திருமூலர் ஒரு சித்தர்
கோடை மாதங்களில் கடும் வெயிலைச் சமாளிப்பதற்காக மலைப் பிரதேசங்களுக்குச் சென்று சில நாட்கள் தங்கி, வாழ்க்கைப் பிரச்சினைகளை மறந்து, இயற்கையின் எழிலைக் கண்டு, ரசித்து, மனிதல் அமைதியையும், உடலில் புத்துணர்ச்சியையும் பெற்று வருவது நம்மிடையே பலருக்கு ஓர் வழக்கமாக இருந்து வருகிறது. மலைச்சாலைகள் பொதுவாகக் குறுகியும், வளைந்தும் இருக்கும். சிறிது சிறதாக உயர்ந்து கொண்டு செல்லும். பல ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு நான் மலைப் பகுதிகளுக்குச் செல்லும்போது, மலைச் சாலைகளைச் சுற்றி அடர்ந்த காடுகளைப் பார்த்திருக்கின்றேன். ஆனால், இப்போது காடுகளைக் காண்பத அரிதாகி விட்டது. சாலை செங்குத்தான பகுதி வழியாகச் செல்லும் பொழுது இளைப்பாறுவதற்கும், இயற்கையைக்கண்டு களிப்பதற்கும் இடவசதி செய்திருப்பார்கள். அந்த இடங்களிலிருந்து நாம் கீழே பார்க்கும்பொழுது கண்ணுக்கு எட்டிய தூரம் அடர்ந்த பச்சை நிறக் காடுகள் மலைச் சாரல்களிலும் மற்ற மரங்களைவிட அதிகமாக உயர்ந்து நிற்பதையும் காணலாம். அந்தச் சில மரங்கள் தங்களுடைய விசேஷத் தன்மையால், தரத்தால் உயர்ந்து நிற்கின்றன.
மாந்தருள் சித்தர்கள் அதேபோல உயர்ந்தவர்கள். தங்களுடைய ஆன்மிக பலத்தால், உள்ளறிவால், தூய கரணங்களால், தெளிவான சிந்தனையால், தம்முள் பெற்ற இறை உணர்வினால், பரந்த மனிதாபிமானத்தால் சித்தர்கள் மக்களுக்கு வழிகாட்டிகளாகத் திகழ்கின்றார்கள். சித்தர்களை எல்லா நாடுகளிலும், சமுதாயம், சாதி போன்றவற்றிற்குச் சித்தர்கள் அப்பாற்பட்டவர்கள். அவர்களுடைய குறிக்கோள் ஒன்றே!அவர்கள் நாடுவதும் ஒன்றே!அவர்கள் அடைவதும் ஒன்றே!அவர்களுடைய அறிவுரைகளும் ஏறத்தாழ ஒரே தன்மையைப் பெற்றவைகளாலும் இருக்கின்றன. சித்தர்கள் வரலாற்றைப் பொறுத்தவரை நமது நாடு தனிப்பட்ட பெருமைக்குரியது. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் உணர்வுகளிலே ஊறி நிற்கின்ற ஆன்மிகமும், அவர்களுடைய வாழ்க்கையுடன் பின்னிக் கிடந்து இருக்கின்ற சமய நெறிகளும், எளிமையான வாழ்வும், உயர்ந்த பண்புகளும், சித்தர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நன்கு உழப்பட்ட நிலங்களாக அமைந்திருக்கின்றன. ஆகவே, சித்தர்கள் என்றால் இந்திய நாட்டுச் சித்தர்களைக் குறிப்பிடுவதே ஒரு வழக்கமாகி விட்டது.
சித்தர்கள் வரலாற்றில் தமிழ்நாட்டுக்குச் சிறப்பான இடமுண்டு. மிகத்தொண்மை வாய்ந்த தமிழ் இலக்கியம் சித்தர்களின் சாதனைகளை எடுத்துக் காட்டுகின்றது. பல சித்தர்களின் வாழ்வும் வாக்கும், காலங்கடந்த தன்மை பெற்றவைகளாக, இன்றும் பாமர மக்களின் எண்ணங்களிலும், உணர்வுகளிலும் நிலைத்த நிற்கின்றன. மக்களின் ஆன்மிக சிந்தனைகள் வளருவதற்கும், சமய நெறிகள் தழைக்கவும், மக்களுடைய பண்புகளும் நடத்தையும் உயர்வதற்கும் சித்தர்கள் அரும்பாடுபட்டிருக்கிறார்கள். ஏன், இன்னும் சொல்லப்போனால், சமயக் கோட்பாடுகளின் எல்லைக்குள் நின்று சமய நெறிகளைப் பரப்பி வந்த
பெரியார்களைவிடப் பல சித்தர்கள் மக்களை ஆன்மீகப் பாதையில் அழைத்துச் செல்லும் பொருட்டு கலங்கரை விளக்குப் போன்று சுடர்விட்டுப் பிரகாசித்து, மக்களின் சிந்தனைகளை இறை உணர்வோடு இணைக்கும் பணியில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், சித்தர்கள் மக்களிடையே வேற்றுமையின்றி, உயர்வு தாழ்வின்றிப் பழகி அவர்களுடன் ஒன்றி இருந்ததுதான். மக்களின் உள்ளக்கிடக்கைகளை அவர்கள் நன்கு அறிந்தவர்கள். அவர்களுடைய ஆசாபாசங்களைத் தெரிந்து கொண்டவர்கள். சித்தர்கள் வெறும் தத்துவவாதிகள் மட்டுமல்லர். தத்துவங்களைக் கடந்தவர்கள். இறை உணர்வைப் பெற்றவர்கள். தம்முள் இறைவனை அனுபவித்தவர்கள். அதன்விளைவாக மட்டிலா பேரின்பத்தைப் பெற்று அதனுள் திளைத்து வருபவர்கள். அனுபூதிமான்கள். அதேநேரத்தில் அவர்கள் சமய நெறிகளைப் புறக்கணிக்கவில்லை. சமய நெறிகள் ஆன்மிகத்திற்குப் பயன்படாத உயிரற்ற சடங்குகளாக மட்டும் நின்றுவிடக்கூடாது என்பதை நன்கு உணர்ந்தவர்களாக, அவற்றிற்கெல்லாம் அடிப்படையான அன்பையும், அறத்தையும், சுட்டிக்காட்டி, அன்பு வழி, அறவழி நடந்து செல்பவர்கள் இயல்பாகவே சமய நெறிகளைக் கடைப்பிடித்து, வீடு பேறு அடையத் தகுதி உடையவர்களாகிறார்கள் என்று மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்கள். வாழ்க்கை நிலையற்றது. வாழ்க்கையோடு ஒன்றிப் போவதைவிட, நிலையான ஒன்றை நாம் பெற முயல வேண்டும் என்கின்ற உபதேசத்தை நமக்கு அருளிச் செய்து, சித்தர்கள் சமய நெறிகளை மக்கள் மேலும் தீவிரமாக மேற்கொள்ளும் ஆவலைப் பெற அதற்குத் தேவையான ஒழுக்கத்தை மக்களிடையே பரப்பி உள்ளார்கள். சுருங்கச் சொன்னால், சித்தர்களை ஆன்மிக விஞ்ஞானிகள் என்று அழைக்கலாம்.
விஞ்ஞான அறிவு நமது உடலினில் கருவி, கரணங்களோடு சம்பந்தப்பட்டது. ஒரு பொருளை நன்கு ஆராய்ந்து அதைப் பற்றிய விவரங்களையும், விளக்கங்களையும், கரண காரியங்களையும் நமது புலனறிவைப் பயன்படுத்திக் கொண்டு விளக்கிக் கூறுவதே விஞ்ஞானம் ஆகும். விஞ்ஞானத்திற்கென சில ஆய்வு முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி நாம் பெறும் அறிவின் நிலையை ஆழப்படுத்தியும், பரவலாக்கியும் மேலும் புதிய அறிவினை நமக்குச் சேகரித்துக் கொடுப்பது விஞ்ஞான வளர்ச்சியின் முக்கிய நோக்கமாகும். இத்தகைய அணுகுமுறைகளை மேற்கொண்டு கடந்த சில நூற்றாண்டுகளில் விஞ்ஞான வளர்ச்சியில் வியக்கத்தக்க சாதனைகளை உலகம் புரிந்திருக்கின்றது என்பது உண்மை. இந்தச் சாதனைகள் நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், நம்முடைய வசதிகளும் பெருக்கவும் உதவி புரிந்திருக்கின்றன என்பதிலும் ஐயமில்லை.
இவ்வாறு நாம் பெறும் அறிவைச் சிற்றறிவு என்று மெய்யுணர்வாளர்கள் குறிப்பிடுவார்கள். அதைத் தவிர பேரறிவு என்று ஒன்று இருக்கின்றது. அதுதான் இறைவனைப் பற்றிய அறிவு. நாம் எல்லாவிதமான அறிவைப் பெற்றிருந்தாலும், பேரறிவைப் பெறாதவரை நாம் இந்த உலகில் பிறந்து வாழ்வதனுடைய நோக்கம் நிறைவேறாது என்பது மெய்யுணர்வாளர்களுடைய கருத்தாகும். இந்த அறிவை நாம் பெற வேண்டும். இறை அறிவைப் பெற்ற மாத்திரத்திலேயே நான் என்னும் தன்மை மாறி, இறை என்னும் உணர்வு பிறந்து, அந்த உணர்விலே மூழ்கிக் கிடந்து பேரின்பத்தைப் பெறலாம். இந்த அறிவைப் பெறுவதற்கான தகுதியை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே நமது வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும்.
திருமூலர்பெருமான் பேரறிவை அனுபவித்த காரணத்தால், தனது சிந்தனையைத் தெள்ளத் தெளிவாக நமக்கு அருளிச் செய்கிறார்.
"எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு
எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை
எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே". (திருமந்திரம் - 2596)
விஞ்ஞான அறிவைப் பயன்படுத்திப் பல பொருள்களை விளக்கி விடலாம். ஆனால் இறைவனைப் பற்றிய பேரறிவை நமது சுட்டறிவால் மட்டும் அடைந்துவிட முடியாது. இறைவன் நமது அறிவுக்கு எட்டாதவன். காட்டும் குறியும் கடந்தவன். கரையில்லாத கடல் போன்றவன். அவனைப் பற்றிய அறிவை ஏடுகளிலிருந்தும், நூல்களிலிருந்தும் பெற இயலாது. அவனுக்கு உரை காண்பதும் கடினம். "நூல் அறிவு பேசி நுழைவு இலாதார் திரிக!" என்பார் காரைக்கால் அம்மையார். "ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள் சோதீ" என்பது சம்பந்தருடைய திருவாக்காகும்.
அறிவின் வழியாக இறைவனைத் தெரிந்து கொள்ள முயலுவதை விட்டு உணர்வின் வாயிலாகத் தெரிந்து தெளிவதுதான் சித்தர்களுடைய ஞானமாகும். எந்த வாக்கினாலும், எந்த விரிவுரையானாலும் பிற பொருளைப் போல் அறிய முடியாத பொருளே இறைவனாகிய பரம்பொருளாகும். இந்த இறைவனை அனுபவிக்க வேண்டுமென்றால் முதலில் சிந்தையைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். களங்கங்களை நீக்க வேண்டும். திரையற்ற நீர்போல் அசைவற்று நிற்க வேண்டும். இந்த உயர்ந்த தியான நிலையில் இறைவன், மாசு, மறு, அற்றவன், வெளிப்பட்டு அருள் செய்வான்.
"உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யோனே". (திருமந்திரம் - 2955)
அறிவுக் கண்களால் பார்ப்பதைவிட அருள் கண்களால் பார்ப்பதே இறைவனை அடைவதற்கு ஒரு முக்கிய சாதனமாகும் என்பது சித்தர்களுடைய ஞானமாகும். சித்தர்கள் முழுமையாக இந்த அருள் அனுபவத்தைப் பெற்றவர்கள, தன்னை மறந்து, தனது கரணங்களை மறந்து, உடலை மறந்து, சித்தத்தைச் சிவமாக்கி அந்த சிவானந்தப் பேரின்பத்தில் திளைப்பவர்கள் சித்தர்கள். எனவேதான் சித்தர்களை அருளாளர்கள் என்றும், மெய்யுணர்வாளர்கள் என்றும் அழைக்கின்றோம். சித்தர்கள் வெறும் சித்த வேலைகளைச் செய்பவர்கள் மட்டுமல்லர். பல சித்தர்கள் பல வியப்புச் செயல்களைச் செய்து காட்டியது உண்மைதான். ஆனால், அவர்கள் வெறும் சித்து வேலைக்காரர்கள் மட்டுமல்லர். தங்கள் பயிற்சிகள் மூலம் பல ஆன்ம ஆற்றல்களை அவர்கள் பெறுகின்றார்கள். முக்திப் பேற்றை நோக்கி வழி நடக்கும்பொழுது பல சித்திகளைச் சந்திக்கின்றார்கள். ஆனால், அவர்களுடைய நோக்கம் ஆன்மிகப் பாதையின் எல்லையை அடைந்து, இறைவனுடைய திருவடிகளிலே தங்களைச் சதா பொருத்தக் கொள்வதுதான். அத்தகையவர்கள் சித்துகள் போன்ற சாதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவர்களுடைய நோக்கமெல்லாம் இறைவனை அடைவதே. அதற்காக எல்லாத் தத்துவங்களை படிப்படியாகத் தங்களிடமிருந்து விலக்கிக் கொள்கின்றார்கள். தத்துவங்களை அறிந்து கட்டமென்று சித்தர் பெருமக்கள் நமக்கு விளக்குகின்றார்கள். சொல்லுவதற்கு அரிய பரம்பொருளை அனுபவித்துத் தெளிவடைகின்றார்கள். ஒப்பிலாத ஆனந்தம் பெறுகின்றார்கள். ஒளிமயமான நிலையில் புகுந்த பேரின்ப நிலையில் தங்களை அமர்த்திக் கொள்கின்றார்கள்.
"முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத் துள்ளளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து
அப்பரிசாக அமர்ந்திருந் தாரே" (திருமந்திரம் - 126)
இறை அனுபவத்தை முற்றிலும் பெற்ற காரணத்தினால் திருமூலர் ஓர் ஒப்பற்ற சித்தராவார். சித்தர்களுக்கெல்லாம் தலைவராவார். அவரைத் தொடர்ந்து வந்த பல அருளாளர்கள் தாங்கள் திருமூலர் உருவாக்கிய சித்தர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று பெருமை கொள்கிறார்கள். சித்தர் இலக்கணத்திற்குத் திருமூலர் வழிவகுத்தார் என்றும் கூறலாம். திருமூலர் இறைவனின் முதற் சீடனான நந்தி தேவனிடம் உபதேசம் பெற்றவர். எண்ணற்ற காலம் தவம் செய்தவர்.இறைவனைத்தன்னுள் முழுமையாக உணர்ந்தவர்.
""தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகம்இருந் தேனே"",
தான் இறைவனுடைய திருநாமங்களைப்பல காலம் ஓதி. இறைவனைப் பொருந்தி வழிபட்டு. பேரறிவாகிய இறைவனின் நிழலில் அமர்ந்து. இனிமையான அனுபவத்தைப் பெற்றதைத் திருமூலர் பெருமானே விளக்குகின்றார்,
""இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே"".
அத்தகைய யோகியார் சித்தர்களைப் பற்றிக்கூறும் விளக்கம் மனத்தில் வைக்கத்தக்கது, சித்தர்களைச் சிவயோகியர்கள் என்றும். சிவசித்தர்கள் என்றும் திருமூலர் குறிக்கின்றார், அவர்கள் பிறவிக்குக் காரணமான வினையின் தன்மையை ஒடுக்கியவர்கள், பந்தங்களை நீக்கியவர்கள், தூய்மையான துரிய நிலையை அடைந்து இறை உணர்வுடன் பொருந்தியிருப்பதன் காரணத்தினால் உடலில் செத்திட்டு இருப்பார்கள், அதாவது. பொறிகளும், உட்கருவிகளும் நடத்தும் இயக்கம் ஓய்ந்து செயலற்று நிற்பார்கள், புலன்கள் தம்வழி செல்லாமல் சிவத்தில் புகுந்து சீவன் வழி செல்லும் நிலையில் இருப்பார்கள்.
வித்தைக் கெடுத்த வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே". (திருமந்திரம் - 121)
சித்தர்களுடைய நிலை ஒர் உணர்வு நிலையாகும். உணர்வு உள்ளத்தைச் சார்ந்தது. அந்த உள்ளமாகிய பெருங்கோயிலில் இறைவன் குடி கொண்டுள்ளான். அதை ஆய்ந்தறியாமல் சீவன் பொறிகளின் அட்டகாசத்தினால் புறத்தே செல்கின்றது. அவற்றைத் திருப்பி உள்ளடக்குவது சித்தர்களுடைய சாதனையாகும். அப்பொழுது சீவன் உள்ளமாகிய பெருங்கோயிலில் கலந்து நிற்கும். அதாவது சிவமயமாகி விடும். அதற்கென்று ஆசைகளோ பாசங்களோ இருக்காது. தன் செயல் சிவத்தின் செயல் என்று இருக்கும்.
"சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தன் எனக்கு அருளியவாறார் பெறுவார் அச்சோவே"
என வரும் மாணிக்கவாசகரின் திருவாக்கு அவருடைய ஆழ்ந்த அனுபவத்தை எடுத்துக்காட்டுகிறது. சீவனுக்கு அறிவு உண்டு. சிவத்தை உணர்ந்த நிலையில் சீவனுடைய அறிவாகிய ஒளி சிவத்தின் ஒளியில் போய் ஓடுங்கும்.
"சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்" (திருமந்திரம் - 135)
என்ன அருமையான நிலை!இது எல்லாருக்கும் கிடைக்குமா? இந்த நிலையைப் பெற்றவர்கள் சிவசித்தர்கள் என்று திருமூலர் கூறுகின்றார். இதுவரை அந்தத் தளைகளிலிருந்து விடுபட்டு, தான் பெற்ற உலகியல் அறிவை உதறித் தள்ளி விட்டுச் சிவமாகிய பேரறிவில் நிற்கும் நிலையைச் சித்தர்கள் பெறுகின்றார்கள்.
"வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறுந்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே". (திருமந்திரம் - 124)
சித்தர்கள் சிவத்தைக் காண உலகெங்கும் சுற்றவில்லை. அவர்கள் சிவத்தை இங்கேயே தரிசிக்கின்றார்கள். தம்முள் கண்டுகொள்கின்றார்கள். "சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்" என்பார் திருமூலர். அவர்களுடைய உணர்வுகளெல்லாம் சிவமயமாகி நிற்கின்றன. அவர்களுடைய செயல்களெல்லாம் சிவனை நோக்கி அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளன.
"இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி" (திருமந்திரம் - 127)
என்பது திருமந்திர வாக்கு. சித்தர்கள் இறைவன் தன்னுடைய அன்பர்களுக்குத் தரும் சாலோகம். சாமீபம், சாரூபம் போன்ற பதங்களை வேண்டுவதில்லை. பாசங்களை வலுப்படுத்தும் மாயாகாரியங்களைப் பற்றுவதில்லை. ஆணவமாகிய இருளைத் தன்னிடமிருந்து அகற்றி, தான் என்னும் நினைப்பையும் ஒழித்து, இறைஉணர்வுடன் எங்கும் எப்போதும் கலந்து நிற்பதையே சித்தர்பெருமான் விரும்புகிறார்கள்.
"பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்டு
இதமுற்ற பாச இருளைத் துரந்து
மதம் அற்று எனது யான் மாற்றிவிட்டு அங்கே
திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே". (திருமந்திரம் - 2525)
சித்தர்கள் சிவத்தைக் கண்டவர்கள் என்று மேலும் திருமூலர் வலியுறுத்துகின்றார். மாயையில் இரண்டு வகை உண்டு. ஒன்று சுத்த மாயை. மற்றது அசுத்த மாயை. சித்தர்கள் தங்களுடைய வினைப்பற்றை நீக்கியவர்கள். எனினும், இந்த உலகில் உடலுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் மாயையின் காரியங்களுக்கு உட்பட்டவர்கள். ஆனால், சித்தர்கள் அவற்றினுடைய ஆற்றலுக்கு அடிமையானதில்லை. தோய்ந்தும், தோயாமலும் தாமரை இலை நீர் போல் பற்றின்றி நிற்பர். "நீரினில் பால் போல் சோராமற் காணும் சுகமறிந்தேனே" என்று தனது அனுபவத்தைத் திருமூலரே வெளிப்படுத்துகின்றார். இறைவனால் அளிக்கப்படும் எல்லாவிதமான பதங்களுக்கும் சித்தர்கள் முழுமையாகத் தகுதி பெற்றவர்களாக இருந்தாலும், இறைவனுடைய வியாபகத்தில் ஒன்றிக் கொண்டதால் அவற்றிற்கும் மேலான நிலைமை அடைந்து இறைத் தன்மையைப் பெறுவர்.
"சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே". (திருமந்திரம் - 2526)
இறைவன் காலனை வென்றவன். காலத்திற்கு அப்பாற்பட்டவன். காலம் போன்ற கலைகள் அவனிடமிருந்தே வெளிப்படுகின்றன. காலனை வென்றவன் குறிப்பு அறிந்த சித்தர்கள் தங்களுடைய உடலைப் பற்றியும், உயிரைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் முழுமையான ஞானத்தைப் பெற்றவர்களாக இறைவனுடைய ஒளியைத் தன்னொளியாகப் பெற்று நிற்கின்றார்கள். அதனால் அவர்கள் காமம், வெகுளி, மயக்கம் போன்ற முக்குற்றங்களை அறவே நீக்கி விடுவார்கள். உடல் இருப்பதையும், இல்லாமல் போவதையும் பற்றிச் சித்தர்கள் கவலைப்படுவதில்லை. இதுவே சித்தர்கள் அடையும் ஒளி நெறி அல்லது சன்மார்க்க நெறி என்பார் திருமூலர்.
"சாற்றும் சன்மார்க்கமாய் தற்சிவ தத்துவத்
தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே".
(திருமந்திரம் - 1477)
சைவப் பெருமக்களால் போற்றப்படும் திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. சைவ இலக்கண விளக்கங்களுக்கு ஓர் தலைசிறந்த நூலாகத் திகழ்கின்றது. அதேநேரத்தில் திருமந்திரம் ஓர் ஆழ்ந்த அனுபவ நூலாகவும் பயன்படுகின்றது. தான் பெற்ற அனுபவங்களைத் திருமூலர் பெருமான் திருமந்திர மணிமாலையாக நமக்கு அளித்துள்ளார். இறை அனுபவத்தை அடைய விரும்புவோர் திருமந்திரத்தை முறைப்படி கற்றுத் தெளிந்து கொள்வதன் மூலமாகச் சிறந்த பயனைப் பெறலாம். ஆனால், அந்த அனுபவத்திற்கு நம்மை நாம் தகுதியுடையோராக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு மனம், வாக்கு, காயம் ஆகியவற்றில் முதிர்ச்சி தேவை. உடல், உடலால் பெறப்படும் இன்பங்கள், இளமை, செல்வம் போன்றவை நிலைத்து நிற்பதில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உடலும், உயிரும் வேறு வேறு என்பதும் உணரப்பட வேண்டும். உள்ளத்தை வளர்க்க, உயிரின் அருங்குணங்கள் வெளிவர உடலைத் தகுந்த முறையில் பேணிக்கொள்ள வேண்டும். திருமூலர் அருளிச் செய்த யோக மார்க்கங்கள் இதற்கு வெகுவாகப் பயன்படுகின்றன. இறைபணி தொடங்க வேண்டும். சரியை, கிரியை, யோகம் போன்ற மார்க்கங்களும், மந்திரம், தந்திரம் போன்ற வழிபாடுகளும் உள்ளத்தைப் பக்குவமாக்கி நம்மை இறைவன்பால் அழைத்துச் செல்ல ஓர் சூழ்நிலையை உருவாக்குகின்றன. மனிதன் மனத்தால் உயர வேண்டும். இந்த நான்கு வழிகளும் இந்த மனத்தின் ஆற்றலைப் பெருக்க உதவுகின்றன. ஒழுக்கமும், சீலமும், தவ வாழ்க்கையும் மனத்தைப் பக்குவப்படுத்தி மனத்தை இறைவன் அருகில் கொண்டு செல்கின்றன.
அப்பொழுது இறைவன் அருளால் தகுந்த குருவும் வந்து சேருவார். குரு என்பது ஒளி, உயிரைச் சுற்றியுள்ள மலங்களின் இருள் உயிரை விட்டு அகலத் தொடங்கும். இவையெல்லாம் இறைவனுடைய அருளால் நடந்தேறுகிறது. தக்க தருணத்தில் இறைவன் அன்பனின் உள்ளம் புகுந்து, ஆனந்த வெள்ளத்தில் அழுத்துகின்றான்.
"எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன் அடியார்க்கு
இங்கே என்று அருள் புரியும் எம்பெருமான்"
என்பது திருஞானசம்பந்தர் வாக்கு.
இருள் அகன்று ஒளி பரவிய நிலையில் பேரின்ப அமுத ஊறலும் எலும்பின் உருக்கமும் மணிவாசகருக்கு அனுபவமாயிற்று என்பதை
"இரும்புதரு மனத்தேனை ஈர்த்து ஈர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினை"
என்னும் திருவாக்கிலிருந்து காணலாம்.
சித்தர்கள் இறை அனுபவத்தை உள்ளளியாகக் காண்கின்றார்கள். திருமூலரும் "தேயமும் நாடும் திரிந்து எங்கள் செல்வனைக் காயம் இந்நாட்டினைக் கண்டுகொண்டேனே" என்பார். "ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம்;ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி" என்பதும் திருமந்திர வாக்காகும்.
வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கின்றது. அது இறைவனைப் பற்றுதலாகும். அந்த நோக்கத்தை நாம் அறிந்து கொள்ளாதவரை ஓயாத துன்பம் தரும் உலக வாழ்க்கையில் மூழ்கிக் கிடப்போம். உலக வாழ்க்கையும் ஓயாது அடித்து வரும் கடலில் அலைகள் போல உள்ளத்தில் விளங்கும் ஒளியை நாம் எல்லோரும் நாட வேண்டும். அங்கே ஒளிக்கு ஒளியாய்ச் சிவன் விளங்குகின்றான். அந்தச் சிவத்தை நாடிப்பற்றிக் கொள்ள வேண்டும். துன்பக் கடலைக்கடக்க உதவும் தெப்பமும் அதுவே.
"கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து
உடலிடை வாழ்வுகொண்டு உள்ளளி நாடி
உடவிலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக்
கடலின் மலிதிரைக் காணலு மாமே". (திருமந்திரம் - 3028)
திருமந்திரம் காரிருளில் பிரகாசிக்கும் மின்னலைப்போல உயிர்களை உய்விக்கச் செய்யும் பாதையைக் காட்டி அதன் வழியாக நம்மையெல்லாம் அழைத்துச் செல்லக் காத்தக் கொண்டிருக்கின்றது. திருமந்திரத்தைக் கற்று, உணர்ந்து, தெளிந்து, இறைவனுடைய அருள் பெற்று, இம்மைக்கும் மறுமைக்குமான எல்லாவிதமான பயன்களையும் பெற்று, இறைவன் திருவடிகளைச் சார்ந்து அங்கு என்றும் வீற்றிருக்க வேண்டும் என்பதையே ஒரே குறிக்கோளாக மனத்தில் வைப்போம்.
"வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே". (திருமந்திரம் - 3047)
திருச்சிற்றம்பலம்