"உபதேசம்"
பல ஆயிரம் ஆண்டுகளாக நமது நாட்டில் எண்ணற்ற முனிவர்களும், சித்தர்களும் வாழ்ந்திருந்த தங்களுடைய வாழ்க்கையை, எண்ணங்களை, அனுபவங்களை நமது உள்ளங்களிலே அவ்வப்போது தோன்றும் இறைவனைப் பற்றிய சிந்தனைக்கு ஆதாரமாக வைத்து விட்டுச் சென்றார்கள். அவர்களுடைய அனுபவங்களே நம்முடைய ஆன்மிக வேட்கைக்குத் தொடர்ந்து வித்திட்டு வருகின்றன. சமுதாயத்தில் மீண்டும் மீண்டும் தோன்றி வரும் நல்ல உள்ளங்கள், பல முனிவர்கள், சித்தர்கள் ஆகியோர்களுடைய இறை உணர்வினை ஏற்றுக்கொண்டு, தமதாக்கி, அந்த இறை உணர்வை மேலும் மேலும் தெளிவுபடுத்தி நம்மைப் போன்ற பாமர மக்களுக்கு உபதேசித்து வந்தும, அதை நாமும் ஏற்றுக் கொண்டும் வந்த காரணத்தால்தான் இன்றும் நம்முடைய வாழ்க்கை நெறிகளும் பண்புகளும் இறை உணர்வுடன் பின்னிக்கொண்டு நிற்கின்றன. ஆகவேதான், தொடர்ந்து ஆன்மிக அனுபவங்களையும், இறை உணர்வையும் நாம் போற்றி வருகிறோம். அவற்றை நமக்குக் கொடுத்தருளும் முனிவர்களையும் சித்தர்களையும் இறைவனாகவே மதிக்கிறோம். வணங்குகிறோம். வழிபடுகிறோம். இதில் தவறு ஒன்றுமில்லை. முனிவர்களும், சித்தர்களும் அவாவை அறுத்தவர்கள், பாசத்தை விட்டவர்கள், நேசத்தைத் துண்டித்தவர்கள், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவர்கள். இன்பத்திலும், துன்பத்திலும் நடுநிலை வகிப்பவர்கள். உலகில் வாழும் எல்லாச் சீவராசிகளும் ஒன்றே என்கிற உண்மையைத் தம்முள் உணர்ந்தவர்கள். விளக்குவதற்கு அரிய ஒர பரம்பொருள் பல நிலைகளில் இருந்து கொண்டு இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தும், காத்தும், அழித்தும், ஊழிதோறும் ஊழி எண்ணில்லாத உயிர்களைத் தனது மறைப்புச் சக்தியில் ஆழ்த்தி, அறியாமை என்கின்ற இருளில் வைத்து, உடலுடன் சேர்த்துப் பல அனுபவங்களைக் கொடுத்தருளிப் படிப்படியாகத் தன் திருவடி நிழலிலே சேர்த்துக் கொள்கின்றது என்கிற மாபெரும் உண்மையை அனுபவரீதியாக உணர்ந்தவர்கள். அப்பாலாய், அப்பாலுக்கு அப்பாலாய் நிற்கின்ற மாதேவன் நம்முள் அணுவில் அணுவாய், உயிருக்கு உயிராய் "பாலினில் நீர்போல் நிற்கின்ற நேர்மையை சோராமற் காணும்" சுகம் அறிந்தவர்கள் நமது முனிவர்களும் சித்தர்களும் ஆவார்கள். அத்தகைய பரம்பொருளைப் பேரன்பு வடிவமாகக் கண்டு, அந்த அன்பே எல்லா உயிர்களிடையே பொதிந்திருக்கின்ற தன்மையை உணர்ந்து உயிர்கள்பால் அன்பு செலுத்துவதன் மூலமாகவே இறைவனுடைய திருவடியைச் சேரலாம் என்கின்ற தெளிவையும் தம்முள் பெற்றவர்கள் அவர்கள்.
அத்தகைய முனிவர்களும், சித்தர்களும் நமக்கு அருளிச் செய்வது உபதேசமாகும். முனிவர்கள் இதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பது இல்லை. உயிர்களின் பக்குவத்திற்கு ஏற்ப இறைவன் அவைகளுடைய உள்ளங்களிலே இறை உணர்வைப் பதிக்கின்றான். பல சித்தர்கள் தங்களுடைய வாழ்நாட்களிலே அதிகமாகப் பேசாத நிலையில் இருந்தவர்கள். ஆயினும் இறைவனைத் தம்முள் கண்டவர்கள். அவர்களைப் பற்றிப் பேசும்பொழுது "பெற்றார் உலகில் பேசாப் பெருமையே" என்பார் திருமூலர். பக்குவமடைந்த சீடர்கள் தங்களை நெருங்கும்போது அவர்களுடைய தகுதியை உடனே தெரிந்து கொண்டு தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்று நோக்குடன், அந்தச் சீடர்களை ஏற்றுக் கொண்டு, பெரும் கருணையுடன் அவர்களுக்கு உண்மையை உணர்த்துவார்கள். இதுவே பரம்பொருளைப்பற்றிய விளக்கத்தை நூல் அறிவால் மட்டும் பெற இயலாது. அந்த அறிவு அனுபவரீதியாக அமைய வேண்டும். அந்த அனுபவத்தைச் சீடன் பெறுவதற்கான வழிகளை அறிவிப்பவர்கள் இந்த முனிவர்களும் சித்தர்களும் ஆவார்கள். அவர்களுடைய உபதேசம் சீடனுக்கு ஒரு படகு போலப் பயன்படும்.
வாழ்க்கை என்னும் கடலைக் கடப்பதற்கான ஆற்றலையும், அறிவையும், இந்தப் படகானது சீடனுக்குத் தரும். "திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி, இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு" என்பார் திருமூலர். படகு கிடைத்தால் மட்டும் போதாது. படகை ஓட்டும் அடிப்படை அறிவு வேண்டும். இதுவே பக்குவம் எனப்படும். பல பிறவிகளில் கிடைக்கும் வினைக்கூடங்களின் ஆற்றல்கள் குறைந்த நிலையில் இருவினை ஒப்பு ஏற்படுகிறது. இறைவனுடைய அருள் சீடன் மீது பதியத் தொடங்குகிறது அந்த நேரத்தில் தகுந்த குருவும் சீடனுக்குக் கிடைக்கின்றான். அந்தக் குருவினுடைய உபதேச மொழிகள் சீடனுக்குப் படகுபோல உதவி புரிந்து சீடனை வினைக்கடலிலிருந்து மீட்டுச் செல்கின்றன. சீடனுடைய பக்குவமும், குருவினுடைய உபதேசமும் இறைவனுடைய ஒப்பற்ற பெரும் கருணையாலேதான் நடைபெறுகின்றது. அவன் அருளன்றி ஒன்றும் நடைபெறாது.
சனகர் போன்ற முனிவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள், கற்றறிந்தவர்கள். ஆனால், அவர்களுக்கும் அனுபவம் வரவில்லை. வேதப்பொருள்களின் உண்மை அவர்களுக்கு விளங்கவில்லை. முழுமுதற்கடவுளின் உருவமான தட்சிணாமூர்த்தியிடம் வேதப்பொருளின் விளக்கத்தைக் கேட்டார்கள். அருள்மேனி தாங்கிய பெருமான் சுட்டு விரலைப் பெருவிரலோடு சேர்த்துக் காட்டி ஞான முத்திரையால் உண்மையினை உணர்த்தினார். பெருவிரல் சிவமாகும். சுட்டுவிரல் உயிரைக் குறிக்கின்றது. நடுவிரல், மோதிர விரல், சிறு விரல் ஆகிய மூன்றும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய ஆகிய மும்மலங்களைக் குறிக்கின்றன. தட்சிணாமூர்த்தி தனது கைக்குறிகளால் சனகாதி நால்வருக்கும் உணர்த்தியபொழுதும் அவர்கள் உணரவில்லை. பின்னர் இறைவன் அவர்களுடைய சிரத்தைத் தீண்டி அவர்களுக்குத் தீட்சையை அளித்து உணர வைத்தான். அவர்களுடைய உள்ளத்திலே உண்மையைப் பதிய வைத்தான். அவர்களும் தட்சிணாமூர்த்தியிடம் தீட்சையைப் பெற்றுத் தம்மைத் தாமே உணர்ந்து கொண்டு உள்ளளி பெற்று நிலைபெற நின்றார்கள்.
"அத்தத்தில் உத்தரங் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி
அத்தத்தி னாலே யானையைப் பிடித்தலும்
அத்ததில் தம்மை யடைந்துநின் றாரே". (திருமந்திரம் - 2424)
இறைவன் ஒன்றே. உயிர்கள் அநேகம். அநாதியும்கூட, உயிரைக் கட்டி வைப்பது பாசமாகும். பாசமானது. ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களிலும் தங்கும். உயிரைப் போலவே பாசமாகிய தளையும் அநாதித் தன்மை வாய்ந்தது. உயிரைப் பதியடிமிருந்து பிரித்து வைப்பது பாசமாகும். நெல்லில் உமி போல, செம்பினில் களிம்பு போல பாசம் உயிருடன் சேர்ந்து நிற்கும். பாசம் என்றுமே உயிரைப் பற்றி நிற்பதால் உயிருக்குச் சுதந்திரமான தன்மை கிடையாது. இறைவனோ என்றும் சுதந்திரமாக நிற்பவன். மலங்கள் அற்றவன். மலங்கள் உயிரினை அணுகும். ஆனால், இறைவனை அணுகாது. எனினும், இறைவனுடைய அருளால் மலங்களைத் தன்னிடமிருந்து நீக்கிக்கொண்டு உயிர் ஒரு சில நேரங்களில் இறைவனை அணுகும் தகுதியைப் பெறுகின்றது. அப்பொழுது உயிரைப் பற்றியுள்ள பாசங்கள் அதனை விட்டு நீங்கி விடும். இறைவனுடைய பெரும் கருணையால் முதிர்ச்சி பெற்ற உயிர் பாசங்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இறைவனுடைய திருவடியைச் சேருகின்றது.
"பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பக பாசம்
பதியணு கிற்பசு பாசம் நிலாவே". (திருமந்திரம் - 115)
உயிர் உய்வதற்கான எல்லா வழிகளையும் காண்பிப்பவன் இறைவனே ஆகும். பல பிறவிகளில் உயிர் பல வினைகளைப் புரிந்து அனுபவங்களைப் பெறுகிறது. நன்றே புரினும் தீதே புரினும் அனுபவம் அனுபவம்தான். அந்த அனுபவத்தைத் தொடர்ந்து பல்வேறு அனுபவங்கள் உயிர் பெற்றாக வேண்டும். இதைச் செய்வதற்காக இறைவனுடைய அருள் உயிரை ஐந்து பூதங்களாலான உடலுடன் சேர்க்கின்றது. வினைக்கேற்ப வாழ்வும் கிடைக்கின்றது. அந்த வாழ்வை ஏணியாக வைத்து உயிரானது படிப்படியாக இறைவனுடைய திருவடியைச் சேர முயல வேண்டும். மரம் வைப்பவன் மரத்தைக் காப்பான். இறைவனுடைய திருவடி நிழல் உயிருக்கு எப்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது. உயிரைச் சுற்றி வேலி போல் நிற்கின்றது. குளிர்ச்சிமிக்க திருவடிகள் அவை. இந்தத் திருவடிகளின் தன்மையை, பெருமையை உடலிலும் காணலாம். உள்ளத்திலும் அனுபவிக்கலாம். புறத்திலும் பார்க்கலாம். புறத்திலும் பார்க்கலாம். ஆனால், வினைகள் உயிரை மருள் நிலையில் அழுத்தி வைப்பதால் உயிருக்கு இறைவனுடைய திருவடிகளைத் தம்முள் உணர்ந்து கொள்ள இயலவில்லை. திருவடிகளின் குளிர்ச்சி பொருந்திய தன்மையை அறிந்து கொள்வதில்லை. உடலின் வெப்பமான பகுதிகளிலேயே உயிரானது சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது. அந்த நிலையை மாற்றச் செய்வதும் ஈசனுடைய அருளாகும். அதுவே சத்திநிபாதம் எனப்படும். இறை அருளை உயிர் பெறும்பொழுது உயிரைப் பற்றியுள்ள களிம்புகள் அழிக்கப்படுகின்றன. அதாவது மும்மலங்களின் வேகம் குறைந்து விடுகின்றது. உயிரானது தன் சொரூப
நிலையைப் பெறுகிறது. அதாவது தான் உடலிலிருந்து வேறுபட்டது என்பதை உணருகின்றது. உடல் மீது உள்ள நாட்டம் ஒழிந்து விடுகிறது. "உண்ணின்று உருக்கி" என்பார் திருமூலர். இந்த அனுபவத்தை "பாவியேன் என்னுடைய ஊனினை உருக்கி, உள்ளளி பெருக்கி" என்று பாடுகிறார் மாணிக்கவாசகப் பெருமான். உயிர் தன்னுடைய உண்மை நிலையில் இறைவனுடைய மாசற்ற ஒளியைத் தனதாக்கிக் கொண்டு அந்த ஒளியிலே பிரகாசிக்கின்றது. இறைவனுடைய திருத்தாள்களை உயிர் பற்றிக் கொள்கிறது. சுந்தரமூர்த்திப் பெருமான் இத்தகைய அனுபவத்தை சித்தவடமடத்தில் இறைவனுடைய திருவடி தீட்சையால் பெற்றார். மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் இறைவனே குருவாக எழுந்தருளிய போது அவருடைய பரிச தீட்சையால் பெற்றார். இத்தகைய ஒப்பற்ற பேற்றினை அருளிச் செய்பவன் இறைவனே ஆகும்.
"விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கி ஓர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே". (திருமந்திரம் - 113)
இதையே உணர்த்தும் திருவாசக அடிகளைப் பாருங்கள்
"எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்".
உயிர் பாசத்தால் கட்டுண்டு கிடக்கும்போது இறைவனைக் காண்பதில்லை. உயிருடைய கருவிகள் அனைத்தும் உலக விஷயங்களையே பற்றிச் செல்கின்றன. அவ்வாறு செல்லும்பொழுது உயிரினுடைய அறிவு உலக விஷயங்களின் தன்மையைப் பெறுகிறது. அதாவது உயிராவது தான் சார்ந்தவற்றின் இயல்பையே பெறுகிறது. பளிங்கின் முன் நீல ஒளியை வைத்தால் அது நீல ஒளியைப் பெறுகிறது. வேறொரு ஒளியுடைய பொருளை அதன் முன் வைத்தால் அது அந்தப் பொருளினுடைய ஒளியின் தன்மையைப் பெற்று அந்த ஒளியைச் சாறுகிறது. இது நாம் அன்றாடம் காணும் அனுபவமாகும்.
அதேபோல்தான் உயிரும், உயிர் பளிங்கைப்போல். உலக விஷயங்களில் ஈடுபட்டு உயிர் தன் நிலை மறந்து நிற்கும்போது இறைவனுடைய அருளால் உலக விஷயங்கள் உயிரினுடைய கண் பார்வையிலிருந்து நீக்கப்படும் போது சுயசொரூபம் அடைந்து, தனக்கு உள்ள இறை நிலையைப் பிரதிபலிக்க ஆரம்பிக்கின்றது. பவளத்தை சிவத்திற்கு உதாரணமாக வைத்தால் பளிங்காகிய உயிரில் பவளமாகிய சிவத்தைப் பதிக்கும்போது பளிங்கு பவளத்தின் தன்மையை அடைகிறது. பவளம் இதுவரை பளிங்கில் பதிக்கப்படாத காரணம் அந்தப் பளிங்கைப் பற்றியுள்ள களிம்புதான். கண்ணாடிக்குப் பிரதிபலிக்கும் தன்மை உண்டு. ஆனால், கண்ணாடிப் பரப்பில் மாசு படிந்திருந்தால் அது பிரதிபலிப்பது இல்லை. அவ்வாறே உயிரும் இந்திரிய விஷயங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள போது தனது உண்மை நிலையை அறியமாட்டாது. மாசைத் துடைத்தெடுத்து விட்டால் கண்ணாடி சாதாரணமாகத்தான் சார்ந்திருந்ததைப் பிரதிபலிக்கும். பேரருளாளனாகிய இறைவன் நமது இருளை நீக்குகிறான். மும்மலங்களை அறுக்கின்றான். தனது திருவடி நிழலை நம்முள் வைத்து, உள்ளத்தை உள்ளிருந்து உருக்கித் தன்னொளியை உள்ளத்தில் பதிக்கின்றான். அதாவது நமது அகத்தின் கண்களை விழிப்பிக்கின்றான். இந்த அகக்கண்களே அருள் எனப்படும். புறக்கண்களாலேயே பார்த்துப் பார்த்து அனுபவங்களைச் சேர்த்து வரும் உயிரானது இறைவனுடைய அருளால் உள்ளளியைப் பார்க்க ஆரம்பிக்கின்றது. சீவன் சிவன்வழிச் சாரும் தன்மையைப் பெறுகிறது. சிவஞானம் பொலிகிறது. புலன்களின் வேகம் தடுக்கப்படுகிறது. இறை அறிவு பெருகுகிறது. மாணிக்கவாசகர் "ஊனாய் உயிராய் உணர்வாய் என்னுட் கலந்து - ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும் கோனாகி நின்றவா" என்கிறார்.
"களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிக்கிற் பவளம் பதித்தான் பதியே" (திருமந்திரம் - 114)
அருளைப் பொழியும் இறைவன் எங்கேயோ தன்னந்தனியாக நின்றுகொண்டு இதைச் செய்யவில்லை. உயிருடன் சேர்ந்து உயிருக்குயிராகவே நிற்கிறான். அவன் உள்ளத்திலேயே குடி கொண்டுள்ளான். "உள்ளத்துளேதான் கரந்து, எங்கும் நின்றவன்;வள்ளல் தலைவன், மலர் உறை மாதவன்" என்று திருமந்திரம் கூறுகிறது. இந்த உடம்பாகிய கோவிலிலே நீங்காது குடிகொண்டு மறைந்திருக்கின்றான். அது எப்படியென்றால் மூங்கிலுக்குள் மறைந்து சதா நின்றுகொண்டிருக்கும் தீயைப்போல என்கிறார் திருமூலர். தீயானது மூங்கிலுடன் சேர்ந்தே நிற்கும். அதுபோல சிவன் சீவனில் என்றும் தங்கும். மூங்கிலிருந்து b வெளிப்பட வேண்டிய காலத்தில் வெளிப்பட்டு விளங்கும். தக்க நேரத்தில் சீவனும் சிவமாம் தன்மையைப் பெற்றுச் சிவ ஒளியைத் தன்னுள்ளும், வெளியிலும் பரப்பும். இந்த ஓர் பேற்றினை நல்குவது சிவனாகும். அடர்ந்த காட்டிலே மூங்கிலிருந்து b எழும்பும்போது சுற்றுப்புறம் ஒளிபெறும். உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் இறைவன் உயிரின் பக்குவ காலத்தில் சூரியனாக வெளிப்பட்டு மும்மலங்களின் இருளை நீங்குவான். அவன் தாயைவிடச் சிறந்தவன். தாயக்குத் தனது குழந்தையின் மீது அளவற்ற அன்பு உண்டு. அன்பினால் குழந்தையைப் பேணுகின்றாள். குழந்தையை நீராட்டி அழுக்கை நீக்கிக் குழந்தையை பாலூட்டி வளர்க்கின்றாள். தாய் குழந்தைக்குக் காட்டுவது அன்பை. நீக்குவது குழந்தையின் உடலிலுள்ள புற அழுக்கை. இறைவன் தாயினும் சிறந்தவன். தாய் அன்பினைத் தருகிறாள். இறைவன் பேரருளை வெள்ளமாகப் பொழிகின்றான். தாய் குழந்தையின் புற அழுக்கை நீக்குகிறாள். இறைவன் தனது அருளால் உயிரின் மும்மலங்களை நிக்கி அமைக்கிறான். "நல்லன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ்சடையோனே" என்கிறார் திருமூலர். "தாயிற் சிறந்த தயாவான தத்துவனே" என்கிறார். மணிவாசகப் பெருமான். "பால்நினைந்தூ ட்டும்தாயினும் சாலப் பரிந்து, பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளளி பெருக்கி" என்கிறார் மணிவாசகப் பெருமான். அவனுடைய அருள் மழையை, கருணை வெள்ளத்தை எவ்வாறுதான் விவரிப்பது!
"வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனுங்
கோயி லிருந்து குடிகொண்டு கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னுந்
தோயம தாய்எழுஞ் சூரிய னாமே". (திருமந்திரம் - 116)
"இன்றெனக் சுருளி இருள்கடிந் துள்ளத்
தெழுகின்ற ஞாயிறே போன்று,
நின்றநின் றன்மை நினைப்பற நினைத்தேன்
நீயலாற் பிறிதுமற் றின்மை,
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றும்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்று நீயல்லை யன்றி யன்றுமில்லை;
யாருனை யறியகிற் பாரே!"
திருமூலர் இதை வேறொரு உதாரணத்தாலும் விளக்குகின்றார். கடல் நீருடன் உப்புக் கலந்து ஒன்றாய்ச் சேர்ந்து நிற்கிறது. அந்த உப்பை அடையவேண்டுமென்றால் முதலில் கடல் நீரைப் பாத்தியில் பாய்ச்ச வேண்டும். பின்னர்ச் சூரியனுடைய வெப்பத்தால் நீர் வற்றி உப்புத் தோன்றுகிறது.
அதாவது கடல் நீரானது உப்பெனும் வேறு உருவம் எய்துகிறது. அதே போல் உயிர் சிவத்துடன் என்றும் ஒன்றாய் இருப்பதற்கு உரியது. மும்மலங்கள் உயிரைப் பற்றுவது காரணமாக இறைத்தன்மை மறைக்கப்பட்டுச் சீவன் தனியாகச் சிவத்திடமிருந்து வேறுபட்டு நிற்கும் நிலையை அடைகிறது. கடல் நீரிலிருந்து வெளிவரும் உப்பை எடுத்து உப்பினால் ஒரு உருவத்தை செய்து மீண்டும் கடலில் இட்டால் என்னவாகும்? கடல் நீரில் உப்புக் கரைந்து கடல் நீருடன் ஒன்றாகி விடுமல்லவா அதேபோல இறைவனுடைய அருளால் மும்மலங்கள் நீங்கும்பொழுது உயிரும் சிவத்துடன் சேர்ந்து வேறு நில்லாது ஒன்றாகி விடும். அகண்ட சிவ வியாபகத்தில் சீவ குணங்கள் அடங்கிவிடுகின்றன.
"அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே". (திருமந்திரம் - 136)
இது எவ்வாறு நடைபெறுகிறது. இறைவனாகிய சூரியன் உள்ளத்திலே எழுந்தது அழுக்குகளை நீக்கும்பொழுது ஏற்படுகிறது. சூரியகாந்தக் கல்லைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். பூதக்கண்ணாடி என்று எடுத்துக் கொள்ளலாம். சாதாரண நேரத்தில் சூரியகாந்தக் கல்லை உபயோகப்படுத்திப் பொருட்களைப் பெரிதாகப் பார்ப்பதற்கு பயன்படுத்திக் கொள்கிறோம். அத்துடன் சூரியகாந்தக் கல் வழியாகப் பாயும் சூரிய கிரகணங்கள் அந்தப் பஞ்சைச் சுட்டெரித்துவிடும்.
இறைவனாகிய சூரியன் தக்க நேரத்தில் தனது அருட்கிரணங்களைப் பாய்ச்சி உயிருடைய மும்மலங்களை, சூரியகாந்தக் கல்லைப் போலவே சுட்டெரித்து விடுகின்றான். உயிர்களின் பக்குவத்திற்கேற்ப இறைவன் அவற்றின் உள்ளேயே இருந்தும் இறைவனாக நேரில் வந்தும் அல்லது ஞான குருவாகத் தோன்றியும் அருள்பாலித்து இந்தப் பணியினைச் செய்து மலங்களை அகற்றுகின்றான்.
"சூரிய காந்தமுஞ் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தஞ் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்கடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே". (திருமந்திரம் - 117)
திருமூலர் ஒரு சிறந்த அனுபூதிமான். ஒப்பற்ற மெய்யுணர்வாளர். ஒரு சிறந்த சித்தர். சீவன் முக்தர். உலகெங்கும் தானான உண்மையைப் பெற்றவர். அருக்குக் கிடைத்த பேறு விண்ணில் வாழும் அமரர்களுக்குக் கூட கிடைத்திராது.
அவரைப் போன்ற சித்தர்கள் "சிவலோகம் இங்கே தரிசித்தவர்கள்" ஆவார்கள். அதாவது தான் என்கின்ற நினைப்பு ஒழிந்து இறை உணர்வையே தம் உணர்வாகக் கொண்டவர்கள். மல, மாசு அகன்றவர்கள், மனக்கவலை மாற்றியவர்கள், எல்லையில்லாப் பேரின்பத்தில் நிற்பவர்கள், பாலிலுள்ள நீரை அன்னம் பிரித்தெடுத்துப் பாலை மட்டும் பருகுவதைப் போல சித்தர்கள் தற்போத உணர்வுகளை விட்டு இறை உணர்வையே பருகித் திளைக்கின்றார்கள். தங்களுடைய உடலுடன் சேர்ந்து நிற்கும் கருவிகளின் சேட்டைகளிலிருந்து விடுபட்டு இறை உணர்வுடன் ஒன்றிக்கிடப்பவர்கள். அந்தக் கருவிகளைப் பலவாறாகப் பிரித்து முப்பத்தாறு தத்துவங்களாக எடுத்துரைப்பது வழக்கம். நம்மைப் போன்றவர்கள் அந்த முப்பத்தாறு கருவிகளிலேயே ஆக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றோம். ஆனால், சித்தர்கள் தெளிந்தவர்கள். அவர்களுடைய நிலையில் சிற்றறிவு பேரறிவில் அடங்கிக் கிடக்கின்றது. அறிவு, அறியாமை இவற்றைத் தெரிந்து கொண்டு தெளிந்து நிற்பவர்கள், சிற்றறிவைப் பேரறிவு அடைவதற்கான வழியாகக் கொண்டவர்கள். பிறப்பையும் இறப்பையும் வளர்க்கக்கூடிய அனுபவங்களைத் தள்ளிவைத்து நிற்பவர்கள். பாசங்களைச் சாரார். தங்களுடைய புலன்களையும், கருவிகளையும் ஏணிப்படிகளாகப் பயன்படுத்திப் பேரின்ப எல்லைக்குள் நுழைந்து, இறை உணர்வைப் பெற்றுத் தெளிந்து நிற்பவர்கள். மேலும், அப்பர் பெருமானைப் போன்று உலகெலாம் சிவமயம் கண்டவர்கள். தங்களுடைய மலங்கள் நீங்கப் பெற்றமையால் காலத்தாலும், நேரத்தாலும், இடத்தாலும், பொருளாலும் கட்டுக்கு அடங்காதவர்கள். இறை நினைவிலேயே அழுந்தி நிற்பவர்கள். அந்த நிலையில் அவர்கள் சிவமாம் தன்மையைப் பெற்றுப் பிரபஞ்சம் முழுவதிலும் பரவி இருக்கக்கூடிய நிலையில் சதாசிவ போகத்தில் ஆழ்ந்து நிற்பர். இந்த உணர்வினைத் திருமூலர் "இழவு வந்து எய்திய சோம்பு" என்கிறார்.
" சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமுஞ் சத்த முடியும் தம்முள் கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே". ( திருமந்திரம் - 125 )
"முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத் துள்ளளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து
அப்பரிசாக அமர்ந்திருந் தாரே". (திருமந்திரம் - 126)
"இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்து அங்கு
இருந்தால் இழவுவந் தெய்திய சோம்பே". (திருமந்திரம் - 127)
இழவு என்றால் தன் நிலையும் இழந்து இருத்தலாகும். சோம்பல் என்றால் பந்தங்களைத் துறந்து தன்முனைப் பற்று அவனுடன் கலந்து அவனன்றி வேறில்லை என்கின்ற உணர்வில் நிற்பதாகும். இதையே சும்மா இருக்கும் நிலை என்றும் சித்தர்கள் அழைக்கின்றார்கள். "தூங்காத தூக்கம்" எனவும் அழைக்கப்படும். இந்த நிலையில் எங்குமாய் நிற்கும் இறைவன் அல்லாமல் "நான்" என்று ஒன்று இல்லை என்கிற எண்ணம் உறுதியாகத் தரப்படுகின்றது. உயிர்களுக்கு இருக்கும் அறிவெல்லாம் இறைவனுடைய அறிவே என்கிற நினைப்பும், உயிர்கள் புரியும் எல்லாச் செயல்களும் இறைவன் செயலே என்கினற் நினைப்பும் உயிரினை அகண்ட ஒளியில் ஆழ்த்துகின்றன. இத்தகையவர்களே "சோம்பர்" என்று அழைக்கப்படுவர். இறைவனுடைய ஆற்றலை நடனமாக உமையாகிய சக்தி மட்டுமே காண்பதில்லை. சித்தர்கள் அந்தத் திருநடனத்தைத் தம்முள்ளேயே காண்கின்றார்கள். கண்டு உலகில் பிரியாப் பெருநெறியைப் பெறுகிறார்கள். பிறவாப் பெரும்பயனைப் பெறுகிறார்கள். பிரியாப் பெரும் பேற்றினைப் பெறுகிறார்கள். அந்தப் பேறானது சித்தர்களுக்குச் சிவலோக, சிவயோக, சிவபோக அனுபவத்தைக் கொடுக்கின்றது. அவர்களுடைய பெருமையைப் பற்றி மேலும் சொல்ல வேண்டுமா!
"தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே" (திருமந்திரம் - 129)
திருமந்திரத்தில் உபதேசம் என்கிற அனுபவப் பகுதி முதல் தந்திரத்தில் வருகிறது. முப்பது மந்திரங்களைக் கொண்டது. "மூலம் உரை செய்த முப்பது உபதேசம்" என்று திருமந்திரத்திலும் வருகிறது. இந்தப் பகுதியிலுள்ள முப்பது மந்திரங்களும் சிறந்த அனுபவ உண்மைகளை விளக்குகின்றன. முதல் தந்திரத்திலேயே இந்தப் பகுதியை வைத்தன் நோக்கம் தெரியவில்லை. இந்தப் பகுதி திருமூலரால் வேறு நூலாகச் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால், திருமூலர் வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்தில் கூறும் சேக்கிழார் அடிகள் இதை வேறு பகுதியாகக் கருதிச் சொல்லவில்லை. எப்படியிருந்தாலும் திருமந்திரத்தின் உபதேசப் பகுதி அரிய உண்மைகளை விளக்குகின்றது என்றால் முற்றிலும் பொருந்தும். சித்தர் உணர்வுகளுக்கு இதுபத்தி இலக்கணத்தைத் தருகின்றது. நம்மைப் போன்றவர்களுக்குப் பதி, பசு, பாச நிலைகளுக்கான விளக்கம் கிடைக்கிறது. இந்த நிலைகளைக் கற்றறிந்த சாதகர்கள் பொறிகள், புலன்கள் இவற்றின் வழி செல்லாது. எவ்வாறு ஆமை தனது உடலை ஓட்டுக்குள் இழுத்து அடக்கிக் கொள்கிறதோ அவ்வாறே மன ஒருமைப்பாட்டுடன் புலன்களைத் தன்வசமாக்கி இறைவனைச் சந்திக்கலாம் என்கிற அனுபவ உண்மையைத் திருமந்திரத்தின் உபதேசப் பகுதி நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
திருக்கோவிலில் இறைவனை நாம் தரிசிக்கச் செல்கின்றோம். வெளிப்பிரகாரத்தில் கொடி மரத்தைக் காணலாம். அதை அடுத்துப் பலி பீடத்தையும், நந்தி உருவத்தையும் காணலாம். பின்னர் உட்பிரகாரத்திற்கு இறைவனைச் சந்திக்கச் செல்கின்றோம். அங்கே மூலத்தானத்திற்கு அருகிலுள்ள நந்தி சிறிதாக இருப்பதைக் காணலாம். வெளியிலுள்ள பலிபீடத்தில் நம்முடைய பாச மனங்களை வைத்துவிட்டு உள்ளே வரும்பொழுது காணும் சிறிய நந்தியைப் போல நம்முடைய மலங்களின் ஆற்றல் குறைந்து, வலுவற்று இருக்க வேண்டும். அதாவது பசுத்தன்மை ஒடுங்கிவிட வேண்டும். புலன்களும், கருவிகளும் இறைவன்பால் சென்றிருக்க வேண்டும். மனம், வாக்கு, காயம் ஆகியவற்றின் கிலேசங்களும், ஆசைகளும் நீங்கி இறைவனுடன் சந்திப்பு திகழ வேண்டும். "தானே தனித்து எம்பிரான் தன்னைச் சந்தித்தே" என்பார் திருமூலர். இந்த நிலையை அடைய திருமந்திரத்தின் உபதேசப் பகுதி முழுவதும் பயன்படும்.
"ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
ஆய பலிபீட மாகுநற் பாசமாம்
ஆய அரனிலை யாய்ந்துகொள் வார்கட்கே". (திருமந்திரம் - 2411)