதான சக்தி வழியாக உயிர்களாகிய நம்மையெல்லாம் ஆட்டி வைக்கின்றது. இறைவனைக் காணும் முயற்சியில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்றால் முதற்கட்டமாக நிலையாமையைப் பற்றி உணர்ந்து கொள்ள வேண்டும்.

"நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து

நில்லாக்குரம்பை நிலையென் றுணர்வீர்காள்

எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினுங்

கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே". (திருமந்திரம் - 312)

அதே நேரத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது வேறொன்றும் இருக்கிறது. திருவருளால் நமது உயிர் பெற்றிருக்கும் இந்தப் பிறவி நல்ல முறையிலே பயன்படுத்தப்பட வேண்டும். முற்பறிவியிலே நாம் செய்த வினைகளின் பயனை இப்பிறவியிலே நாம் அனுபவிக்க வேண்டியவர்கள் என்பது ஒன்று. அத்துடன் திருவருளால் நாம் பெற்றிருக்கக்கூடிய அறிவினைக் கொண்டு, நல்ல கல்வியைப் பெற்று இறைவனுடைய திருவடிகளைப் போற்றி, வாழ்த்தி ஆன்மிக வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதும் நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும் என்பதும் திருவருளின் நியதியாக இருக்க வேண்டும். இதற்கு மாறாகப் பொய்மையிலும், வாது செய்வதிலும், சூதிலும் நேரத்தை வீணடிப்பது இறைவன் நமக்குத் தந்திருக்கின்ற குறிக்கோளுக்கு எதிரே செல்வதாகும். செல்வத்தை அடைய விரும்பிப் பல தவறான வழிகளிலே செல்வதால் நாம் செய்யும் வினைகள் நமக்கு வரப்போகும் பல பிறவிகளில் துன்பத்தையும், வருத்த்தையும் கொடுக்கப்போகின்றன. பொய்மையைப் பெருக்கி, பொழுதினைச் சுருக்கி, பண்பற்ற வாழ்வினைக் கடைப்பிடித்து அன்பற்ற முறையில், தான் என்ற முனைப்பில் தற்போது மையத்தில் நின்று ,அறிவிலாச் செயல்களைப் புரிந்து கொண்டு வருவதன் மூலம் நம்மை நெருங்கி வரும் திருவருளை உதறித் தள்ளும் ஒரு நிலையை நமக்கு நாமே தொடர்ந்து செய்து வருகின்றோம். காலம் உருண்டோடிச் செல்கிறது. போது சடக்கென்று போகிறது. இறைவன்தாள் பணிவதே எப்போதும் பயனுள்ளதாக அமையும் என்று நாம் அறிந்து கொள்ளவில்லை.

"போது சடக்கெனப் போகின் றதுகண்டும்

வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது

நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்

தாதியை அன்பில் அறியகில் லார்களே". (திருமந்திரம் - 2085)

உடலுக்கும் உயிருக்கும் உள்ள வேற்றுமையை உணர்ந்து கொள்வது முதற் கட்டமாகும். நமது உடலுக்குள் உயிர் என்று ஒன்று இருக்கின்றது என்று தெரிந்து கொள்ளும் அதே நேரத்தில் உயிரைப் பற்றியும் நாம் தெரிந்து கொண்டால்தான் உடலுக்கும் உயிருக்கும் உள்ள வேற்றுமையை நன்கு உணர்ந்து கொள்ளமுடியும். உயிர் ஓர் அறிவுப்பொருள். இறைவனும் அறிவுப்பொருள்தான். ஆனால், இறைவன் எல்லையற்ற அறிவுப்பொருள். உயிரின் அறிவுக்கு எல்லை உண்டு. உயிர் தனது அறிவாற்றலையும் உடலையும், உடலை சார்ர்ந்த கருவிகளையும் பயன்படுத்தி வெளிப்படுத்துகிறது. இரண்டாவதாக, உயிர் ஓர் பளிங்குபோல, தான் சார்ந்திருக்கும் பொருளின் தன்மையைத் தானும் பெறுகிறது. இறை உணர்வு பெறும் பொழுது இறைத் தன்மையையும், உடலுடைய கருவிகளைப் பயன்படுத்தும்போது அவற்றின் மூலமாகப் பெறும் அறிவின் தன்மையைப் பெற்று, அவ்வுடலைத் தானெனப் பாவித்து, அவ்வுடல் வழியாக இன்ப துன்பங்ளை அனுபவித்து,

பிறவித் தொழிலிலே மீண்டும் மீண்டும் உழன்று வரும்போது தனது முன்னம் வினைகளைப் படிப்படியாகத் தீர்த்துக் கொள்கின்றது. இந்த முயற்சியிலே உயிர் சற்று அறிவு விளக்கம் பெறுகின்றது. உயிர்க் கருவி கரணங்களோடு சேர்ந்து இயங்குகிறது. உயிருக்கு இது சகல நிலையாகும். தன் உண்மையைச் சிறப்பாகக் காணாத நிலையில் உயிர் இயங்குவதால் இது ஒரு மாற்று நிலையாகும். உயிர் இறைவனுடன் சேர்ந்து நிற்பதே அதனுடைய இயல்பான நிலை. தான் செய்த வினைகள் காரணமாக உயிர் ஒரு அறியாமை நிலையில் வாழ்கின்றது. இந்தவொரு விபரீதமான நிலையிலிருந்து உயிர் தன்னை விலக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், இது எளிதில் நடப்பதல்ல. உயிர் உடலுட்ன் பாசத்தால் கட்டுண்ட நிலையில் இறைவனுடைய ஒப்பற்ற அருளும் கருணையும் உயிரின்மீது பொழிந்தாலும் தன்னுள் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் உள்ளளியை உயிர் இயல்பாகத் தெரிந்து கொள்வதில்லை. இருளில் தன்னைச் சற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பது அதனுடைய அறியாமையே ஆகும். இறைவன் தன்னுள் எரியும் அணையா விளக்கினைத் தூண்டிக் கொள்வதற்கு வாய்ப்பினைக் கொடுக்கும் வகையில் பெரும் கருணையுடன், உடலில் தங்கும் நாட்களின் கணக்கை நீட்டிக் கொடுக்கின்றார். ஆயினும், உயிர் அக்கருணையை உணர்ந்து கொள்வதில்லை.

"ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்

பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை

நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்

தூண்டு விளக்கின் சுடரறி யாரே". (திருமந்திரம் - 178)

ஆகவே, உயிரானது உடலுடன் சேர்ந்து இருக்கும்பொழுதே இப்பிறவியின் பயனைப் பெற முயல வேண்டும். இதைத் தீவிரமாகச் சிந்தித்தால் மனத்திலே தெளிவு ஏற்படும். உயிருக்குயிராக உள்ள இறைவனை நாட வேண்டுமென்கின்ற பற்று ஏற்படும். இறக்கும்போதும் இறைவனைப் பற்றிய எண்ணம் இயற்கையாக மனத்தில் தோன்றி மனத்தில் நிலைத்து நிற்கும். பறந்து செல்லும் உயிரும் பிறவியின் பயனைச் சிறப்பாகவே பெறும். தெளிவு ஏற்பட்ட பின்னர் மனத்தில் கலக்கம் ஏற்படாது. பொருட்செல்வம் வந்தாலும் போனாலும் மனம் பதட்டப்படாது. அச்சமின்றி, கவலையின்றி இறைவனடி சார்ந்து வாழும் வாய்ப்புக் கிட்டும். இயற்கை எய்தும் போது குதித்து மகிழலாம்.

"பறக்கின்ற வொன்று பயனுற வேண்டின்

இறக்கின்ற காலத்தும் ஈசனை யுள்குஞ்

சிறப்பொடு சேருஞ் சிவகதி பின்னைப்

பிறப்பொன் றிலாமையும் பேருல காமே". (திருமந்திரம் - 2108)

உடல் என்பது சடப்பொருள். அது உயிராகிய அறிவுப் பொருளின் முயற்சியால் இயங்குகின்றது. அந்த முயற்சிக்குக் காரணமாக இருப்பவன் இறைவன். இறைவன் உயிருக்கு உயிராக, வேறாக, உயிருக்கு அப்பாலாய் நின்று

கொண்டு, உயிரை இயக்குகின்றான். இறைவனைப் போலவே உயிரும் அநாதி. உயிர்கள் பல. உடலோடு கூடிய நிலையில் உயிரானது சற்று அறிவு விளக்கம் பெற்றுத் தனது பழைய நிலைகளின் பயனை அனுபவிக்கின்றது. அப்படிச் செய்யும் பொழுது புதிய வினைகளை உருவாக்குகின்றது. அவற்றின் பயன்களை வரப்போகும் பல்வேறு பிறவிகளில் அனுபவிக்கப் போகின்றது. இவ்வாறு இறப்பிலும் பிறப்பிலும் அறியாமையால் உந்தப்பட்டு உயிர் தனது வினைக்கூட்டத்தை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த அறியாமை நிலையில் உயிர் உடலைத் தானென்று பாவிக்கின்றது. இறைவனைத் தெரிந்து கொள்வதில்லை.

இறைவன், உயிர், உயிரைக் கட்டுப்படுத்தும் பாசம் ஆகியவற்றைப் பற்றிச் சுவேதாசுவர உபநிடதம் ஒரு கதையைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. "இணைபிரியா நண்பர்களான அழகிய சிறகுகளையுடைய இரு பறவைகள் ஒரே மரத்தில் வீற்றிருக்கின்றன. அவற்றுள் ஒன்று மரத்தின் பழங்களைச் சுவைத்து உண்கின்றது. மற்றொன்று உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது." மேலும் இவ்வுபநிடதம் இதனைப் பற்றிக் கூறுவதாவது.

"அந்த மரத்திலேயே அமர்ந்துள்ள ஜீவாத்மப் பறவை தளையுற்றுத் தன் இறைத்தன்மையை மறந்து மயங்கித் துன்புறுகிறது. அனைத்திற்கும் இறைவனாவதும் வணங்கப்படுவதுமான மற்றதைப் பார்த்து பெருமையனைத்தும் தன்னுடையது என்பதை உணர்ந்தும் துன்பத்திற்கும் விடப்படுகின்றது?"

திருமூலர் பெருமான் திருமந்திர மாலையில் இதே போன்ற கதை ஒன்றைச் சொல்லி இறைவன், உயிர் ஆகியிவற்றின் இடையேயுள்ள உறவு முறையை அழகாக விளக்குகின்றார். இரண்டு அன்னங்கள் இருக்கின்றன. இரண்டும் ஒன்றையன்று ஆழமாக நேசிக்கின்றன. ஒன்றை விட்டு ஒன்று பிரியாது. ஒன்று சீவன். மற்றொன்று சிவன். சிவனாகிய அன்னம் தான் வேறுபட்டது என்கிற உணர்வில் இருக்கும்பொழுது சிவத்தின் நிலையை அடையாது. ஆற்றங்கரை என்பது ஆற்று நீர். இரண்டு அன்னங்களும் ஆற்று நீரில் வாழ்கின்றன. சீவனாகிய அன்னம் நீரில் ஆனந்தமாய் நீந்தி அங்கும் இங்கும் சென்று மீண் போன்ற இரைகளைக் கவர்ந்து உண்கிறது. தன் செயலால் இன்பம், துன்பம் இரண்டினையும் நுகர்கிறது. சிவன் என்னும் மீன் நீரில் இருந்தாலும், உப்பு நீரில் வாழும் மீனின் உடலில் உப்பு ஏறாதது போல், தான் தானாய் இருந்து கொண்டு, எதனையும் நுகராமல், சீவ அன்னத்தின் செயல்களை சாட்சி மாத்திரையாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. சீவ அன்னத்திற்கு அருளால் பாதுகாப்பாக இருந்து விடுகிறது. சிவ அன்னத்திற்கு ஆற்று நீரின் நிலையாமை தெரியும். சீவ அன்னமோ நிலையற்ற வாழ்வை நிலையானதாகக் கருதிக் கொண்டிருக்கின்றது. தன் போக்கிலேயே போய்கொண்டிருந்தால், தனக்குத் துணையாக, தன்னைப் பிரியாதிருக்கும் சிவ அன்னத்திடமிருந்து பெறக்கூடிய பெரும்பயனை இழந்து விடுகிறது. ஒருநாள் சீவனாகிய அன்னம் இந்தக் கலக்கத்திலிருந்து தெளிவடைந்து விடுகிறது. தான் தேடும் இரையைவிடத் தான் வாழும் இடத்தைவிட மேலான இன்பத்தையும், இடத்தையும் வழங்கும் பேராற்றலுடையது தன்னைப் பிரியாதிருக்கும் அன்னம் என்று தெளிந்து அதனை ஆதாரமாகக் கொள்கிறது. அடைதற்கரிய பேரின்பத்தை அடைகிறது. இறைவனுடைய திருவருளாலே இது நடைபெறகிறது.

"அன்ன மிரண்டுள ஆற்றங் கரையினில்

துன்னி யிரண்டுங் துணைப்பிரி யாதன்னந்

தன்னிலை யன்னந் தனியன்ற தென்றக்கால்

பின் மடவன்னம் பேறணு காதே". (திருமந்திரம் - 2006)

நமக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்றன. சிலர் துன்பம் வரும்பொழுது மட்டும் இறைவனை நினைப்பார்கள். சந்தோஷப்படும் பொழுது இறைவனை நினைப்பதில்லை. உடலைப் பற்றியும், அதைப் பேணுவதைப் பற்றியும், குடும்பத்திற்கு எல்லாவிதமான வசதிகளைச் செய்து கொடுப்பதைப் பற்றியும் சிந்தித்து, செயலாற்றி நாட்களைக் கழித்து விடுகின்றோம். மரணம் வருகின்றது. மரணத்தைப் பற்றியும் நாம் நினைப்பதில்லை. ஒரு நாள் நாம் இறந்து விடுவோம். அதன் பின்னர் நாம் மீண்டும் பிறவி எடுக்க நேரிடும். இந்தப் பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் சுமைகளைத் தொடர்ந்து சுமக்க வேண்டும் என்பது பற்றி ஒருபொழுதும் நினைப்பதில்லை. துன்பம் வரும்போது மட்டும் இறைவனை நினைத்தால் போதாது. இறைவனைப் பற்றிய எண்ணம் எப்போதும் மனதிலே நிலைத்து நிற்க வேண்டும். அப்படி மனதில் இறைவனை ஆர்வத்தோடு நிறுத்தினால், உடலும் உள்ளமும், பேச்சும் மூச்சும் அந்த வழியே செயல்படத் தொடங்கும். இறைவனுடைய திருநாமத்தைக் கேட்கும் போதெல்லாம் உள்ளம் இனிக்கும். அன்பெனும் ஊற்றுப் பெருகி ஓடும். உடலிலுள்ள எல்லாப் புலனக்ளும் கருவிகளும், கரணங்களும் அன்பு மயமாக இயங்கும் தலை பூவைச் சுமக்க, காது இறைவனுடைய புகழையும் நாமத்தையும் கேட்க, நாள்தோறும் திருநாமத்தைத் தரும். சிவமாம் தன்மையும் பெறலாம். தலையும், செவியும், நாவும் அன்புமயமாக இறைவன்பால் நாட்டம் செலுத்தி இயங்கும்போது இம்மைக்கும் மறுமைக்கும் அப்பாற்பட்ட ஒரு இன்பத்தையும் பெறலாமே. இதை யார் சொல்கிறார்கள். திருஞானசம்பந்தர் பெருமான் அல்லவா!

"நீநாளும் நன்னெஞ்சே,

நினைகண்டாய், யார் அறிவார்

சாநாளும் வாழ்நாளும்?

சாய்க்காட்டுஎம் பெருமாற்கே

பூநாளும் தலைசுமப்பப்

புகழ்நாமம் செவிகேட்ப

நாநாளும் நவின்றேத்தப்

பெறலாமே நல்வினையே".