சிவபெருமானின் திருவருள் பெற்ற நான்மறை யோகிகளில் ஒருவரான திருமூலதேவ நாயனார் அருளிச் செய்த திருமந்திர மாலை சைவப் பெருமக்கள் போற்றி வணங்கும் பன்னிரு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. சைவ சித்தாந்த தத்துவ உண்மைகளை விளக்கும் சிறந்த சாத்திர நூலாகவும், சைவ நெறியில் நின்று சிவமாம் பரம்பொருளைப் பற்றச் சிந்தித்து, வழிபட்டு, சிவமாம் தன்மையைப் பெறுவதற்கான சாதனங்கள் கொண்ட ஓர் ஒப்பற்ற நூலாகவுந் திகழ்கின்றது. அதுமட்டுமன்றிச் சிவயோக முடிவாகிய சிவஞான அனுபவம் அடைவதற்கான பாதையைச் சுட்டிக்காட்டும் தனிச்சிறப்புப் பெற்றதாயும் விளங்குகின்றது. அத்துடன், சிவஞானத்தின் வாயிலாகக் கிடைக்கப்பெறும் அரும்பெரும் உணர்வுகளுக்கு இலக்கணமாகவும் திருமந்திரம் அமைந்துள்ளது.
திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார் பெருமான் திருவாக்கின்படி திருமூலநாயனார் இந்நிலவுலகில் பன்னெடுங்காலம் சிவயோகத்தில் அமர்ந்து உலகம் உய்யச்சிவயோக, சிவலோக, சிவஞான பாதைகளுக்கான உபதேசங்களையெல்லாம் அருளிச் செய்தார் என்பதற்குத் திருமந்திரத்திலேயே சான்றுகள் கிடைக்கின்றன.
"... ..... ....... ........
..... ..... ........ ........
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகம்இருந் தேனே ". (திருமந்திரம் - 74)
"இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் எனநந்தி இணையடிக் கீழே". (திருமந்திரம் - 80)
திருமூலர் தனது ஒப்பற்ற யோக சாதனையாலும், தவ வலிமையாலும் உடம்பினைப் பல்லாண்டுகள் பாதுகாத்துக் கொள்வதற்கான உபாயங்களை நன்கு அறிந்து கொண்டதன் காரணமாக அவர்கள் நெடுங்காலம் தரணியிலே வாழ்ந்திருந்து, முழுதுணர்ந்த மெய்ஞ்ஞானச் சிந்தையிலே இறைவன் தந்த ஆகமப் பொருளை இப்புவியில் பிறந்த மக்கள் அனைவரும் பிறவிப்பயனை அடையும் பொருட்டுத் திருமந்திர அருளிச் செய்தார் என்பதற்குப் பின்வரும் திருமந்திரங்களையும் சான்றாகக் கொள்ளலாம்.
" உடம்பார் அழியிலி உயிரார் அழிவார்
திடம்பிட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே". ( திருமந்திரம் - 724 )
"உடம்பினை முன்னம் இழுக்கென்றி ருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே". ( திருமந்திரம் - 725 )
திருமூலருடைய காலம் இன்றும் சரிவர வரையறுக்கப்படாத காரணத்தினால் திருமந்திரத்தில் காணப்படும் பல சமய ஆன்மீகக் கருத்துகள் உணர்வுகள் எத்துணை பழமையானவை என்று கூற இயலவில்லை. குறிப்பாகப் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்களுடைய மிகச் சிறந்த பெரிய புராண ஆய்வு நூலில் திருமந்திரம் எவ்வாறு பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டது என்கின்ற வினாவை எழுப்புகிறார். பக்தி இயக்கத்தின் தலைவர்களாகிய ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற அருளாளர்களுடைய தோத்திரப் பகுதிகளுக்கிடையே திருமந்திரம் வைக்கப்பட்டுள்ளது எவ்வாறு என்று மேலும் ஆராய வேண்டும் என்கிற கருத்தையும் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள் முன்வைக்கின்றார்கள். சைவ சமய அறிஞர்கள் இந்தப் பிரச்சினையை மேலும் ஆராயலாம். அதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு.
ஆனால், நம்மைப் போன்றவர்களைப் பொருத்தவரை பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் கூறுவதைப் போலவே திருமூலரை நம்பிரான் என்று போற்றிச்சுந்தரர் பெருமான் தொண்டர் குழுவிலும் அவரைச் சேர்த்துக் கொள்கின்றனர் என்பது நமக்கு ஒரு ஆழ்ந்த அமைதியைத் தருகிறது. எந்த ஒரு சமயத்திற்கும், சாத்திரத்திற்கும், தோத்திரத்திற்கும் சமமான பங்கு உண்டு. ஒன்றின்றி மற்றது இல்லை. முழுமையான சமயம் தோத்திரத்திற்கும் சாத்திரத்திற்கும் போற்றத்தகு பங்கினை அளிக்கிறது. சைவம் போன்ற தொன்மை வாய்ந்த சமயம் அளப்பரிய காலம் வளர்ந்து வந்ததன் விளைவாகப் பல்வேறு நீரோட்டங்களைத் தன்னுள் அடக்கிக் கொள்கின்றது. அறிவுக்கெட்டாப்பரம்பொருளைக் காணவிழையும்போது மனத்திலே ஏற்படும் பயம், வியப்பு, பக்தி, அன்பு, ஆச்சர்யம் போன்ற உணர்வுகள் கவிதைகளாகவும், பாடல்களாகவும், ஆற்றுப்பெருக்கத்தைப்போல் வெளிவருபவைகளாகச் சமயத்தின் தோத்திரப்பகுதிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறது. அதே நேரத்தில் மனிதனின் தனிச் சொத்தாகிய பகுத்தறிவும் பணியாற்றத் தொடங்கிவிடுகின்றன. மனதிலே உருவாகும் எண்ண அலைகளைப்பாகுபடுத்தி அவற்றின் தன்மையை ஆராய்ந்து தத்துவ வடிவம் அளித்துப்பல்வேறு கருத்துக்களிடையே உரிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அளிக்கும் வகையில் மனிதனின் பகுத்தறிவு தனது பணியினை மேற்கொள்கிறது. இப்பணியின் முடிவே சாத்திரமாகும். தோத்திரங்களுக்கிடையே சாத்திரங்கள் தோன்றுவது இயற்கையே தவிர வேறொன்றில்லை. சைவ சமயத்திற்கு நாயன்மார்கள் இலக்கியம் மட்டும் அளிக்கவில்லை.
இலக்கணத்தையும் தந்துள்ளார்கள் ஏன் ? மூவர் முதலிகளின் இலக்கியத்தின் முடிவே இலக்கணமாகக் கருதப்பட வேண்டும். இந்த நிலையிலிருந்து நோக்கும் போது திருமந்திரம் தந்த திருமூல தேவர் சைவசமயத்திற்கு தனித்தன்மை வாய்ந்த சித்தாந்தத்தைக் கொடுத்துள்ளார்ள் என்றே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சித்தாந்தம் என்பது முடிந்த முடிவினைக் குறிக்கும் சைவம் என்பது சிவத்தொடர்புடையது எனப் பொருள்படும் சைவம் சிவத்துடன் சம்பந்தமாவது திருமந்திரம் பின்வருமாறு கூறுகிறது.
"சைவம் சிவத்துடன் சம்பந்தமாவது
சைவம் தனையறிந் தேசிவம் சாருதல்
சைவம் சிவந்தன்னைச் சாராமல் நீவுதல்
சைவம் சிவானந்தஞ் சாயுச் சியமே".
( ஜந்தாம் தந்திரம் - சாயுச்சியம் - 1 )
அதாவது சைவமாவது சிவமாம் பரம்பொருளுடன் பொருந்தி நிற்றலாம். சிவ தத்துவத்தை உணர்ந்து அதன் மையமாக விளங்கும் சிவத்தைப் பற்றி ஒன்றி நிற்றலாம். சீவன் தன்னிடத்திலேயே சிவமானது ஒளிவிட்டு அமைந்திருப்பதை உணர்ந்து கொள்வதாம். இந்த நிலையில் கிடைக்கும் பேறே சிவானந்தப் பேறாகும் என்பதையும் அறிந்து கொள்வதாம். எனவே, சைவ சித்தாந்தம் உயிர்கள் சிவத்துடன் சம்பந்தப்படுவதால் அடையக்கூடிய பெருநிலையை விளக்குகின்றது. சிவ பரம்பொருள் உயிர்கள் மேல் கொண்ட பெரும் கருணையின் காரணமாக அருளாளர்கள் மூலம் அருளிச் செய்த ஞானத் தொகுதியே வைச சித்தாந்தமாகுமெனவும் கூறலாம். இறைவன், உயிர் அவற்றினைப்பற்றி நிற்கும் தளை, இவற்றிற்கும் இடையே உள்ள தொடர்பு போன்றவற்றின் தன்மையை ஆய்ந்து, அத்தளையின் தன்மையை விளக்கி மாய இருளை அகற்றிச் சீவன் சிவனைச் சாரும் முறைகளைப் போதிப்பதே சைவ சித்தாந்தமாகும்.
பன்னிரு திருமுறைகள் சைவசமயத்தின் உயிர் நாடியாக விளங்குகின்றன. பத்தாவது திருமுறையாகிய திருமந்திரம்ட சைவ சமயத்திற்கான சித்தாந்தத்தைத் தெளிவாக எடுத்துத் தருகின்றது என்பதும் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். இறைவன் இறைவிக்கு அருளிச் செய்த சிவாகமங்களின் பொருளை, சாரத்தை திருமூலர் தமிழில் வகுத்துத் தந்தார் என்பதற்கான சான்றுகள் திருமந்திரப் பாடல்கள் மூலமாகவே கிடைக்கின்றன (மந்திரம் 77, 81 போன்றவை) .
சிவாகமங்கள் உயிர்களைப் பற்றியும், உயிர்களைப் பந்திக்கின்ற பாசத்தின் தன்மையைப் பற்றியும், பாசத்தை நீக்கி உள்ளளி பெருக்கி இறைவனுடைய திருவடியைச் சார்தல் பற்றியும் விளக்குகின்றன. இவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவாக நான்கு பாதங்களாய் வகுத்துப் பேசப்படுகின்றன. ஆகவே, அறியப்படும் பொருளைப் பற்றியும், அறிகின்ற அறிவின் தன்மையையும், அறிகின்றவனையும், அவனைச் சுற்றியுள்ள இருளாகிய மாயையின் கூட்டத்தைப் பற்றியும், அதனூடே விளங்கும் சிவத்தைப் பற்றியும் சிவசொரூபத்தின் பிரபாவத்தைப் பற்றியும் திருமந்திர மாலையில் தான் முற்றிலும் விளக்கி விட்டதாகத் திருமூலர் கூறுகின்றார்.
அதுவே சைவ சித்தாந்தப் பொருளாகும்.
"ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை யச்சிவன் தன்னை யகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட்டேனே". (திருமந்திரம் - 90)
அதாவது திருமூலர் அருளிய திருமந்திரம், பதி, பசு, பாசம் எனும் முப்பொருள் உண்மையினையும், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளையும் விளக்குவதாக அமைந்துள்ளது. எனவேதான் சேக்கிழார் பெருமான் திருமூலரைக் குறித்து "நலஞ்சிறந்த ஞானயோகக் கிரியா சரியையெலாம் மலர்ந்த மொழித் திருமூலத்தேவர்" என்று வாழ்த்துகிறார். இந்நூலிலுள்ள ஒன்பது தந்திரங்களுள் முதல் நான்கும் சிவஞானம் பெற விரும்புவோர்க்குத் தேவையான தகுதியைப் பற்றியும் அதற்கான சாதனங்களையும் விளக்குகின்றன. ஆறு முதல் ஒன்பது வரையிலுள்ள தந்திரங்கள் ஞானத்தைப் பற்றியும், ஞானம் பெற்றோருடைய அனுபவம் பற்றியும், அனுபவம் பெற்றோர் எய்தும் பேற்றினைப் பற்றியும், அவர்களுடைய உலக வாழ்வின் பெருமையைப் பற்றியும் எடுத்துக் கூறுகின்றன. இவற்றிற்கு மையமாக நிற்பது ஐந்தாவது தந்திரம். இதில்தான் சைவ சித்தாந்த உண்மைகள் பேசப்படுகின்றன. சரியையாதி நாற்பாதங்கள் விளக்கப்படுகின்றன. அவற்றை மேற்கொளவ்தன் விளைவாகப் பெறப்படும் சம்பந்தத்தின் தன்மை தெளிவாக்கப்படுகின்றன.
பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி வீடு பேறு பெறுதல் என்பது சிவனை அடைவதாகும். சிவமாம் தன்மையைப் பெறுவதாகும். எல்லாவற்றிற்கும் மேலானவன் அவனே. இரண்டாவது இன்னருள் (1) சிவனோடொக்கும் தெய்வம் தேடினுமில்லை. அவனோடொப்பார் இங்கு யாவருமில்லை, (5) அவனையழிய அமரருமில்லை. (6) தன்னை அப்பாயெனில் அப்பனுமாயுளன் (7) அவன் தீயினும் வெய்யன் புனலினுள் தண்ணியன், சேயினும் நல்லன், தாயினும் நல்லன், (8) அவன் கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே, (14) பிறப்பிலி பிஞ்ஞகன், பேரருளாளன், இறப்பிலி யாவர்க்கும் இன்பமருளும் துறப்பிலி, (25) ஒப்பிலி வள்ளல், ஊழிமுதல்வன், (36) இத்தகைய சிவமாகிய பரம்பொருளைச் சூடியும், நெஞ்சிடை வைத்தும் பிரான் என்று பாடியும் பன் மலர் தூவி பணிந்து நின்று ஆடியும், அமரர்பிரான் என்று நாடியும், வாழ்த்தவும் செய்வோர்க்கு ஈசன் அருள் நிச்சயம் கிடைக்கப்பெறும். ஐயமில்லை.
இறைவனைப் போல் உயிருக்கும் ஆக்கமும் அழிவும் இல்லை என்பது சைவக் கொள்கையாகும். "பதியினைப்போல் பசு பாசம் அனாதி" உடல், செல்வம், இளமை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டு அவற்றிற்காக உழைப்பவன் ஞானம் பெறத் தகுதியற்றவன். இவற்றின் நிலையாமையை உணர்ந்து எல்லாவற்றிற்கும் அடிப்படையான இறைவன் மீது நீங்காத பற்று வைப்பதே ஞானம் பெறுவதற்கு முதற்படியாகும். இதை உணராமல் நிலையற்றதொன்றை நிலையெனக் கருதுபவர். உயிரின் உண்மைத் தன்மையினை அறியாதவர்கள் ஆவார்கள். அதனையடுத்து ஞானம் பெற முயல்பவன் அறம் செய்தும், அன்பு பூண்டும், கல்வி கேள்வி மேற்கொண்டும், கொல்லாமை, புலால் மறுத்தல், பிறன் மனை நயவாமை, கள்ளுண்ணாமை போன்ற விரதங்களை மேற்கொண்டும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய கருத்துக்களை அகத்திற் கொண்டு அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் சைவ சித்தாந்த நெறியைக் கடைப்பிடித்தவனாகின்றான் என்கின்ற நிலை திருமந்திரத்தில் முதல் தந்திரத்தில் விளக்கப்படுகின்றது. அத்தோடு நன்னெறி அறிந்து, ஒழுகி வீடு பேற்றினை அடையும் குறிக்கோளுடன் நற்பொருளைக் கேட்டுணர்வதற்கான ஆவலுடன், பெரியோர்களை அறிந்தும் வழிபட்டும் உள்ளமாகயி தீர்த்தத்தின் உண்மைகளை உணர்ந்தும் சிவநிந்தை, குரு நிந்தை, மகேஸ்வர நிந்தை ஆகிய தீமைகளை அறவே அகற்றியும் தம்மை அறிந்த தத்துவ ஞானிகளைத் துணையாகக் கொண்டும் சைவ சித்தாந்த ஏணியில் அடுத்த படியில் கால் வைக்க வேண்டுமென்பதும் முதலாவது தந்திரத்தின் சாரமாகும்.
மூன்றாம் தந்திரத்தின் குறிக்கோள் சரீர சித்தி உபாயமாகும். உயிர் தங்கியுள்ள உடம்பு பேணப்பட வேண்டும். அறம் முதலியவற்றைச் செய்ய உடம்பு தேவைப்படுகின்றது. ஆனால், உடம்பின் வலிமை, மனத்தின் வலிமை, இறைவனை நாடுவதற்கேயாம். இறைவனை நாடுதல் வேண்டி யோக மார்க்கமாகச் செய்யத் தகுந்தவற்றைச் செய்வதும், தகாவற்றை நீக்கியும், உடலையும், உள்ளத்தையும் ஒருமுகப்படுத்திச் சிவயோக சாதனத்தை மேற்கொண்டு சிவஞானத்தைப் பெறுவது சைவ சித்தாந்த நெறியின் நான்கு பாகங்களில் ஒன்றானபடியால் திருமந்திரம் யோகத்திற்கு ஓர் சிறந்த இடத்தை நல்கி யோகானுபவங்களை விரிவுபடுத்தியுள்ளது. அதேபோல சிவயோகத்தைப்பெற மந்திரங்களின் துணையும் இன்றியமையாததாக உள்ளது என்பதையும் நான்காம் தந்திரத்தில் தெரிவிக்கின்றது.
ஐந்தாம் தந்திரம் திருமந்திரத்திற்கு உயிர் நாடியாகக் கருதப்படுகிறது. இதன்கண் சுத்தம், அசுத்தம், மார்க்கம், கடும் சுத்தம் என்னும் நால்வகைச் சைவங்களும், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகைச் சைவ நெறிகளும் அவற்றிற்குரிய சன்மார்க்கம், சக மார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம் என்கின்ற வழிகளும் அவற்றைப் பின்தொடர்பவர் பெறக்கூடிய சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்னும் நால்வகைப் பேறுகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இருவினை ஒப்பு என்கிற நிலையில் சத்திநிபாதம், மந்தம், மந்ததரம், தீவிரம், தீவிரதரம் என்கிற நான்கு படிகளாகத் திருவருள் உயிரை ஆட்கொள்கின்ற அனுபவ உண்மையும் விளக்கப்பட்டுள்ளது.
இறைவன் ஒருவனே, உயிர்கள் பல, உயிர்கள் அனாதியே, மலத்தால் கட்டுப்பட்டு நிற்பன. அவை உய்யும்பொருட்டு இறைவன் வினைக்கீடாய் மெய்க்கொண்டு உண்ணின்று உருக்கி ஒப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டி களிம்பு அறுக்கின்றான். அருட் கண்ணை விழிப்பிக்கின்றான். இதன் விளைவால் கிடைக்கப் பெறும் இன்பமே பேரின்பமாகும். அதற்காகச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற பாதைகளில் செல்லும் சற்குருவின் அருள்பெற்றும் திருநீறு போன்ற சாதனங்களைத் துணைக் கொண்டும் பக்குவ நிலையை அடைபவர் இறைவன் அருள் பெறுகின்றார்.
சரியைக்கு
நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே (திருமந்திரம் - 1445)
கிரியைக்கு
பத்துத் திசையும் பரமாரு தெய்வமுண்
டெத்திக் கிலரில்லை என்பதின் அமலாக்
கொத்துத் திருவடி நீழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே. (திருமந்திரம் - 1451)
யோகத்திற்கு
நெறிவழியே சென்று நேர்மையுள் ஒன்றித்
தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்
சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்க்குட்குக்கூடலுமாமே. (திருமந்திரம் - 1457)
ஞானத்திற்கு
சத்தமுஞ் சத்த மனனுந் தகுமனம்
உய்த்த உணர்வு முணர்த்தும் அகந்தையுஞ்
சித்தமென் றிமமூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே. (திருமந்திரம் - 1468)
என்கின்ற திருமந்திரங்கள் சைவ சித்தாந்த நன்னெறிகளுக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
ஏழு, எட்டு, ஒன்பது தந்திரங்களில் வரும் இறையருள் பெற்ற உயிர்கள் சிவயோக, சிவஞான நெறிகளில் ஆழ்ந்து நின்று நற்பண்புகளை மேற்கொண்டனவாய், அறிவுதயம் பெற்றவையாய், சிவ தரிசன அனுபவம் பெற்று அம்பலவாணனின் திருநடனத்தைப் பல்வேறு நிலைகளில் கண்டுகளித்துச் சிவத்தைத் தம்முள் அனுபவித்து மோன சமாதியில் திளைத்துச்சர்வ வியாபியாகிய சிவனின் பெருமையை என்றென்றும், உணர்வில் கொண்டு வாழ்ந்து வரும் உன்னதமான நிலையைப் பற்றிய விளக்கம் திருமந்திர மாலைக்குப் பெருமை தரக்கூடிய ஒன்றாகும்.ஒன்றே குலமும், ஒருவனே தேவனும் என்கின்ற திருமந்திர வாக்கு சைவ சித்தாந்தத்தின் மையக் கருத்தாக அமைகின்றது. சித்தாந்த நெறியின் தாரக மந்திரமாகச் செந்தமிழ்ச் திருவைந்தெழுத்து திருமந்திரத்தில் பல்வேறு இடங்களில் போற்றிப் பேசப்படுகின்றது.
"ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குயிராவது
நன்றுகண் டீர் இனி நமச்சிவா யப்பழந்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே." (திருமந்திரம் - 2962)
"அஞ்செழுத் தாலே அமர்ந்தவன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சக்கரம்
அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே" (திருமந்திரம் - 934)
"சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே யடிமைய தாக்கிச்
சிவாய சிவ சிவ வென்னென்றே சிந்தை
அவாயங் கெடநிற்க ஆனந்தமாமே". (திருமந்திரம் - 2718)
இறைவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தினை உச்சரித்து மனதை ஒருமித்துச் சிவத்தில் பொருத்தினால் பிறவித் துன்பம் நீங்கும்.
"நமவென்னு நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவவென்னு நாமத்தைச் சிந்தையு ளேற்றப்
பவமது தீரும் பரிசுமதற்றால்
அவமதி தீரும் அறும்பிறப் பன்றோ". (திருமந்திரம் - 2717)
சிவஞானம் பெற்ற உயிர் தன்னுடம்பையும், கருவி கரணங்களையும் மற்ற தத்துவங்களையும் தன்னில் வேறாகப் பகுத்துணர்ந்து சிவ பரம்பொருளே மெய்ப்பொருளெனக் கண்டு தெளியும் தன்மையை "மெய்கண்டதே" என்று திருமூலர் சிறப்பிக்கின்றார்.
"மெய்வாய்கண் மூக்குச் செவியென்னும் மெய்த்தோற்றத்
தவ்வாய அந்தக் கரணம் அகிலமும்
எவ்வா வுயிரும் இறையாட்ட ஆடலாற்
கைவா யிலா நிறை எங்குமெய் கண்டதே". (திருமந்திரம் - 2586)
என வரும் திருமந்திரப் பாடல் உணர்த்தும். சிவ பரம்பொருள் உயிருக்கு அருள் செய்தல் வேண்டி ஆசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளி, பாசங்களை நீக்கி மெய்யுணர்வு அளித்து அருள்வான் என்பது சைவ சித்தாந்தத் துணிவாகும். இதைக் கூறும் திருமந்திரம் பின்வருமாறு -
"குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே". (திருமந்திரம் - 1581)
உயிரானது பாச ஞானம், பசு ஞானம், பதி ஞானம் ஆகியவற்றைச் சிவத்தின் அருட்சக்தியால் படிப்படியாக அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடும்பொழுது அழியும் தன்மையுடைய பிரபஞ்சத்தை அசத்து எனவும், அழிவின்றி நிற்கும் பரம்பொருளைச் சத்தெனவும், சிவமாகிய பரம்பொருளைச் சிவசத்து எனவும், அசத்தினைச் சார்ந்த நிலையில் அசத்தாகவும், சத்தினைச் சார்ந்த நிலையில் சத்தாகவும், இவ்விரு பொருள்களின் உண்மைத் தன்மையை அறியும் திறமை படைத்துச் சத்தாகவும் நிற்கும் நிலை சைவ சித்தாந்தம் சமய தத்துவங்களுக்கு வழங்கிய தனித்தன்மை வாய்ந்த மாபெரும் உண்மையாகும். திருமந்திரம் இதைப்பின்வருமாறு கூறுகின்றது.
"சத்தும் அசத்தும் சதசத்துந் தான்கண்டு
சித்தும் அசித்தும் சேர்வுறா மேநீத்த
சுத்தம் அசுத்தமும் தோய்வுறா மேநின்று
நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே". (திருமந்திரம் - 1420)
"சத்தும் அசத்தும் சதசததுந் தான்கூடிச்
சித்தும் அசித்தும் சிவசத்த தாய்நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடங்காத் துரியத்துச்
சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே". (திருமந்திரம் - 2328)
"தானே அறியான் அறிவிலோன் தானல்லன்
தானே யறிவான் அறிவு சதசத்தென்
றானால் இரண்டும் அரணரளாய் நிற்கத்
தானே யறிந்து சித்துடன் தங்குமே". (திருமந்திரம் - 2329)
பாச ஞானமாவது ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைப் பற்றி அறிந்து கொள்வதாகும். அவை முறையே நெல்லின் பகுதிகளாகிய முளை, தவிடு, உமி என்பவற்றைப் போன்று உயிரைப் பிணித்து மறைத்துள்ளது போலாகும். இந்த உண்மையைப் பின்வரும் திருமந்திரப்பாடலில் காணலாம்.
"ஆணவ மாயையுங் கன்மமு மாமலங்
காணு முளைக்குத் தவிடுமி யான்மாவும்
தாணுவை யல்வாமற் றண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே." (திருமந்திரம் - 2192)
சித்தாந்தச் சமயத்தின் பெருமை வாய்ந்த கோட்பாடு இறைவனடி பேணுதலாகும். இறைவன் திருவடியை அருட் சக்தியென்றும், அருள் ஞானமென்றும் உள்தெளிவென்றும் சுட்டிக்காட்டுவது சித்தாந்தமேயாகும். பின்வரும் திருமந்திரம் இதைப் பிரதிபலிக்கின்றத.
"திருவடியே சிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ் சிந்திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே" (திருமந்திரம் - 138)
"சிந்தையி னுள்ளே எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை யறியகி லானாகில்
எந்தையை யானும் அறியகி லேனே". (திருமந்திரம் - 2428)
இறைவனுடைய திருவடியினை வேண்டுமென்பாருக்கு அருளல் அவனது இயல்பாகும். உலகெங்கும் தானான உண்மையை அவன் அளிப்பான். நீக்கமற நிற்கின்ற பரிபூரணானந்தன் ஆதலில் திருவடி சார்ந்தோருக்குப் பேரின்பத்தை அருள் வடிவில் அளிக்கின்றான். சித்து இவை, அசித்து இவை என அறிவித்து யோகத்தின் வாயிலாகச் சிவ ஒளியுடன் கலந்து அவயோகம் புகாவண்ணம் பேரின்பத்தைப் பெறுவதற்கான அருளைப் புரிபவனும் அவனேயாகும்.
"சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துன்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாரா தவன்பதி போக
நவயோக நந்தி நமக்களித் தானே".
( திருமந்திரம் - 122 )
"அளித்தான் உலகெங்குந் தாளான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் பேரின்பத் தருள்வெளி தானே".
( திருமந்திரம் - 123 )
சைவ சித்தாந்தம் தத்துவ விளக்கங்களுடன் நின்று விடவில்லை. சிவமாம் பரம்பொருள் தத்துவங்களுக்கு அப்பாற்பட்டவன். தத்துவாத்தன், "அப்பாலாய், அதற்கும் அப்பாவாய், அப்பாலுக்கப்பாலாய் நிற்பன்" என்பர் வள்ளலார். இறைவன் தத்துவக் கூட்டத்தில் நிற்கின்றான். தத்துவக் கூட்டத்திற்கு அப்பாலும் நிற்கின்றான். தத்துவம் எங்குண்டு, தத்துவன் அங்குண்டு, தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை. (பாடல் 2817) . இருவினைக்கு அப்பால் நிற்கும் பரம்பொருளை, பேரின்ப நிலையை, அன்பின் வடிவை, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் போன்ற ஐம்பெருந் தொழில்களையெல்லாம் புரிந்து சக்திகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உண்மையை இப்பிரபஞ்சத்திற்கு ஆதாரமாய், பிரபஞ்சமாய், எல்லாவற்றிற்கும் காரணமாய், எல்லாமாய் நிற்கின்ற ஒருவனை மனத்துள் உணர்ந்து அவனது தன்மையை விளக்கி, அவனை அடையும் வழிகளை உலகிற்கு எடுத்துக்காட்டுவது மட்டுமின்றி அந்த வழிகளால் கிடைக்கக்கூடிய பேரின்பத்திற்கு இலக்கணமாகவும், இலக்கியமாகவும் நிற்கும் பெரும் பெருமை சைவ சித்தாந்த்தைச் சாரும். ஐம்புலன்களினால் கிடைக்கக்கூடிய விஷயாதி அனுபவங்களில் மக்கள் மயங்கி நிற்கும்போது அந்தச் சிற்றறிவினை "ஆமேவு, பால் நீர் பிரிக்கின்ற அன்னம் போல" பேரறிவில் இருந்து பிரித்துப் பிறவிக்குக் காரணமான கன்ம நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வாழ்வையும், வாழ்வு தரும் அனுபவங்களையும் சிவனின் தன்மையை வெளிக்காட்டும் ஏணியாக அமைத்து அந்த ஏணியில் படிப்படியாக ஏறி ஒப்பில்லாத ஆனந்தத்தைத் தம்முள் பெற்று விவரிக்க இயலாத நிலையைத்தம்முள் கண்டு அந்த நிலையைப் பிறரும் அனுபவிக்கச் செய்வதே சைவ சித்தாந்தத்தின் தலையாய கொள்கையாகும். பின்வரும் திருமந்திரம் இதற்குச் சான்றாகும்.
"முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத் துள்ளளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்
தப்பரிசாக அமர்ந்திருந் தாரே". (திருமந்திரம் - 126)
திருமந்திரத்தில் முதல் தந்திரத்தில் அமைந்திருக்கும் உபதேசம் என்கின்ற பகுதியில் சைவ சித்தாந்தக் கருத்துகளையெல்லாம் ஒருங்கே சேர்க்கப்பட்டு ஒளி வீசும் முத்துக்குவியல்போல் விளங்குவது திருமந்திர மாலை. வெறும் தத்துவ நூல் மட்டுமன்று. ஓர் உணர்வு நூல் என்கின்ற உண்மையை எடுத்துக்காட்டும் பாங்குடன் அமைந்திருப்பது வியக்கத்தக்கதாகும். இந்த உபதேசம் என்கின்ற தலைப்பில் முப்பது மந்திரங்கள் உள்ளன. இப்பகுதிதான் "மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்" என்பதற்குச் சான்றாக இருக்கலாம். துடிசைக்கிழார் இந்த உபதேசப் பகுதி ஏனைய பகுதிகளினின்றும் வேறாகத் தனிப்பட்டு விளங்குவதைச் சுட்டிக்காட்டி இப்பகுதியை ஒரு தனி நூலாகக் கருதுகின்றார்கள். அது எப்படியாயினும், உபதேசம் என்கின்ற ஒரு பகுதி ஒரு அறிவுப் பொக்கிஷமாக, ஓர் விரிந்த, ஆழ்ந்த அனுபவக் கடலாகக் காணப்படுகின்றது. சிவயோகத்தில் மூழ்கி, சிவஞானம் பெற்றவர்களாகச் சிவ உணர்வோடு என்றும் கலந்த அன்பும் கருணையும் நிறைந்த உள்ளம் படைத்தவர்களாக வாழும் சிவலோகச் சித்தர்களை உபதேசப் பகுதி படமெடுத்துக்காட்டுகிறது.
"சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முளூகொண்டோர்
நித்தர் நிமலர் நீராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே". (திருமந்திரம் - 125)
தம்முள் இவர்கள் சிவத்தைக் கொண்டிருப்பதாலும், சிவமெனும் பரம்பொருள் எங்கும் நிறைந்திருப்பதாலும்,இவர்களும் எங்கிருப்பர், எல்லாம் இறைவன் செயல் என்பதை எப்பொழுதும் மனதில் கொண்டிருப்பர். காலத்திற்கு
அப்பாற்பட்ட சிவமாகிய பரம்பொருளுடன் இவர்கள் கலந்து நிற்பதால் முக்காலத்தின் இயல்பையும் இவர்கள் நன்கு உணர்ந்தவர்களாகிறார்கள். இந்த நிலையே இழிவு வந்த எய்திய சோம்பே எனப்படுகிறது. தன்னினைவு இழந்த நிலையில் உணர்வுகளெல்லாம் சிவமாகி நிற்கும் பொழுது கிடைக்கும் அனுபவமே
சோம்பல் எனப்படும். தாயுமானவர் இந்த நிலையை "தூக்காத தூக்கமது தூக்கும் பராபரமே" என்று அழகாக வருணிக்கின்றார். திருமந்திரம் இந்த நிலைக்கு இலக்கணம் வகுக்கின்றது.
"இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன் செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்கு
இருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே". (திருமந்திரம் - 127)
திருமூலர் சைவ சித்தாந்த வித்தகராக மட்டுமின்றி ஒர் தலைசிறந்த சித்தபுருடராகவும் விளங்கியிருக்கிறார். சிவமாம் பரம்பொருள் ஒன்றே என்பது சித்தர்கள் கண்ட உண்மையாகும். சித்தர்கள் சிவமென்கின்ற ஒரே உண்மையைப் பற்றிய அனுபவத்தை, உணர்வினை எடுத்துக் கூறுகிறார்கள். பரிபூரணானந்தத்திற்கு வழிகாட்டும் இறையுணர்வாளர்களாகவும் வாழ்கிறார்கள். அவர்களுடைய உள்ளத்தில் சுத்த சிவம் எங்கும் எப்போதும் தோய்ந்து நிற்கின்றது. தங்களுடைய மனவெளியிலே சிவமெனும் பரம்பொருள் என்றும் கலந்த நிலையில், ஐம்புலன்களால் தூண்டப்படும் உணர்ச்சிகளை முழுமையாக அடக்கியவர்களாகத் தானென்கின்ற தன்மையை அறவே ஒழித்து வாழ்ந்து வருபவர்கள் சித்தர்களாவார்கள். சிவத்தில் திருவருள் அமுதத்தைத் தம்முள்ளேயே பெறுகின்றனர். மனமும் சித்தமும் அந்தக்கரணங்களும் சிவ நினைவில் ஒடுங்கியிருத்தல் காரணமாக ஒப்பற்ற யோக நிலையில் இருக்கின்றனர். அந்த நிலையின் விளைவாக அவர்கள் பெரும் பேரின்பத்தை விவரிக்கவும் இயலுமா?
"தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே". (திருமந்திரம் - 129)
சித்தர்கள் உயர்ந்த ஞானப்பொருளை வேறு மொழிகளில் பேசிவரும் மரபையும் கொண்டிருந்தனர். ஞானப்பொருளைத் தத்துவரீதியாக விளக்கி உணர்த்த வைப்பது கடினம் என்கின்ற நிலையில் கேட்போர் மனதில் எளிதாகப் பதியும் வகையில் அன்றாடம் மொழியைப் பயன்படுத்தித் தெளிய வைப்பது வழக்கமாக இருந்து வருகின்றது. திருமந்திரத்திலும் ஒன்பதாவது தந்திரத்தில் இடம்பெற்றுள்ள சூனிய சம்பாஷனை என்கின்ற பகுதி இத்தன்மை உடையது. உண்மை விளக்க விடுகதை போன்றுள்ள பின்வரும் மந்திரங்களையும் பார்க்கலாம்.
"வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே". (திருமந்திரம் - 2869)
"பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொறியுமே". (திருமந்திரம் - 2883)
முதல் தந்திரத்திலுள்ள உபதேசப் பகுதியைப் போலவே ஒன்பதாம் தந்திரத்திலுள்ள சூனிய சம்பாஷனைப் பகுதியிலுள்ள கருத்துகள் சித்தாந்தக் கோட்பாடுகளாகவே உள்ளன. அத்துடன் சித்தாந்தத்தின் முடிவாகிய சிவஞான அனுபவமும் இந்த இரண்டு பகுதிகளிலும் கணிசமான அளவுக்கு இடம் பெறுவது தவராஜ யோகியான திருமூலரின் சித்தாந்த அனுபவத்திற்கு மேன்மை பொருந்திய எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
எல்லையற்ற சிவ பரம்பொருளை அணுகவும், அடையவும் சைவ சமயம் மேற்கொள்ளும் முறைகள் மனிதனின் ஆன்மிக வேட்கையை எல்லா வகைகளிலும் தணிக்கும் வகையில் அமைந்துள்ளன என்பது அறிஞர்கள் கண்ட முடிவு. அத்தகைய ஆழ்ந்த, பரந்த சைவ சமயத்திற்கு இலக்கணமும், இலக்கியமும் அருளித் தந்த பெருமைவாய்ந்த சிவனருட் செல்வர்கள் பலருள் திருமூலநாயனார் தன் யோகத்தால், தவத்தால், பேரின்பத்தைப் பெற்றவராய்த் தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்கின்ற குறிக்கோளுடன் திருமந்திரத்தை அருளிச் செய்தார்கள். திருமந்திரம் ஓர் ஆழ்ந்த சைவ நூல்.