இறைவன் பேரறிவும், பேராற்றலும், பேரருளும், பெரும் கருணையும் கொண்டவன். உயிர்களாகிய நாம் சிற்றறிவும், சிறு ஆற்றலும் உடையவர்கள். ஆயினும், இறவைன் நம்முள் உயிருக்குயிரானய் நிற்கின்றான். அவன் உள்ளத்து ஒருவன். உள்ளற சோதி, உள்ளத்தை விட்டு ஒரு அடி நீங்காதவன். உள்நின்ற யோனிகளுக்கு எல்லாம் ஒருவனே. உலகிலும், உயிரிலும் நீரினில் பால் போல் நின்று கொண்டு அவற்றின் இயக்கத்திற்குக் காரணமாக இருக்கின்றான். இறைவன் அன்பிற்கு இருப்பிடம். அவனுடைய சக்தி அருட்சக்தியாகும். திருமந்திரத்தில் பல இடங்களில் இந்த அருட்சக்தியின் அருமையும், பெருமையும் அழகாக விளக்கப்பட்டிருக்கின்றன. இந்த விளக்கத்தை ஒரளவு நாமும் பெற்றுப் பயனடைய முயல்வோம்.
ஒன்றவன்தானே, இரண்டு அவன் இன்னருள் என்கிற இறைவாக்குடன் திருமூலர் திருமந்திரத்தில் பாயிரப் பகுதியைத் தொடங்குகின்றார். முதற்பொருளாகிய கடவுள் ஒன்றே. ஒன்றாகத்தான் இருக்க முடியும். எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயின் கல்லாதார் நெஞ்சத்துக்காண வொண்ணாதே என்பார் திருமூலர். முழுமுதற் பொருளாகிய கடவுள் பொருளால் ஒன்றேயாயினும், சிவம், சக்தி எனத் தன்மையால் இரண்டாய் நிற்கும். எல்லாவற்றிற்கும் மேலான நிலையில் நிற்கும்பொழுது சிவம் பராபரம் என வழங்கப்படும். சிவம் பராபரமாய் நிற்கும்பொழுது, அதன் சக்தி பராபரை எனப்படும். பராபரமாய் நிற்பதே சிவத்தின் சொரூப நிலையாகும். அதாவது, அதனுடைய இயற்கைத் தன்மையாகும். அதேபோல், பரபரையாய் நிற்பதே சக்தியின் இயற்கைத் தன்மையாகும்.
இயற்கை நிலையிலுள்ள பரபார சிவம், உயிர்களை உய்விக்க வேண்டும் என்கிற விருப்பத்தால், உலகத்தை உண்டாக்க நினைக்கும். அதுவே உலகத் தோற்றத்திற்குத் தொடக்க நிலையாகும். அப்பொழுது சிவம் ஆதி சிவன் என்றும், அதன் சக்தி ஆதி சக்தி என்றும் சொல்லப்படும். ஆதி சக்தி என்றும் திரோதான சக்தியையும் அருட் சக்தியையும் கொண்டுள்ளது.
பரம்பொருள் ஆதிசிவனாய் நின்று உலகத்தைச் செயற்படுத்த வேண்டும் என்று எண்ணும்போது தனது ஆற்றலாகிய ஆதிசக்தியாலே இந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்கின்றது.
இயற்கை நிலையில் ஆதிசக்தி ஞானமாய் நிற்கும். பின்னர், உலகத்தை செயல்படுத்த விரும்பும் நிலையில் இச்சா சக்தியாகவும், அந்தத் தொழில் முறையை அறிந்த நிலையில் ஞான சக்தியாகவும், அறிந்தவற்றைச் செயற்படுத்தும் நிலையில் கிரியா சக்தியாகவும் நிற்கும். அப்போதே ஆதிசிவன் ஆதிசக்தியின் வழியாக எழுத்தோசையை தோற்றுவிக்க விரும்புவான். அந்த நிலையில் அவன் நாதம் எனவும் பெயர் பெறுவான்.
"ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரை, அதன் பால்திகழ் நாதமே" (திருமந்திரம் - 368)
இந்த மந்திரம் நாத நிலை வரை படைப்பினை விளக்குகிறது.
உலகத்தைச் செயற்படுத்த சக்தி நின்றாலும் சிவத்தை விட்டுத் தனித்து நிற்பதில்லை. மணியில் ஒளிபோல சிவத்தோடு ஒன்றி நிற்கும். "கல்லொளி போல கலந்து உள்ளிருந்திடும்" என்பார் திருமூலர்.
சிவத்துடன் தொடர்ந்து நிற்கும் சக்தி பல நிலைகளில் நின்று பின்னர் சதாசிவன், மகேச்வரன், உருத்திரன், திருமால், அயன் முதலிய ஐவருக்கும் பிருதினி முதலான ஐம்பூதங்களுக்கும் சார்பிடமாக, துணைவியாக, தலைமைப் பொருளாக நிற்பாள்.
"தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சக்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்திஓர் சார்த்துமா வாமே". (திருமந்திரம்)
இறைவனுடைய பேரருளே படைப்புத் தொழிலாக, சக்தியின் மூலமாகப் பரிணமிக்கின்றது. இதைத் திருமூலர் விளையாடல் என்பார். ஆனால், இது ஒரு பொழுது போக்குக்கான விளையாட்டன்று. மாணிக்கவாசகர் இதனையே "காத்தும், படைத்தும், கரந்தும், விளையாடி" என்பார். இந்த விளையாடல் எண்ணிலா உயிர்களுக்கும் எண்ணிலாப் பயனை விளைவிப்பதாகும். உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப அவற்றிற்கு வேறு வேறு வினைகளையும் தரும். பருவ காலங்களுக்கு ஏற்ப விளையும் பயன்களும் மாறுபட்டிருக்கும். அதேபோல அருட்சக்தியின் இயக்கம் ஒவ்வொரு உயிருக்கும் அதனுடைய பக்குவத்திற்கு ஏற்ப வேறுபட்ட பலன்களைத் தரும். இதை விளக்கும் திருமந்திரம் இதோ
"ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டு எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே" (திருமந்திரம் - 383)
கருணையுள்ளம் படைத்த சிவசக்தியே சதாசிவமாக நின்று படைப்புப் போன்று ஐந்தொழில்களைச் செய்வாள். மங்கலப் பொருளாக விளங்குவாள். பிரணவ சொரூபியாக நிற்பாள். வேதப்பொருளாகவும், பூரணமாகும், திரோதான சக்தியாகவும், சாத்திர ஞானம், அனுபவ ஞானம் போனற்வற்றைப் பெற்றவளாகவும் விளங்குவாள்.
"வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே". (திருமந்திரம் - 389)
இறைவனுடைய திருவருளே சக்தியாக உலகெங்கும் பரவி உயிருக்குயிராய் நின்று, உயிருக்கு அறிவையும், ஆற்றலையும் அளித்து, படிப்படியாக உயிர்களைப் பக்குவமடையச் செய்து, வீட்டுப் பேற்றினையும் வழங்கும். என்னே இந்த விளையாட்டின் அருமை! என்னே இந்த அருட்சக்தியின் பெருமை! உலகின் பிறந்த எல்லாச் சீவராசிகளும் உயர்ந்து, உயர்ந்து, ஒப்பற்ற நன்மையைப் பெறுவதே அம்மையினுடைய குறிக்கோளாக இருக்கின்றதல்லவா? இதனை நாம் உணர்ந்து கொள்ளவேண்டாமா? "ஐயா. c ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்" என்று மணிவாசகர் பெருமான் மனம் உருகிக் கூறவில்லையா?
அருளக்கு இருப்பிடமான சக்தி மனத்திற்கும், வாக்கிற்கும், பொறிகளுக்கும், புலன்களுக்கும் அப்பாற்பட்டது. குறியும், குணமும் இலலாதவளாயினும் விரும்பி வேண்டி நின்றோர் மனத்தில் நிரப்பி, தனது அருள்மழையைப் பொழிவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றாள். அருளாளர்கள் கண்களுக்குச் சோதியாகத் தோன்றுகின்றாள். அன்பர்களின் உள்ளங்களில் பலவடிவங்களுடன் காட்சி அளிக்கின்றான். இறைவனுடைய திருவருவுத்தைத் தம்முள் உணர்ந்து கொண்ட பல பக்தர்களை நாம் பார்க்கின்றோம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த காரைக்கால் அம்மையார் ஒர் சிறந்த இறை உணர்வாளர். தம்முள் இறைவனைக் கண்டவர். அவ்வாறு காண்பதற்கு முன்பு பல நிலைகளைக் கடக்கவும் நேரிட்டது. இறைவனைக் கண்ட பின்னர் தான் முதலில் காணாத வடிவத்தைப் பின்னர் கண்டது பற்றி எவ்வாறு பிறரிடம் உரைப்பது என்று நினைத்து, திகைத்து நிற்கின்றார். "எம்பெருமானே, உன்னுடைய இறைவன் எந்த உருவத்தை உடையவன் என்று பிறர்கேட்டால் நான் என்ன பதில் சொல்வது? எந்த உருவத்தைச் சொல்லுவது.? உன் உருவம் எது?" என்று அம்மையார் தனக்குத்தானே கேட்டுக் கொள்கின்றார்.
"அன்றும் திருஉருவம் காணாதே ஆட்பட்டேன்,
இன்றும் திருஉருவம் காண்கிலேன், - 'என்றுந்தான்
எவ்வுரு வோன் நும்பிரான்?' என்பார்கட்கு ஏதுஉரைப்பேன்?
எவ்வுருவோ நின்உருவம் ஏது?
அபிராமி பட்டர் ஒருபடி மேலாகவே செல்கின்றார். உலகம் பதினான்கையும் திருவருளால் ஈன்றவள் பராசக்தி. அவற்றைப் பாதுகாத்து வருவதும் அவளே, பின்னர் அவற்றைத் தம்முள் அடக்கிவைத்துக் கொள்ளுவதும் அம்மையே. சிவனுக்கு முன்பு தோன்றிய தத்துவமாய் நிற்பவளும் அவளே. திருமாலுக்குத் தங்கை, பெரிய தவத்திற்கு இருப்பிடமாகவும் உள்ளவள், உண்னை விட்டு வேறு எந்தத் தெய்வத்தை வழிபடுவது என்று கேட்கின்றார்.
"பூத்தவளே, புவனம்பதி னான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே, உன்னை அன்றிமற் றோர்தெய்வம் வந்திப்பதே?"
ஒப்பற்ற ஞானியாகிய திருமூலர் அம்மையைப் பல கோணங்களில் காண்கின்றார். பல வடிவங்களில் தரிசிக்கின்றார். அம்மையினுடைய பல நாமங்களைப் பற்றிச் சிந்திக்கின்றார். அம்மைக்குரிய மந்திரங்களை உச்சரித்து அவளைச் சக்கரமாக வழிபடுகின்ற நிலையை நமக்கு உணர்த்தி, அம்மையின் திருவருளை நாம் எல்லோரும் பெற வைக்கின்றார். முதலில் அம்மையின் ஆற்றலைப் பற்றிச் சிந்திக்கின்றார். அம்மையே, ஐம்பூதங்களும் தாங்கி விண்ணாக நிற்பவள். அவளே சுடுகின்ற தீயாகும், சூரியனாகவும், சந்திரனாகவும் இருப்பவள். அவளே கருணை மழை பொழிகின்ற பெண்ணுருவாகவும் நிற்கின்றாள். வடவரை என்கிற வடபாகத்துக் திருமலையாகவும், குளிர்ந்த கடலிடையே வடவாக்கினி என்கிற தீயாகவும் உள்ளாள்.
"தானே இருநிலந் தாங்கிவின் னாய்நிற்குந்
தானே சுடும்அங்கி ஞாயிற் திங்களுந்
தானே மழைபொழி தையலு மாய்நிற்குந்
தானே வடவரைத் தண்கடற் கண்ணே". (திருமந்திரம் - 1165)
பத்துத் திசைகளையும் முகமாக உடையவள் பராசக்தி. நம்மை என்றென்றும் உய்விக்கச் காத்துக் கொண்டிருப்பாள். வேதங்களையும், ஆகமங்களையும், வேதங்களின் ஆறு அங்கங்களையும், நமது நன்மைக்காக அருளிச் செய்தவள் ¢ அல்லவா? பரம்பொருளுடன் ஒன்றி நிற்பாள். எல்லாவாற்றிற்கும் ஆதாரமாக விளங்குகின்றான். ஆதியும், அந்தமும் இல்லாத பராபரை. இதை நாம் அறிந்து கொள்ளவேண்டாமா?
"பத்து முகமுடை யாள்நம் பராசக்தி
வைத்தனள் ஆறங்க நாலுடன் றான்வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாளெம் நேரிழை கூறே". (திருமந்திரம்)
சிவபெருமான் முப்புரங்களை வென்றவன் என்று புராணங்கள் கூறும். திருமூலர் வேறொரு இதில் இந்த முப்புரங்கள் என்பது உண்மையில் மும்மலக் காரியங்களை எடுத்துக்காட்டும் என்று கூறுகின்றார். ஆணவம் கன்மம், மாயை என்பது மும்மலங்களாகும். இந்த மூன்றுக்கும் மூன்று விதமான தன்மைகள் உண்டு. இவற்றை ஒடுக்கச் சிவபெருமான் இருக்கின்றான் என்றால் இவற்றை இயக்க ஒருவர் வேண்டாமா? இவற்றை இயக்குபவர் அம்மையே ஆவாள் என்கின்றார் திருமூலர். அவ்வம்மையே ஆன்மாவிற்குக் கல்வி, வாழ்வு, பேறு ஆகிய மூன்றினையும் அருளிச் செய்பவள். முக்திப் பேற்றினை அருளுபவளும் அம்மையே அவள் என்பார். இந்த மூன்றையும் நமக்குக் கொடுத்தருளி, நமது
உயிர் வினைப்போகங்களை அனுபவிக்க எல்லாத் தத்வங்களையும் கொடுத்து நிலைக்களமாகவும், ஒப்புற்ற ஒளியாகவும், அம்மை பராசக்தி விளங்குவாள். நமது புலன் உணர்விற்கு எட்டாதவன் ஆயினும், தனது திருவடி உணர்வையும், அருளையும் நமக்கு எப்பொழுதும் தந்து கொண்டிருக்கின்றாள்.
திருவடி உணர்வு கைவந்த உண்மை நெறி கண்டவர் திருமூலர். முழுமுதற் கடவுளாகிய சீவனும், சிவனும் ஒன்றே என்றும் இரண்டல்ல என்றும் கூறுகின்றார். சிவபெருமான் எங்கெல்லாம் உளனோ, அங்கெல்லாம் தையல் மாதேவியாகிற பராசக்தி அவனை விட்டுப்பயிராது நிற்பாள். உடல் எங்கு உள்ளதோ அங்கு உயிருக்குயிராகி, காவலனாக நிற்பாள். ஆகாயம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாமும் அதற்கப்பாலும், பரவெளியிலும் திகழ்வாள். பராசக்தி என்றும் மாசாக்தி என்றும் அவள் பெயருடையவள். உலகுக்கும், உடலுக்கும், உயிருக்கும், ஆதாரமாகக் நிற்கக்கூடிய சக்தி உடையவள். உண்மை உணர்வு வடிவமாக இருப்பவளும் அவளே. ஊழிதோறும் ஆருயிர்களைக் காக்கும் ஆற்றல் உடையவளும் அவளே.
"தானெங் குளனங் குளல்தையல் மாதேவி
ஊனெங் குளதுஅங் குளன்உயிர்கக் காவலன்
வானெங் குளதுஅங் குளமந்த மாருதம்
கோனெங்கும் நின்ற குறிபல பாரே". (திருமந்திரம் - 1055)
"பராசத்தி மாசத்தி பல்வகை யாலுந்
தராசத்தி யாய் நின்ற தன்மை யுணரா
உராசத்தி ஊழிகள் தோறும் உடனே
புராசத்தி புண்ணிய மாகிய போகமே". ¢ (திருமந்திரம் - 1056)
அம்மையின் திருவருளாற்லை அறியாத தேவர்களும் இலர். அந்தத் திருவருள் துணையின்றிச் சீரிய தவங்களைச் செய்தலும் இயலாது. அவளுடைய துணையின்றிப் படைத்தல் போன்ற ஐந்தொழில்களைச் செய்வதற்கு ஐங்கடவுள்களும் முயன்றாலும் இயலாது. அவளுடைய அருள் துணையில்லாமல் திருவடிப் பேற்றினை நமக்குக் கிடைக்கச் செய்யும் திருநெறியும் ஒன்றுமில்லை.
"அவளை யறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகு மாறறி யேனே". (திருமந்திரம் - 1053)
அன்னையைப் பற்றி இவ்வளவு பேசுகின்றீரே, அவளுடைய உருவம், வடிவம் என்ன என்று கேட்டால் பதில் சொல்வீரா என்று திருமூலரை அவருடைய சீடர்கள் கேட்கின்றார்கள். இங்கே காரைக்கால் அம்மையாருடைய மனத்தில் தோன்றிய எண்ணமொன்று நினைவுக்கு வருகின்றது. அம்மையார் சொல்கின்றார்.
நூல்களைக் கற்று அதனால் உங்களுக்கு அறிவு கிடைக்கின்றது. அதையே பெரிதாக எண்ணி வீண் பேச்சு பேசித் திரிகின்றீர்கள். அவனை எந்தக் கோலத்தில், எந்த வடிவாக நினைத்து, எத்தகைய தவம் செய்தாலும் அவன் அந்தக் கோலத்தில், அந்த வடிவுடையவனாக வந்து அருள் புரிவான் என்று அருளுகின்றார் அம்மையார்.
"நூல்அறிவு பேசி நுழைவுஇலா தார்திரிக!
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேல் உவந்து
எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே ஆம்." (அற்புதத் திருவந்தாதி)
திருமூலர் பெருமான் இதுபற்றி அன்னையை அனுபவமாக உணர்ந்த பெரியோர்கள் கூறக்கேட்டேன் என்கின்ற வகையில் தனது உணர்வினை நமக்குத் தெரிவிக்கின்றார். அன்னை அனந்தமயாக இருப்பவள் என்று கூறுவர். அருவமாயும், உருவமாயும் விளங்குபவள். அறிவு உருவில் நிற்பவள் என்பர். ஞானம், கிரியை, இச்சை என்னும் வகையில் நிற்பர் என்பர். அறிவு உருவாகிய சிவபெருமானும் அன்னையிடம் எழுந்தருளி இருப்பவர் என்பர்.
"அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவா ரறிவுரு வாமவள் என்பர்
அறிவார் கரும மவளிச்சை என்பர்
அறிவார் பரனு மவளிடத் தானே". (திருமந்திரம் - 1054)
திருமூலர் பெருமான் மேலும் தம் அனுபவங்களைப் பற்றிச் சிந்திக்கின்றார். பாமர மக்களுக்கு, இறைவியை அன்புடன் வழிபாடு செய்ய விரும்பி நிற்போர்க்கு இப்படிச் சொல்லிவிட்டால் போதுமா என்கிற கவலை அவருடைய மனத்திலே தோன்றுகிறது. அன்னையின் உருவம் நம்முடைய உணர்விலே ஊன்றி நிற்கவேண்டுமல்லவா. அதை எடுத்துரைக்க வேண்டும் என்கிற ஆவல் தோன்றுகின்றது. அன்னையின் எழில் நிறைந்த திருவுருவத்தை, தியான உருவத்தை விளக்கத் தொடங்குகின்றார். அன்னை திரிபுரையாக விளங்குகின்றாள். நெருப்பு, சூரியன், சந்திரன் என்ற மூன்று மண்டலங்களாக நிற்கிறாள். அவள் ஒரு பேரழகு வாய்ந்தவள். ஆகாய வடிவாகத் திகழ்கின்றாள். உயிர்களைக் காக்கும் செவ்வொளியாக விளங்குகின்றாள். நாரணி, பலவகையாகிய நிறத்தை உடையவள். இருள்போலக் கருநிறத்தவள். அவ்வம்மையே உலகினையும், உயிரினையும், காத்து அருள் புரிவாள். திரிபுரா தேவியே பல சக்திகளாக அமைந்து விளங்குகின்றாள்.
"திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி யாம்பல வண்ணத்தி
இருள்புரை ஈசி மனோன்மணி என்ன
வருபல வாய்நிற்கு மாமாது தானே". (திருமந்திரம் - 1046)
அன்னை நீருண்ட கரிய மேகம் போன்ற நிறமுடையவள். அவளுடைய திருவடிகளை அழகிய சிலம்பணிகள் அலங்கரிக்கின்றன. செம்மை நிறமுடையப் பட்டாடை அணிந்துள்ளாள். மார்பில் கச்சை, தன்னுடைய நான்கு திருக்கரங்களிலும் முறையே கரும்பு வில்லும், அங்குசப்பாசமும், மலர் அம்பும் வைத்துள்ளாள். அழகிய கிரீடம் பொருந்தியவள். சிறந்த மணிகள் பதிக்கப்பட்டுள்ள குண்டலங்கள் அன்னையின் காதுகளை அலங்கரிக்கின்றன.
"தாளணி நூபுரஞ் செம்பட்டுத் தானுடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே." (திருமந்திரம் - 1049)
"பணிமலர் பூங்கணையும், கருப்பஞ்சிலையும், மென்பாசாங்குசமும், கையில் அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தினமே" என்று அபிராமி பட்டர் பாடுகின்றார்.
அன்னையின் உருவம் மேலும் மேலும் தெளிவடைகின்றது. காதுகளில் குண்டலங்கள், கொல்லும் தகுதி வாய்ந்த வில்லைப் போன்ற புருவம், சென்னிறத் திருமேனி, உருத்திராட்ச மாலையைப் பூண்டவள், ஒளி வீசுகின்ற திருமுடியிலே பிறை அணிந்தவள், சண்டிகை எனும் பெயர் பெற்றவள். நான்கு திசைகளையும் தாங்கி நிற்கின்றாள். உலகம் உய்ய உயிருடன் கலந்து நிற்கின்றாள். அத்தகைய நிலையிலே திரிபுரை என்கின்ற பெயரைப் பெற்றவள். கால எல்லையைக் கடந்து பழமை பெற்றவள். குறையாத அழகுடையவள். அழகு மிக்க நீண்ட கூந்தலை உடையவள். நன்கு விளங்குகின்ற சிவமணி மாலையைய் பூண்டவள். நான்கு திசைகளிலும் உயிர்களைத் தன்பால் இழுக்கும் சக்தியுடையவள். வெண்தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் தூய நிலையை உடையவள். அவளே சுத்த வித்தியா தேவியுமாவாள். மேலும், தூய்மையான கச்சினையும், முத்து மாலையையும் அணிந்தவள். பேரின்பத் தோற்றத்திலே விளங்குபவள். மாயையைப் பொருளாகக் கொண்டவர்களை ஆட்டி வைக்கின்ற பேராற்றலை உடையவள். சக்தி என்றும், மாபரை என்றும் அழைக்கப்படுபவள். வழிபடும் அன்பர் உள்ளத்து உறையும் அழகினள். இத்தகைய கோலங்களோடு கூடிய அன்னை மெய்யுணர்வுடையவள் ஆவாள். தானேயாக படைத்துக்கொண்ட வடிவுடைய ஞானசொரூபியுமாவள்.
"குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட வரத்த நிறமன்னு கோலத்தள்
கண்டிகை யாரங் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே". (திருமந்திரம் - 1050)
"நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் குஞ்சிகை
நன்றறி கண்டிகை நாற்காற் கரீடணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே" (திருமந்திரம் - 1051)
வேதங்கள், ஆகமங்கள் போன்ற நூல்களைக் கையில் வைத்திருப்பாள். திருமூலர் பெருமான் கூறுகின்றார். எங்களுடைய தலைவியாகிய திரிபுரை. மனோன்மணி மூன்று திருக்கண்கள் உடையவள். அந்த நிலையில் அவளுடைய நிறம் பளிங்குபோல வெண்மையாக இருக்கும். வெண்தாமரையாகிய இருக்கையில் விரும்பி நிற்பவள். திருமுறைகளைப் பாடம் திருவாயினை உடையவள், நாதமயமாய் விளங்குபவள் பேரருள் வாய்ந்தவள். இந்த அழகிய பெருமாட்டியின் திருவடிகளை உங்கள் தலையின்கண் சூடூவீர்களாக. வாயில் அவளைப் புகழ்ந்து துதிப்பீர்களாக என்று திருமூலர் நம்மையெல்லாம் வேண்டுகின்றார்.
"ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் தாமரை
பாடுந் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த் தோத்திரஞ் சொல்லுமே" (திருமந்திரம் - 1067)
இதே கருத்துடன் அபிராமியின் எழிலை முற்றிலும் உணர்ந்த பட்டர் அவளுடைய திருவுருவத்தைப் பின்வருமாறு மனத்தில் நிறுத்தி துதிக்கின்றார்.
"தாமம் கடம்பு, படைபஞ்ச பாணம், தனுக்கரும்பு;
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது;எமக் கென்றுவைத்த
சேமம் திருவடி;செங்கைகள் நான்கு;ஒளிசெம்மை, அம்மை
நாமம் திரிபுரை;ஒன்றோடு இரண்டு நயனங்களே".
திரிபுரங்களின் தலைவி என்கின்ற நிலையில் அன்னையைத் திரிபுரை என்று திருமூலர் அழைக்கின்றார். திரிபுரங்கள் என்றால் மும்மலங்கள் என்கின்ற கருத்தையும் சொல்கின்றார். அப்படியென்றால் உயிர்களுக்கு மும்மலங்களைக் கொடுத்தும், பிறகு உயிர்களுக்கு ஞானத்தை அருளி மும்மலங்களை நீக்குவதும் அன்னையே என்கின்ற வேறொரு கருத்தையும் தருகின்றார். அந்தத் திரிபுரையே சுந்தரி என்றும், அந்தரி என்றும், நாரணி என்றும், மனோன்மணி என்றும், அபிராமி என்றும், அகோசரி என்றும், சண்டிகை என்றும், மோகினி என்றும், மாதேவி என்றும், பராசக்தி என்றும், மாசக்தி என்றும் மங்கலி என்றும், ஆனந்தசுந்தரி என்றும், முக்கன்னி என்றும், ஒங்காரி என்றும் திருமூலரால் அழைக்கப்படுகின்றாள். அன்னைக்கு இன்னும் எத்தனை எத்தனை நாமங்களும் உண்டோ? அன்னையின் புகழை நினைக்க வேண்டுமென்றால், அன்னையின் நாமத்தை எத்தனை முறை நான் சொல்லி இருப்பேன் என்று அபிராமி பட்டர் சொல்லவில்லையா? கன்னியது உன் புகழ், கற்பது உன் நாமம் என்று பட்டர் பாடுகின்றார். பக்தர்களுக்கு அன்னையினுடைய திருநாமங்களை அடிக்கடி
சொல்வதில் ஒரு அலாதி இன்பம் ஏற்படும். அந்த இன்பத்தில் திளைத்தவர் அபிராமி பட்டர். அன்னையை நாயகி, நான்முகி, நாராயணி, பஞ்சநாயகி, சங்கரி, சாம்பவி, சாளை, வாராகி, மாதங்கி என்றெல்லாம் அழைத்து இன்புறுகின்றார். உயிர்களது துன்பத்தை நீக்குதவற்காக அமைந்து சக்தியின் வடிவங்களில் வாராகி, வைரவி, என்று இரு வடிவங்கள் முதன்மையாகச் சொல்லப்படுவன. சிவகுமாரர்களும் வீரபத்ரர், வைரவர் என்னும் திருமூர்த்தங்கள் உண்டு. குற்றம் செய்வோரைத் தண்டித்து, சிவன்பால் அன்பு கொண்டவரைக் காத்து, நிற்கும் வைரவ மூர்த்தியினுடைய சக்தியே வைரவி ஆவாள். வைரவிக்கு அழகிய கரங்கள் நான்கு. அவைகளில் சூலம், கபாலம், நாகபாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தி நிற்பாள். இவளே சிவனுடைய சிறந்த மேனியாகத் திகழ்வாள். மாலாலும், அயனாலும் அறியப்படாதவன் சிவன் என்று புராணங்கள் கூறும். அந்தத் சிவனுடைய அருட்சக்தியாக வைரவி தோன்றுகின்றாள். அவள் மெய்மையான இயல்புடையவள். வஞ்சிக்கொடி போன்ற வடிவினை உடையவள். நெறியின்றி தவறுகிறவர்களைத் தண்டிப்பாள். சினங்கொண்ட மனத்தினள். பல கலைகளைப் பயின்றவள். மாணிக்க மணியத்த சென்னிறம் வாய்ந்த திருமேனி உடையவள். பல நிறத்தோடு, பல மணிகளோடு கூடிய உடைகளையும் அணிந்தவள். மேலும் அவள் பல வைரங்கள் இழைத்த கோடி சந்திரன் போல அழகிய முடியை அணிந்தவள். பேர்பெற்ற ரத்தின குண்டலத்தை அணிந்த காதினை உடையவள். மான் போன்று மருண்டு பார்க்கும் பார்வையை உடையவள். சூரியனையும், சந்தினையும், கண்களாகக் கொண்டவள். பொன்னாலாகிய மணி போலும் நெருப்புக் கண்ணையுடையவள்.
"சூலங் கபாலங்கை ஏந்திய சூலிக்கு
நாலாங் கரமுளை நாகபா சாங்குச
மாலங் கயனறி யாத வடிவுக்கு
மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே". (திருமந்திரம் - 1081)
"மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லிய கிஞ்சுக நிறமென்னு சேயிழை
கல்லியல் ஒப்பது காணுந் திருமேனி
பல்லிய லாடையும் பன்மணிதானே". (திருமந்திரம் - 1082)
"பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக் காதி யுழைக்கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே". (திருமந்திரம் - 1083)
அன்பும், அருளும் தன்னுள் கொண்ட அன்னையைப் போற்றியும், புகழ்ந்தும் வணங்கி வழிபடுவதே முதல் தொழில் என்று எப்போதும் நினைத்து வாழ வேண்டும் என்கின்றார் திருமூலர் பெருமான். எனவே, தோத்திரம் செய்து,
தொழுது துணையடி வாய்த்திட, ஏத்தி வழிபடும் என்கின்றார் திருமூலர்.
தவத்தின் தலைவியை, மனோன்மணி மங்கையை மெதுவாக நின்று தோத்திரம் செய்து வழிபடுங்கள். அவ்வாறு வழிபட்டால் பிறவியும், பிறவியைச் சார்ந்த பலன்களும், தீமைகளும் உங்களைச் சாராது அகன்று விடுமே.
"தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மனி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவமினி மேவகி லாவே". (திருமந்திரம் - 1103)
அன்னையை எவ்வாறு பூசிக்கவேண்டும்? அவளுக்குப் பிடித்த பொருள்கள் சந்தனம், குங்குமம், பனி நீர் முதலிய நறுமணப் பொருள்களாகும். மணம் மிக்க நறுமலர்கள் அவளுக்கு ஏற்றவை நீண்ட தூரம் கேட்கக்கூடிய மணி, கடல், யானை, வளை, சங்கு ஆகிய ஐந்து ஒலிகளை அவள் மிகக் விரும்புவாள். திருவைந்தெழுத்தாகிய தலைசிறந்த மந்திரம் அவளுக்கு உயிராகும். இவற்றைக் கொண்டு இறைவியைத் தொழுதல் சாலச் சிறந்ததாகும். இவ்வாறு பொருள்களைக் கூட்டி அம்மையை வழிபடுவதே யோகம் என்று திருமூலர் கூறுகின்றார்.
"பூசனை கந்தம், புனைமலர் மாகோடி,
யோசனை பஞ்சத் தொலி, வந் துரைசெய்யும்
வாச மிலாத மணிமந் திரயோகம்
தேசந் திகழும் திரிபுரை காணே". (திருமந்திரம் - 1069)
எல்லாவற்றிலும் மேலாக ஆதிமந்திரமாகிய திருவைந்தெழுத்தை ஓதியே இறைவியினுடைய அருளைப் பெறலாம், அவ்வாறு இடைவிடாது திருவைந்தெழுத்தை ஓதி வருகின்ற அன்பர்களுடைய மனதில், உள்ளத்தில் மூச்சாகவும், மூச்சின் சக்தியாகவும் நின்று அன்னை வேண்டியவற்றை கொடுத்தருள்வாள், அன்னையை வழிபடுவதற்கான மந்திரத்தைத் திருமூலர் பெருமான் இருதய மந்திரம் என்று பெயரிட்டு அதற்கான வழிபாட்டு முறையை ஐந்தாம் தந்திரத்தில் விளக்கிச் சொல்லுகின்றார், இந்த மந்திரங்களை இறைவனுடைய அருளால் தோற்றுகின்ற குருவை ஏற்று அந்தக் குருவினிடமிருந்து மந்திரத்தைக் கற்றுக்கொண்டு பின்னர் மந்திர வழிபாடு செய்து கொள்ள வேண்டும், ஐந்தெழுத்தின் உண்மையை முற்றும் உணர்ந்தவர் திருமூலர், ஐந்தெழுத்தை ஓதி இறைவியின் அருளைப் பெற்றவர், அவள் உயிர்கள் உய்வதற்கான எல்லாவிதமான உபாயங்களையும் அளிக்கின்றார், எனது ஈரமிலாத நெஞ்சத்தில் உள்ள பல இடர்களைப் போக்குகின்றாள். அந்த நெஞ்சத்தில் அன்பை வித்திடுகிறாள்.. நிலையிலாப் பொருள்கள் மீது நான் வைத்திருக்கும் பற்றினை அகற்றுகின்றாள், எனக்குத் தஞ்சம் அளிக்கின்றார், என்னுடைய அவாவினை அடக்குகின்றாள், இனி c எதற்கும் அஞ்ச வேண்டார் என்று என்னுடைய அச்சத்தையும் நீக்கி அருளினாள்,
உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்
தபாயம் அறக்கெடுத் தன்பு விளைத்துச்
சுவாவை விளக்குஞ் சூழியகத்துள்ளே, (திருமந்திரம்-1108)
அன்னை பூவுலகிற்கு ஆதாரமானவள், நம்முள் உயிருக்கு உயிராக நிற்கின்றாள், நமது சூக்கும உடம்பில் மூலதாரம் அமைந்துள்ளது, அது நாலிதழ் தாமரை போன்றது, அதன் மேல் ஆறிதழ் கொண்டது கொப்பூழ் ஆகும், மேல் வயிறு இடம் தொண்ணூறு இதழ்களைக் கொண்டது, நெஞ்சகம் என்பது நாற்பது இதழ் கொண்டது, பதினாறு இதழினைக் கொண்டது கழுத்தாகும், புருவ நடுவானது பத்து இதழ்களைக் கொண்டது, இந்த இடங்களில் எல்லாம் நின்று உடலையும். உயிரையும் இயக்குபவள் அன்னையே ஆகும், திருமூலர் பெருமான் சற்றேக்குறைய நூறு மந்திரங்களில் பூரண சக்தி ஆதாரமாகவும், ஆதேயமாகவும் நின்று கொண்டு சீவர்களுக்கு அருள்புரிவதை விளக்குகின்றார்,
அன்னையைச் சக்கரம் மூலமாக வழிபடுதல் என்பது நமது நாட்டின் ஓர் சிறந்த பண்பாடாகும், விதிப்படி சக்கரங்களை வழங்கி. பீஜமந்திரங்களை நிரப்பி. அந்தச் சக்கரத்தில் இறைவியை எழுப்பி வழிபடுதல் மேலான கல்வியைப் பெற்றதாகும் என்று பெரியோர்கள் எடுத்துரைக்கின்றனர்,
அன்னை பராசக்தி மந்திர உருப்பெற்றவள் என்பதும். மந்திர வடிவங்களை உபாசித்து அன்னையின் பேரருளைப் பெறலாம் என்பதும் இதற்கு அடிப்படையாகும், சிறந்த ஒழுக்கத்துடன். தீவிர கோட்பாடுடன். மந்திர வழிபாட்டில் முழு நம்பிக்கையுடன் சக்கரத்தை வழிபடும்போது பல நன்மைகளைப் பெறலாம், அன்னை பல சக்திகளைத் தருவாள். திருமூலர் திருமந்திரத்தில் திருவம்பலச்சக்கரம். திரிபுரை சக்கரம். வைரவி மந்திரம். ஏரொளிச் சக்கரம். சாம்பவி மண்டல சக்கரம், புவனாவதி சக்கரம், நவாக்கரி சக்கரம் ஆகிய சக்கரங்களை விளக்கி, அவற்றை வழிபடும் முறையை விரிவாக எடுத்துரைக்கின்றார். இவற்றைக் கற்று, தேர்ந்து, நெறியினை மேற்கொண்டு சாதகம் செய்து அன்னையின் அருளைப் பெறுவது சிறந்ததொரு குருவின் மூலமாகவே இயலும் என்பதை நாம் உணர்ந்துகொண்டு அவ்வழியே நடந்தால் மிக்க பயன்பெறலாம் என்பதில் ஐயமில்லை. நவாக்கரி சக்கர வழிபாட்டினால் கிடைக்கும் பயன்களைப் பற்றித் திருமூலர் பெருமான் கூறுவதாவது, அனுபவ ஞானமும், கலை ஞானமும் பெறலாம். வலிய வினைகள் நம்மை விட்டு ஓடி விடும். இறைவனுடைய திருவருள் கைவந்து தீய வினைகள் நீங்கும். உலகில் நன்மைகள் கூடும். எல்லாம் நினைத்தபடியே முடியும். கூற்றுவனுடைய குறியும் தப்பும். உமது பெயர் உலகெங்கும் பரவும். பிரகாசமிக்க உடம்பினைப் பெறலாம். பொன், வெள்ளி, நவமணிகள் குறைவின்றி வந்து சேரும். பல செல்வங்கள் கிட்டும். தேவர்கள் பதவியும் தாமாகவே வரும். இவற்றையெல்லாம் அறிந்து சக்கர வழிபாட்டினைச் செய்ய வேண்டும் என்று திருமூலர் நம்மைக் கேட்டுக் கொள்கின்றார்.
"நலன்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்:
உரந்தரு வல்வினை உம்மைவிட் டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே". (திருமந்திரம் - 1304)
"நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்;
கடந்திடும் காலனும் கண்ணிய நாளும்;
படர்ந்திடும் நாமமும், பாய்கதிர் போல
அடைந்திடும் வண்ணம், அடைந்திடு நீயே". (திருமந்திரம் - 1308)
"அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்,
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்,
அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும்,
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே". (திருமந்திரம் - 1309)
இவ்வாறு திருமூலர் பெருமான் கூறும் பொழுது பாமர மக்கள் இவ்வுலகில் பெறவிரும்பும் நன்மைகளை இவ்வடிவத்தில் கருத்திற்கொண்டு பேசுகின்றார். உலக மக்கள் வாழ்வு இன்பமயமாக இருக்க வேண்டிப்பல பொருளகளைச் சேர்த்து வாழ விரும்புகின்றார்கள். பொருட்செல்வம் தேவைப்படுவது உண்மைதான். எனவே, இறைவனை அந்த நோக்கத்துடன் பார்த்து இறைஞ்சும்போது அவனுடைய திருவருள் நாம் வேண்டியவற்றைக் கிடைக்கச் செய்கின்றது. "இம்மையே தரும், சோறும் கூறையும் ஏத்தலாம். இடர் கெடலும் ஆம், அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே" என்பார் சுந்தரமூர்த்தி நாயனார். பராசக்தியின் அருள் பெறும்போது இந்த உலகத்தை ஆளும் மன்னவனாக மாறலாம், பல பதவிகள் பெறலாம், பல இன்பங்களை நுகரலாம். "அருளே உலகெல்லாம் ஆள்விப்பது" என்பார் காரைக்கால் அம்மையார். இதுபோன்ற அனுபவங்களை வேண்டுவது மனித இயல்புதான். அதை மறுக்க முடியாது. எனினும் நம்மில் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் இம்மைக்கும் மறுமைக்குமான இன்பத்தை விரும்பி நிற்பதில்லை. இவைகளுக்கு அப்பாற்பட்ட ஒர் நிலையை வேண்டி நிற்கின்றார்கள் இறப்பும், பிறப்புமற்ற நிலையைப் பெற விரும்புகின்றார்கள். மெய்ப்பொருளைக் கண்டு அனுபவிக்க விரும்புகின்றார்கள். "ஈசன் அருளே பிறப்பறுப்பது, ஆனால் - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்" என்பார் காரைக்கால் அம்மையார். எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட பரம்பொருளின் உண்மையை மனதிலே உணர்ந்து அந்த நிலையிலேயே இருக்க விரும்புவார்கள் பலர். அவர்கள் இறைவழிபாட்டால் கிடைக்கும் பொருட்செல்வத்தைப் பெரிதாக மதிப்பதில்லை. சேக்கிழார் பெருமான் கூறுவதுபோல, அவர்கள் ஒடும் செம்பொன்னும், ஒக்கவே நோக்குவர். இவர்கள் இறைவனுடைய திருவடிகளே சரணமென்ற குறிக்கோளுடையவர்கள் அன்பினைத்
தவிர அவர்கள் வேறெதுவும் வேண்டுவதில்லை. ஞானிகள் விரும்பும் வீட்டுப் பேற்றினையும் பேறினையும் அவர்கள் நாடுவதில்லை. பற்றற்ற நிலையில் உயிர்களிடையே அன்பு கொண்டு இறை அருளையே நாடி நிற்பவர்கள் இவர்கள். அந்த அருளை வாரி வழங்குபவள் பராசக்தி. ஆணவம், கன்மம், மாயை போன்ற மலங்களால் உண்மை மறைக்கப்பட்ட நிலையில் உயிர்கள் தாங்கள் செய்த வினைகளின் பயனாகப் பிறப்பையும், இறப்பையும் மாறி மாறிப்பெறுகின்றன. இதற்குக் காரணம் அருட்சக்திதான். இறைவியின் அருளால் ஆணவ மலமானது நாள்தோறும் படிப்படியாகப் பல பிறவிகளில் நின்று கழிக்கப்படுகிறது. பல பரிபாகம் நடைபெறுகின்றது. இயற்கையாய் அருள் உயிர்களிடத்தில் பதிக்கப்படுகின்றது. மயக்கம் நீங்குகின்றது. வினைகள் வெருண்டோடுகின்றன. அஞ்ஞான இருள் அகலுகின்றது. ஒப்பற்ற அருட்சக்தியின் உணர்வு உள்ளத்தில் பதிகின்றது.
"மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினைஅறுத் தின்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
அருட்டிகழ் ஞான மதுபுரிந் தாளே". (திருமந்திரம் - 1498)
திருமூலர் பெருமான் கூறுகின்றார். இமய மலையில் தோன்றி வளர்ந்த மலைமகள் அருளால் உலகை ஆளுகின்றார். உயிர்களுடன் மலங்களைச் சேர்த்து, வினைகளைச் செய்வித்து, பின்னர் வினைகளையும், மலங்களையும் நீக்குவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி உயிர்களுக்குப் பக்குவத்தை அளித்து, உ,ண்ணின்று உருக்கி, ஒப்பிலா கண்ணின்று காட்டி, அருட்கணை விழிக்கச் செய்து உயிர்களுக்குப் பெரும் பேற்றினை அளிக்கின்றாள். அவளுடைய அருட்சக்தி பிறப்பை அறுக்கும். சிறந்த தவமாகிய ஆன்மிகத்தை நல்கும். காரைக்கால் அம்மையார் இறைவனைச் சந்தித்த போது தனக்குப் பிறவாமை வேண்டும் என்றும், பிறப்பு உண்டேல் உன்னை மறவாமை வேண்டும் என்றும் கேட்கிறார். மறவாமல் இருப்பதே ஒரு பெரும் பேறு. அதைச் செய்விப்பது அன்னையினுடைய அருட்சக்தியாகும். பரம்பொருளை வழிபடத் தேவையான மனநிலையையும் உயிர்களுக்கு அந்த அருட்சகதி அளிக்கின்றது. எனவே, இவற்றையெல்லாம் மனதில் வைத்து அந்த அருட்சக்தியை மேலும் மேலும் வழிபட வேண்டும் என்று திருமூலர் கேட்டுக்கொள்கின்றார்.
"பிறப்பை அறுக்கும்;பெருந்தவம் நல்கும்;
மறப்பை அறுக்கும்;வழிபட வைக்கும்;
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே" (திருமந்திரம் - 1504)
இதை ஏற்போம். அதன் வழி நடப்போம். ஊனடைந்த உடம்பின் பிறவி தானடைந்த உறுதியைச் சார, மான் நயனங்கள் கொண்ட அன்னையின் பொற்றாள்கள் என்றென்றம் தொழுவோம்.