"என்னை ஆண்டு கொண்டான்" மூன்று மாதங்களுக்குள் இரண்டு பெரிய அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு, பிணியும், வலியும் என்னை வருந்திக் கொண்டிருந்த நேரம், சிந்தனைகள் எ

"என்னை ஆண்டு கொண்டான்"

மூன்று மாதங்களுக்குள் இரண்டு பெரிய அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு, பிணியும், வலியும் என்னை வருந்திக் கொண்டிருந்த நேரம், சிந்தனைகள் எல்லாம் உடல் உபாதையைப் பற்றியே, மனதை மாற்றி, எண்ணங்களை இறைவன்பால் வைக்க முயன்றும் இயலவில்லை. உடலின் உபாதை உள்ளத்தை நிரப்பி, வேறொரு பொருளையும் பற்றிச் சிந்திக்கவிடாமல் தடை செய்தது. அன்பர் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். திருவாசகப்பிரதி ஒன்றை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அது அண்ணாமலப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட நூல் திரு நீ.கந்தசாமிப்பிள்ளை அவர்கள் அந்த நூலின் பதிப்பாசிரியர். பழைய பதிப்பு பக்கங்கள் கிழிந்திருந்தன. படுக்கையிலே கிடந்து வேறொன்றும் செய்ய இயலாத நேரத்தில் திருவாசகத்தைச் சற்று படித்தாவது எனது துன்பத்தைப் போக்கிக்கொள்ளலாம் என்கின்ற எண்ணம் முதல் தடவையாக எழுந்தது. பெருத்த இன்னல்களுக்கு என்கின்ற எண்ணம் முதல் தடவையாக எழுந்தது. பெருத்த இன்னல்களுக்கு ஒருவர் ஆளாக்கப்படும்போது, வேறு வழி தெரியாமல் இறைவனை நினைந்து, தன்னைக் காப்பாற்ற வேண்டுமென்று வருந்தி வேண்டிக்கொள்வது மனித இயல்பு என்று சொல்லுவதுண்டு. ஆனால், அந்த நிலையில்கூட நான் இல்லாத தருணம் அது. சற்று பிராயசைப்பட்டு மனதை ஒருவழிப்படுத்தி, எனது கைக்கு வந்த திருவாசகப் பிரதியின் பதிப்பாசிரியரின் முன்னுரையைப் படிக்கத் தொடங்கினேன்.

முன்னுரையின் ஒரு பகுதியை அப்படியே தருகிறேன். அதைச் சுருக்க விரும்பவில்லை. அதிலுள்ள உணர்வுகள் அத்தகையவை. அதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை.

"மற்றொரு நிகழ்ச்சி. என் நண்பர் ஒருவரைக் குறித்தது, நண்பர் என்று சொல்லுவதிலும், ஆசிரியர்கள் ஒருவர் எனக்கூறுவதே பொருத்தமாகும். இவர் எனக்கு இலத்தீன் மொழி கற்பித்தவர், கத்தோலிக்க கிறிஸ்துவ சமயத்தினர், அழுத்தமான சமயப்பற்றும் நெறியும் உடையவர். வழக்கறிஞர், நான்காம் வகுப்புக்கு மேல் தமிழ்ப் பயிலாதவர், இலத்தீன், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வல்லவர். இப்போது இருந்தால் இவருக்கு வயது எண்பத்து நான்கு இருக்கலாம். நாற்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நாள் நீதிமன்றத்தில் வழக்கு உரைத்து உடலும் மனமும் அலுத்து மாலையில் வீட்டிற்கு வந்தார். நான் எப்போதும் மாலைக்காலத்தின் அவரிடம் இலத்தீன் படிப்பது வழக்கம். உடைகளை மாற்றிக் கொண்டு வந்து என்முன் நின்றார். "தம்பி, என் வாழ்க்கை ஆண்டவனைத் தூற்றுவதிலேயே கழிகிறது. என்ன செய்வது, மனம் அமைதியடையவில்லை, இச்சொற்கள் தான் ஆறுதல் "a broken and a contrite heart O God thou will not despise" (Psalms 51 - 57) என்று சொல்லிக் கொண்டு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

பின்னர், அவ்விவிலிய நூல் சொற்றொடரின் அருமையை எல்லாம் எடுத்துக்கூறி" பார், இந்த ஒரு சிற்றொடர் உள்ளத்தை எவ்வாறு அமைதி செய்கின்றது. இத்தகைய அரிய வாசகங்கள் நம் தமிழில் இல்லையே" என்றார். நான், உடனே அவர் கூறிய விரிவுரைகளுக்கெல்லாம் பொருத்தமானதும், இனிய எளிய சொற்களாலானதுமான "ஏசினும், யான் உன்னை ஏத்தினும், என் பிழைக்கே குழைத்து வேசறு விடுதி கண்டாய்" என்னும் திருவாசகத் தொடரைக் கூறி, திருவாசகம் என்றால் என்ன என்பதையும், மாணிக்க வாசகர் யார் என்பதைப்பற்றியும் விளக்கமாகத் தெரிவித்தேன். மனம் மகிழ்ந்தார். "அருமையாக இருக்கிறது, இதுகாறும் தெரிந்து கொள்வதற்கியலாது போயிற்று. இனியும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பில்லை. அதனால் குறையில்லை, c ஒவ்வொரு நாளும் திருவாசகத்தில் ஒரு பாட்டை வாசித்துச் சொல்" என்று சொன்னார். அவ்வாறே நானும் சில நாள் சொல்லி வந்தேன். சில ஆண்டுகள் கழிந்தன. அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். காணச் சென்றேன், ஆவி அகத்ததோ புறத்ததோ என்ற நிலையில் படுத்திருந்தார். என்னைப் பார்த்ததும்,"தம்பி அதிகம் பேசுவதற்கில்லை. நீயும் என் நலத்தைப் பற்றி ஒன்றும் கேட்க வேண்டாம். காலத்தை வீண்போக்காது திருசாவகத்தில் ஒன்று சொல்" என்றார். நானும் மிகவும் தளர்ந்த குரலில்

மாவடு வகிர் அன்ன கண்ணி பங்கா!நின் மலர் அடிக்கே

கூவிடுவாய்? கும்பிக்கே இடுவாய்? நின் குறிப்பு அறியேன்;

பா இடை ஆடு குழல் போல், கரந்து பரந்தது, உள்ளம்,

ஆ, கெடுவேன்;உடையாய் அடியேன் உன் அடைக்கலமே,

என்ற செய்யுளைப் பாடினேன், "போதும், அந்தத் தாளை எடுத்துப் பெரிய எழுத்துக்களில் 'மலர் அடிக்கே கூவிடுவாய் அடியேன் உன் அடைக்கலமே' என்பதை மட்டும் எழுதிக் கொடு" என்றார் அவ்வாறே செய்தேன். அத்தாளை வாங்கி அருகே வைத்துக் கொண்டார். ஒருமுறை என்னைப் பார்த்தார். "c போகலாம். இனி வரவேண்டியதும் இல்லை" என்று கூறிவிட்டுப் கண்ணை மூடிக் கொண்டார். இனி எழுத என் மனம் வருந்துகின்றது. மறுநாள் அவர் இல்லை."

மேற்கண்ட செய்யுள் மணிவாசகப் பெருமானின் அடைக்கலப் பத்து எனும் பாடலில் வருகிறது. பக்கங்களைத் திருப்பி, அந்தப் பாடலை அடைந்து படிக்கத் தொடங்கினேன். படிக்கப் படிக்க மணிவாசகப் பெருமானுடைய அருள் அனுபவத்தின் எல்லையற்ற அகலமும், ஆழமும், அதற்குக் காரணமாக இருந்த இறைவனின் பெருமையும் என் உள்ளத்தில் எங்கே ஓரிடத்தில் பதியத் தொடங்கின.

"ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை

ஆரறி வார்இந்த அகலமும் நீளமும்" (திருமந்திரம் - 95)

என்றார் திருமூலர்.

மணிவாசகப் பெருமான் இந்த அகலத்தையும், நீளத்தையும், ஆழத்தையும் தனதாக்கிக் கொண்டவர். எனவே, அந்த ஒப்பற்ற அருளாளர் "அடியேன் உன் அடைக்கலமே" என்று பாடினால் இறைவனும் அவரும் விவரிக்கவொண்ணாத

நிலையில் ஒன்றிப் போனார்கள் என்பதே பொருளாகும். அடியேனைப் போகின்றவர்கள் தொலைதூரத்தில் நின்று அந்தக் காட்சியைப் பார்க்க முயலுபவர்கள். மாணிக்கவாசகர் சிவனருள் பெற்றார். "சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்" (சிவபுராணம்) . சிவனிடம் அபயம் புகுந்தார். "அடியேன் உடையாய் உன் அடைக்கலமே". தன்னை இழந்தார். "கொண்டது என்தன்னை". இறைவன் அவரை ஆட்கொண்டான். தன்னையும் காட்டிக் கொண்டான். பிறவிக் கடலிலிருந்து அவரை மீட்டுக் கொண்டான்.

"காட்டாதன எல்லாம் காட்டி, பின்னும்

கேளாதன எல்லாம் கேட்பித்து, என்னை

மீட்டேயும் பிறவாமல் காத்து, ஆட்கொண்டான் -

எம்பெருமான் செய்திட்ட விச்சை - தானே!" (திருச்சதகம்)

இது என்ன விந்தை? நம்மைப் போன்றவர்கள் உலக விஷயங்களில் சிறிய சாதனை புரியும்முன்னரே பெருமை கொள்கிறோம். இறுமாப்பு அடைகிறோம். மக்கள் தம்மைப் போன்றவர்கள் இல்லையென்று உலகெங்கும் பறைசாற்றிக் கொள்கிறார்கள். எந்தச்சிறிய சாதனைக்கும் மூல காரணமாக இறை அருள் வேண்டுமென்பதை உணர்ந்து கொள்வதில்லை. அந்த நேரங்களில் இறைவனைப் பற்றிய எண்ணமும் தோன்றுவதில்லை.

மணிவாசகப் பெருமான் ஒரு ஒப்பற்ற அருளாளர் அல்லவா. அவருடைய உள்ளத்திலே தோன்றும் எண்ணங்கள் வேறு. தேவர்களும் அறியாத தேவ தேவன் தன்னை அடியனாக்கி, அச்சம் தீர்த்து, ஆட்கொண்டு உள்ளம் புகுந்த பாங்கினை எண்ணிப் பார்க்கின்றார். இறையமுதம் ஊறிய உள்ளம் கரைகின்றது. தன்னையும் ஒரு பொருளாகக் கருதி இறைவன் ஆட்கொண்ட தன்மையைப் பற்றி நினைந்து வியக்கின்றார். ஏன்? தனது சிறுமை, இறைவனது பெருமை ஆகிய இரண்டும் அவருடைய எண்ணங்களில் மாறி மாறித் தோன்றுகின்றன. "சிவன் எம்பிரான் என் சிறுமை கண்டும் என்னை ஆண்டு கொண்டான்" என்று கூறிக்கொண்டு, தனக்குத் தகுதியில்லாதபோதிலும், இறைவன் தன்னை ஆட்கொண்ட பெருமையை மீண்டும் மீண்டும் நினைந்து பார்க்கின்றார். சீவர்களின் சிறுமையைக் கண்டும் அவர்களை ஆட்கொள்ளுதல் இறைவனின் இயல்பாகும். ஆனால், தனது சிறுமையை உணர்ந்து கொள்வது சீவர்களின் இயல்பாகாது. சிவனது அருள் பெற்ற பின்னரே உயிரானது இந்த நிலையை அடைய முடிகின்றது. மணிவாசகப் பெருமான் இறைவனுடைய அருளாற்றலைத் தன்னுள் உணர்ந்து கொண்ட காரணத்தினால், தன்னைச் சுட்டெரித்துக் கொண்டு இறை ஒளியில் கலந்து, தனது உண்மை நிலையைத் தெரிந்து கொண்டு இறைவனுக்கு எவ்வாறு நன்றிக்கடன் செலுத்துவது என்று வியந்தவண்ணமாகத் தனது சிறுமையை வலியுறுத்துகின்றார்.

சிறுமை என்றால் என்ன? "வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை" என்றார் மணிவாசகப் பெருமான். விரும்பத்தகாதவற்றைச் செய்யத் துணியும் சீவர்களின் இயல்பினை இவ்வாறு குறிப்பிடுகின்றார். உடலைச் சார்ந்த புலன்களும், உட்கருவிகளும் எல்லா வேளைகளிலும் உள்ளத்தைப் புறத்தே அழைத்துச் செல்லுகின்றன. புலன்வழி சார்ந்து, பொருள்களையும், இன்பத்தையும் விரும்பி அவற்றில் ஈடுபடுவதே உயிரின் இயல்பாகத் தோன்றுகிறது. உடல் இயற்கையின் வலிமை பெரிது. அதனால் ஏற்படும் ஆசாபாசங்கள் மிக்க வலிமையுடன் உயிரை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்துகின்றன. மண், பெண், பொன் என்று உருவகம் கொடுத்து மக்கள் தங்களது சக்திகள் முழுமையும் வீணாகும்வண்ணம், இன்பங்களையும், துன்பங்களையும் மேலும் மேலும் சேர்த்துக் கொள்கின்றனர். உண்மையில் புலன்கள் மக்களுக்கு வஞ்சனை புரிந்து வருகின்றன என்பதை உணர்ந்து கொள்வதில்லை.

"மாயக் குழியில் விழுவர் மனை மக்கள்

பாசத்தில் உற்றுப்பதைக்கின்றவாறே"

என்றார் திருமூலர். உடலும் அதனைச் சார்ந்த அனுபவங்களுமே உயிரைத் தன்வசப்படுத்தி, அடிமையாக்கி, வேறொன்றையும் அறியவிடாத வகையில் கட்டுப்படுத்திவிடுகின்றன. புறக்கண்களே பார்க்கின்றன. அகக்கண்கள் மூடிக்கிடக்கின்றன. அந்த நிலையில் செய்வதெல்லாம் வெறுப்பனவே ஆகும்.

எனது அற்பத்தனத்தால் வெறுப்புண்டாகும்படி காரியங்களைச் செய்து வருகின்றேன் என்கிறார் மாணிக்கவாசகர். மாசு பட்ட மனமும், பரம்பொருளை அறியாத கல்வியும் தகாதவற்றைச் செய்ய ஏதுவாக நிற்கின்றன. நான் என்கிற உணர்வு இறை அனுபவத்திற்குத் தடையாகிறது. மனமோ துன்பக்கடலில் அகப்பட்ட தோணிபோல் தவிக்கிறது. வினைகள் கடல் போல் வளர வளரப் பல பிறவிகள் எடுக்கவும் நேரிடுகிறது. உலகக்காட்சியில் ஈடுபட்டுத் தவிப்பதை "வெகுளி வலையில் அகப்பட்டுப்புரள்வேனை" என்கிறார் மணிவாசகர். புறப்பற்றுகளில் ஆழ்ந்து கிடப்பதற்குக் காரணம் எனது என்கின்ற உணர்வு அந்த உணர்வினை நீக்காமல், பிறவிப் பெருங்கடலில் மூழ்கி, வினைகளைக் கூட்டி, மேலும் மேலும் துன்பப்படுவதை "வன்மத்து இட உடைந்த தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன்" என்றார். அறியாமை இருள் பரவியிருக்கும் உள்ளம் இறைவனைக் காண இயலாமல் தன்னைத்தானே அழித்துக் கொள்கின்றது. இந்த நிலையில் புரியும் செயல்களெல்லாம் வெறுப்பனவே ஆகும்.

உயிருக்கு நன்மை தருவதை பின்பற்றாமல் தீமையைக் கொண்டு சேர்க்கும் காரியங்களிலே ஈடுபடுவதே சிறுமையாகும். இந்தத் தீமைகளால் உயிரானது அல்லல்ப்பட்ட நிலையில் வாழ்நாட்களை வீணடிக்கின்றது. பிறவி என்கிற பெருங்கடலிலே நீந்தும் நிலை அறியாது, மூச்சு முட்டித் தனியாகக் கிடந்து உயிர் தத்தளிக்கின்றது. அலை அலையாகத் துன்பங்கள் உயிரை அங்குமிங்கும் மோதி அலைக்கின்றன. பெண் என்கிற சூறாவளி உயிரைச் சுழற்றி எறிந்து, ஆசை என்கிற சுறாமீனின் வாயிலே தள்ளுகிறது. இந்தத் துன்ப நிலையில் உயிருக்கு யாதொரு பற்றுக்கோடும் இல்லை. "இறைவா இறைவா"!என்று அழுது தீர்த்தாலொழிய இந்தத் துன்பம் நீங்காது.

"யான், இடர்க் கடல் வாய்ச் சுழிசென்று, மாத்திரை பொர, காமச் சுறவு எறிய அழிகின்றனன்;உடையாய்!அடியேன் உன் அடைக்கலமே!" (திருவாசகம் - அடைக்கலப் பத்து 409)

நாம் தேடி அடைய வேண்டியது இறைவனுடைய அருளாகும். ஆனால், நாம் அறியாமை எனும் இருளில் மூழ்கி உடலைச் சார்ந்த அனுபவங்களை எந்நேரமும் பின்பற்றித் திரிகின்றோம். இறைவனுடைய அருள் எல்லைக்குள் நாம் இருந்தாலும், சிற்றின்ப வாழ்வை நாம் எல்லாவற்றிலும் மேலாகக் கொண்டிருப்பது நமது சிறுமையே ஆகும். பாற்கடல் ஒன்று உண்டு. அதில் வாழும் மீன்களுக்குப் பாற்கடலே ஆதாரமாகும். ஆனால், அதனை உணராமல் பாலைக் குடித்துப்பசி தீராமல், மீன்கள் கீழ்மையான பிராணிகளைப் புசிப்பதுபோல உயிர்களும் அருள் எல்லைக்குள் இருந்தாலும் பேரின்பத்தை நுகராமல், சிற்றின்பங்களில் மருண்டு நிற்றல் சிறுமையே ஆகும்.

"பால்ஆழி மீன்ஆளும் பான்மைத் (து) அருள் உயிர்கள்

மால்ஆழி ஆளும் மறித்து" (திருவருட்பயன் - உமாபதி சிவாசாரியார்)

இறைவனுடைய திருவடிக்கு உருகித் தவிக்கும் மணிவாசகப் பெருமான் தன்னை இறைவன் உடன் அழைத்துச் செல்லவில்லையே என்று ஏங்குகின்றார். இறைவனுடைய சேவடி சேரத் தகுதி பெற்ற அடியார்கள் பழுத்த மனத்து அடியார்கள். இறைவனின் துணை கொண்டவர்கள். ஐந்தெழுத்து என்னும் தெப்பம் பற்றிப்பிறவிக் கடலைத் தாண்டும் தகுதியுடையவர்கள். வெகுளி மயக்கங்களை இன்னதென்று தெரிந்து கொண்டு திருவருளால் அவற்றிடமிருந்து தங்களை விலக்கிக் கொண்டவர்கள். "நின் கழல் துணை கொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்". இறைவனுடைய திருவடி நிழலின்கீழ் கிடக்கத்தக்கனவெல்லாம் பெற்றவர்கள். பெறவேண்டியது இறைவனுடைய திருவருளாகும். அதற்கு மேலான செல்வமும் இல்லை. அருட்செல்வத்தைப் பெற முயலாமல் பொருட்செல்வத்தை நாடி அலைவது சிறுமையாகும். இந்தச் சிறுமைக்குக் காரணம் அறியாமையே. தன்னைப் பற்றிய அறியாமை. இறைவனைப்பற்றிய அறியாமை, இறைவனை உணர்ந்து கொள்வதற்குரிய முறைகளைப் பற்றிய அறியாமை. இவ்வாறு அறியாமை எனும் இருளிலே மூழ்கிச் செய்யத்தகாதவற்றைச் செய்வது சிறுமையே ஆகும். இந்த அறியாமையை நீக்க இறைவனுடைய திருவருளே வழிகாட்டும். அவனுடைய திருவடிகளிலே தஞ்சம் புகுந்தாலொழிய இந்த அறியாமை நீங்காதே.

"பிறிவு அறியா அன்பா, நின் அருள் பெய் கழல் தாள் இணைக் கீழ்,

மறிவு அறியாச் செல்வம் வந்து பெற்றார், உன்னை வந்திப்பது ஓர்

நெறி அறியேன், நின்னையே அறியேன், நின்னையே அறியும்

அறிவு அறியேன், உடையாய்!அடியேன் உன் அடைக்கலமே".

(திருவாசகம் - அடைக்கலப்பத்து - 414)

ஆன்மாக்கள் இறை அருளின் வியாபகத்திலேதான் தங்கி இருக்கின்றன. அவன் அருளின்றி வேறொன்றும் இல்லை. அவ்வாறு தங்கியிருப்பினும், அருள்

நிலையினை அறிந்து கொள்ள இயலவில்லை. இதற்குக் காரணம் ஆணவ மலமே. இதையும் ஆன்மா உணருவதில்லை. ஆணவ மலம் உயிரினுடைய அறிவை மறைத்துத் தான் என்கிற நினைப்பில் உயிரை நிற்கச் செய்கிறது. செயல்களைப் புரியத் தூண்டுகிறது. உடலும், உடலின் கருவிகளும் உயிரோடு சார்ந்து நிற்கும் காரணத்தினால் அவற்றைத் தவிர வேறொன்றும இல்லை என்கிற உணர்வினை ஏற்படுத்துகிறது. உயிர் அறிவுடைய பொருள் என்று அருளாளர்கள் நமக்கு விளக்கியுள்ளார்கள். எனினும் உயிரானது சார்ந்ததன் வண்ணமாய் நிற்கும் இயல்பினைப் பெற்றிருக்கின்றது. பளிங்கைப்போல. ஆகவே, கருவிகளைச் சார்ந்து நிற்கும்பொழுது, கருவிகளின் இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி ஒரு மறைப்பு நிலையில் இருக்கின்றது. ஆணவம் என்கிற மலத்தினால் உண்மை அறிவு மறைக்கப்பட்டு உயிரானது பாசத்துடன் பொருந்தி, பாச காரியங்களுக்காக உடலையும், உடலின் கருவிகளையும் பயன்படுத்திக் கொள்கிறது.