"அரன் அங்கி தன்னில் சங்காரம்" எண்ணற்ற சீவராசிகள் பிறந்து, வாழ்ந்து, இறப்பதை நாம் காண்கின்றோம் இது நமக்கு இயற்கையாகவே தோன்றுகிறது அதேபோல இந்தப் பிரபஞ்சத்தில் எண்ணற்ற

"அரன் அங்கி தன்னில் சங்காரம்"

எண்ணற்ற சீவராசிகள் பிறந்து, வாழ்ந்து, இறப்பதை நாம் காண்கின்றோம். இது நமக்கு இயற்கையாகவே தோன்றுகிறது. அதேபோல இந்தப் பிரபஞ்சத்தில் எண்ணற்ற கோளங்களும் அண்டங்களும் மூலப்பொருள்களிலிருந்து உருவாகிப் பல லட்சக்கணக்கான ஆண்டுகள் தத்தம் நிலையில் தங்கி, பின்னர் உருமாறி அழிகின்றன. கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானம் அண்டம், பிண்டம் ஆகியவற்றின் தோற்றம். மறைவு போன்றவற்றைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்து நம்மை வியப்படையச் செய்யும் வகையில் பல முடிவுகளை நமக்கு வெளியிட்டுள்ளன. அண்டமாயினும் சரி, பிண்டமாயினும் சரி, இரசாயன, பௌதிக அடிப்படையில் தோற்றம் என்பது பல அணுக்களின் சேர்க்கை என்கிற ஒரு முடிவு விஞ்ஞான ஆராய்ச்சியின் விளைவாக நமக்குக் கிடைத்த முக்கியமான ஒன்றாகும். அதேபோல், மறைவு என்பதும் அந்த அணுக்கள் இயற்கையின் நியதிகளுக்கு ஏற்ப காலகட்டத்தில் ஒன்று சேர்ந்து இருந்த நிலையிலிருந்து பிரிந்து இயங்குவதேயாகும் என்பதும்ட விஞ்ஞானத்தின் முடிவு. அந்த அணுக்களும் எவ்வாறு உருப்பெறுகின்றன. உருமாறுகின்றன. அவற்றின் மூலப்பொருள்கள் எவை, அவை எங்கிருந்து, எப்பொழுது தோன்றின போன்றவை பற்றி விஞ்ஞானிகள் உலகெங்கிலும் ஆரயாச்சியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவதாக, அணுக்களில் அளவிலா ஆற்றல் அடங்கிக் கிடக்கின்றது என்றும் அந்த ஆற்றலின் தன்மையே அணுக்களின் தன்மையைக் குறிக்கின்றது என்றும், புகழ்பெற்ற ஐன்ஸ்டீன் முதற்கொண்டு பல விஞ்ஞானிகள் நமக்கு எடுத்துக் காட்டியள்ளார்கள். ஒரு பொருள் மறையும் பொழுது அதனுட் கிடக்கும் அணுக்களின் சேர்க்கையின் தன்மை மாறுகிறதே தவிர அணுக்களே அழியவில்லை என்பதும் இன்றைய விஞ்ஞானம் கண்ட ஒரு முடிவாகும். சுருங்கக்கூறின், தோற்றமும் மறைவும் பொருள்களின் தூல, சூக்கும நிலைகளில் ஏற்படும் மாறுதல்கள் என்கிற அளவுக்கு விஞ்ஞான ஆராய்ச்சியிலிருந்து நாம் தெரிந்து கொள்கின்றோம். இந்த முடிவுகளை நமக்கு அளித்த விஞ்ஞானிகளுக்கு நாம் நன்றி கூற வேண்டும்.

ஏன் என்றும் இதற்கும் மெய்ஞ்ஞான அறிவுக்கும் என்ன தொடர்பு என்றும் நீங்கள் கேட்கலாம். தொடர்பு உண்டு என்பதை பல ஆயிரம் ஆண்டுகளாக நம்முடைய மெய்யுணர்வாளர்கள் தங்களுடைய உள்ளறிவாக உணர்ந்து நமக்குத் தெரிவித்து வருகிறார்கள். விஞ்ஞானிகள் அணுக்களின் இயக்கம் இயற்கையின் நியதியைக் கடைப்பிடிக்கின்றன என்கிறார்கள். மெய்யுணர்வாளர்கள் அந்த நியதிகளுக்கு ஒரு தலைவன் உண்டு என்று நமக்கு அனுபவரிதீயாக விளங்குகின்றார்கள. அணுக்கள் சடப்பொருள்களே அவற்றின் சேர்க்கை நிலமாகவும், நீராகவும், தீயாகவும், காற்றாகவும், ஆகாயமாகவும், நமக்குத் தோன்றலாம். அவற்றின் சேர்க்கையே உலகமாகவும், உடலாகவும் மற்றும் பல்வேறு பொருள்களாகவும் நம்முன் தோன்றி, நிலைபெற்று ஒடுங்கும் தன்மையைப் பெறுகின்றன. அவற்றை இந்த இயக்கத்தில் ஈடுபடுத்த ஓர் முதல்வன் வேண்டும். "தருபவன் ஒருவன் வேண்டும்". "செயல்செய்வான் ஒருவன் வேண்டும்", "எல்லாம் வருவிப்பான் ஒருவன் வேண்டும்" என்பது சிவஞானசித்தியார்.

இப்படியாக பல பொருள்கள் இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றுகின்ற. நிலைத்து நிற்கின்றன. தன்மை மாறுகின்றன. காணப்படும் பொருள்கள் நாம் காண இயலாதவாறு மறைகின்றன. இவை சடப்பொருள்களே ஆயினும் இறைவன் நீக்கமற நிறைந்த நிலையில் இவற்றுள்ளும் இறைவனுடைய அறிவும், ஆற்றலும் கலந்தே உள்ளன என்பதையும் உணரலாம்.

உயிர்கள் அநாதியானவை. இறைவனுடைய பேரருளால் சிறிது ஆற்றலும் தான் சார்ந்ததை அறிந்து கொள்ளக்கூடிய அறிவும் பெற்றவை. இறைவன் உயிர்களை இயக்க, உயிர்களும் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் இயங்கத் தொடங்குகின்றன. அநாதியே உயிருடன் சம்பந்தப்படு இருப்பது ஆணவ மலமாகும். இதுவே முதற்குற்றமாகும். இந்தக் குற்றம் அகலும்பொருட்டு இறைவன் உயிர்களுக்கு அனுபவத்தைத் தருகின்றான். அந்த அனுபவத்திற்காகப் பொருள்களும் பொருள்களின் சேர்க்கையும் ஏற்படுகின்றன. ஆணவ மலத்தின் நீக்கத்திற்கு உடலும், பொருள்களும் பயன்படுவது போலவே மாயையும் கன்மமும் பயன்படுகின்றன. இறைவன் இவற்றை உயிருடன் கூட்டுவித்து உயிர்களின் அறியாமையாகிய நிலைமை மாற இயக்கம் நடைபெற காரணமாகின்றான். ஆகவே, படைப்புத் தொழிலுக்கு ஒரு நோக்கம் இருக்கின்றது. "உயிர்க்கு மன்னிய புத்தி முத்தி வழங்கவும், அருளான் முன்னே துன்னிய மலங்கள் எல்லாம் துடைப்பதும், சொல்லலாமே" என்பது சிவஞானசித்தியார்.

இறைவன் தனு, கரண, புவன போகங்களை தந்தருளி, உயிர்களுடன் அவற்றைச் சேர்த்து உயிர்கள் தாங்கள் செய்யும் வினைகளுக்கு ஏற்ப, மலங்களை நீக்கிக் கொள்வதற்கான பாதைகளில் உயிர்களைச் செலுத்தி அவற்றை உய்விக்கின்றான். ஆணவமாகிய மலம் நீக்கும் பொருட்டு, மாயையும் கன்மமும் உயிரை வந்தடைகின்றன. ஆணவ அழுக்கை நீக்குவதற்கு மாயையும் கன்மமும் பயன்படுகின்றன. உண்மையில் இந்த மலங்கள் சடமானவையே. இவற்றின் மூலம் உயிருக்கு அனுபவங்கள் ஏற்பட இறைவனே உதவி செய்கின்றான். இந்த இயக்கமே படைப்பு என்று கூறப்படுகின்றது. படைப்பின் மறுபெயர் தத்துவங்களின் சேர்க்கையாகும். ஐந்து பூதங்கள், ஐந்து தன்மாத்திரைகள், கன்ம, ஞான இந்திரியங்கள், நான்கு உட்கரணங்கள் போன்றவற்றின் சேர்க்கையால் உயிருக்குத் தகுந்த அனுபவம் பெற இடம் கிடைக்கின்றது. இறைவன் தனது சக்தியை இதற்காகப் பயன்படுத்திப்பல தொழில்களுக்கு அதிகாரிகளை நிர்ணயித்து, அவர்களின் மூலமாக இந்த இயக்கத்தை நடத்தினாலும், எங்கும், எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்துள்ளான். இதையே மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில்

"பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி"

எனக் கூறியுள்ளார். இந்த உலகில் நாம் பருப்பொருட்களைப் பார்க்கிறோம். அனுபவிக்கின்றோம். விஞ்ஞானம் பருப்பொருட்களை அணுக்களின் சேர்க்கை என்று வருகிறது. மெய்யுணர்வாளர்கள் பிரபஞ்சம் அத்தனையும் தத்துவ வடிவே என்பார்கள். இறைவனுடைய சக்தியாகிய மாயை முதல் நாம் அனுபவிப்பவை எல்லாம் இந்தத் தத்துவக் வட்டங்களே என்பது மெய்ஞ்ஞானிகளின் அனுபவபூர்வமான கண்டுபிடிப்பு. இதைச் சிவஞானசித்தியார் மிகத் தெளிவாக

"தத்துவ ரூப மாகும், தரும்அரு உருவம் எல்லாம்,

தத்துவம் தூல, சூக்க பரங்களும் ஆகி நிற்கும்,

தத்துவம் தன்னில் சாரும் அணுக்கள், சாதாக்கியத்தில்

தத்துவம் சத்தம் சாரும், சகலமும் தத்து வம்காண்" .

என்று உரைக்கின்றது.

உலகத்திலே விளங்கித் தோன்றும் பொருட்கள் நாளடைவிலே மறைவதைப் பார்க்கின்றோம். அவை அழிந்தன என்று சொல்லக்கூடாது. அழிந்தது என்றால் அவை இல்லாமல் போய்விட்டது என்கிற பொருள் வரும். ஆனால், உண்மையில் உலகத்தில் தோன்றிய பொருள்கள் அழிவதுபோல் காணப்பட்டாலும் அவை தன்மை மாறுகின்றன என்று வருவதே பொருத்தமாகும். பருப்பொருட்கள் தங்களுடைய காரணமான நுட்பப் பொருள்களிலும், நுட்பப் பொருள்கள் தங்களுக்குக் காரணமான தத்துவங்களிலும், தத்துவங்கள் இறைவனின் தோற்றமான சக்தியிலும் ஓடுங்கிக் கொள்கின்றன. இந்த ஒடுக்கத்தையே நாம் அழிதல் என்று சொல்கிறோம் இதுவே, சங்காரம் எனப்படும். சங்காரத்தைப் பொறுத்தவரை விஞ்ஞானம் அதிக தூரம் செல்லவில்லை. இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு முடிவுறும் என்பது பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஒப்பற்ற விஞ்ஞானிகள் ஒரு கட்டத்திற்கு பிறகு மேற்கொண்டு செல்லத் தயங்குகின்றார்கள். அதற்குக் காரணம் இயற்கையின் நியதிகள் நமது அறிவுக்கு எட்டாத நிலையில் இப்போது இயங்குவது போலவே தொடர்ந்து இயங்குமா என்கிற பலத்த சந்தேகம் எழுகின்றது. இந்தச் சங்கேதத்தை நீக்க விஞ்ஞானிகள் வரப்போகும் நிலைகளைப் பற்றி ஓரளவு யூகித்துத்தான் பதில் சொல்ல வேண்டியுள்ளது. மேலும், சங்காரத்திற்கென ஒரு நோக்கம் இருக்கின்றது என்பதையும் விஞ்ஞானிகள் இதுவரை ஒத்துக்கொள்ளாத காரணத்தினால் பௌதிக இரசாயன அளவுகளால் மட்டும் அவர்களால் ஒரு முடிவான முடிவை அடைய இயலவில்லை.

ஆழ்ந்த இறை அனுபவம் பெற்ற மெய்யுணர்வாளர்களின் கண்ணோக்கில் படைப்பு, ஒடுக்கம் ஆகியவற்றின் தன்மை தெள்ளத்தெளிவாக விளங்குகின்றது. இறைவனே சங்காரநாதன் ஆவான். உயிர்களும், பிரபஞ்சக் கூட்டங்களும், தன்னிடம் ஒடுங்குவதற்குக் காரணமாக இருப்பவனும் அவனே.

"ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய், அனைத்து உலகும்

ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய்,

போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில்"

என்கிறார் மணிவாசகப் பெருமான்.

"அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்

தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்

அந்தம் ஆதி என்மனார் புலவர்"

என்பது சிவஞானபோதத்தின் முதல் சூத்திரம்.

"ஆக்கி எவையும் அளித் (து) ஆசுடன் அடங்கப்

போக்குமவன் போகாப் புகல்"

என்பது திருவருட்பயன்.

இறை இயக்கத்திற்கு நோக்கம் உண்டு. நோக்கமின்றி நடப்பதில்லை. படைப்புக்குக் காரணம் உண்டு. அதுபோல் சங்காரத்திற்கும் நோக்கம் உண்டு. கோடிக்கணக்கான உயிர்கள் பல பிறவிகளில் வினைநுகர்ச்சியால் அயர்வடைகின்றன, தளர்கின்றன. அவை இளைப்பாற வேண்டும். இளைப்பாறுவதன் மூலம் உயிர்கள் பக்குவம் அடைகின்றன. பல பிறவிகளில் உயிர்கள் தங்களது அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி வினைகளைப் புரிகின்றன. அதன்பயனாக இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன. படிப்படியாக வினைநுகர்விலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்கிற உணர்வு பிறக்கிறது. இன்ப துன்பங்களைச் சமமாக எண்ணும் மனமுதிர்ச்சி ஏற்படுகிறது. இது இறைவன் அருளாலேயே நிகழ்கிறது. உள்ளம் நடுவு நிலைமையை அடைகிறது. இருவினை ஒப்பு ஏற்படுகிறது. இதற்காக உயிர்கள் பல பிறவிகள் எடுக்க வேண்டும். பல உடல்களைப் பெறவேண்டும். பெறுவதற்கு முன் களைதல் நடக்கவேண்டும். இந்த மாற்றங்கள் நிகழ்வதற்கு ஒடுக்கம் தேவைப்படுகின்றது. சங்காரத்தினால் கன்ம மலம் பக்குவமடைகின்றது. இதனை நிகழ்த்தும் சங்காரகர்த்தா இறைவனே ஆவன். மூலக்குற்றமான ஆணவமலம் கிழிய வேண்டும். கேவல நிலையில் ஆணவத்தோடு நிற்கின்ற உயிர் சகல நிலைக்கு வரும்போது இதைச் சாதிக்க இயலும். அதற்காக இறைவன் பிரபரஞ்சத்தைப் படைக்கின்றான். பல பிறவிகளில் சேர்த்த கன்ம மலத்தை உயிர்கள் தாங்கி வருகின்றான். இவையும் கழியப்பட வேண்டும். இதற்காகவும் பிரபஞ்சம் தேவை. மாயாமல பரிபாகம் நடப்பதற்காக உயிர்களும் உலகமும் சேர்ந்து தனு, கரண, புவன போகங்கள் நடைபெறுகின்றன. கடைசியில் கன்ம மல பரிபாகமும் நடைபெறவேண்டும். இதற்காகவே இறைவன் சங்காரத் தொழிலை மேற்கொள்கின்றான். நாம் சாப்பிடும் உணவு உறங்கும்போது ஜீரணிக்கப்பபடுவதுபோல உயிரின் ஒடுக்கத்தில் கன்ம மலம் பக்குவமடைகிறது. இதுவே சங்காரமாகும். சங்காரம் என்பதும் இளைப்பாறுதல் என்பதும் ஒன்றேயாகும். இந்த இளைப்பாறுதலின் நோக்கம் இறைவனைக் கண்ணுற்று வீடுபேறு பெறுவதேயாகும்.

"எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்" (திருவாசகம்)

இந்தச் சங்காரம் பல வகைப்படும். முதலாவதாக நித்திய சங்காரம். இதுவே தினப்பிரளயம் எனப்படும். உடம்பிற்கும், உள்ளத்திற்கும் ஓய்வு கொடுக்க மனிதன் தினந்தோறும் உறங்குவது நித்திய சங்காரமாகும். இந்த நித்தியசங்காரத்தில் உயிரானது கனவு, ஆழ்ந்த உறக்கம் துரியம், துரியாதீதம் ஆகிய நிலைகளில் சஞ்சரிக்கின்றது. விழிப்பு நிலையில் ஒடி, ஆடி வினைப்போகங்களை அனுபவிக்கும் உயிர் இளைப்பாறுவதற்காகச் சிற்சில கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இயங்கும் நிலை நித்திய சங்காரமாகும்.

அடுத்து ஆயுட்சங்காரம். ஒவ்வொரு உயிரும் உடலுடன் சேர்ந்து, வாழ்ந்து, வாழ்வை முடித்துக் கொண்டு உடலை விட்டு வெளிக்கிளம்புவது ஆயுட்சங்காரமாகும். இதுவும் ஒருவகை உறக்கமாகும். இது விழித்தல் இல்லாத உறக்கம். இது ஒர் நெடுந்துயில். வாழ்வு விழித்திருப்பதைப் போன்றது. மரணம் உறங்குவதைப் போன்றது.

"உறங்கு வதுபோலும் சாக்காடு, உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு"

என்பது குறள்.

விழித்திருக்கும் நிலை சாக்கிரம். வாழ்வை சாக்கிரத்திற்கு ஒப்பிட்டால் மரணத்தை சாக்கிராதீதம் என்கிற நிலைக்கு ஒப்பிடலாம். "வைத்த சங்காரமும் சாக்கிராததீதமாம்" என்பார் திருமூலர். நித்தியசங்காரத்தின்போது உயிரானது தூலம், சூக்குமம் என்னும் இரண்டு உடல்களோடு ஒட்டாது நிற்கும். ஆயுட்சங்காரத்தில் உயிரானது தூல உடம்பை விட்டு அகன்று விடும்.

இதற்கும் அப்பாற்பட்டது சர்வசங்காரம். நித்தியசங்காரமும் ஆயுட்சங்காரமும் அந்தந்த உயிர்களுக்கு அவற்றின் விளைக்கேற்ப நிகழ்கின்றன. சர்வசங்காரத்தில் எல்லா உயிர்களும் கூட்டாக ஒடுக்கப்படுகின்றன. அதையே திருமந்திரம் சுத்தசங்காரம் என்கிறது. இந்த சர்வசங்காரத்தில் உயிரானது செயலற்று ஆணவ மலத்தில் அழுந்தி ஒடுங்கிநிற்கும். சர்வ சங்காரத்தில் சூக்கும உடம்பும் அகன்றுவிடும். அதாவது எல்லாக் கருவிகளும் கழன்று விடுகின்றன. இந்தச் சங்காரத்தில் உயிர்கள் ஒரு தொழிலும் புரிவதில்லை. எனவே, அதைத் திருமந்திரம் "தொழிலற்ற கேவலம்" என்கிறது. இந்தச் சங்காரத்தில் எல்லாக் கருவிகளும் முற்றிலும் அழிந்து ஒழிவதால் தொழில்களுக்கு இடமில்லை.

இதுவரை விளக்கப்பட்ட நிலைகள் உயிர்களுக்குக் காலக்கிரமத்தில் கிடைத்தாலும், இவற்றிற்கு மேலான நிலையும் ஒன்றுண்டு. அதைத் திருமூலர் "உய்த்தசங்காரம்" என்று அழைக்கின்றார். இறைவனின் பேரருள் பெற்று அந்த அருளிலே திளைத்து, கருவி கரணங்களை ஒழித்து வீட்டின்பமாகிய பேரின்பத்தின் ஒரு பிறிவியிலேயே மூழ்கிக்கிடப்பதை உய்த்தசங்காரம் எனலாம். இந்த நிலையில் உயிர்கள் நீங்கா இன்பத்தில் கிடக்கும். இதுவே திருவருட்சங்காரம். இறைவன் அருளால் திருவடிப்பேறு பெறுதலாகும். இதுவே உயிர்கள் அடைய வேண்டிய

உண்மை நிலையாகும். சிவஞானச் செல்வர்கள் ஒரு பிறவியிலேயே பரன் அருளால் பிறத்தல், வாழ்தல், இறத்தல் என்கிற நிலைகளுக்கு அப்பால் உள்ள வீடு பேறு நிலையை அடைதல் உய்த்தசங்காரமாகும். "உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே" என்பது திருமந்திரம். "தூங்கிக் கிடக்கும் நிலை" என்று சித்தர்கள் இதனைக் கூறுவார்கள். இது மரணமம் அல்ல, செயல் இயக்கமும் அல்ல, இது சிவமாய் நின்று சிவத்துடன் பொருந்தியிருக்கும் நிலையாகும். வெறும் சொற்களால் விளக்க இயலாத நிலை. அனுபவித்தே இந்த பேரின்பத்தை அடைய வேண்டும். "தூங்கி ¢ கண்டார் நிலை சொல்லுவது எவ்வாறே!" (திருமந்திரம்) . கருவி கரணங்களின் சேட்டைகளிலிருந்து விலகி, தான் என்கிற உணர்வு நீங்கி, 'சிவபோதம்' என்ற பேற்றினைப் பெற்ற காரணத்தால் "இருந்தார் இழவு வந்து எய்திய சோம்பே"  ¢எனறார் திருமூலர்.

ஆக, நித்தியசங்காரம், ஆயுட்சங்காரம், சர்வசங்காரம் இவற்றின் வழியாக உயிர் பக்குவமடைந்து, மலங்களைக் களைந்து, இன்பத் துன்பங்களில் நடுநிலைமை செலுத்திச் சிவானுபவத்தில் தோய்ந்த உய்த்தசங்கார நிலையை அடைவது சங்காரத்தின் மாபெரும் நோக்கமாகும். இவற்றைப் பற்றிய திருமந்திரங்கள் பின்வருமாறு -

"நித்தசங் காரம் உறக்கத்து நீள்முடம்,

வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம்,

சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்,

உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே" (திருமந்திரம் - 421)

"நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்,

வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம்,

சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்,

உய்த்தசங் காரம் சிவன் அருள் உண்மையே" (திருமந்திரம் - 422)

"நித்தசங் காரங் கருவிடர் நீக்கினால்

ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்,

சுத்தசங் காரம் அதீதத்துள் தோய்வுறல்,

உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே". (திருமந்திரம் - 423)

"நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்

வைத்தசங் காரமும் மன்னும் அனாதியில்,

சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்,

உய்த்தசங் காரமுன் நாலாம் உதிக்கிலே". (திருமந்திரம் - 424)

முருகப் பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் கடுமையான போர் நடக்கின்றது. சூரபத்மன் ஆணவ மலத்திற்கு மறுபெயர். ஆணவச்செருக்கோடு போர் புரிந்தான். பல வடிவங்களை எடுத்து முருகனைப் போரில் அழிக்க முயன்றான். ஆனால்

முருகன் எல்லவாற்றையும் அழித்து விடுகின்றான். முடிவில் சூரன் எல்லாம் அழிந்து தனியாக நிற்கின்றான். முருகப் பெருமானுக்குச் சூரபத்மனை அழிக்க வேண்டும் என்று விருப்பம் இல்லை. சூரனை அவன் ஆணவமலத்திலிருந்து காப்பாற்றுவதே நோக்கமாகும். இங்கே முருகன் ஒரு நாடகம் நடிக்கின்றான். தனது உண்மையான வடிவத்தைச் சூரன் பார்த்த பிறகாவது பக்குவமடையமாட்டானா என்கிற ஆவல் முருகனுக்கு ஏற்பட்டது. சூரன் முருகப் பெருமானுடைய வடிவைப் பார்க்கப் பார்க்க பெரிய வியப்பு உண்டாகிறது. முருகனுடைய பேரழகும் பெரும் கரணையும் அவனுடைய உள்ளத்தை உருக்குகின்றது. இதுவரை முருகப் பெருமானுடைய அருமையைத் தெரிந்து கொள்ளவில்லையே என்று இரங்குகின்றான். பாதாதிகேசம் வரை இறைவனுடைய அழகைப் பார்த்த சூரபத்மன் உடல் குன்றி, உள்ளம் கரைந்து, அன்பு பொங்க நெஞ்சத்தில் இறை இன்பத்தை நிரப்பி நிற்கின்றான். அந்தக் கண நேரத்தில் அவனுடைய அகங்காரம் அவனை விட்டு அகலுகிறது. வெகுளி முற்றும் தீர்கிறது. இதுவரை ஆணவக் கண்களால் உலகை பார்த்த சூரபத்மன் இப்பொழுத பிரபஞ்சம் முழுவதிலும் இறைவனுடைய வடிவைக் காண்கின்றான். நல்ல தவத்தினால்தான் பெற்ற பேறு என்றும் கருதுகின்றான்.

"போயின அகந்தை, போதம் புகுந்தன,

வலத்த வான

தூயதோர் தோளும் கண்ணும் துடித்தன,

புவனம் எங்கும்

மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படு

கின்ற, விண்ணோர்

நாயகன் வடிவம்கண்டேன், நற்றவப்

பயன்ஈ தன்றோ?" (கந்தபுராணம்)

முருகப்பெருமான் தனது நாடகத்தை முடித்துக் கொள்கின்றான். சூரனுடைய உள்ளத்திலும் பக்குவத்திற்கான வாய்பபு வந்துவிடவே சூரனை ஆட்கொள்ள முடிவு செய்கின்றான். உடனே சூரபத்மனிடம் பழைய ஆணவ மலமும், வெகுளியும், பகையுணர்ச்சியும் சேர்ந்து கொள்கின்றன. போர் தொடருகிறது. பெரிய கடலின் நடுவே சென்று சூரன் மாமர வடிவாக நிற்கின்றான். முருகனின் வேல் மாமரத்தை துண்டாக்குகிறது. சூரன் பழைய உருவத்தோடு முருகனுடன் மீண்டும் போரிடுகின்றான். வேலாயுதம் சூரனின் மார்பை கிழித்து இரண்டு கூறாக்க, ஒரு கூறு சேவலாகவும் மற்றொரு கூறு மயிலாகவும் வந்து எதிர்க்கின்றன. அவற்றை முருகப்பெருமான் தன் கருணைபொழியும் விழிகளால் பார்க்க பறவை வடிவத்தில் நின்று சூரனின் ஆணவமலம் நீங்குகிறது. பகை உணர்வு மறைகிறது. சேவலைக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக் கொள்கின்றான். பொல்லாத சூரனுடைய ஆணவத்தை முருகப்பெருமான் மாற்றினான். சூரனை அடியோடு நாசம் செய்யவில்லை. தன்னுடைய தொண்டனாகவே ஆக்கிக் கொண்டான்.

சூரபத்மனின் வரலாறு ஆணவமல சங்காரத்திற்கு எடுத்துக்காட்டாகும். முருகப் பெருமானின் அருளால், அவனை யாசிக்கும் தீயவர்கள் கூடத் தங்கள் தன்மையை மாற்றிக் கொண்டு, அவன் சந்நிதியை அடைந்து பேரின்பம் அடையலாம் என்ற உயர்ந்த தத்துவத்தைச் சூரசங்காரம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது என்பார் கச்சியப்பர்.

"தீயவை புரிந்தா ரேனும் குமரவேள் திருமுன் உற்றால்

தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை

ஆயவும் வேண்டும் கொல்லோ? அடுசமர் இந்நாட் செய்த

மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள்பெற் றுய்ந்தான்?" (கந்தபுராணம்)

சிவபெருமானின் இடக்கையில் b இருக்கின்றது. b சங்காரத்தைக் குறீக்கும். ஆணவமலமாகிய இருளை நீக்குவது, ஒளிமயமான பேரறிவினைத் தருவது ஆகியவை இறைவன் திருக்கையில் உள்ள தீயின் உய்த்த சங்காரத்தின் பணிகளாகும். செந்தழல் போல் திருமேனியை உடைய இறைவனே சங்கார காரணனாகின்றான். இந்தச் சங்காரத்தைச் செய்யும் கருவி நெருப்பாகும். அவன் சிரித்தாலும் நெருப்புப்பொறி எழுகிறது. சினந்தாலும் தீப்பொறி பறக்கிறது. அவனுடைய கையில் நெருப்பு எரிகிறது. கண்ணிலும் நெருப்பு. இறைவனே தீப்பிழம்பாக நிற்கின்றான். தீயுமே ஒரு அம்பாக எழுந்து தீப்பரளயத்தைச் செய்கின்றது.

"அங்கிசெய் தீசன் அகலிடம் சுட்டது

அங்கிசெய் தீசன் அலைகடல் சுட்டது

அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது

அங்கியவ் வீசற்குக் கையம்பு தானே" (திருமந்திரம் - 417)

இதையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றார் காரைக்கால் அம்மையார். அக்கினிப் பிரளயத்தில் உலகெலாம் b மூண்டு நிறைந்து நிற்கின்றது. பிறகு அடங்கி விடுகிறது. பிரபஞ்சம் மீண்டும் தோன்றுகிறது. பிரளய காலத்தில் எரிந்த b இப்போது என்னவாயிற்று? காலாக்னியாகிய தீயை மற்ற காலங்களில், ஏழு உலகங்களில் மறைத்து வைத்தாயா அல்லது அந்தத் தீயை உனது திருக்கரத்தில் வைத்து பாதுகாக்கின்றாயோ? எனக்கு இந்த உண்மையைச் சொல்லி அருள் வேண்டும் என்று இறைவனிடம் காரைக்கால் அம்மையார் உரிமையோடு கேட்கின்றார்.

"மறைத்து உலகம் ஏழினிலும்

வைத்தாயோ? அன்றேல்

உறைப்போடும் உன்கைக்

காண்டாயோ? - நிறைத்திட்டு

உளைந்துஎழுந்து நீஎரிப்ப

மூவுலகும் உள்புக்கு

அளைந்துஎழுந்த செந்தீ அழல்" (அற்புதத் திருவந்தாதி)

காரைக்கால் அம்மையார் மேலும் சிந்திக்கின்றார். இறைவனது உள்ளங்கை சிவந்து இருக்கிறதே ஏன்? ஒரு வேளை தீயை ஏந்துவதால் அந்தக் கரம் சிவந்து விட்டதோ என்கிற எண்ணம் எழுகிறது. ஆனால் இறைவனே தழல்வண்ணன் ஆயிற்றே. திருக்கையில் வைத்திருப்பது ஒரு சிறயி b அல்லவா? பெரிய தீயிடத்தில் இந்தத் திருக்கரத்திலுள்ள சிறிய b என்ன செய்யும்? தீயின் நிறம் செந்நிறமாகும். சிவபெருமானுடைய திருக்கரமும் செம்மையுடையது. தீயே தன் வடிவமாகக் கொண்டிருக்கும் இறைவனுடைய செம்மையே உள்ளங்கையில் சிவப்பை ஏற்றி இருக்க வேண்டும். காரைக்கால் அம்மையார் தன்னுடைய அன்புக் குழந்தையிடம் வினாவை எழுப்புவதுபோல் கேட்டு இறைவனிடம் உண்மையை வேண்டுகின்றார்.

"அழல்ஆட அங்கை சிவந்ததோ? அங்கை

அழகால் அழல்சிவந்த வாறோ? - கழல்ஆடப்

பேயோடு கானில் பிறங்க அனல்ஏந்தித்

தீஆடு வாய், இதனைச் செப்பு". (அற்புதத் திருவந்தாதி)

சங்காரத் தொழிலைப் புரிந்து இறைவன் எல்லாவற்றையும் தன்னுள் ஒடுக்கிக் கொண்டாலும் தனது பெரும் கருணையால் மீண்டும் உலகத்தைத் தோற்றுவித்து, உயிர்களுக்கு வாழ இடம் கொடுத்து, அறிவையும் கொடுத்து அருளிச் செய்கின்றான். இறைவன் அளித்த பேறுகளை நாம் பயன்படுத்தி, நம்முடைய வினைகளைத் தகர்த்து, தற்போதும் மீண்டும் தலைதூக்காமல் இருக்கச் செய்து இறைவனுடைய திருவடிகளைச் சேர்ந்து இன்புறுவோம் என்கிறார் திருமூலர்.

"தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை,

மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு,

காயம்வைத் தான், கலந் தெங்கும் நினைப்பதோர்

ஆயம்வைத் தாய்உணர் வாரவைத் தானே" (திருமந்திரம் - 426)