"நின் பெருமையினால் பொறுப்பவனே" அறியாமையின் காரணத்தால் உலக வாழ்க்கையே மெய்யெனக் கொண்டு, உடலையும், உள்ளத்தையும், சிந்தனைகளையும் வினைக்கு ஆளாக்கி, அறம், பாவம் என்கிற க

"நின் பெருமையினால் பொறுப்பவனே"

அறியாமையின் காரணத்தால் உலக வாழ்க்கையே மெய்யெனக் கொண்டு, உடலையும், உள்ளத்தையும், சிந்தனைகளையும் வினைக்கு ஆளாக்கி, அறம், பாவம் என்கிற கயிற்றால் கட்டுண்டு திரியும் நிலையைச் சிறுமை என்று கூறிய மணிவாசகப் பெருமான், இறைவனுடைய பேரருளால் அவன்தாள் வணங்கி, தாயினும் சிறந்த தத்துவனை எண்ணி எண்ணி, அவனுடைய பெருமையைப் பற்றி வியந்து, சிறுமை பொருந்திய தனது உயிருக்கும் ஒளியைக்காட்டி, வழியைக் காட்டி, தன்னை ஆட்கொண்ட இறைவனுடைய பெரும் கருணையை உணர்ந்து உள்ளம் மகிழ்கின்றார். நெகிழ்கின்றார். இறைவன் அளவற்ற பெருமையுடையவன். விண்ணுலகத்தில் வாழ்பவர்கள்கூட அறிய இயலாதவன். "வான நாடரும் அறியணாத c" என்றார் மாணிக்கவாசகர். எல்லோருக்கும் மேலான பெருமையுடையவன் என்றார் திருமூலர். வானுலகவாசிகள் இறைவனை அறிய முயன்றாலும், அவர்களுடைய அறிவுக்கு அப்பாற்பட்டவன்.

"ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்மிறை

....... ....... ....... ....... ........ ....... ..........

வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்"

....... ....... ....... (திருமந்திரம் - 3024)

அவன் அரியவன். மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்களாகிய வானவர்களும் அறியாத கோலம் படைத்தவன். அத்தகையவன் திருத்தில்லையில் யாவரும் காணக் கூத்தனாக விளங்குகின்றான். எல்லோரும் பார்க்கும் வகையில் வந்து என்னைக் கண்டு கொண்டான். அது எத்தனை சிறப்பு என்பார் மாணிக்கவாசகப் பெருமான்.

"மேலை வானவரும் அறியாததோர்

கோலமே!எனை ஆட்கொண்ட கூத்தனே!"

இறைவன் எல்லாக் குணங்களையும் கொண்டவன். குணங்களுக்கு அப்பாலும் நிற்பவன். எல்லா உயர்வுகளுக்கும் மேம்பட்ட உயர்வுகளை உடையவன். அத்தகையவன் என்னுடைய உள்ளத்தில் இருளை அழித்து, ஞானத்தையும்ட, பக்தியையும் அடியேனுக்கு அருளினான் என்பார் நம்மாழ்வார்.

"உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்

மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்" (திருவாய்மொழி)

இறைவனுடைய பெருமையை அவனுடைய பெரும் கருணையில் காணலாம். எல்லாவற்றையும் பொறுத்து அருளுபவன் அவன். நமது பிழைக்கு இரங்குபவன். நமது சிறுமையால் நாம் செய்யும் அற்பத்தனமான காரியங்களையும் பொறுத்து, நமக்குப்பல வாய்ப்புகளை அளித்து, அவனை நாம் நாட வேண்டும் என்கிற அவாவிற்கு நம்முடைய உள்ளத்திலே வித்திடுகின்றான்.

இறைவனுடைய பொறுமைக்குப்பல உதாரணங்கள் கூறுவதுண்டு. கருடனால் துன்புறுத்தப்பட் பாம்புகள், கருடனுக்கு அஞ்சி சிவபெருமானிடம் அடைக்கலம் புகுந்தன. சிவபெருமானும் அவற்றை அணிகளாகப்பூண்டு கொண்டார். பின்னர் தாருகாவன முனிவர்கள் வேள்வியிலிருந்து தன்பால் சினந்து வந்த பாம்புகளையும் கையால் பற்றி ஆபரணங்களாக அணிந்து கொண்டார். சிவபெருமானின் திருவுருவத்தில் எங்கும் பாம்பு. "அராப் பூண்பவனே" என்பார் மாணிக்கவாசகர்.

காரைக்கால் அம்மையாருக்குப் பாம்பென்றால் பயம் போலும். இறைவனுடைய திருமேனியில் உள்ள பாம்புகளைப் பார்க்கின்றார். "எம்பெருமானே!இந்தப் பாம்புகளை c பூணக்கூடாது. அவற்றை அகற்றி விடு. உனக்கு வேறு ஆபரணம் இல்லையா? எத்தனையோ பொன் ஆரங்கள் இருக்கின்றனவே. c விரும்பினால் அவையெல்லாம் கிடைக்காதா? பொன் ஆரம் ஒன்றை c அணிந்து கொள்ள வேண்டும். திரிபுரங்களை வென்ற உனக்குப்பொன் ஆரம் கிடைக்காதா?" என்று காரைக்கால் அம்மையார் தாய்ப்பாச உணர்வுடன் சிவபெருமானிடம் வேண்டிக்கொள்கின்றார்.

அம்மையார் மிண்டும் அந்தப் பாம்புகளைப் பார்க்கின்றார். சிவபெருமானுடைய திருமேனியில் பாதியாக இறைவி வீற்றிருக்கின்றாள். அவள் இமவானுடைய அருமைச் செல்வியாவாள். ஒரு கணமும் சிவபெருமானிடமிருந்து பிரிய மாட்டாள். இடப்பக்கத்தில் நிற்பவள். பெருமானின் திருமார்பில் உள்ள ஒரு பயங்கரமான பாம்பு இறைவி இருக்கும் பக்கம் நகருவதைக் காண்கின்றார். உள்ளத்திலே ஒரு பெருத்த அச்சம் தோன்றுகிறது. இவ்வாறு பாம்பு நகர்ந்து வருவதை இறைவிக்கத் தெரிவிக்க வேண்டுமே. இறைவியோ அந்தப் பாம்பைப் பார்க்காததுபோல் இருக்கின்றாள். பெருத்த தாயன்புடன் காரைக்கால் அம்மையார் மக்களை நோக்கி "தகுதியுடையவர்கள் இதைப் பற்றி ஏதாவது செய்யுங்கள். பாம்பு மேலும் நகர்ந்தால் உமையம்மைக்கு என்ன நேரிடும் என்று தெரியவில்லையே. நினைத்தாலே பயமாக இருக்கின்றது" என்கிற உணர்வில் பேசுகிறார்.

"தகவுடையார் தாம் உளரேல் தார்அகலம் சாரப்

புகவிடுதல் பொல்லாது கண்டீர்!- மிகஅடர

ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்

சார்ந்திடுமேல் ஏபாவந்தான்!" (அற்புதத் திருவந்தாதி)

அம்மையார் பாம்பைப் பற்றி பயப்பட வேண்டிய அவசியமில்லை. அம்மையார் அன்பு மேலிட்டு இவ்வாறு பாடுவது இறைவனுடைய திருவிளையாடலை நமக்கு எடுத்துக்காட்டுவதற்குத்தான். உமையம்மை அருளுக்கு இருப்பிடம். கருணை வடிவம். சிவபெருமானின் சக்தி அம்சம். இறைவனிடம் அடைக்கலம் புகுந்த எல்லா உயிர்களும் எம்பெருமானின் அருள் பெற்று உயர்வுடன் வாழலாம் என்பதே பொருள்.

இறைவனுடைய கருணையே அவனது பெருமைக்கு அடையாளம். அவனுடைய கருணைக்கு வரம்பு கிடையாது. தன்னைச் சார்ந்தவர்களுக்கெல்லாம் புகலிடமாய் விளங்குகின்றான். பாம்புக்கும் திங்களுக்கும் எப்போதுமே பகை. பாம்பும் திங்களும் இயற்கையால் மாறுபட்டவை. பாம்பு நடுக்கத்தைத் தருகிறது. சந்திரன் மகிழ்ச்சியைத் தருகின்றான். சந்திரனிடம் இருப்பது அமுதம். பாம்பு விஷத்திற்கு இருப்பிடம். இயற்கையில் இவை இரண்டும் வெவ்வேறு இடங்களில் இருப்பவை. ஆனால், இவை இரண்டும் ஓரிடத்தில் இருப்பது அருமை. அந்த அருமையான காட்சிக்குக் காரணம் சிவபெருமான். பாம்பையும் திங்களையும் இறைவன் தன்னுடைய செஞ்சடையிலே வைத்திருக்கின்றான். அவன் சடையில் ஏறுவதற்கு முன்பு அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று பகைத்தன. சடையில் ஏறிய பிறகு இரண்டும் பகை ஒழிந்த சிவபெருமானுடைய சடைக்கு அணியாகத் திகழ்கின்றன. ஞானசம்பந்தப் பெருமானுக்கு இந்தக் காட்சி பெருத்த வியப்பைத் தருகின்றது.

"சொலீர்.... ..... ....

பின்னு செஞ்சடையிற் பிறை பாம்புடன் வைத்ததே"

பாம்புக்கும் திங்களுக்கும் தஞ்சம் அளித்த பெருமான் கங்கையையும் தனது சடையில் தாங்கிக் கொள்கின்றான். கங்கை வானுலகத்தில் பரந்து, விரைந்து, ஆழ்ந்து, மிக்க ஆராவாரத்தோடும், மிடுக்கோடும் சுழன்றுகொண்டு இருந்தது. அலைகளோடு சீறிக்கொண்டு, விண்ணுக்கு அடங்காமல் செருக்கோடு உலவி வந்த கங்கையைச் சிவபெருமான் தனது சடையில் தாங்கி, அதன் வேகத்தை அடக்கி, பகீரதனுடைய தவத்திற்கு இரங்கி, பூமியின் தாங்கும் சக்திக்கேற்ப கங்கையின் நீரைப்பூமிக்கு அளித்தான். இறைவனுடைய பெரும் கருணைக்கு இதுவும் ஓர் உதாரணம். "பொங்கு கங்கைச்சடைச் செருப்பவனே!" என்றார் மாணிக்கவாசகர். கங்கை பெட்டிப் பாம்பைப் போல அடங்கி விட்டது. இருந்தாலும், காரைக்கால் அம்மையாருக்கு, அவருடைய தாயுள்ளத்திலே ஒரு பயம் தோன்றுகிறது. இறைவனோ கங்கையைத் தலையில் வைத்திருக்கின்றான். கங்கையானவள் இன்றைக்குக்குளம் போல அமைதியாக வீற்றிருக்கின்றாள். ஆனாலும், அவளுடைய செருக்கு முழுமையாக நீங்கிற்றா என்று தெரியவில்லை. சிவபெருமானுடைய சடை கங்கைக்குக் கரையாக இருக்கின்றது. அந்தக் கரைக்குள்ளேயே பாம்பையும், பிறையையும் இழுத்துக் கொண்டு, அங்குமிங்கும் ஓடுகின்ற கங்கை ஒருவேளை வெள்ளம் பெருகி, சடைக்கு மேலாக வளர்ந்து நீர் பெருக ஆரம்பித்தால் இறைவன் என்ன செய்வானோ என்று வியக்கின்றார் காரைக்கால் அம்மையார். சிறுகுழந்தைக்கு சொல்லுவதுபோல, இந்தப் பொல்லாத கங்கையை நம்பாதே என்கின்றார். ஏன் இவ்வாறு செய்கின்றாய் என்று இறைவனிடம் கேட்கின்றார்.

"கூறுஎமக்கு ஈது, எந்தாய்!குளிர்சடையை மீது அழித்திட்டு

ஏற மிகப்பெருகின் என்செய்தி? - YP

விழித்துஊரும் வாள்அரவும் வெண்மதியும் ஈர்த்துத்

தெழித்துஓடும் கங்கைத் திரை". (அற்புதத் திருவந்தாதி)

"நங்கையைப் பாகம் வைத்தார், கங்கையைச் சடையுள் வைத்தார். கங்கை மணவாளன்". உமையாளுக்குத் தன்னுடைய இடப்பாகத்தை அளித்திருந்தார். அவர் கண்டால் கோபம் கொள்வாரோ என்று எண்ணிச் சிவபெருமான் கங்கை தேவியைத் தனது சடைமுடி மேல் வைத்துக் கொண்டிருக்கின்றான் போலும் என்று கருவூர்த் தேவர் வியக்கின்றார்.

"... ... கொடியிடை காணில்

கொடியள்என் (று) அவிர்சடை முடிமேல்

கங்கைகொண் டிருந்த கடவுளே!கங்கை

கொண்டசோ ளேச்சரத் தானே". (திருவிசைப்பா)

இதுவே அம்பிகையின் ஊடலக்குக் காரணமாகிறது. அவருடைய ஊடலைத் தீர்க்க வேண்டியது இறைவனுடைய பொறுப்பல்லவா!இறைவி அருள்மயமானவள். அருள் என்றுமே கோபிக்கலாகாது. ஆகவே, இறைவன் பிராட்டியாருடைய ஊடலைப் போக்க வேண்டும். இறைவன் என்ன செய்கின்றான்? அருள்மயமான தேவியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகின்றான். அவள் சிலம்புகளை அணிந்திருக்கின்றாள். சிலம்படியாள். தேவியின் திருவடிகளில் அழகேற்றுவதற்காகச் செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்டுள்ளது. இறைவன் தேவியின் திருவடிகளை வணங்கும்பொழுது, அந்தக் குழம்பு அவனுடைய திருமுடியிலே படுகின்றது. காரைக்கால் அம்மையார் இந்தக் காட்சியைக் கற்பனை செய்து கொள்கின்றார். இறைவனுடைய சடை முடிக்கு இயல்பாகவே சிவப்பு நிறம் உண்டு. அந்தச் சிவப்பு நிறத்திற்குக் காரணம் காட்டுகின்றார் காரைக்கால் அம்மையார். தேவியாருடைய திருவடிகளிலே பூசப்பட்ட குழம்பின் சிவப்பே இறைவனுடைய திருமுடியிலே பட்டதுபோலும் என்று எண்ணிக் கொள்கின்றார். இந்தச் சிவப்பு நிறத்தால் இறைவனுடைய திருமுடி அழகுபெற்று, நலம் பெற்று விளங்குகின்றது. ஆனால், இந்தச் சிவப்பு நிறம் தேவியாருக்கும் இறைவனுக்கும் நடுவே நிகழ்ந்த ஊடல் நிகழ்ச்சியை அம்பலப்படுத்திவிடுகின்றது!

"சிலம்படியான் ஊடலைத் தான்தவிர்ப்பான் வேண்டிச்

சிலம்படிமேல் செவ்வரத்தம் சேர்த்தி - நலம்பெற்று

எதிராய செக்கரினும் இக்கோலம் செய்தான்

முதிரா மதியான் முடி". (அற்புதத் திருவந்தாதி)

இறைவனுடைய கருணைக்கு எல்லையே இல்லை. அம்மையின் அருட்சக்தி மக்களுக்கு நலம் அளிக்க வேண்டி இறைவன் தேவியினுடைய பாதங்களிலும் விழுந்து, வணங்கத் துணிகின்றான். அதுமட்டுமா? நங்கையாளின் ஊடலைத் தீர்க்க இறைவன் சாம வேதத்தைப் பாடினான். பாடலோடு ஆடினான். இவ்வாறு செய்து பெருமாட்டியின் ஊடலைத் தீர்க்க விரும்பினான். பாடலும், ஆடலும் இறைவனுக்குக் கைவந்த கலை, அம்மைக்கும் அப்படியே. சாமர்த்தியமாக இறைவன் சாம வேதத்தைப் பாடியும், பாடிய பாணியாலே ஆடியும் தேவியினுடைய ஊடலைத் தீர்த்தான். தேவியின் ஊடல் தீரவில்லையென்றால் இறைவனுக்கு அமைதி இல்லை. இறைவனுக்கு அமைதி இல்லையென்றால் உயிர்களுக்கு இன்பம் இல்லை. உயிர்களுக்கு இன்பம் அளிக்க வேண்டி இறைவன் இவ்வாறு செய்கின்றான். திருநாவுக்கரசர் பெருமான் இறைவனுடைய கருணையை நினைத்து உள்ளம் நெகிழ்கின்றார்.

"குடினார் கங்கை யாளைச்

சூடிய துழனி கேட்டுஅங்கு

ஊடினாள் நங்கை யாளும்;

ஊடலை ஒழிக்க வேண்டிப்

பாடினார் சாம வேதம்

பாடிய பாணி யாலே

ஆடினார், கெடில வேலி

அதிகைவீ ரட்ட னாரே".

இறைவனுடைய ஆற்றல் எல்லையற்றதாக இருக்கலாம். அவனுடைய சாதனைகள் கணக்கிலடங்காமல் இருக்கலாம். அவனுடைய அருளாலும் கருணையாலும் விண்ணோர் மகிழ்வு எய்தலாம். இவற்றால் எனக்கு ஆவது என்ன? என்னுடைய சிறுமையைப் பொறுத்துக் கொள்வானா? என்னுடைய பிழைக்கு இரங்குவானா? இறைவனுடைய கருணைக்கு நான் தகுதியுடையவன் என்று எவ்வாறு முடிவு செய்து கொள்வது? இறைவன் அருளால் எனக்கு நலம் பிறந்தால் அல்லவா அவனுடைய பெருமையை நான் உணர்ந்து கொள்ள முடியும். அவ்வாறு எனக்கு ஒரு நலமும் கிட்டவில்லையென்றால் இறைவனுடைய பெருமையைப் பற்றிச் சாத்திரங்களும், தோத்திரங்களும் பேசி என்ன பயன்? இவ்வாறெல்லாம் சிறியோராகிய நாம் நினைத்துக் கொள்ளலாம். நமது அகக்கண் திறந்து, இறைவனுடைய பெருமையைக் கண்டுகொள்ளத் தயங்கலாம். அருளாளராகிய மணிவாசகப் பெருமானுடைய உள்ளம் அத்தகைய சிந்தனையில் ஈடுபடவில்லை. அதுபோனற் நினைப்பே அவருக்கு எழவில்லை.

சாதாரணமாக இருந்தவன் நான். சிறுமை பொருந்தியவன். வெறுப்பனவே செய்பவன். பொய்யெல்லாம் மெய்யென்று மயங்கி நின்றவன். முக்தி நெறி அறியாத மூர்க்கரோடு இடைவிடாது பற்றிப் பழகி வந்தவன். சாதி, குலம், பிறப்பு எனும் சுழிபட்டுத் தடுமாறுகின்றேன். இந்திரியங்கள் வசப்பட்டு இறப்புக்கும், பிறப்புக்கும் காரணமாகின்ற வினைகளை அஞ்சாமல் செய்யும் தன்மை உடையவன். வைத்த GF, பெண்டிர், மக்கள், குலம், கல்வி என்று மாய உலகின் கலக்கத்தால் அறிவிழந்த நிலையில் இருந்தேன். ஆனால், அவற்றையெல்லாம் c பொருட்படுத்தவில்லை என்றார் மாணிக்கவாசகர். அருளாளன் என்னுடைய பிழைக்கு இரங்கினான். மாய வலையில் கிடந்து புரளாமல் இருக்க அருளினான். "நானேயோ தவம் செய்தேன், சிவாயநம எனப் பெற்றேன்" என்றார். திருவருள் அமுதம் அவரது உள்ளத்தில் ஊறி தித்தித்தது. பிறவிக் கடலிலிருந்து என்னை விடுவித்து, மாறாத பேரின்பக் கரையிடம் சேர்த்தது. "நின் திருவருளால் என் பிறவியை வேரறுப்பவனே!" என்கிறார் மணிவாசகர்.

உனது மென் கழலைக் காட்டினாய். சித்த மலத்தை அறுத்தாய். சிவமாம் தன்மையைப் பெற வைத்தாய். என்னை ஆண்டு கொண்டாய். c ஓர் பெரும் பெருமான். என்னைத் துன்பக் கடலிலிருந்து மீட்டு, உன்னுடைய திருவடிகளிலே நிலைபெற்றிருக்கச் செய்து, எனது உள்ளத்தை உனது உடைமையாக்கிக் கொண்டு என்னைப் பித்தனாக்கி விட்டாய் என்கிறார் மாணிக்கவாசகர்.

"பெரும் பெருமான், என் பிறவியை வேர் அறுத்துப்

பெரும் பிச்சுத் தரும் பெருமான்." (திருவாசகம் - அடைக்கலப்பத்து - 408)

இறைவன் அருளாளல் பிறப்பும் இறப்பும் ஏற்படுகின்றன. அந்த அருள் உயிரைப்பாசத்தில் இடுகிறது. உடல், பொருள், கருவி கரணங்களுடன் கூடி அந்த அருளாலே உயிரும் வளருகிறது. அருளே பாசத்தையும் நேசத்தையும் உயிருக்குத் தந்து, உயிரின் உய்வுக்காகப் பல பிறவிகளையும் உயிருக்கு அளிக்கிறது. அருளே முத்தியையும் தருகிறது. பிறவிக்கு வித்திடுவது ஆணவமும், கன்மமும், மாயையாகிய உலகமும், உலகத்தின் பொருட்களும் ஆகும். பிறவியின் பயன் இதை உணர்ந்து, இதற்கு மூல காரணமாக இருக்கின்ற அருளின் தன்மையை உணருவதே ஆகும். இந்த நிலை வரும் வரை ஓர் அறியாமை உயிரினூடே பரவி நிற்கின்றது.

அந்த அறியாமையைப் போக்குவது இறைவனுடைய அருளே. திருவருளின் அருமையை நினைந்து வியக்கும் மணிவாசகப் பெருமான். தனக்கு அறிவைக் கொடுத்து, உலகப் பொருட்கள் மீது உள்ள பற்றினை நீக்கி இறைவன் தன்னை ஆண்டு கொண்ட பெருமையை ஆனந்தமயமான ஒரு அனுபவமாகப் பெருமான் தன் மனத்துள்ளே கொள்கின்றார். இறைவன் மக்களுக்குப்பல நன்மைகளைச் செய்கின்றான். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலான நன்மை இறைவன் உயிரை வினைக்கடலில் அகப்பட்டுள்ள நிலையிலிருந்து மீட்டுப் பிறவா நெறியைத் தருவதே ஆகும். "பிறவா நெறி தந்த பேரருளாளன்" என்கிறது திருமந்திரம். வினைக்கடலைக் கடந்தவர்கள் இறைவன்தாள் சேருகின்றார்கள். அவர்களுக்கு இடரேதும் இல்லை. பிறவாத பேரின்பப் பெருவாழ்வு அவர்களுக்குக் கிடைக்கின்றது. இத்தகைய அனுபவம் உயிருக்குக் கிட்டுகிறது என்றால் அது இறைவனுடைய பெருமையால்தான் என்கிறார் மாணிக்கவாசகர். இறைவன் வினை தீர்ப்பவன் மட்டுமல்லன். நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றான். நம்மை அறியாமலேயே நம்மில் புகுகின்றான். பாரெங்கும் சுற்றிச் சென்று அவனைத் தேடி அடைய முற்பட வேண்டியதில்லை. பிரம்மனும் திருமாலும் இவ்வாறும செய்தால் இறைவனை அடையலாம் என்று எண்ணினார்கள். அவர்கள் வெற்றி பெறவில்லை. கல்வியாலும் செல்வத்தாலும் இறைவனைப் பெற முடியாது. ஆனால், அன்பினால்

பெறலாம். நமது உள்ளத்தை அவனக்குத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளத்திலே அழுக்கு நிரம்பி நிற்கும்பொழுது, அவனையும் அங்கு வைத்துக்கொள்ள வேண்டுமென்று முயன்றாலும் பயினல்லை. வேண்டாதவர்கள் மனத்தில் அவன் நிற்க மாட்டான். ஆனால், "வினையேன் அழுதால் பெறலாமே!" என்கிறார் மாணிக்கவாசகர். நம்முடைய ஆணவத்தை நீக்கி, நம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனுக்கே நம்மை உடைமையாக்கிக் கொண்டு, "நீயலால் பிறிது மற்றொன்றும் இல்லை" என்கிற நினைப்பு உள்ளம் முழுவதும் படர்ந்திருக்கும் பொழுது அவனைப் பெறலாம். இறைவன் பெரும் ஞானச்சுடர். சாதாரண உயிரும் அறியும் சக்தியைப் பெற்றுள்ளது. அந்தச் சக்தியால் இறைவனைக் கண்டுகொள்ளலாம். இதற்காகப் பெரிய சாதனைகள் தேவையில்லை. மந்திரமும் சடங்குகளும், தவமும் யோகமும் தேவையில்லை. அன்பொன்றே போதும் என்கிற நினைப்பில் நிற்பவர் மாணிக்கவாசகர். இது பற்றற்ற அன்பு. மாறிலாத அன்பு. பரம்பொருளிடம் வைக்கும் நீங்காத அன்பு. இந்த அன்பு வேறொன்றையும் எதிர்பார்ப்பதில்லை. தன்னுடைய குறைகளை நினைந்து நினைந்து, அந்தக் குறைகளைத் தீர்க்கும் குறைகளை நினைந்து நினைந்து, அந்தக் குறைகளைத் தீர்க்கும் ஒரே துணையாக இறைவனை நம்பி, அந்த இறைவனுக்குத் தனது உடலையும், உயிரையும், உடைமைகளையும் அர்ப்பணித்து, அந்தத் தியாகத்தில் பேரின்பத்தைக் காண்கிறது. விண்ணோர்கள் தேடித் திரிந்து காண முயலும் ஒரு பரம்பொருள் எளியவனான தன் உள்ளம் புகுந்து, அங்கே நிற்கும் பாங்கினைக்கண்டு மணிவாசகப் பெருமான் உவகை கொள்கிறார். "மலரோன், நெடுமால் அறியாமல் நின்ற அரும்பெருமான்!என் மனத்தின் உள்ளே வரும் பெருமான்!" என்றார் மணிவாசகர். இதுகாறும் அழுக்கு நிறைந்த மனமானது அழுக்கினை நீக்கி, தூய்மை பெறும்பொழுது, இறை அருள் தானாகவே உள்ளத்தில் வந்து கலக்கின்றது. "என்போல்வார் சிந்தையினும் இங்குற்றான், காண்பார்க்கு எளிது" என்பார் காரைக்கால் அம்மையார்.

"நினைப்பவர் மனத்துளான்" என்றார் திருஞானசம்பந்தர்.

என்னை இறைவன் ஆண்டு கொண்டான். என்னைத் தனது உடைமையாக்கிக் கொண்டான். ஆனால், நானோ சிறியவன். என்னிடமிருந்து அவன் பெறுவது போற்றத்தக்கதன்று. நான் அவனுக்கு அளிப்பது சிறிதாயினும் அதற்குக் கைம்மாறாக இறைவன் தன்னையே எனக்குத் தந்தருளினான். என் உள்ளத்திலே புகுந்து கொண்டான். என்னுடைய உணர்வுகளைத் தெய்வமாக்கினான். என் அகம் புகுந்தான். இப்பொழுது சொல்லுங்கள் யார் சாமர்த்தியசாலி என்பார் மாணிக்கவாசகர். சதுரப் பெருமான் என்றார். இறைவனைவிடத்தான் சாமர்த்தியசாலி என்று பெருமிதம் கொள்கின்றார். சிறியவனான என்னைக் கொண்டதற்குப் பதிலாக c உன்னையே தந்துவிட்டாய். அந்தமிலாத ஆனந்தத்தை எனக்கு அளித்தாய். எனது சிந்தையே கோயில்கொண்டாய். உடல் இடம் கொண்டாய். ஆனால் என்னிடமிருந்து c ஒன்றும் பெறவில்லையே. நான் எவ்வாறு உனக்குக்கைம்மாறு செய்வேன் என்கிறார் மணிவாசகப் பெருமான்.

"தந்தது, உன் தன்னை;கொண்டது, என் தன்னை;

சங்கரா!ஆர்-கொலோ, சதுரர்?

அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம்; பெற்றேன்;

யாது c பெற்றது ஒன்று, என்பால்?

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்!

திருப்பெருந்துறை உறை சிவனே!

எந்தையே!ஈசா!உடல் இடம் கொண்டாய்;

யான் இதற்கு இலன், ஓர் கைம்மாறே!"

(திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - 395)

உயிர்களின் சிறுமையைப் பொருட்படுத்தாது அவற்றை ஏற்றுக் கொள்வது இறைவனுடைய இயல்பாகும். இதை முற்றிலும் உணர்ந்தவர் மாணிக்கவாசகப் பெருமான். அவருடைய அனுபவத்தின் சிகரமாக "அடைக்கலப்பத்து" திகழ்கின்றது. அதைப் படித்து அனுபவித்து மகிழ்வோமாக!