"நான் பெற்ற இன்பம்"
திருமூலதேவ நாயனார் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்கிறார். பரம்பொருள் அனுபவத்தில் மூழ்கிப் போய், அந்தப் பேரின்பத்தில் திளைத்து நிற்கின்றார். அவருடைய உள்ளத்தில் இறை உணர்வு மட்டும் நிரம்பி நிறக்வில்லை. அத்துடன் உயிர்கள்பால் அளவற்ற கருணை உணர்வு அவருடைய உள்ளத்திலே மேலோங்கி நிற்கிறது. அருளாளர்களுடைய உள்ளங்களே அப்படித்தான். அவர்கள் இறைவனை மனதார நேசிக்கின்றார்கள். இறைவனை தங்களுடைய அன்பெனும் பிடிக்குள் எப்பொழுதும் வைத்துக் கொள்கின்றார்கள். ஆனால், அவர்கள் இறைவன் மீது அன்பு செலுத்துவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. அவர்களுடைய கருணை உள்ளம் உயிர்களை நாடுகின்றது. உயிர்களுடைய துன்பங்களைப் போக்க விரும்புகிறது. அவர்களுடைய வாழ்வு உய்வடைவதற்காகத் தேவையான நெறிகளைப் போதிக்க விரும்புகிறது. புத்தர் பெருமான் தொடங்கிய பௌத்த சமயத்தில் சென் என்கிற சமயம் ஒரு உட்பிரிவாக இருக்கிறது. சென் ஞானிகளைப் பற்றி வழக்கமாக ஒன்று சொல்வார்கள். அதாவது அவர்கள் காடுகளிலே நிட்டையில் அமர்ந்து கொண்டு அத்துடன் தங்களது பணி முடிந்தது என்று கருதவில்லை. மெய்ஞ்ஞானம் பெற்ற பிறகு அவர்கள் மக்களிடையே மீண்டும் திரும்பி வருகிறார்கள். மக்களோடு மக்களாகப் பழகுகின்றார்கள். மக்களுடைய நல்வாழ்வுக்குத் தேவையான கருத்துக்களை எடுத்துச் சொல்கின்றார்கள். அவர்களுடைய இன்ப உணர்விலே தங்களையும் சேர்த்துக் கொள்கின்றார்கள். அவர்களுடைய வாழ்க்கையே மக்களுக்கு உதாரணமாகி விடுகின்றது. சீரிய நெறிகளும், யோகமும், தவமும் இயல்பாகவே மக்களைப் பற்றிக் கொள்கின்றன. ஒரு ஞானியின் தன்னலமற்ற பணி சமுதாயத்தையே மாற்றும் சக்தி பெற்றது. அத்தகைய ஞானிகள் மக்களிடையே ஆற்றும் பணிகளும் மகத்தானவையே. பொதுவாக எல்லாச் சமயங்களிலும் ஞானிகளுடைய மனப்போக்கு இவ்வாறுதான் இருக்கும்.
திருமூலர் பெருமான் ஆழ்ந்த நிட்டையில் அமர்ந்திருந்தாலும், அவருடைய எண்ணங்கள் இயல்பாகவே உயிர்களைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. உயிர்களுக்கு அன்பு செய்ய வேண்டும் என்கின்ற ஒரு நோக்கத்தால் உந்தப்பட்டு, திருமூலர் பெருமான் அவ்வப்பொழுது தூய நனவு நிலைக்கு வந்து மந்திரங்களை அருளிச் செய்கின்றார்.
அந்த மந்திரங்கள் இறைவனுடைய திருவாக்காகும். அவற்றைத் திருமூலர் பெருமான் தானாக அருளிச் செய்யவில்லை. இறைவனுடைய கருவியாகவே அவருடைய உள்ளம் அந்த மந்திரங்களை வெளியிடுகிறது. "எனக்கு இங்கு அருளால் அளித்ததே" என்று திருமூலர் பெருமான் கூறுகின்றார். திருமூலதேவ நாயனார் இறை உணர்வை முழுதும் பெற்ற ஒப்பற்ற யோகியாவார். முடிவான முடிவைக் கண்ட ஓர் தலைசிறந்த ஞானியும் சித்தரும் ஆவார். அவர் அருளிச் செய்துள்ள திருமந்திர மணிமாலை இறை அனுபவம் பெறுவதற்கான சாதனங்களையெல்லாம் நமக்குத் தெள்ளத் தெளிவாக விளக்கிக் காட்டும் சிறந்த அனுபவ நூலாகும். இந்த மந்திர மொழியை முதலில் படிக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு மந்திரத்தைப் பற்றியும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். பல மந்திரங்களை ஒரு தடவை படிக்கும்பொழுதே தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால், வேறு பல மந்திரங்கள் புரிந்து கொள்வதற்குக் கடினமானவை. சில மந்திரங்கள் படிப்பதற்கு எளிதாக இருக்கும். ஆனால், அவற்றிலே கருத்துக்கள் ஆழமூகப் பொதிந்து கிடக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் திருமந்திரமணிமாலையைப் படிகக்த் தொடங்கியபொழுது அறிஞர்களுடைய உரையை பக்கத்திலே வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால், எல்லா மந்திரங்களையும் ஓரளவு விளக்கத்தோடு புரிந்து கொள்ளலாம் என்கிற உணர்வு ஏற்பட்டது. போக போகத்தான் இந்த உணர்வு எவ்வளவு தவறானது என்ற உண்மை எனக்குப்பட்டது. காரணம், திருமந்திரத்தில் வரும் மந்திரங்கள் பல படிப்பதற்கு எளிதாக இருந்தாலும், சிந்திக்கச் சிந்திக்கப் புதிய உண்மைகளை உள்ளத்திலே தோற்றுவிக்கின்றன. அவ்வாறு உள்ளத்தில் புதிய உண்மைகள் தோன்றுவது என்பதே இறைவனுடைய திருவிளையாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். திருவருள் நமக்கு மந்திரங்களின் பொருளைச் சற்றுக் கொடுத்தும் கொடுக்காமலும் மேலும் மேலும் படிக்கச் செய்கின்றது. புராணங்களையும், நீதிநெறி நூல்களையும் படிக்கும்பொழுது அத்தகைய அனுபவம் ஏற்படாமல் போகலாம். ஆனால், திருமந்திரம், திருவாசகம் போன்ற அருள் நூல்களை நாம் படிக்கும்பொழுது திருவருள் பின்னணியிலே இருந்து கொண்டு நமக்கு உண்மை அனுபவங்களை எடுத்துத் தருகின்றது என்று படுகிறது.
ஆகவே, திருவருளை நாடியே இந்த நூல்களைப் படிக்க வேண்டும். படித்த பின்பு ஒவ்வொரு மந்திரத்தைப் பற்றியும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். கடுமையான மந்திரங்களாக இருந்தாலும், அவற்றைக் கண்டு பின்வாங்காமல் படித்துப்படித்து மனதைத் தெளிய வைக்கும் முயற்சியிலே ஈடுபட வேண்டும். முயற்சி வீணாகாது. மனதை வளர்க்கும். களிம்பினை நீக்கும். சிறிது சிறிதாக உள்ளளியைப் பெருக்கும்.
"விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்"
என்கிறது திருமந்திரம்.
இந்த விளக்கே பேரறிவாகும். பேரறிவாகிய விளக்கை மன்கோயிலிலே ஏற்றி வைக்க வேண்டும். விளக்கைத் தூண்டித் தூண்டி வெளிச்சத்தைப் படிப்படியாகக் கூடுதலாக்கி, மனம் முழுவதிலும் பேரறிவு என்னும் விளக்கின் ஒளியால் நிரப்ப வேண்டும் என்கின்ற ஒரே குறிக்கோளை நம்மோடு வைத்து, வாழ்க்கைப் பாதையிலே திருவருள் உணர்வோடு முன்னேற வேண்டும். இந்தக் குறிக்கோளை நாம் எப்பொழுது அடைந்துவிட முடியும் என்று தெளிவாகச் சொல்ல முடியாது. இறைவன் திருவருள் வைத்த ஆணையின்படிதான் நடக்கும். ஒரே நாளில் சாதனையைப்புரிந்துவிட முடியாது. இப்பொழுது சமுதாயத்திலே புதிதாகப் பெயர் பெற்று வருகின்ற ஆன்மிகவாதிகள் குறிப்பிட்ட நாட்களில்
ஆன்மிக அனுபவத்தை அவர்கள் கொடுக்கும் தீவிரப் பயிற்சியின் மூலமாக அடைந்துவிட முடியும் என்று கூறிவிடுவதோடு மட்டுமல்லாமல் பல நூற்றுக்கணக்கான மக்களை அவர்கள்பால் ஈர்த்து வருகிறார்கள். ஆன்மிகப்பாதை ஒரு கரடுமுரடான பாதை. கல்லும் முள்ளும் ஏராளம். இறைவன் நம்மைச் சோதிக்கும்பொழுது முதலில் நமக்குத் துன்பங்களைக் கொடுத்துத்தான் சோதிப்பான். அவனுக்கு வேண்டியது நாம் எந்த அளவுக்கு அவன் நம்முன் வைத்த நெறியை மேற்கொள்கின்றோம் என்பதுதான். நாம் அத்தகைய நெறிகளைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டிருக்கலாம். கட்டுரைகள் எழுதலாம். திறம்படப்பேசி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தலாம். இவையெல்லாம் நம்மை அதிக தூரம் அழைத்துச் செல்லாது. எந்த அளவுக்கு நாம் நம்முடைய வாழ்க்கையை நெறிகள் அடிப்படையில் அமைத்துக் கொள்கின்றோமோ அந்த அளவுக்குத்தான் நமக்கு ஆன்மிகத்தில் வெற்றி கிடைக்கும். நெறியைப் படைத்த இறைவன் நெருஞ்சி முள்ளையும் படைத்திருக்கின்றான். நெறியில் வழுவக்கூடாது. நெறியில் தவறினால் நமக்கு ஏற்படும் துன்பத்தைச் சாதாரணமாக நீக்கிவிட முடியாது.
"நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியின் நெருஞ்சில்முட் பாயகி லாவே". (திருமந்திரம் - 1617)
இங்கே நாம் பேசி வரும் ஆன்மிகக் குறிக்கோள் இறைவனுடைய திருவடிப் பேற்றினை அடைவதாகும். இதைத் திருவடி ஞானம் பெறுதல் என்று அருளாளர்கள் கூறுவார்கள். நமது அறியாமையைப் போக்கி அறிவைத் தருவது இறைவன். இந்த அறிவு சாதாரண அறிவன்று. எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட அறிவாகும். அறிவுக்கு அறிவாம் பேரறிவைப் பற்றிய அறிவாகும். "எல்லாம் அறியும் அறிவு" என்பார் திருமூலர் பெருமான். இந்த அறிவை ஏட்டளவில் பெற்று விட முடியாது. குருவின் துணையோடு அனுபவரீதியாகவே அடைய முடியும். இந்த அறிவை நமது கருவி, கரணங்கள் வழியாகப் பெற்று விட முடியாது. ஏனென்றால், நாம் அனுபவிக்க வேண்டிய பேரறிவு கருவி கரணங்களுக்கும் அப்பாற்பட்டது. இறைவனுடைய திருவருள்தான் நமக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்கும். சகலராகிய நமக்கு இந்த அனுபவம் குருவின் துணையோடு கிடைக்கின்றது. "கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்க;உள்ள பொருள், உடல், ஆவியுடன் ஈக" என்கிறார் திருமூலர் பெருமான். குருவின் துணைக்காக ஏங்கி நிற்க வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். முயற்சியின்றி ஒன்றும் நடக்காது. எல்லாம் அவன் அருளால்தான் நடக்கின்றது என்று சும்மா இருந்து விடக்கூடாது. அவனுடைய அருளைப் பெற்றிட நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நெறிகளிலே முனைப்போடு நின்று, பரம்பொருள் பற்றிய விளக்கத்தை நமது உள்ளத்திலே பதிய வைக்க வேண்டும். இதனை "அப்பனை பூண்டுகொண்டு புகுந்தறிவார்" என்கிறார் திருமூலர் பெருமான். போற்றுதலுக்குரிய நிலையை அடையப்பல ஆண்டுகள் ஆகலாம். பல பிறவிகள் எடுக்கவேண்டி வரலாம்.
"எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்" என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான். புல்லிலிருந்து மனிதராய், பேயாய், கணங்களாய், முனிவராய், தேவராய் உயிர்கள் பிறக்கும் பேற்றினைப் பெற்றிருந்தும் வீடு பேறு அடைவதே தலைசிறந்த இன்பம் என்று மணிவாசகப் பெருமான் கருதுகின்றார். எல்லா உயிர்களுடைய இயல்பான விருப்பமும் அதுவே. அந்த விருப்பத்தை என்றாவது ஒருநாள் எல்லா உயிர்களும் அடையும். வெற்றி பெறும். "மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடுற்றேன்" என்கிறார் மாணிக்கவாசகர். நாம் வேண்டுவது உறுதிகொண்ட நெஞ்சம். ஆன்மிகப் பயனத்தை இன்றே தொடங்க ஆயுத்தமாக வேண்டும். தள்ளிப் போடக்கூடாது. மாயை என்னும் திரை நம்முடைய கண்களை மூடுவதால் இறை அனுபவம் நமக்கு அப்பாலாய், விளக்க முடியாத, அடைய இயலாத ஒன்றாக இருக்கிறது என்கின்ற ஒரு விபரீத உணர்வு ஏற்படுகின்றது. இந்த விபரீத உணர்வே நம்முடைய முயற்சிகளையெல்லாம் தள்ளிப்போடத் தூண்டுகிறது. ஆனாலும், திருமந்திர மணிமாலை, திருவாசகம், திருமுறைகள், பிரபந்தங்கள் போன்ற அருளாளர் பெருமக்களின் திருவாக்குகள் நமக்கு என்றென்றும் வழித்துணையாக இருந்து நம்மைச் சரியான பாதையில் அழைத்துச் செல்லக்காத்துக் கொண்டிருக்கின்றன.
இன்றைய சமுதாயச் சூழ்நிலையில் ஆன்மிக அனுபவத்திற்கு மக்கள் தேவையான இடத்தைத் தருவதில்லை. இது தேவைதானா என்று கேட்கிறார்கள். ஆன்மிகத்தைப் பற்றிய தவறான கருத்துக்கள் பல மக்களிடையே வளர்ந்து வருகின்றன. விஞ்ஞானம் வளர்ந்து, நம்முடைய வாழ்க்கை வசதிகள் பெருகி, இவ்வுலகத்தில் இன்பத்தைத் தரும் பொருள்களை நாடி, அவற்றைப் பெறுவதே பிறப்பின் குறிக்கோள் என்கிற அளவுக்கு மக்கள் பொருள் ஈட்டியும், செலவழித்தும் வருகிறார்கள். இதிலே கிடைக்கக்கூடிய இன்பம் என்றும் நிலைக்காது என்று தெரிந்து கொள்வதற்குக்கூடிய இன்பம்ட என்றும் நிலைக்காது என்று தெரிந்து கொள்வதற்குக்கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பொருள்கள் மீது உள்ள மோகத்தில் நாம் முக்கியமான எல்லாவற்றையும் மறந்து விடுகின்றோம். இந்த இன்பத்தை நாடிக்கொண்டே பூமியிலே வாழ்நாட்களை வீணடித்துக் கொள்ளாதீர்கள் என்றார் திருமூலர் பெருமான். ஒழிந்தன காலங்கள். ஊழியும் போயின, கற்பனை கழிந்தன, நாளும் குறுகி நமது உடல் ஒன்றுக்கும் பயன்படாத அளவுக்கு அழிந்து விடுகின்றது. இதை நாம் எல்லோரும் தெரிந்து கொண்டிருந்தாலும், நிலையான ஒன்றைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அவர் அவா இன்னும் எழவில்லையே என்று நம்மைப் பார்த்துக்கடிந்து கொள்கிறார் திருமூலர் பெருமான்.
"ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே". (திருமந்திரம் - 178)
நமது மனம், புத்தி, போன்றவை வெறும் கருவிகள்தான். ஆனாலும், அவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றோம். அவைகள் செல்லும் வழியே செல்கின்றோம். தங்களுக்குத் தெரிந்த ஒரு பாதையில் செல்வதையே அவை பழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அந்தப் பழக்கத்திலிருந்து திசை மாற்றி, வேறு குறிக்கோள்களை அடைய அவைகளைப் புதிய பாதையிலே திருப்பி விடுவது கடினமாகத் தோன்றுகிறது. அதே நேரத்தில், உண்மையான அனுபவம் பெற வேண்டி நாம் நமது கருவிகளை நம் வசம் கொண்டு வந்து, உலக இன்பங்களை நாடிச் செல்வதே வாழ்க்கையின் குறிக்கோள் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, பேரறிவிற்கும், பேரின்பத்திற்கும் இருப்பிடமான பரம்பொருளை நாடுவதைத் தலையாய கொள்கையாகக் கொள்ள வேண்டும். பரம்பொருள் ஆனந்தத்திற்கு இருப்பிடம். இன்பம் என்கிற சொல்லைப் பயன்படுத்தும்பொழுது, அதற்கு எதிராகத்துன்பம் என்கிற அனுபவம் நாம் நினைத்தமாத்திரத்திலேயே நம்மைப் பற்றிக் கொள்கிறது. ஆனால், ஆனந்தம் என்கிற நிலைக்கு எதிராகவோ, மேலாகவோ ஒரு நிலையும் கிடையாது. இறைவனுக்கு அப்பாற்பட்டு வேறொரு அனுபவமோ இருக்க முடியாது. அந்த அனுபவத்தில் தோய்ந்து நிற்பதே பிறவியின் நோக்கமாகும். அருளாளர்கள் இந்தப் பேரின்பத்தைப் பெற்றிருக்கின்றார்கள். அதன் தன்மையை நமக்கு விளக்கியிருக்கின்றார்கள். ஆனால், நம்மிடையே ஆணவ மலமும் மற்றக் குறைபாடுகளும் மிகுந்து காணப்படுகின்றன. ஆகவே, நம்முடைய அனுபவம் இந்தக் குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறது. இருந்தாலும் நம்முடைய குறைகளை நீக்கிக் கொள்ளலாம் என்கிறார் திருமூலர் பெருமான். அவ்வாறு நீக்கியவாறே அவர்கள் பெற்ற இன்பத்தை யாவரும் பெறலாம் என்கிறார்.
இறைவன் தந்த பேரின்பத்தைத் திருமூலர் பெருமான் திருமந்திர மணிமாலையாக அருளிச் செய்திருக்கின்றார். அதை "நான் பெற்ற இன்பம்" என்கிறார். திருமூலர் பெருமானைப் போன்ற யோகிகள் பெறும் இன்பம் முற்றுணர்வினால் ஏற்பட்டது. பரம்பொருள் ஒன்று உண்டு. அதுவே உலகையெல்லாம் ஆளுகின்றது. நம்மையெல்லாம் ஆளாக்குகின்றது. பரம்பொருள் பல்வேறு நிலைகளில் உயிரை உய்விப்பதற்காகத் தானாகவே ஐந்தொழில்களை மேற்கொண்டு உயிரின் உய்விப்பதற்காகத் தானாகவே ஐந்தொழில்களை மேற்கொண்டு உயிரின் மலங்களைக் களைவதற்காக நிலைக்களனை ஏற்படுத்தித் தருகின்றது. தன்னுடைய திருவடியைக் காணச் செய்கின்றது. கண்ட திருவடிகளின் நிழலிலேயே என்றென்றும் நிலைத்து நின்று மாறாத இன்பத்தை அள்ளித் தருகின்றது என்பது போன்ற உணர்வுகளெல்லாம் அருளாளர்கள் பெறும் பேரின்பத்திற்கு மூலகாரணமாக இருக்கின்றன. இது நிலையான இன்பம். துன்பத்தோடு சேர்ந்து வரும் இன்பம் அன்று. இறைவனுடைய திருவருளால் உயிரினுடைய மலம் நீங்கிய பிறகு, உயிரானது இறைவனுடன் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையில் இந்த இன்பம் ஏற்படுகிறது. உடலின் இயக்கத்தில் ஏற்படும் இன்பமல்ல இது. எனவே, இங்கே துன்பத்திற்கு இடம் கிடையாது. இந்தப் பேரின்பத்தைப் பெறும் பொழுது உடம்பினுடைய இயக்கத்தின் நினைவு அற்றுப் போய்விடும். அத்தகைய இன்பத்தைத்தான் பெற்றதாகத் திருமூலர் பெருமான் கூறுகின்றார். இந்த இன்பத்தை விவரிக்கவும் இயலாது என்று
திருமூலர் நமக்குச் சொல்லுகின்றார். ஏனென்றால், நாம் விளக்கம் என்று கூறும்பொழுது அந்த விளக்கம் அறிவோடு சேர்ந்த ஒன்றாக அமைகிறது. சிவமாம் தன்மை பெற்ற உயிர் திருவருள் இன்பத்தை அடையும்பொழுது இந்த இன்பத்தின் தன்மை அறிவுக்கு அப்பாற்பட்டு நிற்கின்றது. ஆகவே, இந்த இன்பத்தை அனுபவித்தால்தான் அதன் உண்மையை உணர முடியும். எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைவது முற்றுணர்வு. இதைச் சிற்றறிவினால் பெற முடியாது. ஆகவே, திருமூலர் பெருமான் பெற்ற பேரின்பம் அவர் இறைவனோடு இரண்டறக் கலந்து நின்ற நிலையில் கிடைத்த அனுபவமாகும். சொல்லுக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்டது.
இந்த அனுபவம் எத்தகையது என்று ஒரளவாவது தெரிந்து கொள்ள வேண்டும். நாம் பல பொறிகளையும், உட்கருவிகளையும் பயன்படுத்தி விஷயானுபவம் பெறுகிறோம். இந்த அனுபவம் நமது மனதிலே பதியும்பொழுது உள்முகத்தான் காணப்படுகிறது. ஆனால், இறைவனைப் பற்றிய அனுபவம் கருவி கரணங்களால் பெறப்பட்டதன்று. இந்த அனுபவத்தைப் பெற நாம் உள் நோக்கிப் பெறப்பட்டதன்று. இந்த அனுபவத்தைப் பெற நாம் உள் நோக்கிப் பார்க்க முயல வேண்டும். நம்முடைய அகப்பார்வையைப் பயன்படுத்திப் புதிய உணர்வுகளைப் பெறும் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு உள்ளத்திலே தெளிவு தேவை. அன்றாட வாழ்க்கை. பிரச்சினைகள், அனுபவங்கள் இவற்றையெல்லாம் சற்றுத்தள்ளி வைத்துவிட்டு, இறைவனுடைய திருவடிகளைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கும் இயல்பினை வளர்க்க வேண்டும். சிந்தையைத்தெள்ளத் தெளிய வைப்பார்களுக்கு ஈசன் உறவு வலுப்படும் என்பார் திருமூலர். இது எளிதான ஒன்றன்று. யோகத்தாலும், தவத்தாலும், ஞானத்தாலும், சரியையாலும், கிரியையாலும், உள்ளத் தூய்மையாலுமே அகப்புற அனுபவங்களைப் பெற இயலும். எனவே, திருமூலர்பெருமான் பேரின்பத்தைத் தான் பெற்றதாகக் கூறும்பொழுது அவர் உபயோகித்துள்ள "நான்" என்கிற சொல்லுக்குத் தனி விளக்கம் தேவை. நான், எனது என்பவை ஆணவ மலத்தின் வெளிப்பாடுகள். மலத்தோடு கூடிய "நான்" இறை உண்மையைப்பெற இயலாது. "நான் என்கிற ஒருவனுடைய தன்மையும் நோக்கமும் மாற வேண்டும். தூய்மையற்ற "நானுக்கு" இங்கே இடமில்லை. சகலராகிய "நான்" சாதனை நெறியை மேற்கொண்டு இறைவனுடைய திருவருளால், வினை ஒப்பு என்கிற நிலையைப்பெற்று, மலபரிபாகம் செய்தவனாகச் சுத்த நிலையை அடைய வேண்டும். சுத்த நிலையில் உள்ள உயிரால்தான் இறை அனுபவத்தைப் பெற இயலும். சுத்தமற்ற நிலையில் இறைவனை நாடலாம். ஆனால் அனுபவம் கிடைக்காமல் போகலாம். சுத்த நிலையில் இருப்பவர்களுக்கு இறை அனுபவம் தானாகவே வரும். நான், எனது போன்ற சொற்கள் வேற்றுமையை உருவாக்கும் சொற்கள். பரம்பொருளை அனுபவிக்கும்பொழுது வேற்றுமை மறைந்து விடுகிறது. நம்மைப் போலவே திருமூலர் பெருமான் வேற்றுமை நிலையில் இருந்து கொண்டு இறை உணர்வைப்பெற முயன்றதாகக் கூறுகின்றார். இறைவன் அவரை அழைத்துக்கொண்டு வேற்றுமை நிலை இல்லையென்று கூறி அவருக்குப்பேதமற்ற இன்பத்தை அருளிச் செய்கின்றான். அந்த மாத்திரத்திலேயே நான் ,எனது போன்ற நினைப்புகள் நீங்கி விடுகின்றன. இது ஒரு உயர்ந்த ஆன்மிக அனுபவம் ஆகும்.
"நானென்றுந் தானென்றும் நாடினேன் நாடலும்
நானென்றுந் தானென் றிரண்டில்லை யென்பது
நானென்ற ஞான முதல்வனே நல்கினான்
நானென்ற நானும் நினைப்பொழிந் தேனே". (திருமந்திரம் - 2820)
இந்த அனுபவம் ஏற்படும்பொழுது உயிரானது. "நிர்மல அவத்தை" நிலையில் உள்ளது என்பார் திருமூலர் பெருமான். "ஊனை இருளற நோக்குதல்" என்று திருமூலர்பெருமான் கூறுவதும் இதுவே. தன்னை அறிதல், சிவனை அறிதல், சிவனை அறிந்து சிவனில் மூழ்கி நிற்றல் போன்ற அனுபவங்கள் இந்த நிலையில் கிடைக்கும் என்றும் திருமந்திரம் நமக்குக் கூறுகின்றது.
இறை உணர்வைப்பெறும் உயிரானது தீயிலிட்ட தங்கத்தை ¢போல ஒளிவிட்டுப் பிரகாசிக்கக்கூடிய தன்மையைப் பெறுகின்றது. இந்த உயிரே பேரின்பத்திலும் ஆழ்ந்து நிற்கின்றது. நாம் எல்லோரும் இந்த இன்பத்தை அடையலாம் என்கிறார் திருமூலர் பெருமான். இறைவனுடைய நியதிப்படி சில உயிர்களுக்குத்தான் வீடு பேறு கிடைக்கும். மற்றவை இந்தப் பேற்றினைப் பெறாது என்பதன்று. எல்லாச்சீவராசிகளும் தனித்தனியாகச் சிவமாம் தன்மை பெற்று சிவலோகத்தில் சிவபோகத்தை அடையும் வாய்ப்பை அவரவருடைய வினைப்பயனுக்கு ஏற்றவாறு பெறுகின்றன. இறைப்பேற்றினைப் பெற வேண்டுமென்றால் நம்முடைய முயற்சியும் தேவை. அதுவே சாதனை நெறியுமாகும். திருமூலர்பெருமான் மூவாயிரம் ஆண்டுகள் தவத்தில் அமர்ந்திருக்கின்றார். அவருடைய தவ வலிமை திருமந்திரங்களாக வெளி வருகிறது. நம்மைப் போன்றவர்கள் ஆன்மிகப் பயிற்சியை மேற்கொள்வதற்கு மனத்தைத் தயார் செய்து, திருவருளிலே முழுமையான நம்பிக்கை வைத்து, திருவருளையே நாடி, தகுந்த குரு ஒருவர் மூலமாகத் திருவருளின் சக்தியை உணர்ந்து, ஆன்மிக ஏணியில் படிப்படியாக ஏறி வர வேண்டும். ஆனால், நம்முடைய முயற்சிக்கெல்லாம் தடை போடுவது நம்முடைய ஆணவ மலத்தின் மறைப்புச் சக்தியாகும். இந்த மறைப்புச் சக்தி மாயையால் உருவாக்கப்பட்ட கருவிகளோடு சேர்ந்திருக்கும்பொழுது இறை உண்மையைப் பற்றி நமக்கு ஒரு எண்ணமும் எழாமல் இருப்பது மட்டுமல்ல. நம்மைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் ஒரு விபரீத எண்ணமும் ஏற்பட்டு விடுகின்றது. அதன் விளைவாக நம்மைப் பற்றித் தவறான கருத்துக்கள் நம்முடைய உள்ளத்திலே தோன்றுகின்றன. இவை தவறான நடத்தையைச், செயலை தூண்டி விடுகின்றன. உயிரானது இதுபோன்ற மாயச் சூழலில் அகப்பட்டுத் தவிக்கின்றது என்றும், இந்தத் திருவருளைத் தீவிரமாக நாடித்தான் நமது அறியாமை இருளைப் போக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அருளாளர்கள் தாங்கள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் நமக்கு எடுத்துக் கூறுகின்றார்கள். அவர்களுடைய அருளுரையை அவ்வாறே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். முடிந்தளவுக்கு நம்முடைய குணங்களின் தன்மையை
மாற்றிக் கொள்ள வேண்டும். நமது சிந்தனையைத் தீவிரப்படுத்தி இறைவன்பால் செலுத்த வேண்டும். "வெல்லும் அளவில் விடும் வெகுளியை, செல்லும் அளவில் செலுத்துமின் சிந்தையை" என்பார் திருமூலர் பெருமான்.
சிந்தனையின் போக்கை ஆன்மீகப் பாதையில் செலுத்துவதற்கு உள்ளத்திலே வைராக்கியம் தேவை, தூய்மை தேவை, தெளிவு தேவை. எதையும் நாம்தான் சாதிக்கின்றோம் என்கிற மனநிலையை மாற்றி அமைப்பதும் தேவை. இறைவன் மீது பற்றினைக் வளர்த்து, மற்றவை மீது உள்ள பற்றினைக் குறைப்பது தேவை. இந்த முயற்சியைத் தீவிரமாக மேற்கொள்வதால் வாழ்க்கை என்னும் சூழலிலே அகப்பட்டு, குணங்களின் ஆற்றலுக்கு அடிமையாகி, காமம், வெகுளி, மயக்கம் போன்ற கீழ்த்தரமான உணர்ச்சிகளுக்கு ஆளாகி அவதிப்படும் நிலைமை சிறிது சிறிதாக மாறும். அந்த மாற்றம் தோன்றும்போதே உள்ளத்தில் தெளிவு பிறக்கும். அப்பொழுது அறிவுச்சுடரின் ஒளியை உள்ளம் காணத் தொடங்குகின்றது. நமது வாழ்க்கைப் பாதையின் நீளமும் அகலமும் நம் அகக்கண்களுக்குத் தெளிவாகத் தோன்றுகின்றன. எங்கே செல்ல வேண்டும் எப்படிச் செல்ல வேண்டும் என்பன போன்றவற்றில் மனம் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றது. அற வாழ்க்கையை நடத்தி வருவதன் மூலமாகவும், தவம் போன்ற நெறியை மேற்கொள்வதன் மூலமாகவும், பற்றற்ற தன்மையை வளரவிட்டு இறைவன்பால் உள்ளத்தைத் திருப்பிக் கொள்ள ஒரு இயக்கம் நம்மையும் அறியாமலேயே தொடங்குகின்றது. இதைச் சத்தி நிபாதம் என்று சொல்லலாம். ஞானத்தீ சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது. நம்மைத் தெரிந்து கொள்கின்றோம். நம்மை ஆளாக்கிய தலைவரைத் தெரிந்து கொள்கின்றோம். யார் தலைவன் என்று உலகம் முழுவதும் பறந்து தேடிக்கொண்டு போகும் மனப்பான்மையை மாற்றி உள்ளத்திலே இறைவனைக் காண்கின்றோம். இது அருளாளர்களுடைய அனுபவமாகும். "சித்த மலம் நீக்கிச் சிவமாக்கி என்னை ஆண்ட அத்தன்" என்று இறைவனைப் பார்த்து வியக்கின்றார் மாணிக்கவாசகப் பெருமான்.
"உரையற்ற தொன்றை உரைகாணும் ஊமர்காள்
கரையற்ற தொன்றைக் கரைகாண லாமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிந்தார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யோனே". (திருமந்திரம் - 2955)
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் நம் உள்ளத்திலும் வீற்றிருக்கின்றது என்கிற உணர்வுமயமான அனுபவத்தைப்பெற்று இன்புற்றிருப்பதே உயிரின் இயல்பான நோக்காகும். இறைவனைப் போலவ உயிரும் ஒரு அறிவுப்பொருள். சார்ந்ததன் வண்ணம் ஒரு பொருளை அறிந்து கொள்வதும், இறைவன் அறிவிக்கத்தான் அந்த அறியும் ஆற்றலைப் பெற்றுக் கொண்டிருப்பதும் உயிரின் இயல்பாகும். உயிரின் இயல்பான தன்மையையும், நோக்கத்தையும் உயிர் தெரிந்து கொள்ளாத அளவுக்கு மூலமலமாகிய ஆணவமலம் உயிரின் அறிவைக் கட்டுப்படுத்துகின்றது. ஆணவமலம் உயிரின் இயல்பு அன்று. உயிரின் ஒரு குறைபாடு. தொன்றுதொட்டு ஆணவ மலம் உயிரோடு இணைந்திருந்தாலும்,
உயிரானது திருவருளின் துணையுடன் தனது முயற்சியால் இந்த மலத்தை நீக்கும் சக்தியையும், தகுதியையும் பெறுகிறது. அந்த நிலையில் உயிரின் அறிவுச் சக்தி இறைவனுடைய திருவருள் மூலமாகப் பேரறிவின் உண்மையை உணர்ந்து கொள்கிறது. எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருள் நம்முடைய உள்ளத்திலும் நிரம்பியிருப்பதை உயிரால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. தெளிந்த, தூய்மையான, மலக்கலப்பற்ற நிலையில் இந்த உணர்வு தோன்றத் தொடங்குகின்றது. இது ஒரு உணர்வு ஆகையால் அறிவு நிலையில் மட்டும் இதைப் பெறுவது இயலாது என்கிற உண்மையும் உள்ளத்தில் பதிகின்றது. எல்லாம் அவனுடைய திருவருளாலே நடக்கின்றது என்கிற எண்ணம் உள்ளத்திலே ஆழப்பதியத் தொடங்குகிறது. உயிரின் இயக்கமே இறைவனுடைய அருட்சக்தியால்தான் நடக்கின்றது என்பதும் நன்கு புலப்படுகின்றது. இறைவன் உயிருக்கு உயிராக, உயிருக்கு அப்பாலாக இருந்து உயிரினை நடத்திச் செல்லம் பாங்கினை உயிர் உணர்ந்து கொள்ளத் தொடங்குகின்றது. இறைவன் ஒரு அனுபவப்பொருள் என்றால் அந்த அனுபவம் உடலுக்குள்ளேயே நிகழ்கின்றது.
அந்த அனுபவத்துள்ளே மூழ்கியிருக்கும் உடலும், உடலைச் சார்ந்த கருவிகளும் தங்கள் வழிச் செல்லாது அந்த உணர்வின் வழியே செல்கின்றன. ஈசனை நோக்கிச் செல்வது உயிருக்கு இயல்பாக அமைகின்றது. உள்ளமே ஆனந்த அனுபவத்திற்கு இருப்பிடமாக அமைகிறது. இறைவனை எங்கும் சென்று தேடத் தேவையில்லை. இங்கேயே, நம்முள்ளேயே, நமது உணர்வுகளிலேயே அடையாளம் கண்டு கொள்ளலாம்.
"மாயனை நாடி மனநெடுந் தேரேறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடுந் திரிந்தெங்கள் செல்வனைக்
காயமின் னாட்டிடைக் கண்டுகொண் டேனன்றே". (திருமந்திரம் - 2982)
உயிரினுடைய அறிவு சிற்றறிவாக இருந்தாலும், இறைவனுடைய அருள் அந்த உயிரிலே படும்பொழுது சிற்றறிவு இறைத்தன்மையைப் பெறுகின்றது. சீவன் சிவத்துடன் சேர்ந்துகொள்கின்றது. "சித்துக்கு சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ, சுத்த வெளியில் சுடரிற் சுடர்சேரும்" என்பார் திருமூலர் பெருமான். திருமூலர் பெருமான் உபயோகிக்கும் "நான்" என்கிற சொல் பக்குவ நிலையில், முற்றுணர்வு பெற்ற உயிரைக் குறிக்கும். பள்ளத்திலும் மேட்டிலும் பறந்து திரியாமல் உள்ளத்திலே உள்ள பல தீர்த்தங்களில் மூழ்கி, நீராடி இன்புறும். அத்தகைய இன்பத்தை நான் பெற்றிருக்கின்றேன். இதை உலக மக்கள் யாவரும் பெறலாம் என்கிறார் திருமூலர்பெருமான்.
இந்த இன்ப அனுபவம் நினைத்தமாத்திரத்திலேயே கிடைத்துவிடுமா? "தான் பற்றப் பற்றத் தலைப்படுந் தானே" என்கிறார் திருமூலர் பெருமான். ஆன்மிகப் பற்றினை வளர்க்க வேண்டுமானால் மற்ற பற்றுக்களை வெகுவாக குறைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உலகத்தோடு உள்ள தொடர்பு வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். எல்லோரும் துறவிகளாகி காடுகளுக்குச் சென்று,
தவம் கிடந்து ஞானிகளாகி விட முடியாது. ஆனால், நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே அருளாளர்பெருமக்கள் நமக்கு நடுத்துத் தந்திருக்கும் சாதனை நெறிகளை மேற்கொள்ளும்போது உலகப் பற்றின் தன்மை தானாகவே மாறும். உலகப் பற்றுக்களிலிருந்து நாம் விடுதலை அடையும்பொழுது நம்முடைய உள்ளங்களிலே ஆன்மிக ஒளி தோன்றி, அக இருளை நீக்கும். சாதனை, மேலும் மேலும் சாதனை என்கிற ஒரே அடிப்படையில் நம்முடைய ஆன்மிக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். முழு மனதுடன் நம்முடைய முயற்சிகளையெல்லாம் மேற்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பாகும். திருவருளின் துணை நமக்குத்தானாகவே வந்து சேரும். பற்றுதல் என்கின்ற முயற்சி வெறும் பெயரளவில் இருக்கக் கூடாது. சுய விளம்பரமாக இருக்கக்கூடாது. நான், எனக்காக என்கின்ற உணர்ச்சிகளைத் திருப்தி செய்வதற்காக இந்த முயற்சி அமையக்கூடாது. பரம்பொருளை நாடுதலே ஒரு இன்பத்தைத் தருகின்றது என்கிற எண்ணத்தோடு இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பலனை எதிர்பார்த்துச் செய்யும் செயல்கள் நம்மை இறை அனுபவத்திற்கு அழைத்துச் செல்லா. நம்முடைய முயற்சிகளுக்கு இறைவனே காரணம் என்கின்ற உணர்வோடு ஆன்மிகப் பாதையில் நாம் முன்னேற வேண்டும். நான் என்கிற முனைப்பு குறையக் குறைய இறைவன் உள்ளே பிரகாசிக்கத் தொடங்குவான்.
திருமூலர் பெருமான் தனக்குக் கிடைத்த பேரின்பத்துடன் நின்று விடவில்லை. தனது ஆன்மிக அனுபவங்களை நம்முன் வைத்து, அந்த அனுபவங்களை நாமும் பெறலாம் என்கிறார். அதே நேரத்தில் அதற்கான நெறிகளைக் கடைப்பிடிக்கச் சொல்கின்றார். திருமந்திர மணிமாலை இறைவனுடைய அருள் வாக்காகும். உள்ளம் தெளியவும், தெளிந்த உள்ளத்தில் இறைவன் தோன்றவும் திருமந்திர மணிமாலை பல வழிகளை நமக்கு காண்பிக்கின்றது.