இறைவன் நமது புலன்களுக்குப் புலப்படுவதில்லை. புலனறிவு சிற்றறிவாகும். புலனறிவைக் கொண்டு பேரறிவைக் காண இயலாது. சிற்றறிவு என்பது ஓர் சிறிய வட்டமாகும். நாம் எல்லோரும் அந்த வட்டத்தின் வரம்பிற்குள் இருக்கின்றோம். பேரறிவானது எல்லையற்றது. வரம்பற்றது. ஆறு ஆனது கடலில் கலந்து மறையலாம். ஆனால், கடல் ஆற்றல் மறைந்து போவதில்லை. சிற்றறிவு பேரறிவிலே சங்கமம் ஆகலாம். ""அறிவு அறிவுள்ளளே அழிந்தது போல""என்பார் திருமூலர். ஆனால், பேரறிவுக்குச் சிற்றறிவினால் ஈடுகட்ட இயலாது.
சிற்றிவைப் பெற்றுள்ள நமது நிலைமை கிணற்றில் வசிக்கும் ஆமையின் நிலைமையைப் போன்றதாகும். கிணற்று ஆமை கடலில் வசிக்கும் ஆமையைப் பார்த்து "உங்கள் கடல் எங்கள் கிணற்றுக்கு ஒப்பாகுமோ?" என்று கேட்டால் அது அந்தக் கிணற்று ஆமையின் அறியாமையைத்தானே குறிக்கும்! வினைகளால் உந்தப்பட்டு நாம் நமது வாழ்க்கையை நடத்தி வருகின்றோம். அறிவைவிட அறியாமை என்கின்ற அடிப்படையில்தான் நம்முடைய வாழ்க்கை நடந்து வருகின்றது. இந்த அறியாமையைப் பெருக்க நாம் மேலும் மேலும் செய்யும் வினைகள் வித்திட்டு வருகின்றன. அந்த நிலையை நம்மில் பலர் கடவுளே இல்லை என்று சொல்லி நம்முடைய மனத்திலிருந்து அந்த எண்ணத்தையே விலக்கி விடுகின்றோம். வேறு பலர் இறைவனைக் காண்பது அரிது என்று சொல்லி அவனைக் காணத்தாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் பயன் தராது என்று சொல்லியும் தம்மைத்தாமே திருப்தி செய்து கொள்கின்றார்கள்.
இது என்ன பேதைமை என்கிறார் திருநாவுக்கரசர்.
"கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்
கூல லோடுஒக்கு மோகடல் என்றல்போல்
பாவ காரிகள் பார்ப்பரிது என்பரால்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே".
உண்மையில் இறைவனுடைய அருட்சத்தியே இந்த வினைகளைச் செய்ய வைக்கின்றது. பாசத்தைக் கொடுக்கின்றது. உயிரை மலங்களோடு சேர்த்து வைக்கின்றது. இறைவனுடைய மறைப்புச் சக்தி காரணமாக நாம் இறைவனை அறிவதில்லை. இறைவன் நம்மிடமிருந்து மறைந்து நிற்கின்றான். நம்முடைய கண்கள் புறப்பொருட்களைப் பார்க்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. ஆனால், நம்முள் நிற்கும் இறைத் தன்மையைக் காண முடிவதில்லை. "கண் ஒன்று பல காணும்;தனைக்காணா;அண்ணலும் இவ்வண்ணம் ஆகி நின்றானே" என்கிறார் திருமூலர். எனவேதான் இறைவனை மறைபொருள் என்று குறிப்பிடுவது உண்டு. இந்த மறைப்பொருள் புலனறிவுக்கு அப்பாற்பட்டது. இன்னதென்று சொல்லிக்குறிப்பிட்டு உணர்த்த இயலாது. இறைவன் மறைபொருளான காரணத்தினால் அவனை எழுத்தாலோ, வாக்காலோ கட்டுப்படுத்த முடியாது. இதைத்தான் திருமூலர்.
"காட்டுங் குறியும் கடந்தவர் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்" (திருமந்திரம் - 2937)
என்பார்.
இந்தக் கருத்தை மேலும் விளக்குகின்றார் திருமூலர். பரம்பொருள் எழுத்துக்களுள் அடங்கி நிற்காதவன். சிற்றறிவிற்கு உட்பட்ட பொருளை எழுத்தாலும் வாக்கினாலும், விரிவுரையாலும், வாதத்தாலும் விளக்கி விடலாம், அறிந்து கொள்ளலாம். ஆனால், பரம்பொருள் இவற்றிற்கு அப்பாற்பட்டது. பரம்பொருளைப் பொறுத்தவரை நம்முடைய அறிவு ஒரு எல்லைக் கோட்டில் நின்று விடுகின்றது. அந்த எல்லைக் கோட்டைத் தாண்ட நாம் அறிவைக் கொண்டு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது. பரந்த, விரிந்த கடலின் மற்றொரு கரையை நாம் கண்களாலேயே கண்டுகொள்ள முடியுமா? கரையற்ற பெரும் வெள்ளம் அடித்து வரும்போது அதனுடைய கரையைக் காண்பது மிகவும் கடினம் அல்லவா? அதேபோல உரையற்ற இறைவனுடைய தன்மையை நம்முடைய புலனறிவினால் மட்டும் கண்டுகொள்ள முடியாது.
"உரையற்ற தொன்றை யுரைசெய்யு மூடர்காள்
கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ (திருமந்திரம் - 2955)
நமது அறிவுக்கு எட்டாத பரம்பொருளை மறைபொருள் என்கின்றோம். ஆனாலும் இறை என்னும் உண்மையைத் திருமூலரைப் போன்ற மகான்கள் முழுமையாக அனுபவித்தார்கள். அவ்வாறு அனுபவித்த திருமூலர் இறைவனை அனைத்து தலைவனாகக் காண்கின்றார். உயிருக்கு உயிராய் உயிர்களின் அறிவில் பொருந்தியிருத்தலைக் காண்கின்றார். அண்டத்தில் உலகெங்கிலும் நிறைந்து நிற்பதைக் காண்கிறார்.
உள்ளத்தில் தியானப் பொருளாக விளங்கி நிற்பதை அனுபவிக்கின்றார். இறைவனுடைய அருளின் தன்மையை உணருகின்றார். பொய்மை நிறைந்த உடலில் உயிர்ப்புச் சக்தியாக உட்புகுந்து வெளிவருதலைக் காண்கின்றார். அதே நேரத்தில் உயிர்களின் புலனறிவால் அறியப்படாத மறைந்து நிற்பவனாகக் கள்ளத் தலைவனாகக் காண்கின்றார். மற்றவர்கள் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளவில்லையே என்றும் நினைத்துக் கொள்கின்றார்.
"உள்ளத்து ளேதான் உகந்தெங்கும் நின்றவன்;
வள்ளற் றலைவன்;மலருறை மாதவன்;
பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே" (திருமந்திரம் - 1531)
கள்ளத் தலைவன் என்னும் சொல் எத்துணைக் கருத்துக்களை உள்ளடக்கி வைத்துள்ளது!இறைவன் சகல உயிர்களுக்கும் தலைவன்தான். "தானே உலகில் தலைவனெனத் தகும், தானே உலகுக்கு ஓர் தத்துவமாய் நிற்கும்" என்கிறார்
திருமூலர். எனினும் அவன் ஓர் கள்ளத் தலைவன். நம்மால் அறியப்படாது அவன் நிற்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றான். அவன் நம்மிடமிருந்து மறைந்து நிற்பதால் மட்டும் அவன் நம்மிடையே இல்லையென்று சொல்லிவிட முடியாது. இதைப்பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் என்கிறார் திருமூலர். "இறைவன் அண்டங்களில் பரவி நிற்கின்றான் என்று சிலர் கருதுகின்றீர்கள். அப்படியே இறைவனும் அண்டங்களில் பரந்து நிற்பான். இல்லை இல்லை இறைவன் நம் உள்ளத்திலேயே குடிகொண்டுள்ளான் என்று சிலர் நினைப்பீர்கள். நீங்கள் நினைப்பது போலவே இறைவன் உங்கள் உள்ளத்தில் குடிகொண்டிருப்பான். இல்லை இல்லை பரம்பொருள் என்று ஒன்றுமில்லை. அதெல்லாம் ஒரு கற்பனை. அது உள்ளத்திலும்ட இல்லை, வெளியிலும் இல்லை என்று நீங்கள் நினைத்தால் உங்களுடைய மனத்தில் அந்த எண்ணமே உண்மை என புலப்பட்டுக் கொண்டிருக்கும், பரம்பொருளாவது உங்களுடைய எண்ணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது" என்கிறார் திருமூலர்.
"உள்ளத்தும் உள்ளன், புறத்துளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன;புறத்துளன் எம்மிறை;
உள்ளத்தும் இல்லை;புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை;புறத்தில்லை தானே" (திருமந்திரம் - 1532)
இறைவனைக் கண்டுகொள்ள அறிவை ஒதுக்கி வைத்துவிட்டு உணர்வைப் பயன்படுத்த வேண்டும். உணர்வு என்பது அவனருளே. அதுவே மறைபொருளை நம் முன் நிறுத்தி வைக்கின்றது. அந்த உணர்வே இறைவனுடைய உண்மைத் தண்மையை நம்முள் வெளிப்படுத்துகின்றது. அப்போது இறைவன் ஒருவன் அல்லது ஒருத்தி அல்லது ஒருவரைச் சேர்ந்தவன். இத்தகைய நிறத்தையும் வண்ணத்தையும் கொண்டவன். இப்பேர்ப்பட்டவன் என்றெல்லாம் பேசாமல் பரம்பொருள் எத்தகையது என்கின்ற உண்மையை நாம் கண்டுகொள்கின்றோம் என்கிறார் நாவுக்கரசர். அந்த உணர்வு வரும் வரை நம்முடைய மனது சஞ்சலத்திலே தொடர்ந்து மூழ்கி இருக்கும் நிலையில் மனதில் ஒரு தெளிவு ஏற்படுவதில்லை.
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஒருவ னில்லி
அப்படியும் அந்நிறமும்அவ் வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணி னல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே. - நாவுக்கரசர்
கடவுள் என்னும் பேரின்பத்தை அனுபவிக்கத் தெளிந்த சிந்தை தேவைப்படகிறது. மனத்திலே எண்ணங்கள் வாயு வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும்போது ஆழ்ந்த சிந்தனைகளுக்கு இடம் கிடைக்காது. நீரின்
பரப்பில் காற்றினால் அலை அடிக்கும்போது ஆழத்தைக் காண முடியாது. அசைவற்ற நிரிலே ஆழத்தைக் காணலாம். அசைவற்ற மனமே தெளிந்த மனமாகும். தெளிந்த மனத்திலே புலனறிவு அடங்கி உணர்வாகிய ஒளி தோன்றும் இறைவனே அந்த உணர்வாவான். "உணர்வும் அவனே உயிரும் அவனே, புணரும் அவனே;புலவி அவனே" என்கிறார் திருமூலர். தெளிந்த சிந்தை பெற்றார்க்கு இறை உணர்வு இயல்பாகவே தோன்றும் .
"திரையற்ற நீர்போற் சிந்தைதெளி வார்க்குப்
புரையற்று நின்றான் புரிசடை யோனே" (திருமந்திரம் - 2955)
சீவன் சிவலிங்கமாவதற்கு வழியும் அதவே என்கிறார் திருமூலர். அதாவது நம்முடைய சிந்தையைத் தெளிந்த நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். புலனறிவினால் நமது மனத்திலே ஏற்படும் சஞ்சலங்களின் தன்மை குறைய வேண்டும். சஞ்சலங்கள் வினைகளுக்குக் காரணமாக இருக்கின்றன. வினைகள் வளர வளர மனமும் சித்தமும் அவற்றால் நிரப்பப்பட்டுத் தங்களுடைய உண்மை இயல்பைப்பற்றி கொடுத்துவிடுகின்றன. அப்படி விடாமல் புலன்களின் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சித்தத்தைத் தெளிய வைத்தார்களுக்கு இறை உண்மை தோன்றும். வஞ்சனை செய்து மனத்தைத் தவறான வழிகளில் ஈடுபடச் செய்யும் புலன்கள் ஒளிபொருந்திய விளக்காக அமையும்.
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே" (திருமந்திரம் - 1823)
இதையே மேலும் விளக்கும் வகையில் உள்ளது பின்வரும் திருமந்திரம் -
"சிந்தைய தென்னச் சிவனென்ன வேறில்லை
சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படுஞ்
சிந்தை தெளியத் தெளியவல் வார்கட்குச்
சிந்தையி னுள்ளே சிவனிருந் தானே" (திருமந்திரம் - 2853)
திருமூலர் இறை உணர்வை அனுபவித்து, ஞானம் பெற்றுத் திருமந்திரத்தை நமக்கு அளித்துள்ளார். தெய்வீக அனுபவத்தை விளக்குவது கடினம். நாம் பேசும் மொழி இந்த விஷயத்தில் ஓரளவுதான் நமக்குத் துணைபுரியும். தமிழ் மொழி ஓர் சிறந்த தொன்மையான மொழியாகும். உள்ளத்திலே தோன்றுகின்ற பல நுட்பமானவற்றைத் தமிழ் மொழி விளக்குவது போல வேறு மொழிகள் விளக்குவதில்லை என்று அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஒரு மொழியினுடைய பெருமை அந்த மொழி வெளிப்படுத்தும் எண்ணங்கள், கருத்துகள், உணர்வுகள் ஆகியவற்றின் நுட்பத்தையும், ஆழத்தையும் பொறுத்து
இருக்கும். அந்த வகையில் பார்த்தால் தமிழ் மொழியின் பெருமை அளவிடற்கரியது என்று எல்லோரும் போற்றுகின்றனர். இந்த நூற்றாண்டின் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் இறை உண்மை போன்ற உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்த நமது மொழிகளில் சொற்கள் இல்லையே என்று கூறினார். அவருக்குத் தமிழ் தெரியாது. தமிழைப் படிக்க அவருக்கு வாய்ப்புக்கிட்டியிருந்தால் தமிழ் மொழியின் அருமையை அவர் நன்கு உணர்ந்துகொண்டிருப்பார். புலன்களால் அனுபவிக்க முடியாத ஒன்றை, பரம்பொருளை, தங்கள் உணர்வினாலே அனுபவித்து நாயன்மார்களும் ஆழ்வார்களும் இனிய தமிழில் பாடி அந்த உணர்வுகளை நமது உள்ளங்களில் ஆழப் பதிய வைத்த அந்தச் சாதனை வியக்கத்தக்க ஒன்றாகும் அல்லவா
உள்ளத்திலே தெளிவு இருந்தால், மனத்திலும் வாக்கிலும் தெளிவு இருக்கும். உள்ளத்திலே குழப்பல் இருந்தால், குழம்பிக் கிடக்கின்ற மனத்தில் இருந்து குழப்பமான வாக்குத்தான் வெளிவரும். தெளிந்த உள்ளத்திலிருந்து வெளிவரும் வாக்கு ஆழமுடையதாக இருக்கும். காலம் கடந்ததாக இருக்கும். உண்மையை அப்படியே பிரதிபலிக்கும். தெளிவற்ற மனம் சொற்களைக் கொட்டிக் கொண்டே இருக்கும். அவற்றில் ஆழம் இராது. தொடக்கமோ முடிவோ இராது. அவற்றில் சிந்திக்கத்தகுந்த அல்லது பயன்படுத்தக்கூடிய கருத்துக்களோ அமைந்திராது. ஆழ்ந்த சிந்தனையுடையவர்கள் அதிகமாகப் பேசமாட்டார்கள். அந்த நிலையையே ஒரு சிறந்த நிலை என்கின்றார் திருமூலர். "பெற்றார் உலகில் பேசார் பெருமையே" என்பார் அவர். அதே நேரத்தில் திருமூலரைப் போன்ற சித்தர்கள் மக்களுடைய வாழ்க்கையின் அமைதியிலும், ஆன்மீக வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். தாங்கள் பெற்ற பேரின்பத்தைப் பிறருக்கு விளக்கி எல்லோரும் ஆன்மீக அனுபவத்தைப் பெறச் செய்வதற்கான முயற்சியில் அவர்கள் எப்பொழுதும் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள். இறைவன் அருளால் மனப்பக்குவம் அடைந்த, ஞானப் பொருளைப் பற்றிய நுட்பமான உபதேசத்தைப் பெறத் தகுதியுடைய சீடர்களுக்கு அவர்கள் தங்கள் விளக்கத்தை அருளிச் செய்வதன் தன்மை வேறு. ஆனால், விவரம் அறியாத பாமர மக்களுக்கு ஆன்மீக நுட்பங்களை விளக்குவதன் தன்மை வேறு.
திருமூலர் ஒன்பதாம் தந்திரத்தில் சூன்ய சம்பாஷணை என்கிற பகுதியில் கையாளும் முறை ஆன்மீகத்தின் ஆழ்ந்த, நுண்ணிய கருத்துக்களையும், அனுபவங்களையும் சுவைபட, படிப்போர், கேட்போர் மனதில் நிலைத்து நிற்கும் வகையில் அமைந்துள்ளது. இதை மறைமொழி எனலாம். மேலாகப் பார்த்தால் சொற்களின் பொருள் ஒருவகையாக இருக்கும். ஆனால், அவற்றின் உட்கருத்து வேறு ஒரு வகையாக இருக்கும். சற்று யோசித்தால் பொருள் எளிதில் விளங்கிவிடும். சொற்களில் ஆழ்ந்த ஞானப்பொருள் பொதிந்து கிடப்பதைப் பார்க்கலாம். படிப்போருக்கு இன்பம் கிட்டும். நம்மை அறியாமலேயே பாடல்களில் உள்ள பொருள் பற்றிய ஒளி நமது உள்ளத்திலே தோன்றிவிடும். ஆழ்ந்த ஞானம் பெறுவதற்கு இதை ஒரு வழியாகவும் எடுத்துக் கொள்ளலாம். பௌத்த சமயத்தில் சென் என்னும் ஞான மார்க்கத்தைப் பின்பற்றும் அறிஞர்கள் இந்த உத்தியைப் பரவலாகக் கையாளுகிறார்கள். திருமுந்திரத்தில் மறைபொருளைப்பற்றி மறைவாகப் பேசி ஞானம் போதிக்கும் பாடல்கள் பல இடங்களிலே காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
படைத்தல் தொழிலுக்குக் காரணமாக இருப்பவன் இறைவன். உயிரானது உடலில் புகுதலும், வெளிவருதலும் அவன் அருளாலே நடக்கின்றது. இதை அறிந்து கொள்ளாமல் பிறப்பை நாம் புரியும் சாதனை என்றல்லவா நினைக்கின்றோம். உண்மையில் வித்திட்ட தந்தைக்கு என்ன நடக்கின்றது என்று தெரிவதில்லை. ஏற்றுக்கொண்ட தாயோ அதனுடைய விவரத்தை அறிவதில்லை. படைப்புத் தொழிலைச் செய்து வரும் பிரம்மனாகிய தட்டான் இதுபற்றித்தாய், தந்தையருக்கு விளக்கம் கூறுவதில்லை. ஐந்தொழில்கள் நடந்தேற நெறிகளை அமைத்துக் கொடுக்கும் இறைவன் எங்கும் உள்ளான். ஆனால், பிறப்பின் இரகசியத்தை அவன் வெளிப்படுத்துவதில்லை. இந்த நிலையிலும் மக்கள்தான் என்கிற செருக்கில் மாயையால் உந்தப்பட்டு அறியாமையில் மயங்கி நிற்கின்றனரே!
"இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலன்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே". (திருமந்திரம் - 486)
பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்கிற ஐந்து தேவர்களும் ஐந்தொழிலைப் புரிந்து வருகிறார்கள். ஐம்பூதங்களாலான உடம்பாகிய நிலத்தில் ஐம்புலன்கள், இந்திரியங்கள் இவற்றின் வழியாக அவர்கள் தத்தட்ம பணிகளைச் செய்து வருகின்றார்கள். இதைத் திருமூலர் "ஐவருக்க ஒரு செய் (நிலம்) விளைந்து கிடந்தது" என்பார். இவர்கள் இந்த நிலத்தைப் பேணிக்காத்து வருவார்கள். அதாவத இந்த உடம்பினை ஒம்பி, அந்த உடம்பிலே தங்குகின்ற உயிருக்கு வினைப்போகத்தை ஊட்டி வருவார்கள். ஐம்புலன்களும் தங்களுடைய ஆட்டத்தை ஆடி நாளடைவில் இளைத்து விடுகின்றன. இவ்வுடலினால் நுகர வேண்டிய வினைக்கூட்டங்கள் முடிவு பெறுகின்றன. இறைவனிடமிருந்து உயிருக்கு "கிளம்பு" என்று அழைத்து இறுதிச் சீட்டு வந்துவிடுகின்றது. உடனே ஐவரும், மற்ற நுண்சக்திகளும் இந்த "செய் ஆகிய நிலத்தை விட்டு பறந்து விடுகின்றன. "ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே" என்கிறார் திருமூலர்.
"ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவார்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே". (திருமந்திரம் - 188)
இந்த உடலில் குடிகொண்டுள்ளது உயிராகும். உயிரே ஐம்பொறிகளுக்கு நாயகனாகும். இந்த உடலாகிய ஊருக்குத் தலைவனாக இருப்பதும் இந்த உயிராகும். உயிர் தா ¢ வாழ்வதற்காக, உய்வதற்காக ஒரு குதிரையைப் பயன்படுத்துகின்றது. அந்த குதிரைதான் பிராணவாயு என்கிற உயிர்க்காற்று. இந்தக் குதிரையை அடக்கி ஓட்டுவது மெத்தக் கடினம். அடிக்கடி சண்டி செய்யும். ஆனால், இறைவனிடம் பற்றுக் கொண்டுள்ள மெய்யார்கள் பிராணவாயுவாகிய குதிரையின் மீது ஏறி அமர்ந்து கடிவாளத்தைப் பற்றும்பொழுது அவர்களுடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கி ஓடும். ஆனால், உலகப் பற்றுடன் கீழ்நோக்கிச் செல்லும் எண்ணங்களுடன் அந்தக் குதிரையை வசப்படுத்த முயலும் மெய்யுணர்வு இல்லாத பொய்யர்களை இந்தக் குதிரை துள்ளி எழுந்து தரையிலே வீழ்த்தி விடும். அதாவது பிராணாயாமம் என்கிற பயிற்சி யோக சாதனையில் ஒரு முக்கியமான கட்டமாகும். இதைக் கவனமாகக்கற்க வேண்டும். வெறும் பிராணயாமம் மட்டும் போதாது. மெய்யுணர்வைப் பற்ற வேண்டும் என்கிற குறிக்கோளுடன் வாழ்க்கையிலே இயம நியமங்களைக் கடைப்பிடிக்கும் பொழுதுதான் பிராணாயாமத்தின் முழுப்பலனும் வெளிப்படும்.
"ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக் கொண்டேறுங் குதிரை மற்றொண்டு
மெய்யார்க்குப் பற்றுக் கொடுங்குங் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே". (திருமந்திரம் - 564)
உடலோடு கூடியுள்ள சீவனை ஆணவம், கன்மம், மாயை, ஆகிய மும்மலங்கள் பற்றியுள்ளன. சீவனால் தானாகவே அந்த மலங்களை அறிந்து கொள்ள முடிவதில்லை. எனவே, சீவனைக் குருட்டுக் கிழவன் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். சீவன் இருக்குமிடம் மாயை. இந்த மாயா சக்திக்கு ஆதாரமாக இருப்பவளும் குமரி என்று அழைக்கப்பெறும் சக்தியாவாள். மாயைக்கு அவள் தலைவியானதால் திருமூலர் அந்த நிலையை "இருட்டறை மூலையிருந்த குமரி" என்கிறார். இந்தக் குமரி அருளுக்கு இருப்பிடம். குருட்டுக் கிழவனாகிய சீவனுக்கு ஞானம் போதித்துச் சீவனை உய்விக்க விரும்புகின்றாள். அப்பொழுது இறைவனின் பேரறிவைச் சீவன் அனுபவித்து இன்பத்தையும் பெறும். அது "கூடல்" எனப்படும். இந்த நிலையை அடைய அருட்சக்தி சீவனை மாய உலகில் உடலில் வாழச் செய்து, இன்பத் துன்பங்களை அனுபவிக்கச் செய்து பின்னர் தன்னுடன் சேர்த்துக் கொள்கின்றாள். சீவனுடைய மலங்களை நீக்குகின்றாள். இறைவன், உயிர், பாசம் ஆகியவற்றின் உண்மை இயல்புகளை உணர செய்கின்றாள். சீவன் ஞானம் பெறுகின்றது. இதுவே "மணம்புரிந்த நிலை" எனப்படும். இங்கேகூடல், மணம் போன்ற சொற்களுக்கு மாறுபட்ட பொருள் இருப்பதைப் பார்க்கலாம்.
"இருட்டறை மூலை யிருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி யவனை மணம்புரிந் தாளே" (திருமந்திரம் - 1514)
உழவன் நிலத்தை நன்றாக உழுது, பயிரிட்டு, பாத்தி கட்டி, தண்ணீர் பாய்ச்சி, உரம் முதலியவற்றைப் போட்டு பயிரை வளர்க்கின்றான். பயிரோடு களைப் பூண்டுகளும் வளர ஆரம்பிக்கின்றன. நாளடைவில் இந்தப் பூண்டுகள்ள முற்றிலும் வளர்ந்து பயிரையே அழித்து விடுகின்றன. பயிருக்குரிய உணவுப் பொருள்களை, உரத்தை, அவைகளே எடுத்துக் கொள்கின்றன. நல்ல பயிர் முளைக்கப் பூண்டுகளைக் களைய வேண்டும். அந்தப் பூண்டுகளைக் களையும் வகையை அறியவில்லையென்றால் பயிருக்கே நாசம் வந்து விடும். அதேபோல உடலாகிய நிலத்தில் உயிரானது தூய்மையான நெறியைக் கடைப்பிடித்து முன்னேற வேண்டும். உயிர் இந்த முயற்சியிலே வெற்றி பெறாதவாறு காமம், வெகுளி, மயக்கம், போன்ற பூண்டுகள் தடைசெய்கின்றன. இவற்றை அகற்றிச் சிவனெறிப் பயிரை வளர்க்கும் வகையினைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பேர்ப்பட்டவர்கள் ஏனையோர்கள் அன்பு வைத்துப் போற்றப்படுபவர்கள் ஆவார்கள்.
"தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை
மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு
ஊறிக் கிடந்தென் உள்ளன்பு தானே". (திருமந்திரம் - 2867)
ஆன்மீகப் பாதையில் நாம் முன்னேற வேண்டுமென்றால் பல முயற்சிகளை வேண்டியுள்ளது. முதலில் ஞான சாதனை புரிய வேண்டுமென்கிற எண்ணம் மனத்தில் தோன்ற வேண்டும். திருவருளால் இது நடக்கிறது. அந்த எண்ணத்தை நிறைவேற்ற யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதன் விளைவாக வைராக்கியமாகிய பாகல் கொடி கிடைக்கின்றது. அத்துடன் நின்றுவிடக்கூடாது. தத்துவ ஆராய்ச்சியையும் புரிய வேண்டும். மெய்ப்பொருளைப் பற்றிய அறிவினைப் பெறத் தத்துவங்களிலும் ஈடுபட வேண்டும். இது புழுதியைத் தோண்டுவதாகும். அப்பொழுது சிவத்தைப் பற்றிய அறிவு "பூசணி" உள்ளத்திலே தோன்றும். வைராக்கியம், அறிவு போன்றவை தோன்ற ஆரம்பித்தவுடன் நமக்கு விஷய அனுபவங்களைக் கொடுத்துக் கொண்டு வரும் இந்திரியங்கள் போன்றவை தங்களுடைய செயல்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளும். இதைத் திருமூலர் "தொழுது கொண்டே ஓடினார் தோட்டக் குடிகள்" என்பார். முடிவில் ஆன்ம லாபமாகிய வாழைக்கனியை நாம் பெறலாம். வாழைக்கனி மெய்ப்பொருளைப் பற்றிய அறிவு உள்ளத்திலே எழுந்தவுடன் வரும் பேரின்பத்தைக் குறிக்கும்.
"வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்த
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே". (திருமந்திரம் - 2869)
உடம்பானது உயிரின் அனுபவங்களுக்காகப் படைக்கப்பட்டுள்ளது. உடலின் தலைவன் "பார்ப்பான்" என்று கூறப்படும் உயிராகும். இந்த உடலிலே இந்திரியங்களாகிய கறவைப் பசுக்கள் ஐந்து உள்ளன. அவை அடக்குவாரின்றி விருப்பம் போல வெறிகொண்டு செல்கின்றன. அவற்றை அடக்கி நடத்திச் செல்வதற்கு ஓர் மேய்ப்பார் வேண்டும். சிவனருளே இந்த மேய்ப்பார் ஆகும். பொறிகளையும், புலன்களையும் அடக்க இறைவனின் அருளும் ஆற்றலும் நமக்குத் தேவைப்படுகின்றன. அந்த நிலையில் உயிரும் புலன்வழி தனது மனத்தை செலுத்தும் விருப்பத்தை விடத் தொடங்குகின்றது. இறைவனுடைய அருளும், நம்முடைய வைராக்கியமும் சேரும்பொழுது ஐம்பொறிகள், புலன்கள் ஆகியவை தத்தம் வழி செல்லாது இறை இன்பத்தை நாடுகின்றன. இறை இன்பத்தையும் பெறுகின்றன. இதையே வேறொரு இடத்தில் திருமூலர் "தானே புலனைந்தும் தன்வசம் ஆயிடும், தானே புலனைந்தும் தன்வசம் ஓடிடும்" என்பார்.
"பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே" (திருமந்திரம் - 2883)
அருட்சக்தி உள்ளத்தில் பதியும்பொழுது இருள் விலகுகிறது . பொன்னிறம் கொண்ட ஞான ஒளி உள்ளத்தை நிரப்புகிறது. சிரசிலே உள்ள சகஸ்ரதளம் மலரத் தொடங்குகிறது. அதாவது அறிவும் அருளும் அங்கே பதிகின்றன.இறைவனுடைய
திருவடிகள் அப்போது விளக்கம் பெறுகின்றன. புன்னை மலரின் மகரந்தப்பொடி போன்று இருக்கும் மலமாகிய அணுக்கள் மலரிலிருந்து ஒதுக்கப்படுகின்றன. இறைவனுடைய திருவடிகளில் சிலம்பொலி கேட்கத் தொடங்குகிறது. முலாதாரத்தில் வீற்றிருந்த சதக்தியானவள் குளிர்ந்த மண்டலத்தில் இறைவனுடன் பொருந்துகின்றாள். அத்துணையும் உள்ளத்தின் உணர்வுகளிலே நடைபெறுகின்றது.
சீவனும் சிவனும் பொருந்தி விடுகின்றனர்.
"போதும் புலர்ந்தது பொன்னிறங் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கு மிருகரை
ஏதமில் ஈசன் இயங்கு நெறியது
மாத ரிருந்தோர் மண்டலந் தானே" (திருமந்திரம் - 2931)
திருமந்திரத்தில் வரும் சூன்ய சம்பாஷனை என்னும் பகுதி ஒர் அருமையான படைப்பு. ஆன்மீகக் களஞ்சியம். மெய்யுணர்வைப் பற்றிய பல நுட்பமான உண்மைகள் எளிதில் விளங்குவதற்காகத் திருமூலர் அன்றாட அனுபவங்களிலிருந்து சிறந்த கற்பனையுடன் உருவகப்படுத்தியுள்ளார். திருமூலரின் இந்த அற்புத இலக்கியப் படைப்பு பல நு £ற்றாண்டுகளாக அவர் வழிவரும் சித்தர்களின் உள்ளங்களைக் கவர்ந்துள்ளது. பின்னால் வந்த பல சித்தர்கள் மெய்ப்பொருளை விளக்க மறைமொழியை இதுபோன்றே பரவலாகக் கையாண்டு வந்தார்கள். பல தடவைகள் படித்தாலும் தெவிட்டாத சூன்ய சம்பாஷனைப் பகுதியை முழுமையாக நாம் எல்லோரும் படித்து,சிந்தித்து, அதன் உண்மையை உணர்ந்து பயன்பெறுவோமாக.